மரியான் - இறப்பு இல்லாதவன் என்று பெயர் வைத்ததிலிருந்து, இந்தியத் தேசிய விருது நடிகர் தனுஷ், இசைப்புயல் என்று ஏக எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய இயக்குனர் பரத்பாலா இவ்விருவர் மீதே அதிக பாரத்தை ஏற்றி (குட்டி ரேவதி, ஜோ டீ க்ரூஸ் என்று சில அறிந்த 'சிந்தனையாளர்கள்' வேறு)வெகு சாதாரணமான ஒரு கதையை (சம்பவம் உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா?) வெகு வெகு சாதாரணமாக இயக்கி, அறுசுவை விருந்தை எதிர்பார்த்த எமக்கு அவிந்தும் அவியாத அரைச் சாப்பாட்டைக் கொடுத்திருக்கிறார்.
சூடானில் கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் என்ற உண்மை சம்பவத்தை வைத்துப் பின்னிய கதையென்று முன்னரே இயக்குனர் சொல்லியிருந்தார்.
அதை விட்டுப் பார்த்தால், நீர்ப்பறவை, கடல், ரோஜா இன்னும் பல காதலன் - காதலி பிரிந்து சேரும் படங்களின் ஞாபகங்களும், கதையம்சங்களும் வந்து ஒட்டிக்கொள்வதை தனுஷ், பார்வதி, ரஹ்மானை வைத்துத் தவிர்த்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.
தனக்கு ஏற்ற பாத்திரம் எதைக் கொடுத்தாலும் உட்கார்ந்த இடத்திலிருந்து சிக்சர் அடிக்கும் தனுஷுக்கு கடும் உழைப்பையும் உருக்கத்தையும் சேர்த்துத் தரக்கூடிய துடிப்பான மீனவன் பாத்திரம் என்றால் சொல்லவும் வேண்டுமா? மனிதர் உயிரைக் கொடுத்திருக்கிறார்.
தனுஷின் ஒவ்வொரு படத்திலும் இவரைப் பாராட்டி பாராட்டி எங்களுக்கும் உங்களுக்கும் போரடிக்கும் என்பதால், அவர் சில காட்சிகளில் ரஜினியாகவும் (style, look + கோபம் & வெறித்த பார்வை), இன்னும் சில காட்சிகளில் கமலாகவும் (அழுகை, புலம்பல் மற்றும் முக பாவம்) தெரிவதை மட்டும் குறித்து வைக்கிறேன்.
ஆனால் 'மரியான்' பாத்திரம் நொண்டியடிக்கிறது.
பெற்ற தாயை சிறிதளவேனும் மதிக்காத இந்த 'கடல் ராசா' கடல் தாயை ஆத்தா என்பாராம்.
ஆரம்பத்தில் தன் காதலையே காட்டிக்கொள்ளாத இவர், ஆப்பக் கடை வைத்து தான் வெந்து போகும் தாய் எத்தனையோ தரம் கெஞ்சிக்கேட்டும் போகாத சூடானுக்கு, காதலி பனிமலருக்கு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையைத் தீர்த்துவைக்க சூடானுக்கு போவாராம்.
திமிங்கிலம், கொம்பன் சுறாவைக் கூட சிம்பிளாகக் கொண்டுவரும் கடல் ராசா அதில் கிடைக்காத பணத்தையா பாலைவன சூடானுக்குப் போய் சம்பாதிப்பார்?
தனுஷின் மரியான் பாத்திரத்தை Build up செய்யக் காண்பித்த காட்சிகளும் பழைய ஐடியாக்கள்.
கடலில் குதித்து இன்னொரு படகிலிருந்து தீப்பெட்டி எடுத்து வருவது.
வேலாலேயே குத்தி சுறா வேட்டை.
கதாநாயகியை இடுப்பில் உதைத்து விட்டு, அடுத்த காட்சியிலேயே வில்லன் கும்பலைத் தனியாளாக நின்று தாக்குவது...
சூடான் பணயக் கைதி காட்சிகளில் தாடி வளர்வதும் குறைவதுமாகவும், காலில் ஏற்படும் காயம் + கட்டு மாறி மாறிக் குழப்புவதிலும் இயக்குனர் தன் கவனச் சிதறலை (continuity) க் கவனிக்கவில்லையா?
அதுசரி, கடல் ராசா என்றால் ஆங்கிலத்தில் King of Sea தானே? பிறகு ஏன் விளம்பரங்களில் எல்லாம் Prince of Sea என்கிறார்கள்?
(ராசா, சுறா ... கண்ணைக் கட்டல ? ;))
இசைப் புயல் மட்டும் ரொம்ப பொருத்தமா அல்லது வம்பில் மாட்டிக்கொள்ளாமல் கடல் 'ராசா' பாடலை யுவன் ஷங்கர் 'ராஜா'வை அழைத்துப் பாட வைத்து பெருந்தன்மை விருதைத் தட்டிக் கொள்கிறார்.
பூ பார்வதியா இது? அழகும் மெருகு. நடிப்பும் அருமை.
முக பாவங்களை முதல் காட்சியிலிருந்து ஒவ்வொரு காட்சியிலும் அழகாகக் காட்டி இருக்கிறார்.
உணர்ச்சிகளைக் கொட்டும் இடங்களில் நல்லா வருவார் என்று தோன்றுகிறது.
படத்தின் பிளஸ்களில் நிச்சயமாக இவரும் ஒருவர்.
பொட்டும் இல்லாமல், சாதாரண ஆடைகளில் வெறும் மூக்குத்தி, கண் மையுடன் ஜொலிக்கிறார்.
இவரது அழகை வைத்தே படத்தை இளைஞர் மத்தியில் ஒரு காதல் காவியமாகக் காட்டிவிடலாம் என்றும் ஓட்டிவிடலாம் என்றும் இயக்குனர் போட்டிருக்கும் கணக்கு ஓரளவு சரியாகவே தெரிகிறது.
Facebook, Twitter எங்கிலும் பனிமலர் காய்ச்சல்.
ஆனால் மரியான் - பனிமலர் காதல் ரஹ்மானின் இசை, ஒளிப்பதிவால் மெருகேறிஇருந்தாலும் கூட, ரஹ்மானின் எல்லாப் பாடல்களையும் பயன்படுத்தவேண்டும் என்று பரத்பாலா பாடுபட்டிருப்பது படத்தை ஏனோ இழுவையாக்குகிறது.
ரோஜாவில் காதல் ரோஜாவே தந்த உருக்கத்தை, மரியானின் 'நேற்று அவள் இருந்தாள்' தரத் தவறிவிட்டது.
'எங்கே போனே ராசா' மிதக்க வைக்கிறது.
பாடல்கள் வெளியானவுடனேயே பிரபலமான நெஞ்சே எழு, சோனா பரியா, கடல்ராசா பாடல்கள் பொருத்தமான இடங்களில் சரியாகப் பொருத்தப் பட்டிருப்பதால் நல்லாவே வந்திருக்கின்றன.
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன பாடல் ஒளிப்பதிவிலும் காட்சி அமைப்பிலும் லயித்து ரசிக்க வைக்கிறது.
இதை உணர்ந்து இயக்குநர் வேறு பல காட்சிகளின் பின்னணியிலும் இந்தப் பாடலின் இசையைத் தவழவிட்டிருக்கிறார்.
ஒளிப்பதிவும் சேர்ந்து பாடல்களைத் தூக்கிக் கொடுக்கின்றன.
ஒளிப்பதிவு ஒரு பெல்ஜிய நாட்டவராம். மார்க் கொனிங்க்ஸ். ஆழ்கடல் காட்சிகள், இயற்கையின் அழகோடு கடல் சார்ந்த காட்சிகள் மட்டுமல்லாமல் காய்ந்து கிடக்கும் பாலைவனம் கூட இவரது ஒளிப்பதிவில் அழகாக இருக்கின்றன.
'நெஞ்சே எழு' சும்மா தூக்கி எழுப்பியிருக்கவேண்டிய பாடல்..
(படத்தில் குட்டி ரேவதி இணை இயக்குனராம்.இந்தப் பாடலில் மட்டுமே கவிஞராக மட்டும் தெரிகிறார்.)
திரைக்கதை அந்த நேரத்தில் தொய்ந்து கிடப்பதால் எதிர்பார்த்த எழுச்சி இல்லைத் தான்.
அதேபோல தான் ஆப்பிரிக்க சூடான் தீவிரவாதிகளும் (சரியாத் தானே பேசுறேன்? - அப்பாவிகளைக் கண்ணியமாக நடத்தினால் தானே போராளிகள்?) நம்ம படங்களில் வருகிற கணக்கில் குத்தாட்டம் போடுகிறார்கள்.
A.R.ரஹ்மான் பின்னணி இசையிலும் தன் மாயாஜால வித்தைகளைக் காட்டத் தவறவில்லை.
ஆப்பிரிக்கக் காட்சிகளைக் கொஞ்சமாவது தூக்கி நிறுத்துவது இசைப்புயலும் தனுஷும் ஒளிப்பதிவும் தான்.
மரியான் பாத்திரம் தொடக்கம் பாத்திரப் படைப்புக்களில் பெரிதாக இயக்குனர் சிரத்தை எடுக்கவில்லை போலும். (பனிமலர் & அப்புக்குட்டியின் சர்க்கரை + ஜெகனின் சாமி தவிர)
தாயாக வரும் உமா, பனிமலரின் தந்தை சலீம் குமார், குட்டி சுட்டீஸ் புகழ் இமான் அண்ணாச்சி எல்லோரும் வருகிறார்கள் போகிறார்கள்.
அந்த ஆப்பிரிக்க தீவிரவாதித் தலைவன் கலக்கல். மிரட்டுகிறான்.
ஆனால் பாவம் அவ்வளவு பெரிய மிரட்டல்காரன், இரண்டு, மூன்று வாரம் சாப்பிடாமல் புல்லு மட்டுமே சாப்பிட்டு காய்ந்து போய்க் கிடக்கும் ஒல்லிப்பிச்சானிடம் அடிவாங்கி செத்துப்போகிறான்.
(எல்லாம் பனிமலரும் நெஞ்சே எழு பாடலும், கடல் ஆத்தாவும் ஊட்டிய வீரமோ?)
படம் பார்த்துக்கொண்டிருந்த நேரம் தனுஷ் ரசிகர்களின் தொல்லை ஆரம்பத்தில் பெருந்தொல்லை. அவர்களது விசிலேலேயே ஆரம்ப வசனங்கள் போச்சு.
ஆனால் படத்தில் பல வசனங்கள் அருமை. வசனகர்த்தாவாக தொடர்ந்து ஜோ டீ க்ரூசை எதிர்பார்க்கலாம்.
"நினைக்காதது வேணும்னா நடக்காமப் போகலாம், ஆனால் நினைச்சிட்டே இருக்கிறது கண்டிப்பா நடக்காமப் போகாது"
ஆனால் பக்கத்திலிருந்த சில குசும்பர்களின் கொமென்டுகள் இந்த வசனங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடமளவுக்கு இருந்தன.
தனுஷ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பும்போது முதலாவதாக ஒருவனைக் கொல்வார்.
அப்போது இந்த பக்கத்து சீட் பஞ்ச் "Congratulations. இப்ப நீ ரவுடியாகிட்டாய். முதல் கொலை சக்சஸ்"
அடுத்து பாலைவனத்தில் தனுஷின் Long walk...
"யோவ், எவ்வளவு நேரம் தனுஷை இப்பிடியே நடக்கவிடப் போறாய்? கொட்டாவி வருகுதடா. சட்டுப்புட்டுனு முடி"
உண்மை தான்.. இரண்டாம் பாதி இழுவையும், இலக்கற்ற திரைக்கதையும் சில கஷ்டப்பட்ட உழைப்பின் அர்ப்பணிப்பை அநியாயமாக்கிய இன்னொரு படம்.
மரியான் மட்டுமல்ல, ஒரு இலக்கை நோக்கி இயங்கும் தணியாத மனித மனத்தின் எழுச்சியும் மரிக்காது என்று சொல்லவந்த இயக்குனரின் நோக்கம் படம் முடியும்போது ஸ்ஸப்பா என்று எம்மை சொல்ல வைக்கிறது.
தனுஷ் & A.R.ரஹ்மான் பாவம்.
கடலை மையமாக வைத்து வந்த இன்னொரு படம் நுரையாகப் போயிருக்கிறது.
(கடலையும் படகையும் பார்க்கும்போது சிங்கம் 2வில் சூர்யா ஒட்டின படகு வேறு நினைவில் வந்து பயமுறுத்துகிறது)
இனிக் கொஞ்ச நாளுக்கு எந்த இயக்குனரும் கடல் பற்றி யோசிக்கமாட்டார்கள்.
மரியான் - மனசில் நிறையான்