கிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி

ARV Loshan
4
உலகின் முதல் நிலை டெஸ்ட் அணிகளில் ஒன்று. கனவான் தன்மை பற்றியும் கிரிக்கெட்டின் உயர்தரம் பற்றியும் மற்றைய உலக நாடுகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் நாடு. ஆனால் sledging - எதிரணி வீரர்களை வசைபாடி கவனத்தை சீர்குலைத்து, அல்லது மனதளவில் சிதைவை ஏற்படுத்தி வெல்லும் யுக்திகளை நீண்ட காலமாகப் பயன்படுத்திவரும் அவுஸ்திரேலியா மீது அவ்வப்போது மோசடி/ஏமாற்றுப் புகார்கள் வந்தாலும் நிரூபிக்கப்பட்டதாக இல்லை.

அண்மையில் கூட இந்தியாவுக்கு அவுஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுலா சென்றிருந்த சமயம், தொலைக்காட்சி நடுவர் மூலமான ஆட்டமிழப்பு சம்பந்தமான சர்ச்சையொன்றில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் சிக்கியிருந்தார்.
Brain fade case என்று இன்று வரை கிரிக்கெட் ரசிகர்கள் வேடிக்கை செய்கின்ற விடயமாக அது இருக்கிறது.

அச்சமயம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி "அவுஸ்திரேலிய வீரர்கள் இப்படியான கிரிக்கெட் ஏமாற்று வேலை செய்து வெல்ல முயல்வது வழமையான விடயம் தான்" என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியபோதும், ஸ்மித் மற்றும் அவுஸ்திரேலியர்கள் இவையெல்லாம் ஆதாரமில்லாத அபாண்டங்கள் என்று பூசி மெழுகிவிட்டார்கள்.

எனினும் பல நாள் திருடன் கதையாக நேற்று கமெரொன் பான்க்ரொஃப்ட் கையில் இருந்த மஞ்சள் துண்டு 'கனவான் தன்மை'யின் கிழிவை உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.


கிரிக்கெட் பந்துகளை, குறிப்பாக சிவப்புக் கடின பந்துகளை அதிக ஸ்விங் செய்யச் செய்யவும், அல்லது ரிவேர்ஸ் ஸ்விங் எடுக்கவும் ஏதாவது உருமாற்றங்கள் அல்லது சேதங்கள் செய்து ( ball tampering) செய்வது 1970கள் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பித்து வைத்த நடைமுறை.
எனினும் ICC இதை அங்கீகரிக்கவில்லை. சட்டவிரோத நடைமுறையான ball tampering செய்தால் நடுவர்கள் தண்டிப்பதும், கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் நடைமுறையில் இருக்கிறது.

எனினும் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தி அகப்பட்டுக்கொண்ட பிரபல வீரர்கள் வரிசையில் இந்தியர்களால் கிரிக்கெட் கடவுளாகக் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் மைக் அர்த்தேர்ட்டன், பாகிஸ்தானின் முன்னாள் தலைவர், இடது கை வேக மன்னன் வசீம் அக்ரம், பாகிஸ்தான் அணியின் பல வீரர்கள், பந்தைக் கடித்த ஷஹிட் அஃப்ரிடி, ஏன் இப்போதைய தென் ஆபிரிக்காவின் தலைவர் பஃப் டூ ப்ளெசிஸ் (இரண்டு தடவை) - அதில் mint gate விவகாரத்தில் போட்டித் தடைக்கும் உள்ளானார். - என்று நீளும்.

எனினும் அவுஸ்திரேலிய வீரர்கள் இப்படியான விவகாரங்களில் சிக்கியது இல்லை.

நேற்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் சிக்கிக்கொண்ட பிறகு எந்தவொரு காரணமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாத நிலையில் ஸ்மித் ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக இதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்தார்.

பான்க்ரொஃப்ட் செய்த இச்செயல் தமக்கும் அவுஸ்திரேலிய 'தலைமைத்துவக் குழு'வுக்குத் தெரிந்தே இடம்பெற்றது என்று குறிப்பிட்ட அவர், ஏதாவது செய்து போட்டியில் ஜெயிக்கவேண்டும் என்ற கையறு நிலையே இந்த மோசடிச் செயலைச் செய்யத் தூண்டியதாகக் குறிப்பிட்டுத் தலை குனிந்து நின்றார்.

மிகக் கேவலமான இந்த விடயத்தைச் செய்ய முனைந்த அவுஸ்திரேலிய அணி இதற்குக் கருவியாக அணியின் மிக இள வயது வீரரைப் பயன்படுத்தியது இன்னும் இழிய செயல்.

முன்னாள், இந்நாள் வீரர்கள் ( அவுஸ்திரேலிய முன்னாள் பிரபல வீரர்கள், தலைவர்கள் உட்பட) , விமர்சகர்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ICC நடவடிக்கை எடுக்கிறது ஒரு பக்கம், கிரிக்கெட் அவுஸ்திரேலியா உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரதும் எண்ணம். அவுஸ்திரேலிய அரசாங்கமும் சர்வதேசக் கண்டனங்களை அடுத்து Cricket Australiaவுக்கு இந்தத் தகவலை அனுப்பியுள்ளது.

அவுஸ்திரேலிய விளையாட்டு ஆணைக்குழுவும் தலைவர் ஸ்மித், பான்க்ரொஃப்ட் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக அணியை விட்டு நீக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.


பல விடயங்களில் முன்னோடியாக விளங்கும் ஸ்மித் தானாகத் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம்.

நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகே ICC இது பற்றிய உறுதியான முடிவொன்றை அறிவிக்கும் என நம்பப்படுகிறது.

எனினும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா இப்போது இந்த டெஸ்ட் போட்டியில் இந்த இறுதி நாட்களும் ஸ்மித் மற்றும் வோர்னர் ஆகிய இருவரும் தத்தம் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவர் என்று அறிவித்துள்ளது. விக்கெட் காப்பாளர் டிம் பெயின் உடனடியாகவே தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஒரு நெருக்கடியான நிலையில் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் அணியைப் பொறுப்பெடுத்து நடாத்துவது மிகப்பெரிய சிக்கலே. பாவம் பெயின். அதுவும் அருகே ஸ்லிப்பில் ஸ்மித் களத்தடுப்பில் நிற்கும்போது..

இவர்கள் மீது இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கருத இடமுண்டு.

இது http://tamilnews.com/tamil-sports-news/cricket/க்காக எழுதியிருந்த கட்டுரை.
எனினும் பிந்திய தகவலாக ஸ்மித் மற்றும் பான்க்ரொஃப்ட் ஆகியோருக்கு ICCயினால் விதிக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய விபரங்களும் கிடைத்திருந்தன.

"அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டித் தடை + முழுமையாக போட்டி ஊதியம் அபராதம்.
கமெரொன் பான்க்ரொஃப்ட்டுக்கு 75% போட்டி ஊதியம் அபராதம் + நன்னடத்தைப் புள்ளிக் குறைப்பு."
எனினும் நிரூபிக்கப்பட்ட இப்படியான மோசடித்தனத்துக்கு இதைவிடக் கடினமான தண்டனை வழங்கப்பட்டிருக்கவேண்டும். 
(இலங்கை அணிக்குப் பின்னராக) அவுஸ்திரேலிய அணியின் ரசிகனாக இருந்தாலும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா தோற்கவேண்டும் என்றே விரும்புகிறேன். மோசடிக்கு அது ஒரு கர்மாவின் பதிலாக இருக்கும். 
வோர்னர் சற்று முன்னர் ஆட்டமிழந்தபோதும், பின்னர் ஸ்மித் ஆடுகளம் வந்தபோதும் ரசிகர்கள் அளித்த கூச்சலுடன் கூடிய பழித்தல் 'வழியனுப்புதலும்' 'வரவேற்பும்' இதைப்  பதிவிடும் இந்த நிமிடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டமிழப்பும் உடன் வினை தான்.
அடுத்த போட்டியில் தடைக்குள்ளாகும் ஸ்மித்துக்கு எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கும் IPLஇல் ராஜஸ்தான் ரோயல்ஸ் தலைமைப் பதவியும் பறிபோகும் என்றே நம்புகிறேன்.
கீழே சில அவுஸ்திரேலிய பத்திரிகைகளின் முதற்பக்கங்கள்.:
கேவலமாகிப்போன அவுஸ்திரேலியா...




Post a Comment

4Comments

Please Select Embedded Mode To show the Comment System.*