மும்பாய் தாதா படங்கள் என்றவுடன் பாட்ஷா, நாயகன் படங்களை கொப்பி அடிச்சிட்டான் என்பதும், அப்பா, மகன், ஆட்சி, அரசியல் என்றவுடன் தேவர் மகன், நாட்டாமை படத்திலிருந்து உருவிட்டாங்க என்பதும் எங்கள் எல்லாருக்குமே ஒரு வியாதியாகப் பரவி வருகுதா?
ஏற்கெனவே லகான்,Titanic, I am Sam என்று பெரிய பெரிய இடங்களிலெல்லாம் உருவியெடுத்து எங்களையெல்லாம் பிரமிப்பில் ஆழ்த்திய இயக்குனர் இப்படி ஒன்றிரண்டு படங்களை மட்டும் சுட்டு ஒரு வருங்கால மாநில முதலமைச்சரின் திரைப்படத்தை 'சாதாரணமாக' எடுத்திருப்பார் என்று எப்படி அவ்வளவு இலேசாக நினைத்திருக்கலாம்?
இயக்குனர் விஜய்க்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்த அஜித்தின் 'கிரீடம்' கூட, 1989ஆம் ஆண்டு அதே பெயரில் மோகன்லால் நடித்து பேரு வெற்றியும் புகழும் பெற்ற படம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
அதுசரி, 'திறமையான' இயக்குனர் A.L.விஜய்யின் முதலாவது படம் 'பொய் சொல்லப் போறோம்' கூட ஹிந்தியின் மசாலாத் திரைப்படம் ' Khosla Ka Ghosla' இன் உல்டாவாம்.
(எப்போ சார் சொந்த மூளையை சரியா யூஸ் பண்ணப் போறீங்க?)
''தலைவா' வெறும் மூன்று நான்கு படங்களின் தழுவல், கொப்பி, inspiration, recreation அப்பிடி இப்பிடி என்போர் மீது இயக்குனர் விஜயே வழக்குத் தாக்கல் செய்தாலும் ஆச்சரியமில்லை.
மகேஷ்பாபு (இவரைப் பற்றி நான் ஏதும் விசேடமாக சொல்லத் தேவையில்லை - விஜய் ரசிகர்களுக்கு. இந்த ட்வீட் மட்டுமே போதும்) நடித்த பிசினெஸ்மான் படம் உங்களில் எத்தனை பேர் பார்த்தீர்கள்?
முடிந்தால் உடனே பாருங்கள்.
வந்தான் வென்றான் படத்தின் பல காட்சிகளை இயக்குனர் விஜய் அப்போவே தயார் செய்த கதையிலிருந்து சுட்டு எடுத்திருக்கிறார் வ.வெ இயக்குனர்.
அதேபோல 1977 என்ற சரத் குமாரின் திரைக்காவியத்தில் வந்த இந்தப் பாடலை எத்தனை பேர் பார்த்து ரசித்திருக்கிறீர்கள்?
இதற்கிடையில் இணையத்தில் பரவிய இன்னொரு ஒப்பீடு தான் ஜோதா அக்பர் படத்தில் வந்த இந்தப் பாடல்...
மாமாவிடம் மருமகன் குடும்ப உரிமையால் ஒற்றி எடுத்திருப்பார்.
ஆகா மெட்டு மட்டுமல்ல, நடனம், காட்சியமைப்பும் கூடவா?
அடப்பாவிகளா கூட்டணியா உட்கார்ந்து ரூம் போட்டு பில்ட் அப் பாடலை பொறுக்கி உருவாக்கினீர்களா?
எப்பிடித் தான் பாட்டை உருவி உருவாக்கினாலும் ஒவ்வொரு பிரிவா வந்து பறை தட்டியும் பாடியும் தளபதி, தலைவா என்று பில்ட் அப்பை ஏத்தும்போது இந்தக் காலத்திலேயும் ஒரு MGR எங்கள் மத்தியில் வாழ்கிறார் என்று உடம்பெல்லாம் சிலிர்த்துப்போகிறது. வாவ்.
உண்மையில் இயக்குனர் விஜய் (இதை அடிக்கடி அழுத்திச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. நேற்று திரையரங்கில் எனக்கு முன்னால் இருந்த நண்பர்கள் இளைய தளபதி விஜயைக் குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். "உந்தாள் முதலில் செய்துகொண்டிருந்தமாதிரி கழுத்தையும் காலையும் மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்திருக்கலாமே.. தேவையில்லாம அரசியல் ஆசை. அது போதாம இப்ப படம் இயக்குறேன் எண்டும் வெளிக்கிட்டு.. சே) ஒரு உலக மகா இயக்குனர் வரிசையில் சேரக்கூடிய ஒருவர்.
இல்லாவிட்டால் ஒவ்வொரு காட்சிக்கு காட்சி முன்பு வந்த நூற்றுக்கணக்கான திரைப்படங்களை ஞாபகப்படுத்தக்கூடிய திறமை எத்தனை இயக்குனருக்குக் கைவரும்?
ஆனாலும் பாட்ஷா பாயும், வேலு நாயக்கரும் 'தலைவா' பார்த்தால் கதறியழுதிருப்பார்கள்.
தாண்டவம் படத்தில் எடுக்க முடியாமல் மிஞ்சிப் போன வெளிநாட்டு காட்சிகளை அவுஸ்திரேலியாவுக்கு மாற்றி எடுத்துத் தன தாகத்தைத் தீர்த்திருக்கும் இயக்குனர், அங்கே மிஞ்சிய காதல் காட்சிகளையும் இளைய தளபதிக்குக் கொடுத்து 'தலைவா' ஆகக் காத்திருக்கும் அவரையும் அந்த அற்புதக் காட்சிகளைப் பார்த்திருக்கும் எங்களையும் ஒரு மணிநேரமாகக் காக்கவைத்து, வேக வைத்து அதுக்குள்ளே "நீங்க யாரு? என்ன செய்றீங்க?" என்ற தமிழ் சினிமாவில் அதிகம் பாவித்துத் தேய்ந்துபோன வசனத்தோடு இரண்டு ஹீரோக்ககளையும் சந்திக்க வைக்கும் காட்சியும் தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக...
இதே போல 3 மணிநேரப் படம் முழுக்க எத்தனையோ 'தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக' காட்சிகள்...
கதை, திரைக்கதை என்று பலபேரின் பெயரைப்போட்டு சிரமப்படவேண்டும் என்றோ என்னவோ தனது பெயரைத் தன்னடக்கத்தோடு போட்ட துணிச்சல் அபாரம்.
நடிகர் விஜய்க்கு கதையைச் சொல்லாமல் தனியே பில்ட் அப் காட்சிகளை மட்டுமே சொல்லி ஒப்பேற்றிவிட்டார் போலத் தான் தெரிகிறது.
போதாக்குறைக்கு இரண்டொரு பஞ்ச் வசனங்கள். அதை சத்யராஜ் ஆரம்பித்து விஜய், பின்னர் இறுதியாக சந்தானமும் சொல்கிறார்கள்.
"இது ஒரு வழிப்பாதை"
வில்லனையும் அதே வசனத்தை சொல்ல வைத்து இன்னொரு புதுமை படைத்திருக்கலாம்.
அதைக் கத்திக் கத்தியே காதுகளில் குத்தி ரத்தம் வரப்பண்ணுகிறார்கள்.
ஆரம்பத்தில் தமிழ்ப்பசங்க நடனக்குழு, அமலா பால் (அதுசரி அழகியாமே யாருப்பா அது?)காதல் காட்சிகள் என்று ஜவ்வாக இழுத்த கதையை ஸ்பீட் ஆக்குறேன் என்று மும்பாய் காட்சிகளில் ப்ரேக் இல்லாமல் ஓட ஆரம்பிக்கிறது கதை.
ஆஸ்திரேலிய காட்சிகளில் காதல் சும்மா அப்படி பொங்கி வழிகிறது.
என்னா கவிதைத் தனமான காட்சிகள்... வாவ்.
காருக்கு முன்னால் பாய்ந்து பட்டாம் பூச்சி பிடிக்கும் காட்சியும், கண்டவுடன் காதல் மலர்வதும், கல்யாணம் கட்டிட்டேன் என்று நாயகி சொல்ல, கதாநாயகன் அதைப் பொய்யென்று கண்டுபிடிப்பதும் அட அட அட எப்படியான புதுமை... வாவ் கையைக் குடுங்க இயக்குனர்.
விஜய் + விஜய் (இயக்குனர் + நடிகர்) என்பதால் முன்னைய விஜயின் double acting படங்கள் மாதிரியே ஒரு கன்னைக்கட்டுற பீலிங்கு பீலிங்குன்னா
இதையெல்லாம் எவ்வளவு பொறுமையா உள் வாங்கி, அதிலும் மிகக் கொடுமையாக அமலா பாலின் முகத்தை க்ளோஸ் அப்பில் பார்த்தும் உணர்ச்சி பொங்க நடித்துக் கொடுத்திருக்கும் விஜய்க்கு இதுக்காகவே ஒஸ்கார் விருது கொடுக்கவேண்டும்.
தனது முன்னைய படங்களில் (சுட்டாலும் கூட) அழகான காதல் காட்சிகளை வைத்த இயக்குனர் மினக்கெட்டு ஆஸ்திரேலியா போய் - வறட்சியான காதல் காட்சிகளையும், வழுக்கலான பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறாரே.
யார் இந்த சாலையோரம் பாடல் காட்சி(யும்) மனதில் நிற்கவில்லை.
விஜயின் நடிப்பு பற்றி சொல்வதற்கு எமக்கு இன்னும் தகைமை வந்து சேரவில்லை - (இருக்கிற எதிரிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ள யார் தான் விரும்புவார்?) அப்படியிருந்தும் ஒன்றை மட்டும் சொல்லியே ஆகவேண்டும்...
வாங்கண்ணா பாடல் முடிந்து வரும் காட்சியில் தோழர்கள் செத்துக்கிடக்க விஜய் காட்டுவார் பாருங்கள் சோக நடிப்பு... வாவ். நாயகனில் மகன் நிழல்கள் ரவி இறந்த செய்தி அறிந்து கமல் அழுத காட்சிக்குப் பிறகு இப்படியான performance எங்கணும் கண்டதில்லை.
ஆனால் துடிப்பான நடனத்தில் விஜயை அடிக்க யாருமில்லை.
வாங்கண்ணா, தமிழ்ப்பசங்க பாடல்களில் செம கலக்கல்.
(ஆனால் நடனப்போட்டி மானாட மயிலாட தோற்றுப்போகும்)
விஜய் அரசியலுக்குள் இறங்குவதற்கான முழுத் தகுதியையும் கொண்டிருக்கிறார் என்று சந்தானம் சொல்லும்போது திரையரங்கமே அதிர்கிறது. (அது என்ன அவ்வளவு பெரிய காமெடியா?)
ஆனால் தலைவா மூலம் தன சகிப்புத்தன்மையை அனைவருக்கும் எடுத்துக்காட்டி தான் பொறுப்பான பதவிக்கு லாயக்கானவர் என்று நிரூபிக்கிறார்.
சாம் ஆண்டர்சனை perform பண்ணவிட்டு தலைவா என்று அழைத்துப் பணிவு காட்டும்போதே விஜய் எங்கேயோ போய்விடுகிறார்.
அப்படியே அடுத்தபடத்தில் பவர் ஸ்டாரையும் நடிக்க விடுங்க.. உண்மையா entertainmentஆ இருக்கும்.
இன்னொன்று, துப்பாக்கி படத்தில் ஹிட் அடித்த பஞ்ச் வசனம் "I am waiting"ஐ சந்தானம் இவருக்கே சொல்வது சரி, ஆனால் விஜயின் இந்தப் படத்தின் பஞ்ச் வசனமான ""இது ஒரு வழிப்பாதை" ஐயே சந்தானம் சொல்வது விஸ்வா பாயை சிரிப்பு தாதா ஆக்கிவிடுகிறது.
சத்யராஜ் இன்னும் கொஞ்சம் நேர்த்தியான மேக் அப் போட்டால் அவரும் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு சண்டை போடலாம் போல.
ஆனால் மனிதரின் வயது முதிர்ந்த அந்த கெட் அப் கெத்து. நிமிர்ந்து நிற்கிறார்.
மனோ பாலாவை அவர் பாணியிலேயே விட்டிருந்தா அவரது காமெடியையாவது ரசித்திருக்கலாம்.
அதுக்கு பதிலாக பெரிய காமெடியாக அமலா பாலின் பாத்திரத்தில் 'போக்கிரி' விஜய் ட்விஸ்ட் வைத்து இயக்குனர் பெரிய காமெடி செய்திருக்கிறார்.
அதுக்குள்ளே அவரும் சுரேஷும் பேசும் system, நீதி, நியாயம் வசனம் மெகா காமெடி.
இந்தப் படத்துக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தடைவிதித்தார் என்று சொல்வதையெல்லாம் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
கலைஞர் அளவுக்கு சாணக்கியம் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது விஷயம் தெரிந்தவர் தானே ஜெ ?
இதுக்குப் போய் தடைவிதித்து தேவையில்லாமல் விளம்பரம் எடுத்துக் கொடுக்க விரும்பியிருப்பாரா?
உண்மையிலேயே தடையை அவர் தான விதித்திருந்தார் என்பது உண்மையாக இருந்தால் படத்தைப் பார்த்தால் நொந்திருப்பார்.
பின்னே, மும்பையை ஒரு கலவர பூமியாகக் காட்டும் இன்னொரு திரைப்படம் என்று மகாராஷ்டிர மாநிலம் தடை விதித்தாலும் பரவாயில்லை.
Why தமிழ்நாடு?
அதுசரி, குதிக்கிறது என்று முடிவெடுத்தபிறகு ஏன் மும்பாய்க் கதைக்களம்?
தமிழ்நாட்டிலேயே கலக்கியிருக்கலாமே.
மும்பாய் தாதா தமிழ் பேசும் அரசியல்வாதிகள், வில்லன்கள் என்றவுடன் பாட்ஷா, நாயகன் மட்டுமில்லாமல், அரசு, ஆதிபகவன், வந்தான் வென்றான் கூட ஞாபகம் வருமே.
குதிக்கிறதென்று முடிவெடுத்தது சரியா தவறா என்பதை நீயா நானா கோபிநாத்தும், குதிக்க முடிவெடுத்த டைமிங் சரியா என்று சொல்வதெல்லாம் உண்மையும் தீர்மானிக்கட்டும்.
ஆனால் அதுக்காக இந்தப் படக் கதையைத் தெரிவு செய்து, இந்த இயக்குனரிடம் கொடுத்த தெரிவை யார் செய்திருந்தாலும் (ரஜினி ரசிகர்கள் பாபாவை நம்பியது போல)தமிழக மக்களின் தலைவிதியை மாற்றிய பெருமையை அவரிடம் கொடுத்துவிடலாம்.
அதுசரி அந்த பெண்ணை விஜய்க்கு ஜோடியாகப் போடாத சாபத்தையும் சேர்த்தே வாங்கிய இயக்குனர் அவரையாவது சாகடிக்காமல் விட்டிருக்கலாமே.
படம் பார்த்த பலரோடு, படம் வராத சோகத்தில் தன்னை மாய்த்த (உயிரின் பெறுமதி அறியாத அந்த முட்டாள் எல்லாம் இறந்தது நல்லதும் கூட)ஒருவனுடனும் சேர்த்து, படத்திலும் எத்தனை பலிகள்? கொத்துக் கொத்தா செத்துப் போகிற அப்பாவிகள்.
அதுசரி தலைவா என்றவுடன் பாய்ந்து விழுந்து கலாய்த்து, கடித்துக் குதறியவர்கள் அந்த 'துண்டு' விஷயத்தை விட்டுவிட்டார்களே?
அண்ணா சத்யராஜும்,பின்னர் 'தலைவா' விஜயும் போர்த்திக்கொள்கின்ற சால்வை வேறு ஒருவரையும் ஞாபகப்படுத்தவில்லையா?
(அப்பாடா கொளுத்திப் போட்டாச்சு)
இன்னொரு MGR ஆகவேண்டுமாக இருந்தால் இளைய தளபதி படத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இன்னும் பல கிம்மிக்குகளை செய்யவேண்டி இருக்கும்.
முதலில் இப்படியான உப்புமா இயக்குனர்களையும், முக்கியமாக தந்தையாரையும் தள்ளியே வைக்கவேண்டும்.
தலைவா - ஆ ஆ ஆ
Time to leave - விட்டிருங்கண்ணா