இரண்டு நாட்களாக இணையவெளி இனிய கலாய்த்தல் களமாக, சில இடங்களில் இரத்தம் தெறிக்காத குறையாக நடந்த வார்த்தையாடல்கள், troll ஓடல்களுக்கு வழிவகுத்த போட்டி பற்றி விரிவாக, சொல்ல வேண்டிய விடயங்களை அழுத்தமாகச் சொல்ல நேரம் இன்று தான் வாய்த்தது.
இந்த troll கள் எல்லாம் ஏன் இம்முறை இவ்வளவு 'ரத்த வெறியோடு' இடம்பெற்றன, இடம்பெறுகின்றன என்று எனது Facebookஇலும், twitterஇலும் விளக்கமாகவே சொல்லி விட்டேன், இன்னும் விபரமாகத் தெரிய, அரையிறுதிப் போட்டி பற்றிய இந்தப் பதிவை வாசித்த பின்னர், கீழே இணைப்புக்களை வாசிக்கவும்.
-----------------------
முன்னைய எனது இடுகையில் சொன்னதை அப்படியே செய்து மெல்பேர்ன் செல்லும் மைக்கேல் கிளார்க்கின் பொன்னிற அணிக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்கு எழுதிய கட்டுரையின் விரிவான் வடிவம் இந்த இடுகையாக..
-------------
இந்த உலகக்கிண்ணத்தின் மிகப் பரபரப்பான 'பெரிய' போட்டியாக கருதப்பட்ட அவுஸ்திரேலியா எதிர் இந்தியா அரையிறுதிப் போட்டி உலகம் முழுவதும் ஏதோ ஒருவிதத்தில் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தது.
நடப்பு உலக சம்பியன்களிடமிருந்து உலகக்கிண்ணத்தை, அரையிறுதி வெற்றியுடன் தனது கண்டத்திலே தக்க வைத்துக்கொண்டது அவுஸ்திரேலியா.
இனி இறுதிப் போட்டியிலே மோதும் இரு அணிகளுமே அவுஸ்திரேலியக் கண்டத்தை சேர்ந்தவை என்பதால், யார் வென்றாலும் அதே கண்டத்திலேயே உலகக்கிண்ணம் தங்கும்.
அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து தாம் வென்று கொண்டிருந்த உலகக்கிண்ணங்களை, 2011ஆம் ஆண்டின் காலிறுதித் தோல்வியுடன் எந்த அணியிடம் இழந்ததோ அதே இந்தியாவை சிட்னியில் சிதறடித்து மீண்டும் ஒரு உலகக்கிண்ண இறுதிக்குப் பயணிக்கிறது.
அண்மைக்காலமாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் முதற்தர அணியாக இருந்து வந்தாலும் உலகக்கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றுவதன் மூலமே, இழந்த பெருமையை மீண்டும் பெறலாம் என்று காத்திருந்த மைக்கேல் கிளார்க்கின் அணி, மகேந்திர சிங் தோனியின் இந்திய அணியை மண் கவ்வச் செய்து உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் நாடு அடுத்தடுத்த முறையாக உலகக்கிண்ண இறுதியில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இந்த அரையிறுதிப் போட்டி, காலிறுதிப் போட்டிகள் போலவே வெற்றி பெற்ற அணிக்கு இலகுவான வெற்றியாக அமைந்து போனது.
தென் ஆபிரிக்க - நியூ சீலாந்தின் போராட்ட மிகுந்த விறுவிறுப்பான போட்டிக்குப் பிறகு இது ஒரு எதிர்பார்த்த முடிவுப் போட்டி.
இந்த வெற்றி அவுஸ்திரேலிய அணியின் சமநிலைத் தன்மை, எந்த சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வலிமை, ஸ்மித் போன்ற வீரர்கள் இப்போதே பெற்றிருக்கும் முதிர்ச்சியான கிரிக்கெட் ஞானம் என்பவற்றோடு, இந்திய அணி முதற்சுற்றுக்களில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவுஸ்திரேலியாவிடம் மட்டும் அடிக்கடி தோற்பதற்கான காரணத்தையும், அவுஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா தொடர்ந்தும் தடுமாறி வருவதையும் காட்டியுள்ளது.
சிட்னியில் அவுஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து காட்டிவரும் ஆதிக்கம் - 14 போட்டிகளில் நேற்று 13வது வெற்றி.
சிட்னியில் அவுஸ்திரேலியா விளையாடிய கடைசி 11 போட்டிகளில், 9இல் வெற்றிகள்.
சிட்னி அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவுக்கு பிலிப் ஹியூசுடனும் சேர்ந்தே மறக்கமுடியாத நினைவுகளை வழங்கியிருப்பதனால், இந்த வெற்றி மேலும் சிறப்புப் பெறுகிறது.
அத்துடன் அவுஸ்திரேலிய சூப்பர் மான் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித், கடந்த வருடம் ஒக்டோபரில் இருந்து சிட்னி மைதானத்தில் மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடிய நேரங்களில் பெற்ற ஓட்டங்கள் :101, 12, 77, 102*, 40, 95, 72, 65 & அரையிறுதியில் 105.
ஆடுகளம் பற்றி ஏற்கெனவே இந்திய சார்பு ஊடகங்கள் மற்றும் பிரபல விமர்சகர்கள் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சுழல்பந்து சாதகம், இந்தியாவுக்கு வாய்ப்பு எல்லாம் போட்டியின் முதல் பந்திலிருந்து பொய்யாகிப் போயிருந்தது.
நாணய சுழற்சி என்பது பெரியதொரு சாதகத்தைத் தரப்போவதில்லை என்றாலும் கூட, முதலில் துடுப்பெடுத்தாடுவது எதிரணிக்கு அதிக அழுத்தத்தை வழங்கும் என்பதனால்,அவுஸ்திரேலிய அணித் தலைவர் முதலில் துடுப்பாட விரும்பியிருந்தார்.
அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னரின் ஆரம்ப ஆட்டமிழப்போவுச்திறேளியாவை பின் தள்ளியதை விட, ஏரொன் பிஞ்ச் ஓட்டங்களை வேகப் பெறத் தடுமாறிக் கொண்டிருந்தது அவுஸ்திரேலியாவுக்கு தந்த சிக்கல் ஏராளம்.
சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த மொஹமட் ஷமியிடம் சிகிக் கொண்டார் பிஞ்ச்.
ஆனால் வந்த நேரம் முதல் எந்தவொரு அழுத்தத்துக்கு தானும் உட்படாமல், தனது அணியையும் தேங்கி நிற்க விடாமல் வேகமாக ஓட்டங்களைக் கொண்டு போனவர் ஸ்டீவ் ஸ்மித்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் போட்டியின் போக்கை மாற்றியது ஸ்மித்தின் அடித்தாடும், ஆட்டத்தைத் தனது வசப்படுத்தும் ஆட்டம் தான்.
ஸ்மித் வேகமாக அடித்தாடிக்கொண்டிருந்ததால், மறுபக்கம் பிஞ்ச் தடுமாறிக் கொண்டிருந்ததும் பெரிதாகத் தாக்கம் செலுத்தாத அளவுக்கு ஓட்டவேகமும் உயர்வாக - சத இணைப்பாட்டம் அமைந்தது.
31 ஓவர்களில் 182 ஓட்டங்கள்.
ஸ்மித்தின் 4வது சதம், இந்த உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியா பெற்ற 4வது சதம்.
தனது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்த பின்னர், இதோ பெரிய ஓட்ட எண்ணிக்கையொன்றை பெற்றுக்கொள்ளப் போகிறார் என்று என்னும் நேரத்தில் தான்,
உமேஷ் யாதவ், ஸ்மித்தின் விக்கெட்டை எகிறும் பந்து ஒன்றின் மூலமாக எடுத்துக் கொண்டார்.
ஆடுகளத்தில் இருந்த வேகம், எகிறும் தன்மை ஆகியவற்றை சரியான முறையில் பயன்படுத்திய உமேஷ் யாதவ், இந்தப் போட்டியில் எப்போதெல்லாம் அவுஸ்திரேலியா முந்திக்கொள்ளும் நிலையை எடுத்ததோ அப்போதெல்லாம் விக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
ஏரொன் பிஞ்ச் தடுமாறிக்கொண்டிருந்தாலும், பின்னர் அவர் வேகமாக அடித்தாட எண்ணிய நேரம் ஆட்டமிழந்திருந்தார்.
ஆனாலும் அவர் பெற்ற அந்த 81 ஓட்டங்கள் இறுதிப்போட்டிக்கான உற்சாகத்தை நிச்சயம் வழங்கியிருக்கும்.
முன்னரே நான் சொல்லியிருந்ததைப் போல அவுஸ்திரேலிய அணியின் மத்திய வரிசையில் இருக்கும் மைக்கேல் கிளார்க், ஷேன் வொட்சன் ஆகியோரின் இழுபறி இந்தப் போட்டியிலும் கொஞ்சம் தடுமாற வைத்திருந்தாலும், மக்ஸ்வெல், போல்க்னர் ஆகியோரின் வேகமான ஓட்டக்குவிப்புக்களும், கடைசியாக மிட்செல் ஜோன்சன் 9 பந்துகளில் வெளுத்து விளாசிய 27 ஓட்டங்களும் அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட எண்ணிக்கையை சராசரியான ஓட்ட எண்ணிக்கையில் இருந்து சவால் விடக் கூடிய 328 ஓட்டங்களாக மாற்றியிருந்தன.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடித்து நொறுக்கிய அவுஸ்திரேலியர்கள், சுழல்பந்து வீச்சாளர்களின் 20 ஓவர்களில் 98 ஓட்டங்களையே எடுத்திருந்தனர்.
இதனால் தான் இது சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்று சொல்லினரோ?
யாதவ் 4 விக்கெட்டுக்களை எடுத்தும், ஒரு ஓவர் மீதமாக இருந்தும், கடைசி ஓவரை மோஹித் ஷர்மாவுக்கு தோனி பந்துவீசிக் கொடுத்ததும், திடீரென விராட் கோளிக்கு ஒரு ஓவரை மட்டுமே கொடுத்து, பின் நிறுத்தியதும் புரியாத புதிர்களே.
ஸ்மித், மற்றும் மக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடிகளுக்குப்பின் அவர்கள் ஆட்டமிழக்க, இந்தியப் பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலியாவை தடுமாற வைத்து போட்டியைத் தம் வசப்படுத்தும் நேரத்தில் தான் ஜோன்சனின் அதிரடி போட்டியை மீண்டும் அவுஸ்திரேலியப் பாதையில் செலுத்தியது.
ஷேன் வோர்னின் பாஷையில் 'ஒரு பயங்கரப் பிசாசு' மிட்செல் ஜோன்சன் பின்னர் பந்துவீச்சிலும் இந்திய அணியை உடைத்துப் போட்டார்.
அவுஸ்திரேலியா பெற்ற இந்த ஓட்ட எண்ணிக்கை தான் உலகக்கிண்ண அரையிறுதி ஒன்றில் பெறப்பட்ட கூடுதலான ஓட்ட எண்ணிக்கை. முதல் தடவையாக ஒரு அணி அரையிறுதிப் போட்டியில் 300 ஓட்டங்களைக் கடந்திருந்தது.
இந்திய அணி துடுப்பாட ஆரம்பிக்கும்போதே தோல்வி நிச்சயம் என்ற அழுத்தம் தெரிந்தது.
ஆனால், 7 போட்டிகளைத் தொடர்ந்து வென்ற அணிக்கு இந்த இலக்கும் அடையக்கூடியது என்று ரசிகர் நம்பிக்கை இருந்தது.
ஆரம்ப இணைப்பாட்டம் இந்தியாவுக்கு அந்த நம்பிக்கையை மேலும் ஏற்றியது எனலாம்.
தவானும் ரோஹித் ஷர்மாவும் வேகமாகவும் உறுதியாகவும் ஓட்டங்களை எடுத்துக்கொண்டனர்.
ஆரம்ப 3 ஓவர்களிலேயே இலகுவான இரண்டு பிடிகளை அவுஸ்திரேலியா தவறவிட்டதும், முன்பு பிடிகளைத் தவறவிட்ட இரு தடவையும் தவான் சதங்களை இந்த உலகக்கிண்ணத்திலே பெற்றது நினைவுக்கு வர, இந்தியாவுக்கு நம்பிக்கை ஏறியிருந்தது.
எனினும் 41 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்ற தவான் ஹேசில்வூட்டினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட, கோளியும் ஒற்றை ஓட்டத்தோடு ஆட்டமிழக்க, இந்திய அணியின் தடுமாற்றம் ஆரம்பித்தது.
இலக்குகளைத் துரத்துவதில் முன்பு பெரும் பங்கு வகித்த விராட் கோளியின் சறுக்கல் ரசிகர்களுக்குத் தந்த ஏமாற்றம் தான், போட்டியைப் பார்க்க இந்தியாவிலிருந்து வந்திருந்த அவரது காதலி - நடிகை அனுஷ்கா ஷர்மா மீது எதிர்ப்பாகவும், முட்டாள்தனமான வெறுப்புக் கலந்த தூற்றலாகவும் மாறியிருந்தது.
ஆனால், கோளி மற்றும் அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஆட்டமிழந்த விதங்கள் இந்திய வீரர்களுக்கு எகிறும் வேகப்பந்துகள் தரும் அசௌகரியங்கள் இன்னும் தொடர்வதைக் காட்டுகின்றன.
பின்னர் இணை சேர்ந்த அஜின்க்யாங்கே ரஹானே, அணித் தலைவர் தோனி ஆகியோர் இந்தியாவை விக்கெட்டுக்கள் இழக்கவிடாமல் ஸ்திரப்படுத்துனாலும், ஓட்டங்களுக்கும் பந்துகளுக்கும் இடையிலான இடைவெளி கூட, கூட இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
என்ன தான் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்து IPL போட்டிகள் போல T20 போட்டிகள் போல வேகமாக அடித்தாடி தோனி போட்டியை வென்று தருவார் என்று ஒரு 'அற்புதத்துக்காக' இந்திய ரசிகர்கள் காத்திருந்தாலும், பந்துவீசிக் கொண்டிருந்தது அவுத்திரேலியா அன்றோ?
கிளார்க்கின் துடுப்பாட்டத் தடுமாற்றமும், சில களத்தடுப்புத் தடுமாற்றங்களும், எந்தவிதத்திலும் தலைமைத்துவத்தில் தாக்கம் செலுத்தவில்லை. மிகத் திறமையாக பந்துவீச்சு மாற்றங்களை நடைமுறைப்படுத்தியதோடு, கள வியூகங்களையும் அமைத்து இந்திய அணியை சரியச் செய்திருந்தார்.
எவ்வளவு நேரம் தான் தனியே போராடுவார் தலைவர் தோனி .
அவர் எந்தவொரு பெரிய முயற்சியும் எடுக்காமல் ரன் அவுட் ஆனதிலேயே அவரது ஆயாசம் புரிந்தது.
233 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா, இந்தியாவை 47வது ஓவரில் சுருட்டி எடுத்தது.
ஆரம்பத்திலே தவான் அடித்து நொறுக்கிய ஜேம்ஸ் போல்க்னர் பின்னர் சிறப்பாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
தொடர் முழுதும் சிறப்பாக பந்துவீசி வரும் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும், பயமுறுத்திய ஜோன்சன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சின் பலவீனமான அங்கம் எனக் கருத்தப்பட்ட மக்ஸ்வெல்லின் 5 ஓவர்களில் வெறும் 18 ஓட்டங்களே பெறப்பட்டன.
இந்திய அணியின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே எனினும், இந்திய அணி இதற்கு முன் சந்தித்த ஏனைய அணிகளுடன் பெற்ற வெற்றிகள் அந்த அணியின் ரசிகர்களுக்கு ஒரு மாயமான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.
அவுஸ்திரேலியா பெற்ற 95 ஓட்டங்களினாலான பெரிய வெற்றியுடன், முக்கோணத் தொடரில் இருந்த அதே மன நிலைக்கு இந்தியா திரும்பியுள்ளது.
உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியொன்றில் பெறப்பட்ட மிகப் பெரிய தோல்வியும் இதுவே.
இதற்கு முதல் இந்தியா 2003 ஆம் ஆண்டு கென்ய அணியை 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
பிலிப் ஹியூசின் மரணத்தின் பின் சிட்னி என்றாலே அவுஸ்திரேலியர்களுக்கு மறக்கமுடியாத தடங்களை வழங்கி வருகிறது.
1992இல் நடந்த உலகக்கிண்ணத்தில் அரையிறுதிக்கு செல்ல முடியாத ஏக்கத்தை இப்போது இறுதிப்போட்டிக்கு செல்ல வழிவகுத்து தீர்த்து வைத்துள்ளது இந்த வெற்றி.
ரிக்கி பொண்டிங், ஸ்டீவன் பிளெமிங் ஆகியோருக்கு அடுத்ததாக தலைவராக 6000 ஒருநாள் ஓட்டங்களைத் தாண்டிய பெருமையை இந்தப் போட்டியில் பெற்ற தோனி, இந்தத் தோல்வியுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து விடைபெறுவாரா, தலைமைத்துவத்தை விடுவாரா என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில்களை ஊடகவியலாளர் சந்திப்பில் கொடுத்திருந்தார்.
அடுத்த வருடம் இந்தியாவில் இடம்பெறும் உலக T20யில் முடிவெடுப்பதாக சொல்லியிருக்கிறார்.
அதற்குள் காலமும் போட்டிகளும் என்ன முடிவெடுக்குமோ?
இந்தியாவின் மிகச்சிறந்த அணித் தலைவராக எப்போதுமே கருதப்படும் தோனியின் வெற்றிடம் இந்திய அணியினால் உடனடியாக நிரப்பப்பட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
அதேபோல, இந்த ஒரு தோல்விக்காக அவர் பதவி விலகவேண்டும் என்று நினைப்பதும் அடி முட்டாள்தனம்.
ஆயினும் டெஸ்ட் போட்டிகளின் ஓய்வின் பின்னர், இப்படியான தோல்விகள் சும்மாவே பரபரக்கும் இந்திய ஊடகங்களுக்கும் விமர்சகர்களுக்கும் அவல் மாதிரி ஆகிவிடும்.
இந்தியாவின் மிகச்சிறந்த அணித் தலைவராக எப்போதுமே கருதப்படும் தோனியின் வெற்றிடம் இந்திய அணியினால் உடனடியாக நிரப்பப்பட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
அதேபோல, இந்த ஒரு தோல்விக்காக அவர் பதவி விலகவேண்டும் என்று நினைப்பதும் அடி முட்டாள்தனம்.
ஆயினும் டெஸ்ட் போட்டிகளின் ஓய்வின் பின்னர், இப்படியான தோல்விகள் சும்மாவே பரபரக்கும் இந்திய ஊடகங்களுக்கும் விமர்சகர்களுக்கும் அவல் மாதிரி ஆகிவிடும்.
கிளார்க்கின் தடுமாற்றங்கள் வெற்றியினால் மறைக்கப்பட்டாலும், அழுத்தம் அவருக்குள் வளர்ந்து வருகிறது.
எனினும் உலகக்கிண்ணத்தை வென்றேயாக வேண்டும் என்ற உத்வேகமும், இன்னும் ஒரேயொரு போட்டி தான் என்ற உன்னதமும் அவருக்குள் இருக்கும் Big match Player என்ற பொறுப்பையும், கிளார்க்குக்கும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கும் உரிய போராட்ட குணத்தை இறுதிப் போட்டியில் வழங்கலாம்.
இன்று காலையில் கிளார்க் உலகக்கிண்ண இறுதியோடு விடைபெறுவதாக சொல்லியிருப்பது முன்னரே எதிர்பார்த்ததே.
வெற்றியுடன் விடைபெறும் எண்ணம் கிளார்க்குக்கு இருக்கும் ; அதைவிட தங்கள் தலைவனை உலகக்கிண்ண வெற்றி என்ற கௌரவத்துடன் அனுப்பிவைக்கவேண்டும் என்று அவுஸ்திரேலியா வீரர்கள் மேலும் முனைப்புக் காட்டுவார்கள்.
ஆனால்,அவுஸ்திரேலியா தங்கள் எதிர்காலத்துக்கான ஒரு மாபெரும் வீரனை அடையாளம் கண்டுள்ளது.
ஸ்டீவ் ஸ்மித்.
எந்த விதத்திலும் அழுத்தத்துக்கு உட்படாத துடுப்பாட்ட வீரன்.
புதிய, இலகுவான துடுப்பாட்ட பிரயோகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு ஞானி.
களத்தடுப்பில் சூரன்.
தேவையேற்படின் விக்கெட்டுக்கள் உடைக்கக்கூடிய சுழல்பந்து வீச்சாளர்.
இது மட்டுமில்லாமல் தலைவருக்கே உரிய விதத்தில் கூரிய மதிநுட்பத்துடனும், மிக நுண்ணியமான கணிப்புடனும் செயல்பட்டு வருகிறார் ஸ்மித்.
ரஹானேயின் ஆட்டமிழப்பு இதற்கு நல்ல உதாரணம்.
(ஸ்டீவ் ஸ்மித்தின் ஆரம்ப காலத்தில் அவர் ஒரு துடுப்பாட்ட வீரரா, சகலதுறை வீரரா, சுழல் பந்துவீச்சாளரா என்று குழம்பி, கடுப்பாகிய நேரம் நான் கடுமையாக விமர்சித்திருந்தேன். 2012இல் உலக T20 போட்டிகளின்போது அவர் இலங்கை வந்திருந்த சமயம், அவர் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவரிடமே நேரே கேட்டும் இருந்தேன். எனினும் பின்னர் அவரது வளர்ச்சி எல்லோரையும் போல என்னையும் வியப்புக்கு உள்ளாழ்த்தியதொடு அவுஸ்திரேலிய ரசிகனாக ஆனந்தத்தையும் அளித்துள்ளது.
ஸ்மித் டெஸ்ட் தலைவராக நியமிக்கப்பட்டபோது பாராட்டி வாழ்த்துரைத்திருந்தேன் )
அத்துடன் ஸ்மித்தின் கடைசி இரண்டு இன்னிங்சிலும் பலரும் அவதானித்த ஒரு விடயம் 1996இல் இலங்கை அணி உலகக்கிண்ணம் வெல்வதற்கு காரணமாக அமைந்த அரவிந்த டீ சில்வாவின் துடுப்பாட்டம்.
அரையிறுதியில் இந்தியாவுடன் வேகமான ஒரு அரைச்சதம் (66), பின்னர் இறுதியில் அவுஸ்திரேலியாவுடன் ஆட்டமிழக்காத, ஆதிக்கம் செலுத்திய சதம் (105).
ஸ்டீவ் ஸ்மித்தும் இதுவரை கடைசியாக ஆடிய இரு ஆட்டங்களிலும் இதேவிதமான ஓட்டங்கள், பாகிஸ்தானுடன் 65, இந்தியாவுடன் 105.
அரவிந்தவின் கையால் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதைப் பெற்றுக்கொண்டார்.
நாம் எதிர்பார்த்ததைப் போல உணர்வுகள் பொங்கி வெடிக்கிற போட்டியாக அமையாவிட்டாலும், வீரர்கள் முறைத்துக்கொண்ட சிறிய நிகழ்வுகள் ஆங்காங்கே இடம்பெற்றன.
ஆனால், இப்படியான தோல்விகளுக்குப் பிறகு இந்தியாவிலும், இணையவெளியிலும் இடம்பெறும் வழக்கமான நிகழ்வுகள் இம்முறையும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.
இந்திய வீரர்களுக்கு எதிரான குமுறல்களும், தொலைக்காட்சி உடைப்புக்கள், படங்கள், கொடும்பாவிகள் எரித்தல் போன்ற சம்பவங்களும், தோனி முதலாய வீரர்களின் வீடுகளுக்கு முன் ஜாக்கிரதையாக பாதுகாப்பு போடப்பட்டதும் கிரிக்கெட்டின் வேண்டத்தகாத நிகழ்வுகள்.
எனினும் இந்தியக் கிரிக்கெட்டில் இது சகஜம்.
காரணம் இந்திய ஊடகங்களும், இந்தியக் கிரிக்கெட்டின் விளம்பர அனுசரனையாளர்களும், இந்திய அணியினை மிகப் பிரம்மாண்டமானதாக பிரசாரப்படுத்தி வைத்திருக்கின்றன.
ஸ்டார் ஸ்போர்ட்சின் மோக்கா, மோக்கா விளம்பரமும், இந்திய கிரிக்கெட் வெறியர்கள் ஆரம்ப வெற்றிகளுடன் (தங்கள் வெற்றிகளைக் கொண்டாடினால் தப்பில்லை - அது இயல்பு) மற்றைய அணிகளை மிகத் தாழ்வாக எண்ணியதும் சேர்த்து,
எந்த அணியாலும் வீழ்த்தப்பட முடியாத ஒரு அணியாகக் காட்டி வைத்திருக்கின்றன.
இப்படியான தோல்விகள் வரும்போது இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
அவர்கள் வெறியர்களாக மாறி தாங்கள் ஆதரவளித்த அணிக்கே எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.
இப்போது அவுஸ்திரேலியா மெல்பேர்னில் மீண்டும் தாங்கள் முதற்சுற்றில் சந்தித்த நியூ சீலாந்தை சந்திக்கின்றனர்.
முதலாவது போட்டியில் கண்ட தோல்விக்கு பழிவாங்கவும், 5வது உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதுடன் பொன்டிங் காலத்தில் இருந்த முன்னைய அவுஸ்திரேலிய பொற்காலத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.
அதற்கான சகல தகுதிகளும் இந்த பொன்னிற ஆடையணிந்த அணிக்கு இருக்கிறது.
இதைத் தான் அவர்கள் தங்கள் hashtag தாரக மந்திரமாக வைத்துள்ளார்கள்.
#GoGold
இன்று இரவுக்கு முன்னர் நாளைய உலகக்கிண்ணம் பற்றிய முன்னோட்டத்துடன் சந்திக்கிறேன்.
-------------------
எந்தெந்த விடயங்கள் ஏன் கேலி,கிண்டல்களுக்கு உட்படுகின்றன என்று பார்த்தால், அதில் பாதி பழிவாங்குதலும், தருணம் பார்த்து தாக்குதலும் அடங்கியிருக்கும்.
இந்திய அணியின் தோல்விக்காக இலங்கை ரசிகர்கள் காத்திருந்தனர். இந்தக் காத்திருப்பு அண்மைக்கால இலங்கை - இந்திய மோதல்களின் வழியே உருவாகிக் கிடந்தது.
அதிலும் இலங்கை அணியின் தோல்வியினை இந்திய ரசிகர்கள் கேலி செய்த விதமும், குறிப்பாக சங்கக்கார, மஹேல போன்ற மரியாதைக்குரிய சிரேஷ்ட வீரர்களையே சகட்டு மேனிக்கு நக்கல் செய்த விதமும் ரசிகர்களைப் புண்படுத்தியமையும் சேர்ந்தே இம்முறை இத்தனை பெரிய வெறித்தனமான வெறுப்பேற்றல்களாக மாறியிருக்கிறது.
அதிலும் இலங்கை ரசிகர்களின் கோபம் இம்முறை வினையூக்கி என்ற ஆவி கதை எழுத்தாளர் ஒருவர் தனக்குத் தெரியாத கிரிக்கெட் வரலாற்றை மிகத் துவேஷமான முறையில் தூற்றி எழுதியதாலும், இலங்கையில் உள்ள இந்திய ரசிகர்கள் நடந்துகொண்ட வரம்பு தாண்டிய விஷம முறையாலும் வெகுண்டு போயிருந்தது.
இன்னொரு அணிக்கு ஆதரவளிப்பது வேறு, சொந்த நாட்டு அணியை வெறுத்து, துவேசிப்பது வேறு என்பதை இன்னமுமே இவர்கள் புரியவில்லை.
இதற்குத் தான் தெளிவான பதிலை இங்கே, இவ்வாறு
சொல்லியிருந்தேன்...
ஆனா எங்களுக்கு தக்காளி சட்னி வந்தப்போ, சிட்னியில் ரத்தம் வரும்னு நீங்க யோசிச்சிருக்கணுமோ இல்லையோ?
so, நாங்க எடுத்த மாதிரியே நீங்களும் sportiveஆ எடுத்துக்கோங்க, enjoy பண்ணுங்க smile emoticon""
இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்கள்..
* இப்ப சரியா?
இதைத் தான் 'அடித்து' சொல்லி வைத்தேன்...
*இன்றைய தினம் சொன்ன வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மறக்கக்கூடாத பாடங்கள்...
*அவுஸ்திரேலிய வெற்றியினை எல்லோரும் (இந்திய ரசிகர்கள் தவிர) கொண்டாடுவதற்கும், அடக்கி வைத்திருந்த உணர்வுகளைக் கொட்டி, கேலி, கிண்டல்களை ஆறாக ஓடவிடுவதற்கும் காரணங்கள் தெரியாமல் இருந்தால்,
இன்னொரு முன்னைய இடுகையும் ஞாபகம் வந்தது, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உலக T20 கிண்ணப் போட்டிகளுக்குப் பினர் எழுதியது, இப்பவும் பொருந்துகிறது..