மோடி...

ARV Loshan
1

மோடி அலை இன்னும் ஓயவில்லைத் தான் ;)

நமோ சுனாமி அலை அடித்து வென்று, கொண்டாடி, பலரையும் அழைத்து, பதவியும் ஏற்றாச்சு.

இந்தியாவில் மோடியின் பெரு வெற்றி இந்தியர்களுக்குக் கொடுத்த உற்சாகத்தை விட எம்மவர்கள் பலருக்குக் கொடுத்த புளகாங்கிதம் பென்னாம்பெரிசு.

ஒவ்வொரு காரணம், ஒவ்வொரு பீலிங்கு.

பழிவாங்குதல் பிரதானம்..
ஊழ்வினை உறுத்துது பாருங்கோ.
மனதின் அடியில் கிடக்கும் ஒருவித கோபமும் வெறியும் (அது இனம், மதம் என்று எப்படியும் இருக்கலாம் - இல்லை என்று நடுநிலைவாதிகள் போல் சொல்லாமல் நன்றாக யோசியுங்கள்) ஒரு நப்பாசை..

இல்லாவிட்டால் என் போல ஒரு சின்ன பெட்டாகவும் (பந்தயமப்பா)இருக்கலாம்.
(அந்தப் பந்தயத்தில் நான் வென்றதற்கு என்ன புத்தகத்தைக் கேட்கலாம் என்று ஆலோசனை சொல்லலாம் ஆர்வமும் அன்பும் உள்ளவர்கள்)

ஆனால் இரு மாநிலங்களினால் (தமிழ்நாடு, கேரளா) நிராகரிக்கப்பட்ட ஒருவர், சிறுபான்மையினரால் எதிர்க்கப்படும், விமர்சிக்கப்படும், கிட்டத்தட்ட முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒருவர் பெற்ற இந்த மாபெரும் வெற்றி எங்களுக்குப் பழக்கமான சிலவற்றை ஞாபகப்படுத்துவதாகவும், எங்கள் தற்காலிக பழிவாங்கும் குதூகலிப்பையும் தாண்டி இனி நடக்கப்போவன பற்றி ஒரு மங்கலான சந்தேகத்தை மயக்கத்துடன் ஏற்படுத்துவது இயல்பே.

சிறுபான்மையினரின் சொற்ப ஆதரவும் இல்லாமல், பெரும்பான்மையினரின் தனி ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு (பேரினவாதம் பேசியும் கூட வெல்லலாம்)'ஜனநாயக முறைப்படி' ஆட்சி பீடம் ஏறலாம் என்ற துணிவை இந்த மோடியின் வெற்றி தரலாம்.

நரேந்திர மோடியின் மாபெரும் வெற்றி பேரினவாதம் பேசிப் பெறப்பட்டதல்ல என்பது மிகத் தெளிவானது.
மன்மோகனின் (சோனியாவின் ரிமோட் ஆட்சி) காங்கிரசின் ஆட்சியின் மீதான அதிருப்தியும், மோடியின் குஜராத் மாநில ஆட்சியின் நேர்த்தியான நிர்வாகமும் சேர்த்தே வழங்கியது தான் யாரையும் தங்காத இந்த பெரும்பான்மைப் பல ஆட்சி.

ஆனால் எங்கள் நாட்டின் அரசியல் பின்னணியும் பார்க்கப்போனால் மோடி வழியை(யும்) பின்பற்றினால் எந்தவொரு ஜில்மாலும் இல்லாமலே பெரும்பான்மையுடன் வெற்றியை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். (விரித்து ஆராய்ந்து கணித்துக் கொள்வது அரசியலை என்னை விட நன்கறிந்த உங்களுக்குத் தான் இலகுவாச்சே)

மோடியின் வெற்றியை நான் சில காரணங்களுக்காக ரசிக்கிறேன்; வியக்கிறேன்.

தொழிநுட்பத்தையும் சமூக வலைத்தளங்களையும் மோடி சாமர்த்தியமாகவும் சரியான இலக்கு நோக்கியும் பயன்படுத்திய விதம்.
(இதே யுக்தியை ஒபாமாவும் அமெரிக்காவிலே பயன்படுத்தினார். இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியும் ஓரளவுக்குப் பயன்படுத்தியிருந்தார், இப்போது மிக நுணுக்கமாகவும் துறைசார் வல்லுனர்களின் உதவியோடும் விரிவாகப் பயன்படுத்தி வருகிறார்)

திட்டமிட்ட அவரது வளர்ச்சி, தன் பிம்பத்தின் விளம்பரம், வியூகம் &வெற்றி..
அவரது கம்பீரமான அதேவேளை ஆழம் அறியமுடியாத வெளித்தோற்றம், அதைக் கட்டியமைக்கும் நேர்த்தியான ஆடைத் தெரிவுகள்
(இவரது நாகரிகமான, உறுத்தாத ஆடைத் தெரிவுகள் - dressing sense ரசிக்க வைக்கிறது.)

சமயத்தில் இவரது கூர்ந்த கண்கள் (தெலுங்கு) படங்களில் வரும் வில்லன்களை- சில சமயங்களில் இயக்குனர் P.வாசுவின் வில்லன் தோற்றத்தையும் ஞாபகப்படுத்துகின்றன.

முன்பும் பல தடவை நான் கூறிவந்த - தெற்காசியாவுக்கு இப்போது அவசியப்படுகிற - (எமக்குக் கொஞ்சம் பழக்கமான) சர்வாதிகாரத்தின் சில இயல்புகள் சேர்ந்த - தேவையான போது அதிகாரங்களைப் பிறப்பித்து காரியங்களை செயற்படுத்தும் இறுக்கமான ஆட்சி முறை.

மோடி அமைச்சரவையை அறிவித்த விதத்திலேயே தான் யார், எப்படிப்பட்டவன் என்று காட்டிவிட்டார்.

பெரிய வெற்றிக்குப் பின்னரும் மிகப் பெரிய நாட்டுக்கு மிகச் சிறிய அமைச்சரவை. அதிலே வகுத்துக்கொடுத்த அனுபவமும் இளமையும் பல்வகைமையும் கலந்த அமைச்சரவை.

தேர்தலில் யார் யார் தம் கட்சியில் போட்டியிட வேண்டும் என்று அவரால் தீர்மானிக்கமுடியாவிட்டாலும், யாருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும் என்று தெளிவாகத் தீர்மானித்து Over 75 தடையைக் கொண்டு வந்தார்.
(அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு வைத்த ஆப்புடன், சுப்பிரமணிய சுவாமியை ஒதுக்கிய விதமும் சாணக்கியத் தனமானது)

ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் தன்னை விமர்சித்தவர்கள், எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கும் (மோடியை கொலைக்குற்றவாளி என்றவர்கள், சர்வாதிகாரி என்றவர்கள், அவரை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர்களும் சேர்த்து) இடமளித்திருந்தார்.

இது மன்னிப்பா, ராஜதந்திரக் கணக்கா என்பதை அடுத்த ஒரு மாதம் சொல்லும்.

உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் வருவார் என்று ஊகித்தாலும், சுஷ்மா ஸ்வராஜுக்கு வழங்கிய வெளியுறவு அமைச்சு ஒரு அதிரடி.

இலங்கை ஜனாதிபதியை மட்டுமல்ல, பாகிஸ்தானிய பிரதமரையும் அழைத்து ஆச்சரியப்படுத்தியவர் ஆரம்பத்திலேயே கிளம்பிய எதிர்ப்புக்களை பொருட்படுத்தாதது இனி வரப்போகும் நரேந்திர மோடி என்னும் இரும்பு மனிதரின் ஆட்சிக்கான ஆரம்பக் காட்சி.


சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படையாக, எல்லோரும் அணுகக் கூடியவராகத் தெரியும் மோடி,
அண்டை நாடுகளைத் தன் பதவியேற்புக்கு அழைத்து ஒரு "ராஜசூயம்" நடத்தி தெற்காசிய அரசியல் மையத்தை மீண்டும் இந்தியாவிடம் தக்க வைத்திருப்பதைக் கோடி காட்டியுள்ள மோடி,

இனி நகர்த்தப்போகும் அரசியல் காய்கள் முதலில் இந்தியாவுக்குள், பின் தெற்காசியாவில், அதன் பின் சர்வதேசத்தில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தவல்லன (என்னுடைய எனக்குத் தெரிந்த அரசியல் அறிவின் பிரகாரம்)


இந்த மனிதரைப் பிடிக்கிறதோ இல்லையோ, நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்.

(இதுவரை நாம் அறிந்த நரேந்திர மோடியின் - 2002 குஜராத் முதல் 2014 இந்தியா வரை - அனேக இயல்புகளும் விஸ்வரூப வளர்ச்சியும் எமக்கு நன்கு பழகிய ஒருவரை ஞாபகப்படுத்துவது எனக்கு மட்டும் தானா?)

- இது மோடியை வெளியே இருந்து பார்த்த ஒருவனது பார்வையே...
ஆழ்ந்த அரசியல், குறிப்பாக இந்திய அரசியல், மோடியை ஆழ்ந்து அவதானித்த அரசியல் பார்வையுள்ளவர்களுக்கு இவை ஒரு கோணத்தினாலான அலசலாகத் தோன்றலாம்; அல்லது பிழையான கணித்தலாகவும் தெரியலாம்.

ஆரோக்கியமான வாதங்கள் /கருத்துப் பகிர்வுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

மோடியின் வெற்றியுடன் சூரியன் இணையத் தளத்தில் எழுதிய ஒரு பதிவு.

Modi Magic - நரேந்திர மோடி - நமோ என்னும் மாயாஜாலம்

Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*