பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double acting.
வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..
திரைப்படமாக வந்தால்..
அப்படி ஒரு கற்பனை வந்தால் அந்த வயதிலேயே ஒரு பயமிருந்தது. என் கற்பனைகளை சிதைத்துவிடுமோ என்று..
வளரும் காலத்தில் நானும் நாடகங்களில் நடிக்கும்போது - இலங்கை வானொலியின் நாடகங்களிலும் ஒரு சில இலக்கிய நாடகங்களில் நடித்தபோது கூட இந்தப் பிரம்மாண்டத்தைப் பற்றிய எண்ணம் ஏக்கமாக வரும்.
பின் எழுத்திலக்கியமாகவே இருக்கட்டும் என்று எண்ணியிருப்பேன்.
இந்த இணையக்காலம் ஆரம்பித்தது முதல், YouTubeஇல் audiobooks ஆரம்பித்தது தொட்டு இடையிடையே இந்த பொன்னியின் செல்வன் ஆசை வரும்..
பலர் வாசித்தே சாகடித்திருக்கிறார்கள்.
சிலவற்றில் உயிர்ப்பு இருக்காது.
வாசிக்கத் தோன்றும் நேரங்களில் pdf இல் இறக்கி மீண்டும் மீண்டும் வாசித்து பரவசப்படுவதோடும் மனைவியோடும் நண்பர்களோடும் பகிர்ந்து ரசிப்பதோடும் சரி.
தம்பி செந்தூரன் சில நூல்களை இவ்வாறு ஒலிவடிவில் பதியுமாறு பல தடவை கேட்டும் அலுவலகக் கட்டுப்பாடு காரணமாக செய்ய மறுத்துவிட்டேன்.
ஆசையில் சில பாரதி கவிதைகள், புதுவையின் கவிதைகள், சுஜாதாவின் சிறுகதை ஒன்று என்று பதிந்து நானே ரசித்ததோடு சரி.
இப்போது மணிரத்னம் PS1 ஓடு வர, ரஹ்மானின் பொன்னி நதி பாட்டை வெளியிட அதைப் பற்றி ஒரு காணொளி பதிவு செய்யும்போது சரேலெனத் தோன்றிய எண்ணத்தை நான் சொல்ல, அதைப் பார்த்த இன்னும் சிலர் கேட்க (அதற்கு முன்னரும் பொன்னியின் செல்வனை என் குரல் வழியாகக் கேட்டிருந்த சில நண்பர்க்கும் நன்றி)
சரி கிடைக்கும் நேரத்தில் இதற்கும் கொஞ்சம் ஒதுக்குவோம் என்று ஆரம்பித்துவிட்டேன்.
ராஜமௌலி, சங்கர், மணி பட்ஜெட் எல்லாம் கிடையாது.
கல்கியின் தமிழும் என் குரலும் தூக்கத்தை இன்னும் கொஞ்சம் சுறுக்குவதும் கொஞ்சம் தொழிநுட்பமும் தான் இதன் முதலீடு.
இதில் நான் வந்தியத்தேவன், அருண்மொழிவர்மன் மட்டுமன்றி நானே தான் பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், ஏன் குந்தவை, வானதியும் கூட...
கல்கி அவர்களின் தமிழுக்கு எந்தவொரு இழுக்கும் வராமலும் முன்பே வாசித்த, இன்னும் வாசிக்காதோருக்கும் எந்தவொரு சங்கடத்தையும் ஏற்படுத்தாமலும் என்னால் முடிந்தவரை நேர்த்தியாக, ஒளித்தெளிவில் நிறைவாக வழங்க முயன்றுள்ளேன்.
மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் இன்னும் சீர்ப்படுத்தும்.
இதோ...
வந்தியத்தேவனின் பயணத்தில் புது வெள்ளத்தில் நீந்தி ஆடித்திருநாள் காண .. அல்ல அல்ல கேட்க அழைக்கிறேன்.
காணொளி இணைப்பு :
பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - Audio Book | Volume 1 Chapter 1 புதுவெள்ளம் - ஆடித்திருநாள்
https://youtu.be/gxP9br1CzcQ
பொன்னியின் செல்வன் ஒலி நூல் - அனைத்துப் பாகங்களும் :
நண்பர்க்கு இன்னொரு அறிவித்தலும் உண்டு.
podcast வழியாகவும் பொன்னியின் செல்வன் ஒலி நூலைப் பதிந்துள்ளேன்.
ஆர்வமுள்ளவர்கள் ரசிக்க :
https://anchor.fm/arvloshan/episodes/--Ponniyin-Selvan---Audio-Book--Volume-1-Chapter-1----e1n4bo3