கத்தி

ARV Loshan
6

ஒரு திரைப்பட இயக்குனரை மதிப்பிடுவதற்கு அவரது இரண்டாவது படத்தையும் பார்க்கவேண்டும். ஆனால் ஒரு இயக்குனரைப் பிடித்துப் போவது முதல் படத்திலேயே நடக்கக்கூடியது இயல்பானதே.

தீனாவில் பிடித்துப்போன A.R.முருகதாஸ் என்ற இயக்குனர் மேல் ரமணா திரைப்படத்தின் பின்னர் மதிப்பும் எதிர்பார்ப்பும் ஏறியது.

எங்கள் எதிர்பார்ப்புக்கள் தாண்டிய ஒரு படைப்பை, நாங்கள் எதிர்பார்க்கும் ஒரு வடிவத்தில் ஒரு பிரசாரமாக இல்லாமல், சுவாரஸ்யமாகத் தரமுடியும் என்றால் பிடித்த இயக்குனராக அவர் மாறிவிடுவது இயல்பு தானே?

ரமணாவின் பின்னர் முருகதாஸின் கஜினியும் அவரது படமாக்கலில், கதை சொல்லும் விதத்தில் பிடித்துப்போனது.
எனினும் ரமணாவின் முருகதாஸ் காணாமல் போயிருந்தார்.

கஜினிக்குப் பின்னர் முருகதாஸ் மற்றைய 'வெற்றிகர' வர்த்தக வெற்றிக்கான படங்களைத் தரும் இயக்குனர்களில் ஒருவராக உருமாறிப்போனார் .
படத்தின் வேகத்தைக் குறைக்கும் பாடல்களும், தேவையற்ற நீளமான சண்டைக்காட்சிகளும் முருகதாசினதும் அடையாளங்கள் ஆகிப்போயின.

ஏழாம் அறிவின் பிரசாரப்பாணியும் ஓவரான அலட்டலும் எரிச்சலூட்டியது.

துப்பாக்கி ரசித்த படம்.. ஆனாலும் படத்தின் சில காட்சிகளின் சாமர்த்தியத்திலும் சில காட்சிகளின் ரசிப்பிலும் தான் முருகதாஸ் தெரிந்தார்.
மற்றும்படி அது முற்றுமுழுதான விஜய் படம் தான்.

கத்தி பற்றிய அறிவித்தல்கள், விளம்பரங்கள் வந்தபோதும் இதுவும் வழக்கமான  விஜய் படமாகத் தான் இருக்கப் போகிறது என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

பெட்ரோமக்ஸ் லைட்டுடன் குழாய்க்குள் விஜய் அமர்ந்திருக்கும் டீசர் போஸ், கண் மண் தெரியாமல், தொடர்பேதும் இல்லாதது போல வந்த கத்தி ட்ரெய்லர் என்பன இந்தப் படமும் தலைவா, சுறா, வில்லு மாதிரி ஆகிடுமோ என்ற எண்ணத்தை இன்னும் கொஞ்சம் உறுதிப்படுத்தி இருந்தன.
போதாக்குறைக்கு விஜய் இரட்டை வேடம் வேறு.

ட்விட்டர், Facebook எங்கும் கலாய்ப்புக்கள், காமெடிகளுக்கும் குறைவில்லாமல் களைகட்டியிருந்தது.

ஆனால் இந்த டீசர், ட்ரெய்லர் இரண்டிலுமே கலாய்க்கப்பட்ட முக்கிய விடயங்களையே படத்தின் பரபரப்பான இடமாக்கி நியாயம் செய்து இருக்கிறார் இயக்குனர்.
படமும் அவ்வாறு தான்.

விஜய்க்கேற்ற மாஸும் இருக்கிறது, A.R.முருகதாஸின் கிளாசும் இருக்கிறது.



இந்தப் படக்கதை கோபி என்பவர் எழுதிய 'மூத்த குடி' என்றும் A.R.முருகதாஸ் சுட்டுக்கொண்டார் என்றும் கதைகள் உலாவுகின்றன. காட்சிக்கு காட்சி விவரித்ததை எல்லாம் வெட்கமின்றி முருகதாஸ் உருவிக்கொண்டார் என்று தாக்கல் செய்த வழக்கில் கோபி தோற்றுவிட்டாராம். ஆனால் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப் போகிறாராம்.

நாலு இட்லி+ஒரு டீ= ‘கத்தி’ சுட்ட கதை

உண்மை வெல்லட்டும்.



அப்படி முருகதாஸ் என்ற படைப்பாளி நேர்மையின்றி திருடியிருப்பாரே ஆயின் நிச்சயம் அது கேவலமானதே.
ஆயினும் எடுத்த படத்தை செம்மையாகத் தந்துள்ள முருகதாஸ் இயக்குனராகவும், பல இடங்களில் கூர்மையாக இருக்கும் வசனங்களை எழுதிய எழுத்தாளராகவும் பாராட்டுக்களைப் பெறுகிறார் ARM.

சொல்ல வந்த விடயம் ரசிகர் மனதில் பதியவேண்டும் என்ற நோக்கம் கனகச்சிதம்.

விஜய்யின் வழமையான ஹீரோயிசம் படத்தில் அடக்கி வாசிக்கப்பட்டமைக்கு இதுவும், படம் வெளியாவதில் இருந்த சிக்கல்களும் சமபங்கு வகித்துள்ளன எனக் கருத இடமுண்டு.

ஆனாலும் படத்தின் நாயகனாக கதை நிற்கையில் விஜய் உணர்ச்சிமயமாகப் பேசும் வசனங்கள் வழமையான அரசியல் பஞ்ச் வசனங்கள் கொடுக்காத கெத்தைக் கொடுக்கின்றன.

இதைத் தான் விஜய் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.
தேவையற்ற காட்சிகள் மூலம் திணிக்கப்படும் பில்ட் அப் ஆக இல்லாமல் கருமேகம் விலக்கி வெளிவரும் சூரியன் பின்னணியில் விஜய்யின் பெயர் எழுத்தோட்டத்தில்.
குறியீடு?
(அம்மா பார்த்தா பரவாயில்லையா?)


ஒரு காத்திரமான கதை..

பலபேர் விமர்சனம் என்று கதையை முழுதுமாக சொல்லியிருந்தாலும் நான் இன்னும் பார்க்காத பலருக்காக மேலோட்டமாகவே சொல்லிவைக்கிறேன்.

படித்த பட்டதாரி விஜய் ரொம்ப நல்லவர்.
கிராம மக்களுக்காக உயிரையே தியாகம் செய்யக் கூடிய உத்தமர்..
கிராமத்தின் தண்ணீர் வளத்துக்காக பெரு வர்த்தக நிறுவனங்களால் சூறையாடப்படும் கிராம  வளங்களுக்காக போராடுபவர்.

சிறையிலிருந்து தப்பும் சில்லறைக் கிரிமினல் மற்ற விஜய்.
(ஆனால் சிறையிலிருந்து கைதி தப்பும் காட்சி படு காமெடி.. தப்பிக்கும் கைதியைப் பிடிக்க இன்னொரு கைதியிடம் உதவியா? என்னா இயக்குனரே என்னாச்சு?)

வில்லன் பெரும் கோலா நிறுவன உரிமையாளரான பெரு வர்த்தகர்.

வளச் சுரண்டலுக்கு எதிரான  ஜீவானந்தத்தின் (ஜீவானந்தம்பெயரையும் இந்த விஜய் பாத்திரம் பேசும் கம்யூனிசக் கருத்துக்களையும் கவனியுங்கள்) போராட்டம் பெண்களாலும், வயது முதிர்ந்தவர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது.

கத்தி எனப்படும் கதிரேசனின் (படப் பெயர் வைக்கப்பட்டமைக்கான காரணத்தை வில்லன் மூலம் ஒரே வசனத்தால் கடைசி நேரம் இயக்குனர் சொல்கிறார்) அடிதடி, அதிரடியால் சுபம்.

சுவாரஸ்யமாகக் கதையை விஜய் மசாலாவும் தடவிச் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.
(இரட்டை வேடம் கூடக் கதைக்கு அவசியமற்றது.. அதையே யாரும் ஏன் என்று கேட்காத அளவுக்கு விஜய் கொண்டு சுவாரஸ்யப்படுத்தியுள்ளார் ARM)



ஆனால் முதல் முக்கால் மணி நேர இழுவைக் கதை..

அந்த சிறைத் தப்பியோட்டம் முதல் சமந்தாவைக் காதலிப்பது வரை தேவையற்ற கவனச் சிதறல்.
அதுசரி சமந்தா இந்தப் படத்துக்கு எதுக்கு?

சமந்தாவை விஜய் பார்த்தவுடனேயே லவ்வுவதும், பின் எதற்கென்றே தெரியாமல் சமந்தா இவரை லவ்வுவதும் அந்தக்கால MGR - சிவாஜி படங்களில் வரும் காதல் தோற்றது போங்கள்.
(ரொம்ப பழைய இட்லி இது)

அதேபோல தான் பாடல்களும் வேகமாக செல்லும் படத்துக்கு இடையில் செக்கிங் பொயிண்டுகள் போல. பொறுமையை மிகவும் சோதிக்கின்றன.

கேட்கும்போது நல்லாவே இருக்கும் பாடல்களில் பக்கம் வந்து மட்டும் பக்காவாக பொருந்தி வந்திருக்கிறது. மற்றவை எல்லாமே 'ஏன்பா இந்தப் பாடல் இந்த நேரத்தில்?' என்று கேட்க வைப்பவை தான்.  அதுவும் செல்பிபுள்ள படு ஏமாற்றம். அப்படியே துப்பாக்கி - கூகிள் பாடலை ஞாபகப்படுத்துகிறது.

இந்த இழுவையைக் கொஞ்சம் வெட்டி, செதுக்கியிருந்தால் 2 மணி 40 நிமிடம் நீண்ட படம் இன்னும் கச்சிதமாக விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

எனக்கு வழங்கிய பேட்டியில் 'கதையின் முக்கிய இடத்தில் இந்தப் பாடல் வருவதால் மிகக் கவனமாக வார்த்திகளைக் கோர்த்து செதுக்கிய பாடல்' என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி சொன்ன 'பாலம்' பாடல் படத்திலேயே இல்லை.

பின்னணி இசையில் அனிருத் கலக்கியிருக்கிறார்.

அனிருத்தின் இசையும் George C. Williamsஇன் ஒளிப்பதிவும் வழமையான முருகதாஸ் படங்களின் சாயலை மாற்றியுள்ளன என்பது உண்மை.

கத்தி - Kaththi Theme the Sword of Destiny விஜய் ரசிகர்களுக்கு ஒரு கலக்கல் தீம்.
அஜித் ரசிகர்கள் இன்னமும் பில்லா, மங்காத்தா இசைகளைக் கொண்டாடுவதைப் போல விஜய் ரசிகர்களுக்கும் ஒரு விருந்து கிடைத்துள்ளது.

ஆனால் நன்றாக அவதானித்தால் தேவா ரஜினிக்கு போட்ட பாட்ஷா தீம் புதிய டெக்னோ மிக்ஸில் வந்திருப்பதை உணரலாம். (சரி சரி அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு இதைக் கூட செய்யலேன்னா எப்பிடி? ;) )

எனினும் வில்லன்னுக்கான பின்னை இசை - Bad Eyes Villain Theme காமெடி.
வில்லனை கோமாளியாகக் காட்டும் இயக்குனருக்கு மேலாக அனிருத் வேற.
வில்லன் இன்னும் கொஞ்சம் வலிமையானவனாக இருந்திருக்கலாமோ?



ஆனால், விஜய் இரு பாத்திரங்களுக்கு இடையில் வேறுபடுத்திக் காட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

கெட் அப்பில் உடை, சிறிய தாடி தவிர வித்தியாசம் இல்லை,
ஆனால் உடலசைவுகள், முகபாவங்களில் ஜீவானந்தமும் கதிரேசனும் வேறு வேறு என்பது தெளிவு.

கிராமத்துக் காட்சிகளில் ஜீவா விஜய்யின் துடிப்பும் உருக்கமும், நீருக்கான விழிப்புணர்வுப் போராட்டத்தில் கதிரின் அதிரடியும் புரட்சி முழக்கமும் பாராட்டக்கூடியவை.e
விருது வாங்கச் செல்லும் முன் காசோட விருதா, அப்பிடின்னா வர்றேன் என்று கலகலப்போடு செல்லும் விஜய், ஜீவானந்தம் யார் என்ற பின்னணி திரையில் விரிந்த பின் மனம் மாறும் இடம் அருமை.
(ஆனால் Flashback காட்சிகளில் தொனிக்கும் விவரணப் பாணி கொஞ்சம் சோர்வு தான்)

விஜய் வாயிலாக வரும் இட்லி - கம்யூனிச விளக்கம் புதுசும், இலகுவானதும்..
(இதை வைத்து மொக்கைகள் கிளம்பினாலும் கூட) சிந்திக்கக் வைக்கக்கூடிய ஒன்று தான்.
உன் பசி தீர்ந்த பிறகு நீ சாப்பிடும் அடுத்த இட்லி மற்றவனுடையது...
(இனி இட்லி சாப்பிட்டால் கம்யூனிசம் ஞாபகம் வந்து டயட்டிங் நடக்கும்)



Corporate என்பது ஒரு சிலந்தி வலை என்பதையும் வளங்களை உறிஞ்சும் நிறுவனங்களையும் போட்டுத் தாக்கியிருக்கும் இயக்குனர் தப்பித்துக்கொள்ள முன்னாள் கொக்கா கோலா விளம்பரத் தூதுவர் விஜய் வம்பில் மாட்டியுள்ளார்.
பாவம்.

இங்கே யார் பாவம் செய்யவில்லையோ அவர் முதல் கல்லை வீசலாம் என்று விஜய் துணிச்சலாக சமூகம் முன் வரலாம்.

அவர் பாட்டுக்கு விளம்பரம், சினிமா, பணம், லைட்டா அரசியல் ஆசை என்று வாழ்ந்துகொண்டிருக்க இவனுகள் ஒரு பக்கம், உணர்ச்சிவசப்பட்டு காமெடி பண்ணி.. சே.
(இது சே குவேரா சே அல்ல)

முருகதாஸ் வசனங்களின் கூர்மையில் அதிகமானோரை யோசிக்க வைத்திருக்கிறார். (கதை உண்மையில் அவருடையதாக இல்லாவிடினும் வசனங்கள் அவருடையவை என்ற நம்பிக்கையில்)

உணவுப் பொருட்களில் அழகு சாதனங்கள், வாசனைத் திரவியங்கள் செய்வோர் பற்றிப் போட்டுத் தாக்கியவை பற்றி நுகர்வோர் சிந்திப்பது ஒரு பக்கம் இருக்க, சும்மா கொக்கா கோலா - விஜய், லைக்கா தயாரிப்பு பற்றி முட்டையில் ரோமம் பிடுங்கும் 'போராளிகள்' இந்த வளச் சுரண்டல் 

Corporate தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தலாமே.

5000 கோடி கடன் பெற்று கை விரித்த விஜய் மல்லையா, "வெறும் காத்தைhi மட்டுமே வித்து கோடிகோடியா ஊழல் பண்ணுற ஊருய்யா இது " என்று 2G ஊழல் பற்றிக் கலைஞர் கருணாநிதி குடும்பம் என்று நேரடியாகவே அடித்துள்ள வசனகர்த்தா முருகதாஸ், இந்தப் படத்தில் காட்டப்பட்ட நில அபகரிப்பு போலவே அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து சொத்துக் குவிப்பு செய்தோர் பற்றியும் பொங்கியிருந்தால் இவரை நானும் நேர்மையான படைப்பாளி என்பேன்.

ஆனால் சட்ட விரோத சொத்துக் குவிப்பால் தண்டனை பெற்ற 'அம்மாவுக்கு' ஆதரவு தெரிவித்த உண்ணாவிரத்தில் கலந்துகொண்ட சமூகப் போராளி இவர் அது பற்றி மூச்.

ரமணாவுக்குப் பிறகு புள்ளிவிபரம் என்றவுடன் நாங்கள் அனைவருமே விஜயகாந்த்தை கலாய்ப்பது வழக்கம்.
ஆனால் எழுதிக்கொடுத்த குருஜி நம்ம முருகதாஸ் தான் என்பதை கத்தியில் அழுத்தமாக நினைவுபடுத்தியுள்ளார்.

தளபதி பத்திரிகையாளர்கள் முன்னால் அடுக்கடுக்காக புள்ளிவிவரங்களை அடுக்குமிடம் சீரியஸாக யோசிப்பதை விட சிரிக்க வைக்கிறது.

உருக்கமான புள்ளிவிபரங்கள் தான்.
ஆனால் கையில் நோட்டு எதுவும் இல்லாமல் ஒற்றை இலக்கங்களைக் கூட கதிரேசன் புட்டு புட்டு வைப்பது, நம் அரசாங்க ஊடகவியல் சந்திப்பு வேடிக்கைகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது.


Dont hate the media, Be the media என்று மக்கள் ஊடகங்கள் பற்றி சொல்லப்படும் விடயத்தை ஒரு வெகுஜனப் போராட்டம் எவ்வாறு ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்று உதாரண ரீதியாகக் காட்டியுள்ள சென்னைக்கான நீர் வெட்டுக் காட்சிகள் கனகச்சிதம்.


இயக்குனரும் தண்ணீர் வாளியுடன் வந்து ஆங்கிலத்தில் பஞ்ச்சும் பேசிச் செல்கிறார்.

ஆனால் முருக்ஸ் & விஜய்க்கு பத்திரிகைகள், ஊடகங்களோடு என்ன கடுப்போ சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்.
அவர்கள் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை; ஆனாலும் முற்று முழுதான மட்டந்தட்டலும் தாக்குதலும் இனி பின் விளைவுகளைத் தருமா பார்க்கலாம்.

பாட்ஷா படம் ரசிகர்களுக்கு மட்டுமில்லை எல்லா ஹீரோக்களுக்கும் கூட இன்னும் மனதிலே ஒரு inspiration தான் போலும்.
ரஜினி சொல்லும் 'உள்ளே போ' இங்கே விஜய் சொல்லும் 'உள்ளே வை' ஆக வருகிறது.

பாட்ஷாவின் "உள்ளே போ" கத்தியில் "உள்ளே வை" ஹா ஹா ஹா... இனி ஐ ஆம் ஆல்சோ வெயிட்டிங் ;)
(மீண்டும் அடுத்த சூப்பர் ஸ்டார்? ;))

நகைச்சுவைக்கு சதீஷ் ok ரகம் தான். ஆனால் இதுபோன்ற கதைக்கு சும்மா தொட்டுக்கொள்ள ஒரு துக்கடா நகைச்சுவை பாத்திரம் போதும் என்னும் அளவுக்கு - துப்பாக்கியில் சத்யன் போல, அவரது பாத்திரம் ஓகே.

ஆனால் அந்த வயது முதிர்ந்தவர்களின் துடிப்பான நடிப்பும் காட்டும் முகபாவமும் மனதில் நிற்கக் கூடியவை,
அத்துடன் படத்துக்கு உருக்கத்தையும் கொடுக்கின்ற யுக்தி.

தூக்கச் சொன்ன 'லைக்கா' தெரிந்தது எப்படி? ;)


படத்தை யதார்த்தமாக மனதில் பதியும் அளவுக்குக் கதை சொன்ன முருகதாஸ் விட்ட சறுக்கல்களில் 
அந்த சில்லறை சண்டையும் (ஆனால் விஜய் ரசிகர்களுக்கு இது கோலாகலம் தான்), கடைசிக் காட்சிச் சண்டையும் லொஜிக் தாண்டிய ரோதனை.

கஜினியில் சூர்யா, வில்லன் இரட்டையருடன் சண்டையிடும் அந்த நீளமான காட்சிகள் தந்த அதே ஆயாசம்.
அதிலும் தனக்காகப் போராடிய கதிரேசனை தாக்கிக் கொல்லக்கூடிய நிலையிலும் மற்ற 'அமைதி' விஜய் அகிம்சாமூர்த்தியாக ஒரு சலனமும் காட்டாமல் நிற்பது கொடுமை.
'யோவ் அடியா' என்று தியேட்டரில் யாரோ கூவுகிறார்கள்.

ஐ ஆம் வெயிட்டிங் என்று துப்பாக்கி போலவே இடைவேளைக்கு முன்னர் ஒரு பஞ்ச், விஜய் ரசிகர்களுக்கு குஷி கொடுக்க.
அதே போல பாத்திரத்துக்கு வெயிட் கொடுப்பதாக பின்னப்பட்ட காட்சிகளின் மூலம் 'இளைய தளபதி'யை ஏற்றி வைப்பதிலும் இயக்குனர் விஜய் ரசிகர்களிடம் ஜெயித்திருக்கிறார்.

இதனால் கதை  மூலமாக எல்லாத் தரப்பிடமும் , விஜயை மையப்படுத்தி விஜய் ரசிகரிடமும் சரியாகப் பாய்ந்துள்ளது 'கத்தி'.

கத்தி - தீட்டிய அளவுக்கு கூர்மை தான் 


Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*