M.S.தோனி 'திடீர்' பதவி விலகல் - காரணங்கள்? மர்மங்கள்?? ஒன்றா இரண்டா...

ARV Loshan
1
"தோனியின் ஓய்வு - தவறான நேரத்தில் ஒரு சரியான முடிவு !!! "

​2014இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ​ஒய்வு பெறும் செய்தி தெரிந்தவுடன் எழுத ஆரம்பித்த கட்டுரையின் தலைப்பாக நான் எழுதிய வரிகள்.

இப்போது ஒருநாள் + T20 தலைமையை விட்டு தோனி விலகியிருக்கும் நிலையில் -

தக்க நேரத்தில் சாதுரியமான முடிவு என்று சொல்லவேண்டியுள்ளது.






கோலியின் அமர்க்களமான ஓட்டக் குவிப்பும், தொடர்ச்சியான வெற்றிகளும் (அவை இந்தியாவிலே மட்டுமே இதுவரை எனினும் - வெளிநாட்டு போட்டிகளில் மிகப்பெரும் சவால் இருக்கும் என்பது சிந்திக்கவேண்டிய விஷயமாக இருந்தாலும்) தோனிக்கு கொடுத்த அழுத்தம் இந்த முடிவுக்கான பிரதான காரணியாக இருந்தபோதிலும்,

அனுராக் தாக்கூருக்கு விழுந்த ஆப்பு, BCCI தலைவராக வரப்போவராக எதிர்பார்க்கப்படும் சவுரவ் கங்குலி, இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டிகளின் எழுச்சி, கோலியின் பின்னால் திரண்டு நிற்கும் பயிற்றுவிப்பாளர் கும்ப்ளே மற்றும் அணியின் முக்கிய வீரர்கள், சிம்பாப்வேயில் வைத்து அணியாகவும் வீரராகவும் தடுமாற்றம், அமெரிக்காவில் WI உடன் T20 தொடர் தோல்வி, சொந்த மைதானங்களில் வைத்து, முழுமையான அணியிருந்தும் நியூ சீலாந்துடன் திக்கித் திணறி கடைசிப் போட்டியில் வைத்தே தொடரை வெல்லவேண்டியிருந்தது என்று பல துணைக்காரணிகளும் (இவற்றைவிட சற்றே பழைய CSK, ஸ்ரீனிவாசன் பூதங்களும் ஆவிகளும் மேலதிகமானவை) பின்னணியில் இருக்கின்றன.

M.S. Dhoni: The Untold Story
படம் போலவே தோனி என்ற ராசிக்கார, வெற்றிகரமான Finisherஇன் முன்னைய வெற்றிகளின் வெளிச்சத்தில் அண்மைய சறுக்கல்களும் - திடீர் அறிவித்தலுக்கான உண்மைப் பின்னணியும் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை.

இங்கிலாந்துக்கு எதிரான சிறு சறுக்கல் கூட, அணியை விட்டு finisherஐ finish பண்ணவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும். அண்மையில் கூட 2019 உலகக்கிண்ணம் வரை (தலைவராகவும்) விளையாடவிருப்பதாக திடமாகக் கூறியிருந்தவர் கோலி தலைமையிலான அமோகமான வெற்றிகள் மூலம் வியூகத்தை மாற்றவேண்டியவராகியிருக்கிறார். மற்றும்படி இளவல் கோலிக்காக, இந்தியாவின் எதிர்காலத்துக்காக என்பதெல்லாம் இரண்டாம், மூன்றாம் பட்சமே..

இனி ஆரம்பகால அதிரடியைத் துடுப்பாட்ட வீரர் தோனியாகக் காட்டாவிட்டால், இந்த முன்னாள் அணித்தலைவர் 2019 உலகக்கிண்ணம் என்ன, இந்தாண்டு Champions Trophyக்கு முன்னதாகவே 'திடீர்' ஓய்வையும் அறிவிக்கவேண்டி வரலாம்.

​மற்றும்படி,
தோனி என்கின்ற சாமர்த்தியமும் அதிர்ஷ்டமும் வாய்த்த ஐடியாக்காரரின் (ஜோகிந்தர் ஷர்மாவை பந்துவீச அழைத்தது போல) இன்னொரு But I had other ideas வகை அறிவிப்பும் (தோனி ரசிகர்களுக்கு) ஆச்சரியமும் தான் இந்த 'விலகல்'.

இனி வியூகம் வகுக்கும் கப்டனை பார்க்காவிட்டாலும் ஹெலி பறக்கவிடும் முன்னைய அதிரடி பினிஷரை பார்த்து ரசிக்க (நமது அணிகள் எதிராக விளையாடும்போது சபிக்க) கிடைத்தால் மகிழ்ச்சி தான்.

வாழ்த்துக்கள் தோனி.


Loshan Facebook Post

Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*