பிலிப் ஹியூஸ் - பலியெடுத்த பவுன்சர் - மனதை உறுத்தும் நினைவுகள்

ARV Loshan
1
பிலிப் ஹியூஸின் திடீர் மரணம் !!!


கிரிக்கெட் உலகையே உலுக்கிப்போட்டது; கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட, விபரங்களைத் தெரிந்து கொண்டு கண்ணீர் விடும் அளவுக்குக் கவலைப்படுகிறார்கள்.
வெறித்தனமாக, அனுபவித்து ரசிக்கும் ஒரு விளையாட்டு ஒரு திறமையான, எதிர்காலம் இன்னும் வளமாக இருக்கவேண்டிய ஒரு இளம் வீரனைப் பலி எடுத்துவிட்டதே என்ற வேதனை பலருக்கும்.

ஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து விளையாட்டு உலகமே சோகத்தில் ஆழ்ந்தது, விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம் மட்டுமல்ல, இறந்துகொண்டிருக்கும் மனிதம் இப்படியான விஷயங்களிலாவது உயிர்க்கிறது என்று ஒரு திருப்தி.

Philip Hughes - Memories and Tributes


பில் ஹியூஸின் செய்தி கேள்விப்பட்டவுடன் முதலில் இன்னொரு பவுன்சர், இன்னொரு காயம் அவ்வளவே என்று தான் தோன்றியது.
சம்பவத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தபின், அவுஸ்திரேலிய அணியின் ரசிகனாக ​இருந்த நான் சுயநலமாகப் பார்த்தது இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு இது இழப்பாக இருக்காது என்பதைத் தான்.
(அந்த நேரம் ஹியூஸின் மரணம் பற்றி சிறிதளவேனும் சிந்திக்கவில்லை)

மரணம் பற்றிய செய்தி கிடைத்தவுடன் மனதில் கவலையை விட அதிர்ச்சி.
அதிலும் அந்த மரணம் நிகழ்ந்த தேதி, மனதில் கவ்வியிருந்த சோகத்தை மேலும் கனக்கச் செய்தது.
இது பற்றி உடனே மனம் வெதும்பி இட்ட நிலைத்தகவல்

இளவயது மரணங்கள் தரும் வேதனை மிகக் கொடிது.இன்னும் வாழும் காலம் இருக்க களத்திலேயே வீரனாக மரித்த ஹியூசுக்கு(ம்) அஞ்சலிகள். ‪#‎RIPHughes‬கொண்ட இலட்சியம், தேர்ந்தெடுத்த பாதை, வாழ்க்கையாகக் கொண்ட களம்.சென்று வா வீரனே..

பில் ஹியூஸின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.

Phillip Hughes funeral - நெகிழ வைக்கும் இறுதிச்சடங்கு

கிரிக்கெட் உலகமே மீண்டும் கவலையுடன் வேதனையின் வலியுடன் அஞ்சலித்தது. ஒரு விளையாட்டு வீரனுக்குக் கொடுக்கவேண்டிய உச்சபட்ச கௌரவத்தை அவுஸ்திரேலியா நாடே வழங்கியிருக்கிறது.
அவுஸ்திரேலிய வீரர்கள், முக்கியமாக அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் பகிர்ந்து கொண்ட துயர், நினைவுப் பதிவுகள் மனதில் நெகிழ்ச்சியைத் தந்தவை.

பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் மைக்கேல் கிளார்க்கின் உணர்ச்சிபூர்வமான உரை - Michael Clarke's Emotional Speech at Phil Hughes Funeral


ஒரு சகோதரன் போல பழகினேன் என்று சும்மா வாய்மொழியாக சொல்லிவிட்டுப் போய்விடலாம்; ஆனால் அதை நிரூபிப்பதாக இருந்த மைக்கேல் கிளார்க், ஹியூசுக்கு இடையிலான நெருக்கம் உருக்கம் தரக்கூடியது.

கிளார்க்கின் உரை மனதை நெகிழ வைத்திருந்தது. இந்த துர்ச்சம்பவத்துக்குப் பிறகு கிளார்க்கின் அணுகுமுறைகள், அவர் நிகழ்த்திய உரைகள் மூலமாக மனதில் அபிமானத்தை அதிகரித்திருக்கிறார்.

இவ்வளவு ஹியூஸுடன் இளைய சகோதரன் அளவுக்கு நெருக்கமான உறவைப் பேணியும் எந்தவிதத்திலும் ஹியூஸை அணிக்குள் சேர்ப்பதற்கு செல்வாக்கைப் பிரயோகிக்காத கிளார்க்கின் கண்ணியம் பாராட்டக் கூடியதே.

இன்று வரை நீடிக்கும் ஏனைய கிரிக்கெட் வீரர்களின், கனவான் தன்மையும் கண்ணியமும் போற்றக்கூடியவை.

-------------------

அதேநேரம், மனதில் ஒருவித குற்றவுணர்வு இப்போது வரை நீடிக்கிறது.
பாடசாலை, கழகம் (வின்னர்ஸ்) என்று கடினபந்து விளையாடிய காலத்தில் (நான் சுழல்பந்து வீசும் கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர்) எனக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைத்தது மிக அரிதாகவே.

அதிலே பெரிய சந்தோஷம் அந்தக் காலத்தில். எல்லாம் உடம்பில் எங்கேயாவது பந்து தாறுமாறாப் பட்டிடுமோ என்ற பயம் தான். அத்துடன் தலைக்கவசம் அணிந்து விளையாட கொஞ்சமும் விருப்பம் இல்லை என்பதும் சேர்த்து.

யார் அடிமையாக அகப்படுகிறார்களோ அவர்கள் தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.
கழகத்துக்காக விளையாடிய நாட்களில் அவ்வாறு அப்பாவியாக சிக்கிப் போனவன் என்னுடைய கடைசித் தம்பி.

அவனும் அவனுடைய வகுப்பு நண்பன் ஒருவனதும் கடமை, புதிய பந்தை சமாளித்து முதல் பத்து ஓவர்கள் நின்று பிடிப்பது. அதற்குப்பிறகு எங்கள் அதிரடி வீரர்கள் வந்து ஓட்டங்களை அடித்துப் பெற்றுக்கொள்வார்கள்.
இதற்காக ஒவ்வொரு போட்டியிலும் சரமாரியாக உடம்பில் வேகப்பந்துகளை வாங்கிக்கொள்வான். போட்டி முடிந்து உடம்பைப் பார்த்தால் உடம்பு முழுவதும் சிவப்பு பந்துகளாக வீங்கிக் கிடக்கும்.

ஒரு தரம் வேகப்பந்து அவனது விரலை முறித்தும் வெளிக்காட்டாமல் 15 ஓவர்கள் நின்று ஆடி வெளியே வந்தபோது பதறிவிட்டேன்.

அதே போல நாம் களத்தடுப்பில் ஈடுபடும்போது எங்கள் நண்பர்களாக இருப்பவர்கள் எதிரணியில் விளையாடினாலும் எமது வேகப்பந்துவீச்சாளர்கள் மூலமாகத் தாக்குவதையும் ஊக்குவித்ததோடு, அதை ஒரு ஆயுதமாகவும், சில நேரங்களில் விக்கெட் எடுக்கப் பயன்படுத்தும் வியூகமாகவும் பயன்படுத்தியிருந்தோம் என்று எண்ணும்போது கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது.

ஒரு பவுன்சர் பந்து போதும் ஒருவரின் உயிரைக் குடித்துவிடும் என்று அப்போது நாம் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. போட்ட பந்துகளில் தப்பித் தவறி, எகிறிக்குதித்த ஒரு பந்து தற்செயலாக யாராவது ஒருவருக்கு ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருந்தால்???
வாழ்நாள் முழுக்க மனதை உறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு சம்பவமாக மாறியிருக்கும்.

அந்த வேளையில் நானும் நாமும் நடந்துகொண்ட விதமும், அப்பாவிகளை பலிக்கடா ஆக்கிய விதமும் இப்போதும் வெட்கமாக இருக்கிறது.
அதேபோல தான், கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் நேரமும் நான் ஆதரவு கொடுக்கின்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகள், short pitched, bodyline length பந்துகள் மூலமாக எதிரணி வீரர்களைத் தாக்குவதை ஒரு குரூர ரசனையுடன் பார்த்திருக்கிறேன்.
(மிட்செல் ஜோன்சனின் ஆஷஸ் பவுன்சர், வேகத் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் ரசித்திருக்கிறேன்)


தற்செயலாக காயங்கள், உபாதைகள் ஏற்படும்போது மனக்கவலை கொண்டாலும், மிட்செல்  ஜோன்சன் , டேல் ஸ்டெய்ன் (நான் ஆதரவு தெரிவிக்கும் அணிக்கு விளையாடும் நேரம் மட்டும்), சில நேரங்களில் மாலிங்க போன்ற இலங்கை பந்துவீச்சாளர்கள் வீசும் இவ்வகைப் பந்துகளை ரசித்திருக்கிறேன்.
இறுதியாக இங்கிலாந்தில் வைத்து இலங்கை டெஸ்ட் தொடரை வென்ற நேரம் சமிந்த எரங்கவின் பவுன்சர் மூலமாக விழுத்தப்பட்ட விக்கெட்டுக்கு அடைந்த குதூகலம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது.

இப்பொழுது அதை நினைக்கையிலும் கொஞ்சம் மனதில் குற்றவுணர்ச்சி தான்.
-----------------

ஆனாலும், பவுன்சர் பந்துகளை (பவுன்சருக்கு எகிறி என்றொரு வார்த்தையை அண்மையில் அறிந்தேன். நன்றாகவே இருக்கிறது) தடை செய்யவேண்டும் என்றும், அதற்கு மேலே சென்று கடின பந்து பாவனையை முற்றாகத் தடை செய்வதன் மூலமாக கிரிக்கெட்டை மேலும் ரசிக்கவும் செய்யலாம், பாதுகாப்பு உபகரணங்களும் தேவையில்லை என்று எழும் கோஷங்களுக்கு நான் கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

நாம் நேசிக்கும் ஒரு விளையாட்டின் மூலம் மரணம் என்பதை பலர் சொல்லும்போது, இல்லை இது இந்த விளையாட்டில் நடந்த ஒரு விபத்தின் மூலமான மரணமே தவிர, கிரிக்கெட் தான் இந்த மரணத்துக்குக் காரணம் என்று யாரும் சொல்லாதீங்கடா என்று சத்தமாகக் கத்தவேண்டும் போல இருந்தது.

ஒவ்வொரு விளையாட்டின் தனித்துவமான அம்சங்களுக்காகவே அவை ரசிக்கப்படுகின்றன.

கால்பந்து விளையாட்டில் ஓயாமல் ஓடுவதும், அபாயகரமான உதைகளும் tackle மற்றும் foulகளும் மரணங்களைத் தூண்டுகின்றன என அவற்றைத் தடை செய்வதுண்டா?
அல்லது குத்துச்சண்டை காரணமாக நீண்ட கால உபாதைகள், சில உடனடி மரணங்கள் சம்பவிக்கின்றன என தடை செய்யக் கோரிக்கைகள் விடப்படுவதுண்டா?

கிரிக்கெட்டில் கூட இவ்வாறான விபத்துக்கள், அசம்பாவிதங்கள் எப்போதாவது தான் நடப்பதுண்டு.
கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த ஏழாவது துரதிர்ஷ்டமான மரணம் இதுவாகும்.
(இதில் எவையுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடந்தவை அல்ல என்பதும் முக்கியமானது)

தலைக்கவசம் அணிந்திருந்தும் மணிக்கு 135 km வேகத்தில் பட்ட பந்து எப்படி பிலிப் ஹியூஸின் உயிரைப் பறித்தது?
இதோ விளக்கப்படம் 


ஆனால் கிரிக்கெட்டின் மீதான அண்மைய சாபமோ என்னவோ கடந்த வாரம் இஸ்ரேலில் நடந்த ஒரு கழக மட்டக் கிரிக்கெட் போட்டியில் நடுவர் ஒருவர் பந்து தாக்கி பலியாகியுள்ளார்.

ஆபத்து இல்லாத இடம் எது? ஆபத்து இல்லாத செயல்கள் எவை?
எனினும் எல்லா விடயங்களிலும், எல்லா நேரங்களிலும் நாம் எம்மை காத்துக்கொள்வதும், முற்கூட்டியே அலட்சியமாக இல்லாமல் தக்க உபகரணங்கள் / பாதுகாப்பு காப்புக்கள் இல்லாமல் இப்படியான திடீர் ஆபத்துக்களை எதிர்கொள்வது புத்திசாலித்தனம் இல்லை தான்.

அண்மையில் வாசித்த சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையிலும் - Playing it my way ஒரு அத்தியாயத்தில் நான் மும்பாய் அணிக்கு விளையாட ஆரம்பித்தபோதும் தலைக்கவசம் இல்லாமல் ஆடியதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
அதே நேரம் தான் பாதுகாப்பைப் பற்றி கவனமாக இருந்தது பற்றியும் சொல்லியிருக்கிறார்.


இந்தவேளையில் தான் முன்னைய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் Fearsome Foursome என்று அழைக்கப்பட்ட ஹோல்டிங், ரொபேர்ட்ஸ், கார்னர், மார்ஷல் போன்றோரையும், அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ, ஜெப் தொம்சன், இங்கிலாந்தின் பொப் வில்லிஸ், ட்ரூமன், ஜோன் ஸ்னோ போன்றோரையும் தலைக்கவசம் இல்லாமல் எதிர்கொண்டு ஆடிய வீரர்களின் துணிச்சல் உண்மையில் மெச்சத் தக்கது தான்.

எத்தனை எலும்புகள் உடைந்து தெறித்திருக்கும். எத்தனை வீரர்கள் தம் கிரிக்கெட் வாழ்வை பாதியில் முடித்துக்கொண்டார்கள்.

தலைக்கவசங்கள் புழக்கத்துக்கு வந்தபோதும் அதைப் பயன்படுத்தாமல் துணிச்சலாக தங்கள் துடுப்பாலேயே தடுத்தாடிய சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் (skull guard எனப்படும் மண்டையோட்டைப் பாதுகாக்கும் சிறு கவசம் ஒன்று மட்டும் பயன்படுத்தியிருந்தார்) இன்னும் மற்ற வீரர்களை மதிப்போடு எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கிறது.
அதிலும் இக்காலத்தை விட அந்தக்காலத்தில் வேகமும் அதிகம், மைதானங்களும் பெரிதாக இப்போது போல மூடப்பட்டு பராமரிக்கப்பட்டவை அல்ல.

எனினும் இப்போது வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம், அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு நல்ல வீரரின் மரணத்தைத் தொடர்ந்து இதை ஒரு பாடமாக தக்க காப்புக்களோடு விளையாடுவது ஆரோக்கியமானதே.


இப்போது இருக்கும் கேள்வி, 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சனும் குழுவினரும், தங்கள் வழமையான வேகப்பந்துவீச்சின் பிரம்மாஸ்திரங்களான பவுன்சர் மற்றும் short pitch பந்துகளை பயன்படுத்துவார்களா?

அடுத்த பதிவில் இப்போது ஹியூஸின் நினைவுகளால் சோகமாகிப்போயுள்ள அவுஸ்திரேலிய - இந்திய தொடர் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்கிறேன்.

இந்தப் பதிவின் படங்கள் : www.mirror.co.uk
                                                      espncricinfo.com
                                                      https://www.facebook.com/SooriyaRaagangal


Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*