மரண அடி, மகத்தான வெற்றி + மறக்கக் கூடாத பாடங்கள் - Ashes - 3-0

ARV Loshan
6
Ashes வென்ற கிளார்க்கின் ஆஸ்திரேலிய அணி சொல்லித் தரும் வாழ்க்கைக்கான பாடங்கள் ​






ஒரு தடவை மரண அடி வாங்கி மண்ணோட கிடந்தது அவமானப்பட்டாத் தான் மறுபடி வீராப்போடு எழும்பலாம்.

(ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தொடர் ஆஷஸ் தோல்விகள்)


இளசு, புதுசு, வயசு என்றெல்லாம் பார்க்காம சாதிப்பவனாக இருந்தாலும் நம்பிக் கொடுங்கள் ஒரு வாய்ப்பு. அவன் வென்று காட்டுவான்.

ஒரு தடவை தவறி விட்டான் / தவறு விட்டான் என்பதற்காக ஒரேயடியாக ஒதுக்கி விடாதீர்.
(வயது கூடிய Rogers, Haddin உள்ளே.. இளையோர் என்று சொல்லப்பட்ட சிலர் வெளியே. முப்பது வயதைத் தாண்டியும் மீண்டும் ஜோன்சன், ஹரிஸ் உள்ளே.. 30 வயதைத் தாண்டிய பெய்லிக்கு அறிமுகம்.. 
குழப்படிகாரர் வோர்னரின் மீள் இணைப்பு )


தலைவன் வழிகாட்டவேண்டும். 
ஆணை மட்டும் இடுபவன் தலைவனல்ல. தானும் சாதித்து மற்றவனுக்கு உத்வேகத்தை ஊட்டுபவன் தான் தலைவன்.
(தொடர்ந்து ஓட்டங்கள் + சதங்கள் குவிக்கும் மைக்கேல் கிளார்க்)

வழிகாட்டுபவர்கள் (பயிற்றுவிப்பாளர்) எல்லோரும் அனுபவஸ்தர்கள், இறக்குமதி செய்யப்பட்டவர்களாகத் தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.
(லீமனுக்கு முந்திய மிக்கி ஆர்தரின் வெளியேற்றமும் அதையொட்டிய மாற்றங்கள் + எதிரொலிகளும்.
லீமன் ஆஸ்திரேலியர். வீரர்களின் உள்ளும் புறமும் தன்மையும் உண்மையும் அறிந்தவர். இவர்களில் சிலருடன் விளையாடியவரும் கூட)

எங்களது பலத்தினால் எதிரிகளைப் பயப்படுத்துவது வெற்றிக்கான வழியென்றால் தாராளமாக அதைப் பயன்படுத்தலாம்.
(மிட்செல் மீசை ஜோன்சன்)

எதிரியை சீண்டியே அவனது கவனத்தை சிதறடிக்க முடியுமென்றால், கோபப்படுத்தியே அவனைக் குறுக வைக்க முடியுமென்றால் அதுவும் உன் ஆயுதமே.
(மகா பாரதத்தில் கூட சகுனி மட்டுமல்ல, கிருஷ்ண பகவானும் கூடக் கையாண்ட யுக்தி இது)

எங்களது ஒரு அடியில் எதிரி மிரண்டுவிட்டான் என்றால் அத்தோடு குற்றுயிராக விட்டுவிடாமல் அடியோடு சாய்ப்பதில் குறியாக இருக்கவேண்டும்.

அவரவர் பொறுப்பை அவரவர் செம்மையாக செய்தால் அடுத்தவர் தலை உருளாது. அணியும் சுருளாது.
(முன்னைய ஆஸ்திரேலிய பயிற்றுவிப்பாளர் வெளியேற்றம், இதர முறுகல்கள்)

உன் அணியில் இன்னொருவர் சறுக்கும் நேரம்,உன் பொறுப்பை விட மேலதிகமாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் உனக்குத் தான் பெருமை.
உன் மறைந்து கிடக்கும் இன்னும் பல திறமைகள் மேலும் வெளிவரும்.
(ப்ரட் ஹட்டின் & மிட்செல் ஜோன்சனின் துடுப்பாட்ட இணைப்பாட்ட அதிரடி)


உனது பலம், பலவீனம் பற்றி சரியான சுய மதிப்பீடு மிக முக்கியமானது.​

ஒரு வேலைக்கு அந்த வேலையை சீராகவும், சிறப்பாகவும் செய்து முடிக்கத் தெரிந்த, தகுந்த ஒருவரைத் தெரிவு செய்தால் காரியமும் வெற்றி பெறும்; இன்னொரு நபரை உதிரியாய்க் காவிச்செல்ல அவசியமும் இல்லை.
(விக்கெட் எடுக்க ஒருவர், மிரட்டி எதிரணியின் நம்பிக்கை முதுகெலும்பை உடைக்க ஒருவர், ஓட்டம் குவிக்க ஒருவர், அணியைத் தாங்கி நடத்த ஒருவர் .... இப்படி )

எல்லாவற்றுக்கும் மேலே,
படுதோல்வி கண்டு 115 நாட்களில், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இழந்த மகுடத்தை மீண்டும் மீட்டு, இன்னும் பெரிதான White wash வெற்றியைக் குறி வைப்பதற்கு நம்பிக்கையைத் தாண்டி இன்னும் சில விஷயங்கள் இந்த கிளார்க்கின் 'புதிய' ஆஸ்திரேலிய அணிக்குத் தேவைப்பட்டிருக்கும்.



லீமன் பயிற்றுவிப்பாளராக வந்த பிறகு நடந்த சில முக்கிய மாற்றங்களை அவதானித்தால், 

நேர்த்தியான திட்டமிடல்

ஆடுகளம், அணியின் பலத்தை முன்னிறுத்திய தயார்ப்படுத்தல்கள் 

எதிரணியின் பலத்தைக் குறிவைத்த இலக்குகள்

எதிரியின் பலவீனத்தைக் குறிவைத்த தொடர்ச்சியான தாக்குதல்கள் 

உறுதியான தலைமை + தலைமையின் உறுதியை மையப்படுத்திய ஆதரவு நிலை 

தளர்ந்து கிடந்த ஆனால் திறமையை வைத்திருந்த (என்னைப் போல, உங்களைப்போல சந்தேகப்பட்டவர்களின் ஒற்றைப்பார்வையைத் தாண்டி)சிலருக்கு நம்பிக்கை ஊட்டச்சத்தை ஏற்றி அவர்களையே வெற்றியாளர்களாக மாற்றியது.
மிக முக்கியமாக மிட்செல் ஜோன்சன் & டேவிட் வோர்னர்.

ஜோன்சனையும் கிளார்க்கையும் ஹடினையும் வொட்சனையும், ஏன் எனக்குப் பிடித்த (உலக சாதனையை நிகர்த்த) பெய்லியையும் சிலாகிக்கும் அதே நேரத்தில் தனித்து நின்று போராடிய இளைய வீரர் பென் ஸ்டோக்சையும் ரசித்தேன்; 
இந்த ஸ்டோக்ஸ் சதம் சிலவேளை (சிலவேளை மட்டுமே) இங்கிலாந்துக்கு சிறு பொறி ரோஷத்தை இன்னும் எஞ்சியுள்ள இரு டெஸ்ட் போட்டிகளுக்குக் கொடுக்கக் கூடும்.

அதேபோல, 'அரைகுறை' வீரராக (என்னைப்பொறுத்தவரை) ஆஸ்திரேலிய T20 அணிக்குள் நுழைந்து டெஸ்ட் போட்டிக்குள் இவர் வந்த போதும் என்னால் (+ என் போன்ற இன்னும் பலரால்) கடுமையாகத் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வந்த ஸ்டீவ் ஸ்மித்...

தன திறமையால், அர்ப்பணிப்புடன் கூடிய தொடர்ச்சியான பெறுபேறுகளால் தன்னை நிரூபித்துக்கொண்டும் எம்மை ரசிக்கவைத்துக்கொண்டும் முன்னேறுகிறார்.
வாழ்த்துக்கள் எதிர்கால அவுஸ்திரேலியத் தலைவரே.

ஆண்ட பரம்பரை மீண்டும் அடித்தாடி எழுந்துவருகிறது.

வெல்வது எல்லோராலும் எப்போதும் முடியக்கூடியது. ஆனால் வீழ்ந்து கிடக்கும் எல்லோரும் வெற்றியாளர் ஆவதில்லை. வீழ்ந்து கிடந்தாலும் துவண்டு போகாமல், மீண்டும் சிலிர்த்தெழுந்து வெல்வது எமக்கும் பெரிய மனக்கிளர்வையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தக் கூடியது.

அதிலும் நான் எடுத்த முக்கிய முடிவின் உன்னதத்தை பெருமையுடன் உணர்கிற இன்றைப்போல ஒரு நாளில் நான் அலன் போர்டர் காலத்திலிருந்து போராட்ட குணத்துக்காகவும், மீண்டு எழும் தன்மைக்காகவும் ரசித்துவரும் ஆஸ்திரேலிய அணியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி வாழ்க்கைப் பயணத்தின் தொடர இருக்கும் காலத்தின் மீது உறுதியான நம்பிக்கைக்கு மேலும் உரமூட்டுகிறது.

Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*