48 போட்டிகள், 42 நாட்கள்..
என்ன வேகமாக ஓடி முடிந்திருக்கின்றன..
எப்போது ஆரம்பிக்கும் என்று பார்த்துக் காத்து, பின்னர் ஒவ்வொரு போட்டியாக பார்த்து பார்த்து, திடீரென பார்த்தால், நாளை உலகக்கிண்ண இறுதிப்போட்டி.
இந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய, மற்ற அணிகளை விட சமபலமும் கொண்ட இரண்டு அணிகள், அதிலும் பக்கத்து பக்கத்து நாடுகள், போட்டிகளை நடத்துகின்ற இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் நாளை இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.
இந்த உலகக்கிண்ணப் போட்டியில் இதற்கு முன் சந்தித்த அணிகள் மீண்டும் சந்திக்கும் முதன்முறை, அதுவும் இறுதிப் போட்டியில்.
11வது தடவையாக நடைபெறும் உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா விளையாடும் 7வது உலகக்கிண்ண இறுதிப் போட்டி இது.
இதுவரை அவுஸ்திரேலியா விளையாடியுள்ள 6 உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் 4இல் கிண்ணம் வென்றுள்ளது.
நியூ சீலாந்துக்கு இது 6 அரையிறுதி மனவுடைவுகளுக்குப் பிறகு முதலாவது இறுதிப் போட்டி.
அவுஸ்திரேலியா 61 வெற்றிகள்.
நியூ சீலாந்து 48 வெற்றிகள்.
இதுவரை இந்த உலகக்கிண்ணப் போட்டியில் எந்தவொரு போட்டியிலும் தோற்காத ஒரே அணி நியூ சீலாந்து.
அவுஸ்திரேலியா இந்த நியூ சீலாந்திடம் மட்டும் முதற்சுற்றில் ஒரு தோல்வியைக் கண்டுள்ளது.
அதுவும் கடைசி விக்கெட்டில், மிக விறுவிறுப்பான ஒரு போட்டியில்.
இதுவரை உலகக்கிண்ண வரலாற்றில், எந்தவொரு போட்டியிலும் தோற்காமல் இறுதிப் போட்டிக்கு வந்த அணிகளில்,
மேற்கிந்தியத் தீவுகள் (1975,1979), இலங்கை (1996), அவுஸ்திரேலியா (2003, 2007) ஆகிய அணிகள் கிண்ணம் வென்றவை.
இங்கிலாந்து அணி 1979இல் எந்தவொரு போட்டியிலும் தோற்காமல் இறுதிப் போட்டிக்கு சென்று மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றிருந்தது.
அவுஸ்திரேலிய - நியூ சீலாந்து அணிகள் டாஸ்மன் நீரினையினால் பிரிக்கப்பட்ட, நெருக்கமான உறவுகள் கொண்ட அயல் நட்டுகலாக இருந்தாலும், கிரிக்கெட் ரீதியில் இவை இரண்டுமே பரம வைரிகள் போல மோதிக்கொள்வதுண்டு.
அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் மேலாதிக்கமும், மற்ற அணிகளைக் கணக்கெடுக்காத தன்மையுமே அதற்கான முக்கியமான காரணம்.
நீண்ட காலம் அவுஸ்திரேலியா நியூ சீலாந்துடன் விளையாடாத ஒரு காலமும் இருந்தது ; தற்போதும் BIG3 களில் ஒன்றாக இருக்கும் அவுஸ்திரேலியா, நியூ சீலாந்தை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.
(அவுஸ்திரேலியாவில் இறுதியாக நியூ சீலாந்து ஒரு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியது 2009இல்)
இதனால் தான் நியூ சீலாந்து அணிக்கு உலகம் முழுவதும் ஏனைய நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது.
இதுவரைக்கும் உலகக்கிண்ண முதற்சுற்றுப் போட்டி தவிர்ந்த knock out போட்டியொன்றில் ஒரேயொரு தடவை சந்தித்த நேரம் ஏராளமான ஓட்டக்குவிப்பில் அவுஸ்திரேலியா வெற்றி ஈட்டியது.
(1996 உலகக்கிண்ணத்தின் காலிறுதிப் போட்டி)
மொத்தமாக 9 உலகக்கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலியா 6 போட்டிகளில் வென்றுள்ளது, நியூ சீலாந்து 3 போட்டிகளில் வென்றுள்ளது, இதில் இரண்டு போட்டிகள் நியூ சீலாந்தில் விளையாடப்பட்டவை.
இதேபோல இரண்டுக்கு மேற்பட்ட நாடுகள் பங்குபற்றும் கிண்ணத்தொடர் ஒன்றில் இறுதிப்போட்டி ஒன்றில் நியூ சீலாந்து அவுஸ்திரேலியாவை ஒரே ஒரு தடவை தான் வென்றுள்ளது.
அது 34 ஆண்டுகளுக்கு முதல்.
அதற்குப் பின் 12 தடவைகளும் அவுஸ்திரேலியாவுக்கே வெற்றி.
இறுதியாக 2009 சம்பியன்ஸ் கிண்ணம்.
ஆடுகளத் தன்மைகள், அவுஸ்திரேலியாவில் போட்டி இடம்பெறுவது, மெல்பேர்ன் மைதானம்...
இப்படி சகல சாதகத் தன்மைகளும் நியூ சீலாந்துக்கு எதிராகவே நாளைய போட்டியில் இருக்கின்றன.
மிக முக்கியமாக இதுவரை தனது அத்தனை போட்டிகளையும் சொந்த நாட்டிலேயே விளையாடிவிட்டு, முதன்முறையாக ஒரு ஆவேசமான, பழிவாங்கும் வெறியோடு காத்திருக்கும் ராட்சதனை அவனது பாசறையிலேயே சந்திக்கும் நடுக்க நிலையில் நியூ சீலாந்து.
(கிட்டத்தட்ட 2011இல் இலங்கையின் நிலை. ஆனால் 2011 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி இடையில் ஒரு முதற்சுற்றுப் போட்டியில் நியூ சீலாந்தை இறுதிப் போட்டியை விளையாடிய அதே வன்கடெ மைதானத்தில் சந்தித்திருந்தது)
இதுவரைக்கும் பொதுவாகவே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான பெறுபேறுகளைக் காட்டியிராத நியூ சீலாந்து, 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் விளையாடவுள்ள ஒருநாள் போட்டி என்னும்போது, இறுதிப்போட்டியின் அழுத்தமும் சேர்ந்துகொள்ளப் போகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நியூ சீலாந்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டி பெறுபேறுகள்.
எனினும் மெல்பேர்ன் மைதானத்தில் இவ்விரு அணிகளும் இறுதியாக சந்தித்த 5 போட்டிகளில் நியூ சீலாந்து 3இல் வென்றுள்ளது.
அவுஸ்திரேலியா மெல்பேர்ன் மைதானத்தில் விளையாடியுள்ள 10 போட்டிகளில் 8இல் வென்றுள்ளது. அதிலும் கடைசி 6 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றி.
இறுதியாக 2012இல் இலங்கை அணியிடம் மட்டுமே தோற்று இருக்கிறது.
------------
அவுஸ்திரேலியர்கள் தங்களது வழமையான மனோவியல் தாக்குதல்களை நியூ சீலாந்து அரையிறுதியில் வென்று அவுஸ்திரேலியாவுக்குள் கால் பதித்த உடனேயே ஆரம்பித்துவிட்டார்கள்.
நியூ சீலாந்தின் சிறிய மைதானங்களில் விளையாடிய மக்கலம் குழுவினர், மெல்பேர்ன் என்ற பிரம்மாண்டமான மைதானத்தில் தடுமாறுவார்கள் என்று கேலி செய்யும், #MCGsoBIG hashtag ட்விட்டரில் உலா வருகிறது.
முதற்சுற்றில் தோற்றதற்கு பழிவாங்கவும், தங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் நியூ சீலாந்தை வீழ்த்தவேண்டும் என்ற மனோநிலையிலும் அவுஸ்திரேலியர்கள் காத்துள்ளனர்.
இன்னும் 4 விடயங்கள் நியூ சீலாந்துக்கு பாதகமாக உள்ளன.
1.நியூ சீலாந்து ஆடுகளங்கள் போல மெல்பேர்ன் ஸ்விங் ஆகாது
2.மைதானத்தின் பிரம்மாண்டம், நியூ சீலாந்து வழமையாக ஆடுவது போல இலகுவாக 6, 4 வராது
3.இவ்வாறான 'பெரிய' போட்டிகளின் அனுபவக் குறைவு
4. முன்பு நியூ சீலாந்தில் வைத்து வீழ்த்திய அவுஸ்திரேலியாவை விட இப்போது பலமாக உள்ள அவுஸ்திரேலியக் கட்டமைப்பு.
-------------
துடுப்பாட்ட வரிசைகள் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று நிகரானவை எனினும் பிரெண்டன் மக்கலமின் அதிரடி ஆரம்பமும், கோரி அன்டர்சனின் நிறைவு செய்யும் தன்மையும் நியூ சீலாந்தை இப்போது பலமானதாக காட்டுகிறது.
மக்கலம் நீண்ட நேரம் நின்றால் அது தரும் பாதிப்பு அதிகம் தான். ஆனால் அவரது ஆவேச அதிரடி சில ஓவர்களுக்கு நிற்பது நியூ சீலாந்துக்கு பலவீனமானது.
அண்மைய இரட்டைச் சதா ஹீரோ கப்டில் தொடரில் கூடுதல் ஓட்டங்கள் குவித்த சங்கக்காரவுக்கு சவால் விடும் அளவுக்கு முன்னேறி வந்துள்ள, நிதானமான துடுப்பாட்ட வீரர்.
(நாளை 9 ஓட்டங்களுக்குள் அவரை அவுஸ்திரேலியா வீழ்த்தி இலங்கை அணிக்கு இந்த ஒரேயொரு பெருமையையாவது வழங்கும் என எதிர்பார்க்கிறேன்)
இதுவரை தொடரில் கூடுதல் ஓட்டங்கள் குவித்தோர்
கேன் வில்லியம்சன் இந்தத் தொடரில் தன்னுடைய மிகப்பெரிய பங்களிப்பை முக்கியமான நாளைய போட்டியில் வழங்குவார் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
ரொஸ் டெய்லர் என்ன தான் இந்தத் தொடரில் சற்றுத் தடுமாறி வந்தாலும், உலகத் தரமான துடுப்பாட்ட வீரர்.
க்ராண்ட் எலியட் தான் யார் என்பதை அரையிறுதிப் போட்டியில் காட்டியதால் அவுஸ்திரேலியர்கள் அவரையும் குறித்து வைக்கவேண்டியிருக்கும்.
தான் அறிமுகமான அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவே உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ள லூக் ரொங்கி இன்னொரு ஆபத்தான அதிரடி வீரர். தனது முன்னைய அணிக்கு எதிராக நாளை சிறப்பாக செய்துகாட்ட ஆசைப்படுவார்.
மறுபக்கம் அவுஸ்திரேலியாவுக்கு வோர்னர் - பிஞ்ச் நாளையாவது சிறப்பான ஒரு ஆரம்ப இணைப்பாட்டம் தரவேண்டும் என்பதே அவுஸ்திரேலியர்களின் எதிர்பார்ப்பு.
தனித்தனியாக இருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளுத்துவாங்கினாலும் சேர்ந்து உறுதியான ஆரம்பம் ஒன்று தந்தால் உலகக்கிண்ணம் கைகளில்.
ஸ்டீவ் ஸ்மித் - அவுஸ்திரேலியாவின் தற்போதைய துடுப்பாட்ட முதுகெலும்பு. இவரைச் சுற்றியே அவுஸ்திரேலிய அணியின் பெரிய ஓட்ட எண்ணிக்கைகள் பின்னப்படுவதால், நாளை நியூ சீலாந்தின் முழுக்கவனமும் இவரை ஆட்டமிழக்கச் செய்வதில் இருக்கும்.
இவரைப்போலவே மக்ஸ்வெல். ஆனால், மக்கலம் போலவே அடித்தாடுவதில் தீவிர ஆவேசம் காட்டும் மக்சி நீண்ட நேரம் நிற்காமல் குறுகிய நேரத்திலேயே வெளுத்துவாங்கிவிட்டுப் போவது கொஞ்சம் ஏமாற்றமே.
தலைவர் கிளார்க் நாளை தன்னுடைய இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டி என்று அறிவித்திருப்பது நாளைய போட்டியில் அவரது பெறுபேற்றையும், கிண்ணத்தின் வெற்றியையும் இன்னும் அதிகமாக்கி இருக்கிறது.
இன்னும் 93 ஓட்டங்களை (நாளைக்கு கிளார்க் சதத்துடன் விடைபெறவேண்டும் என்பது ரசிகனாக என் ஆசை) பெற்றால் 8000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்கள் பூர்த்தியாகும்.
கிளார்க் இந்த உலகக்கிண்ணத்தை வென்ற பிறகு தனது ஓய்வை அறிவிப்பார் என்று பார்த்தால், போட்டிக்கு முன்னதாகவே சொல்லி ஆச்சரியமூட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியர்கள் பொதுவாக இப்படி இருப்பதில்லை.
தடுமாற்றத்திலிருந்து இன்னமும் விடைபெறவேண்டிய வொட்சன், பெரிதாக துடுப்பாட வாய்ப்புக் கிடைக்காத ஹடின், கிடைத்தபோதெல்லாம் வேகமாக வெளுத்து வாங்கிய ஜோன்சன், போல்க்னர் என்று அவுஸ்திரேலிய வரிசை நீண்டதே.
--------------
பந்துவீச்சில் தான் பயங்கரப் போட்டி..
உலகக்கிண்ணத்தில் அதிக விக்கெட் எடுத்தோரைப் பார்த்தாலே இந்தப் போட்டி புரியும்.
போல்ட் மற்றும் ஸ்டார்க் ஆகிய இரு இடது கை வேகப்பந்து வீச்சாளர்க்கிடையிலான நேரடிப் போட்டி.
இரண்டுபேருமே இந்த உலகக்கிண்ணத்தில் துடுப்பாட்ட வீரர்களை பயமுறுத்தி விக்கெட்டுக்களை அள்ளி வருகின்றனர்.
இவர்களுக்குத் துணையாக டிம் சௌதீ, அண்டர்சன் ஆகியோர் இருந்தாலும், நியூ சீலாந்துக்கு மில்ன் காயமுற்றது பெரும் பாதிப்பே.
ஆனால் சுழல்பந்து வீச்சாளர் டானியேல் வெட்டோரி நாளை ஒரு முக்கிய துரும்புச் சீட்டாக விளங்கக்கூடும்.
அவரது அனுபவமும், ஆடுகள சாதகத் தன்மையும் அவுஸ்திரேலிய அதிரடி வீரர்களையும் திணறடிக்கலாம்.
வெட்டொரிக்கு நிகராக அவுஸ்திரேலியாவில் சுழல்பந்துவீச்சாளர் இல்லாத குறையை மைக்கேல் கிளார்க்கின் பல சமயங்களில் எதிரணிகளை உருட்டி எடுக்கும் இடது கை நாளை மாயாஜாலம் காட்டுமா?
ஆனால், நாளைய தினம் ஜோன்சன் நிச்சயம் அவுஸ்திரேலிய அணியின் பலத்துக்கு ஒரு அடையாளாமாக திகழ்வார் என நம்புகிறேன். முக்கியமான போட்டிகளில் அசுர பலம் பெறும் ஜோன்சன் அரையிறுதியில் சகலதுறை திறமை காட்டிய form மேலும் தெம்பு தரும்.
அதேபோல விக்கெட்டுக்களை சரிக்கும், நிதானமான ஜோஷ் ஹேசில்வூட்டும், தனது திறமையினால் சேர்த்த ரசிகர்களை விட,வாய் சவடால்கள் மற்றும் வம்புச் சண்டைகளால் எதிரிகளை சேர்த்துள்ள ஜேம்ஸ் போல்க்னரும் முக்கிய விக்கெட்டுக்களை உடைக்கக் கூடியவர்கள்.
சில,பல ஓவர்களுக்கு மக்ஸ்வெல் மற்றும் வொட்சன் இருக்கிறார்கள்.
-----------------
களத்தடுப்பில் இரண்டு அணிகளுமே உலகின் இரண்டு மிகச்சிறந்த அணிகள்.
சாகசக் களத்தடுப்பு பலவற்றை நாளை காணலாம்.
---------
1996 முதல் இலங்கை இல்லாமல் உலகக்கிண்ணம் இல்லை என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடும், இன்றேல் ரஞ்சன் மடுகல்ல போட்டித் தீர்ப்பாளராக இருந்துவந்துள்ளார்.
இம்முறை இலங்கை அணி காலிறுதியோடு போனாலும், நாளைய இறுதிப் போட்டியில் நடுவர் குமார் தர்மசேன.
இப்போதைய நடுவர்களில் மிகச் சிறந்தவராகக் கணிக்கப்படுகிறார் தர்மசேன.
விளையாடும் வீரர்களால் மிகக் குறைந்தளவு விமர்சிக்கப்படுபவரும், தவறான தீர்ப்புக்களை மிகக் குறைந்தளவில் வழங்குபவரும் இவர் என்று பாராட்டப்படுகிறார்.
அவருடன் போட்டித் தீர்ப்பாளராக மீண்டும் ரஞ்சன்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ரஞ்சன் மடுகல்ல கனவான் தன்மையான, மிக நேர்மையான ஒருவர் என பெயர் எடுத்தவர்.
தர்மசேன இதன் மூலம் உலகக்கிண்ணப் போட்டி ஒன்றின் இறுதிப் போட்டியில் விளையாடியவராகவும் (1996இல் கிண்ணம் வென்ற வீரர்), நடுவராகவும் கடமையாற்றியவராகவும் பெருமை பெரும் ஒரே ஒருவர் தர்மசேன மட்டுமே.
-----------------------------------
பல காரணிகளால், நாளைய இறுதிப்போட்டி, ஒரு மிக நெருக்கமான போட்டியாக, இறுதி ஓவர் வரை செல்லாது அவுஸ்திரேலியா இலகுவான வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
நான் இலங்கை அணிக்குப் பிறகு எப்போதுமே அவுஸ்திரேலிய ரசிகனாக இருந்தாலும், நியூ சீலாந்து போன்ற ஒரு அணியை வெறுப்பது கடினம்,
அவர்கள் விளையாடுவதும், இறுதிவரை போராடுவதும், எதிரணிகளை கௌரவப்படுத்துவதும் அவ்வளவு அழகும் ரசனையும்.
வழமையாக என்றால், அவர்கள் வென்றாலும் கவலையுறப்போவதில்லை.
ஆனால், நாளை சில முக்கிய காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்.
அவற்றில் முதலாவது நான் முதலாவது போட்டி முதல் ரசித்து வரும் ஒரு ஹீரோ மைக்கேல் கிளார்க்.
ஒரு உலகக்கிண்ண வெற்றியுடன் இவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கலக்கவேண்டும்.
எனக்கு பிடித்த இரு ஹீரோக்கள் மஹேல, சங்கா இருவரும் உலகக்கிண்ணம் ஒன்று இல்லாமல் விடைபெற்றது போல கிளார்க்கும் ஆகிவிடக்கூடாது என்று விரும்புகிறேன்.
(கிளார்க் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்- "இப்பிடி நீங்க சொன்னவை ஏராளமாக இருக்கு" என்று எவனடா முணுமுணுக்கிறது ?)
அடுத்து ஒரு அணியாக இந்தத் தொடரில் பூரண பலத்துடன் தெரிந்த இரு அணிகளில் அவுஸ்திரேலியா மட்டுமே சகல சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளது.
(நியூ சீலாந்துடன் தோல்வியுற்ற போட்டியிலும் அந்த இறுதி வரையான போராட்டம் எல்லா அணிகளாலும் முடியாது)
பிலிப் ஹியூசின் கிரிக்கெட்டோடு கலந்த ஆன்மாவுக்காக
மிட்செல் ஜோன்சனுக்கு உலகக்கிண்ணம் விளையாடும் இறுதி வாய்ப்பு.
எல்லாவற்றையும் விட, இலங்கைக்கு கிடைக்காவிட்டால் அது அவுஸ்திரேலியாவுக்கு, அவர்களது திறமைக்குக் கிடைக்கட்டும்.
ஆனால்,இதையெல்லாம் கடந்து நியூ சீலாந்து சிறப்பாக விளையாடி வென்றால், அவர்களை மதிக்கத் தான் வேண்டும்; பாராட்டத் தான் வேண்டும்.
மக்கலமின் தலைமையில் மிக சிறப்பாக, தகுதியான, சிறப்புத் தேர்ச்சி பெற்ற, பார்த்து ரசிக்கவைக்கின்ற வீரர்களோடு விளையாடி வரும் அந்த அணி கிரிக்கெட்டுக்கு தேவை.
(என்ன, மக்கலம் இன்றைய இந்தியாவில் வாழும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான கடிதம் என்று விளம்பரத்துக்காக ஒரு முட்டாள்தனம் செய்திருக்கிறார். இதற்காக எல்லாம் நியூ சீலாந்து தோற்கவேண்டும் என்று யோசிப்பவன் நான் அல்ல. ஆனாலும் இதெல்லாம் மக்கலம் போன்ற ஒரு அற்புதமான வீரனுக்குத் தேவையா?)
ஆனால், மக்கலமின் வியாபார, விளம்பர யுக்திக் கடிதத்தை விட, 1992இல் இறுதிப்போட்டிக்கு வந்து கிண்ணத்தை வெல்லக் கூடிய வாய்ப்புடையவராக இருந்த முன்னாள் நியூ சீலாந்து அணித் தலைவர் மார்ட்டின் க்ரோ எழுதியுள்ள உருக்கமான கடிதம்/கட்டுரை மனதைத் தொடுவது.
புற்றுநோயோடு போராடும் க்ரோ, தனது உடல்நிலையோடு இனி எந்தவொரு போட்டியையும் (நேரடியாக, மைதானத்தில்) பார்ப்பாரோ என்பது உறுதி இல்லாத நிலையில், இந்த போட்டியும், இதிலே நியூ சீலாந்து அடைகிற வெற்றியோடும் இறுதி சில நாட்களில் இருந்துவிட்டுப் போகிறேன் என்று குறிப்பிட்டிருப்பது யாருக்குமே மனதை நெகிழவைக்கக் கூடியது.
ஆனால், மக்கலமின் வியாபார, விளம்பர யுக்திக் கடிதத்தை விட, 1992இல் இறுதிப்போட்டிக்கு வந்து கிண்ணத்தை வெல்லக் கூடிய வாய்ப்புடையவராக இருந்த முன்னாள் நியூ சீலாந்து அணித் தலைவர் மார்ட்டின் க்ரோ எழுதியுள்ள உருக்கமான கடிதம்/கட்டுரை மனதைத் தொடுவது.
புற்றுநோயோடு போராடும் க்ரோ, தனது உடல்நிலையோடு இனி எந்தவொரு போட்டியையும் (நேரடியாக, மைதானத்தில்) பார்ப்பாரோ என்பது உறுதி இல்லாத நிலையில், இந்த போட்டியும், இதிலே நியூ சீலாந்து அடைகிற வெற்றியோடும் இறுதி சில நாட்களில் இருந்துவிட்டுப் போகிறேன் என்று குறிப்பிட்டிருப்பது யாருக்குமே மனதை நெகிழவைக்கக் கூடியது.
நாளை நல்ல போட்டியொன்றை எதிர்பார்க்கிறேன்.
கிரிக்கெட்டின் மகத்துவதொடு போட்டி இடம்பெற்று தகுந்த அணி, சிறந்த அணி வெல்லட்டும்.
அவுஸ்திரேலியாவின் 5வது உலகக்கிண்ணம் எனக்கு பூரிப்பைத் தரட்டும்.