லியொனல் மெஸ்ஸி 500 - மெஸ்ஸியின் மகுடத்தில் இன்னொரு வைரம்

ARV Loshan
1
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் - இந்த வருடம் பெற்ற தங்கப் பந்து விருது மூலமாக அதை உறுதிப்படுத்திக்கொண்ட லியொனல் மெஸ்ஸி அவரது ரசிகர்கள் மட்டுமன்றி, கால்பந்து ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்திருந்த ஒரு மைல்கல் சாதனையைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டியிருக்கிறார்.

கால்பந்துப் போட்டிகளில் தனது 500வது கோல் பெற்ற சாதனையே அதுவாகும்.

ஆர்ஜென்டின கால்பந்தாட்ட அணியின் தலைவரும், உலகப் புகழ்பெற்ற நட்சத்திர கோல் குவிக்கும் எந்திரமாக விளங்குகிற  லியொனல் மெஸ்ஸி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.



ஞாயிற்றுக்கிழமை  நடந்த லா லீகா தொடரின் லீக் ஆட்டத்தில் வெலென்சியா மற்றும் பார்சிலோனா அணிகள் மோதின. 

இந்தப் போட்டியிலேயே மெஸ்ஸி தன்னுடைய 500வது கோலை அடித்திருந்தார்.

 அண்மைய சில போட்டிகளில் பார்சிலோனா கழகம் சற்றே சறுக்கிவரும் அதேநேரம், மெஸ்ஸியும் கோல்கள் பெறத் தவறியிருந்தார்.

(இந்தத் தோல்விகளில் பார்சிலோனா தொடர்ச்சியாக 39  போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்த சாதனையை நிறுத்திய பரம வைரிகள் ரியல் மாட்ரிட்டிடம் கண்ட தோல்வியும், சம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் அட்லெடிக்கொ மாட்ரிட் அணியிடம் கண்ட அதிர்ச்சித் தோல்வியும் அடங்குகின்றன)

*எனினும் நேற்று பார்சிலோனா பெற்றுள்ள 8-0 என்ற வெற்றி மீண்டும் ஒரு புதிய எதிர்பார்ப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மெஸ்ஸி நேற்றும் ஒரு கோல் அடித்ததோடு, இரண்டு கோல்களுக்கு உதவியும் வழங்கியிருந்தார்.

இந்தப் போட்டியிலும் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் மெஸ்ஸிக்கு அவரது சாதனைத் தடத்தில் ஒரு மைல்கல்லைக் கொடுத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி 63ஆவது நிமிடத்தில் போட்ட கோலின் மூலம் சர்வதேச மற்றும் கழகப் போட்டிகளில் 500 கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.



இது மெஸ்ஸியின் 632வது போட்டியாகும்.

சர்வதேச மற்றும் கழகப் போட்டிகளில் 500 கோல்களுக்கு மேல் பெற்றவர்கள் வரிசையில் 27வது வீரராக இணைந்துள்ளார் மெஸ்ஸி.


ஆர்ஜென்டின வீரர்களில் இவருக்கு முதல் டீ ஸ்டேபனோ மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

சமகாலத்து வீரர்களில் மெஸ்ஸியின் போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே (557) மெஸ்ஸியின் இந்த சாதனையை நிகர்த்திருக்கிறார். எனினும் மெஸ்ஸியை விட மிக அதிகமான போட்டிகளில் ரொனால்டோ (791) விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடக்கூடியது.



வருகின்ற ஜூன் மாதம் தனது 29 வயதை எட்டும் மெஸ்ஸி, பார்சிலோனா கழக அணிக்காக 450 கோல்களையும், ஆர்ஜன்டின அணிக்காக 50 கோல்களையும் போட்டிருக்கிறார். 

அவர் அடித்த 500 கோல்களில் 406 கோல்கள் இடது காலால் போட்டப்பட்ட கோல்களாகும்.

(இடது கால் பாவனையாளர் இவர் என்பதால் கிட்டத்தட்ட 80 சதவீதம் இது)

 மிகுதி கோல்களில் 71 கோல்கள் வலது காலாலும் 21 கோல்கள் தலையால் முட்டித் தள்ளியும் 2 கோல்களை  இதர வகையிலும் அடித்துள்ளார்.

அவர் அடித்த 500 கோல்களை அடித்த முறையை அவதானித்தால் அவற்றில் 25 கோல்கள் நேரடி ப்ரீ கிக் (Direct Free Kick) மூலமும், 64 கோல்களை பெனால்டி மூலமும் 411 கோல்கள் நேரடி கோல்களாக (Open Play) போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




பணத்துக்காகவும் வசதிகளுக்காகவும் பல்வேறு கழக அணிகளுக்காக காலாகாலம் வீரர்கள் மாறி மாறி விளையாடிவரும் காலகட்டத்தில் மெஸ்ஸி தனது நாட்டுக்காகவும், கழகத்தில் பார்சிலோனா என்ற ஒன்றுக்காகவும் மட்டுமே விளையாடி வருவது பலரால் பாராட்டக்கூடிய ஒரு விடயமாக இருக்கிறது.

எனினும் மெஸ்ஸி அடிக்கடி சந்திக்கும் ஒரு விமர்சனம், ஆர்ஜென்டீன அணியை விட பார்சிலோனா அணிக்காகவே அதிக திறமை காட்டுகிறார் என்று.

மெஸ்ஸி கோல்கள் பெற்றுள்ள சதவீத பெறுமானங்களும் இதைக் காட்டினாலும், அவருக்கு ஒத்தாசையாக விளையாடும் ஏனைய வீரர்களிலும் தங்கியுள்ளது என்பது நிச்சயம்.
டனி அல்வேஸ் இவருக்கு அதிகமான கோல்களுக்கு பந்துகளைப் பரிமாறியுள்ளார்.

இதேவேளை மெஸ்ஸி 201 கோல்களுக்கு உதவியும் (assist) உள்ளார் என்பதும் கவனிக்கவேண்டிய ஒரு விடயமாகும்.

இதுவரை ஆர்ஜென்டீன அணிக்கு உலகக்கிண்ணம்,  அமெரிக்கக் கிண்ணம் ஆகியவற்றை வென்று கொடுக்காத ஏக்கம் இன்னமும் இருக்கும் லியோ, இந்தப் பருவகாலத்தில் பார்சிலோனா அணிக்கு எஞ்சியுள்ள 5 போட்டிகளில் இன்னும் சில கோல்களைப் பெற்றுக்கொடுத்து லா லீகா பட்டத்தை வென்று கொடுப்பாரா என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வரைபடங்கள் - BBC SPORT 

தமிழ் மிரருக்கு எழுதிய கட்டுரை.

மெஸ்ஸி இதுவரை பெற்றுள்ள 500 கோல்களும் ஒரே காணொளியில்..

Lionel Messi ● ALL 500 Career Goals in ONE SINGLE video ● 2004-2016



Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*