வணக்கம் நண்பர்ஸ்...
இந்தப் பக்கம் ஞாபகம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அழைத்திருக்கிறேன்.
தூசு தட்டாமல் சில மாதம் கிடந்ததனால் உள்ளே நுழையும்போதே தும்மல் தான்...
சமாளித்து வாருங்கள்...
இதுவரை கடைசியாக எப்போது இடுகை ஒன்றை இட்டிருக்கிறேன் என்று தற்செயலாகக் கடந்த வாரம் பார்த்தபோது தான் என் வாழ்க்கை ஓட்டம் கடந்த மாதங்களாக எப்படி இருக்கிறது என்று உணர முடிந்தது.
பல விஷயங்கள் விரைவாக, நம்ப முடியாமல் மற்றும் சில இடங்களில் இணங்கிக்கொள்ள முடியாமல் நடந்து முடிந்த இந்த இரு மாதங்களில் வாழ்க்கைக்கு முக்கிய இடம் கொடுக்கும் விருப்பத் தெரிவில் வலைப்பதிவாவது வேறு ஏதாவது.
முன்பிருந்ததை விட மும்முரமாகவும் அதிக சிரத்தையோடும் அதிக இலக்குகளோடும் இயங்க வேண்டிய எனக்குப் பிடித்த அதே தொழிலில் இந்த ஒரு மாதம் பரபரப்புக்கும் அவசரமாக செய்துமுடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இருந்தன.
இன்னும் செய்துமுடிக்க வேண்டிய சில கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன. என் மீதான நம்பிக்கைகளின் சுமையாக அவை இருக்கின்றன.
சில விஷயங்களை பகிரங்கவெளியில் பகிர்ந்துகொள்ளவும் வேண்டி இருக்கிறது.
அதற்கெல்லாம் நேரம் எடுத்துக்கொள்வது நல்லது என்று இப்போது எண்ணுகிறேன்.
நிதானமும் பொறுமையும் என் இலக்குகள் நோக்கிய பயணத்தில் இனித் தேவையானவை என்று உணர்ந்துகொள்கிறேன்.
மீண்டும் ஆரம்பித்திருக்கும் என் சூரியப் பயணம் பற்றியும் மீளக் காலச் சக்கரத்தைப் பின்னோக்கி சுழற்றிவிட்ட சுவாரஸ்யக் கணங்கள் பற்றியும் எழுதவேண்டும், நிச்சயமாக எழுதவேண்டும்; ஆனால் நிச்சயமாக இப்பொழுது அல்ல.
பல விடயங்கள் பற்றி எழுதவேண்டும் என்று இந்த சில வாரங்களில் எண்ணிய போதெல்லாம், என் வலைப்பதிவைத் தூசு தட்டலாம் என்று நினைத்தபோதெல்லாம் பல தடங்கல்களும் நேரமின்மையும்.
அலுவலக வேலைச் சுமை + முன்பை விட அதிகரித்த பொறுப்பும் வேலைநேரமும், சில பல முக்கிய குடும்பப் பொறுப்புக்கள், இணையத்தில் மினக்கெட மனமில்லாத இறுக்கமான பொழுதுகள், மேலதிகக் கல்வித்தகமைக்காக எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியின் காலக்கெடு அத்தோடு சேர்த்து என் காலை வாரிவிட்ட எனது அன்பு மடிக்கணினி என்று எக்கச் சக்க சிக்கல்கள்.
எனினும் கடந்த ஐந்து மாதங்களாக கொஞ்சம் டச் விட்டுப் போயிருந்த நேர முகாமைத்துவத்தை மீண்டும் சீர்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து மீண்டும் களம் இறங்க முடிவெடுத்திருக்கிறேன்.
நீண்ட காலம் சர்ச்சைகளோடு சம்பந்தப்பட்ட, சந்தைப்படுத்தல் கிரிக்கெட்டோடு இருந்ததனால், உண்மையான சர்வதேசக் கிரிக்கெட் தொடர் ஒன்று (ICC Champions Trophy) ஆரம்பித்திருக்கும் இந்தக் காலக்கட்டம் கிரிக்கெட் பிரியனான எனக்கும் உற்சாகப் பொழுது. ஒவ்வொரு நாளின் போட்டிகளுக்கும் பின்னதாக அது பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.
விகிரமாதித்தனை மீண்டும் அழைத்துவரும் எந்த எண்ணமும் இல்லை என்பதையும் உறுதியாக சொல்கிறேன் ;)
(அதுசரி அவர் என்ன கேட்டுக்கொண்டா வந்து நாவிலும் விரலிலும் இருந்துகொல்(ள்)கிறார்?)
இன்றைய போட்டிக்கு முன்பதாக நேற்றைய போட்டி பற்றி எழுதுவதோடு ஆரம்பிக்கலாம் என்று எண்ணம்...
சந்திக்கலாம் நண்பர்ஸ்...