நாளை இலங்கை அணியின் அண்மைக்கால மிகச் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களில் ஒருவரான / முதன்மையானவரான மஹேல ஜெயவர்த்தன இலங்கை அணியின் தலைவராக தனது இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார்.
யாருக்குத் தெரியும் புதிய அணித்தலைவராக வருபவர் சொதப்பி, தடுமாறி வேறு யாரும் இல்லாமல் மீண்டும் மஹேலவை "கொஞ்ச நாள், புதியவரைத் தெரிவு செய்யும் வரை தலைவராக இருந்து அணியைக் காப்பாற்றுங்கள்" என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் கேட்டால், வேறு வழியின்றி மஹேல மூன்றாவது தடவையாகத் தலைமை என்ற முள் கிரீடத்தை சுமக்கலாம்...
வேறு வழி?
ஆனால் இலங்கை அணிக்குத் தலைவராக மிகச் சிக்கலான காலகட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட அவரை இனிமேலும் துடுப்பாட்ட வீரராகவும் அணிக்குள் வைத்துக்கொள்ளத் தெரிவாளர்கள் தயாராக இல்லை என்பது போல சில செய்திகள்/வதந்திகள் உலாவர ஆரம்பித்துள்ளன.
மஹேல வெளிநாடுகளில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வந்திருக்கிறார் என்பது நிஜம். ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் கடைசி இரு இனிங்க்சில் அரைச் சதம் அடித்து விமர்சனங்களின் வாய்களைக் கொஞ்சம் அடைத்திருந்தார்.
மஹேலவின் வெளிநாட்டு டெஸ்ட் துடுப்பாட்ட தடுமாற்றங்களுக்கு வெளிநாடுகளில் இலங்கை அணியின் மொத்தத் தடுமாற்றம் வழங்கிய அழுத்தமும் காரணமாக இருந்திருக்கவேண்டும்.
இனி முடிவு தெரிவாலரின் கைகளில் மட்டுமல்ல, மஹேலவின் மனதிலும் தான்..
அடுத்த உலகக் கிண்ணம் வரை விளையாடும் எண்ணத்தில் அவரும், சம காலத்தவரான சங்கக்காரவும் இருப்பதாக நம்பப்படுகிறது.
மஹேல பற்றிய எனது கட்டுரை...
மஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்
தலைவராக மஹேல விடைபெறுவது இலங்கையைப் பொறுத்தவரை எப்படியோ, எனக்கு தனிப்பட்ட முறையில் மிக மனதில் தாக்கம் செலுத்தும் ஒரு விடயம்.
கனவான் தன்மையான, கண்ணியமான இலங்கை வீரர்களில் ரொஷான் மகாநாம, சங்கக்கார, அரவிந்த டி சில்வா, முரளிதரன் ஆகியோரோடு நான் மதித்த இன்னொருவர் மஹேல.
விடை கொடுப்போம் எங்கள் தலைசிறந்த கிரிக்கெட் தலைவனுக்கு....
--------
அண்மையில் எனது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்காக CSN கலையகம் சென்றிருந்தநேரம், அங்கே சிங்கள மூல நிகழ்ச்சிக்காக வந்திருந்த இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவுடன் உரையாடக் கிடைத்தது.
இது பற்றி முன்னம் ஒரு இடுகையில் சுருக்கமாகச் சொல்லியிருந்தேன்.
அவரது ஆஸ்திரேலிய டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆட்டங்களை சிலாகித்து நான் ஆரம்பித்த உரையாடலில் அவர் என்னிடமே தனது துடுப்பாட்டக் குறைகளைப் பற்றி கேட்க, நான் அவரைப் பற்றி தமிழ் மிரரில் குறிப்பிட்ட சில விஷயங்களை சிங்களத்தில் மொழி பெயர்த்து சொல்ல என்று நட்புடன் வளர்ந்தது.
அவரது துடுப்பாட்டத்தில் நான் கவனித்த Back foot shots, எனக்கு மிகப் பிடித்த (நான் ஆடும் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டிலும் கூட) square cut போன்றவற்றை நான் ரசித்து சொல்ல,
திமுத் - பாடசாலைக் காலத்திலிருந்தே எனக்கு Back foot shots மிகப் பிடிக்கும், ஆப்படியான அடிகள் எனக்கு பந்தைப் பற்றித் தீர்மானிக்க இன்னும் கொஞ்சம் அதிகப்படியான நேர அவகாசத்தைத் தருவதாக உணர்கிறேன்.
ஆனால் எல்லா நேரமும், எல்லா ஆடுகளங்களிலும் இவ்வாறு ஆட முடியாது என்று எனது பாடசாலைப் பயிற்சியாளரில் இருந்து கிரகாம் போர்ட் வரை சொல்லி வருகிறார்கள்.
நான் - ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களை அவர்கள் ஆடுகளங்களில் சந்தித்த அனுபவம்?
திமுத் - எனக்கு அந்த த்ரில் பிடித்திருந்தது. அவர்களை அடித்துத் தான் வழி பார்க்கவேண்டும். Aggression is the key. மஹேல அய்யா (அண்ணா) அப்படித் தான் அணுகச் சொன்னார். டில்ஷான் அய்யாவும் கூட இருந்தது உதவியாக இருந்தது.
எனக்கும் அது பிடித்திருந்தது.
நான் - ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என்ற இடம் நிச்சயமில்லை என்ற அழுத்தம் இருக்கிறதா?
திமுத் - (சிரித்துக்கொண்டே) ஆமாம் கொஞ்சம்... எப்போ யாரை மாற்றுவார்கள் என்று தெரியாது. ஆனால் மஹேல அய்யா "நீ நல்லா விளையாடினா இடம் உனக்குத் தான்" என்று உறுதியளித்தது நம்பிக்கையளிக்கிறது.
டில்ஷான் இந்தத் தொடர் முடிவில் தனது ஓய்வை அறிவிப்பதாக சொல்லி இருந்தார். ஏனோ அறிவிக்கவில்லை.
அப்படி அவர் விரைவில் ஒய்வு பெற்றால் பரணவிதான அலது தரங்க என்னோடு சேர்வார்கள் என்று நம்புகிறேன்.
என்னிடம் அடுத்து திமுத் ஒரு கேள்வி கேட்டார்....
வர இருக்கும் பங்களாதேஷ் தொடருக்கு யார் யார் அணியில் விளையாடவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
நான் சொன்னேன் - சொந்த மண்ணில் விளையாடப் போகிறோம்.. புதிய தலைவர் வேறு. (அவரைப் பொறுத்த வரையில் - Team Talks அடுத்த தலைவர் மத்தியூஸ் தானாம். உப தலைவர் பற்றி உறுதியாகத் தெரியாதாம்.. ஆனால் சந்திமாலுக்குக் கொடுப்பது எதிர்காலத்துக்கு நல்லது என்பதில் இருவருமே இணங்கினோம் )
எனவே மூத்த வீரர்கள் நான்கு பேருக்கும் (மஹேல, சங்கா, டில்ஷான், சமரவீர - இவர் எப்படியும் தூக்கப்படுவது உறுதி) விரும்பினால் ரங்கன ஹெரத்துக்கும் கூட தற்காலிக ஓய்வைக் கொடுத்து இளையவர்களை முழுக்கக் களம் இறக்கிப் பார்க்கலாம் என்று.
திமுத் சொன்னார் - பங்களாதேஷ் குறைத்து மதிப்பிடக் கூடிய அணியில்லை. எங்கள் ஆடுகளங்களும் அவர்களுக்கும் சாதகமானவை. எனவே ஒரேயடியாக அனுபவமில்லாத அணியை இறக்கவும் முடியாது.
அவர்களில் அநேகர் எங்களுடன் Under 19 Series, World Cup விளையாடியவர்கள். நாங்கள் தான இப்போதும் அணியில் இடம் கிடைக்கப் போராடுகிறோம்.
அதற்குப் பிறகு சும்மா பேசியபோது, மஹேல, சங்கா இவர்களின் ஓய்வுத் திட்டங்கள் பற்றி அணியிலுள்ள இளையவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்ட போது,
"அடுத்த உலகக் கிண்ணம் வரை விளையாடும் ஆசை இருக்கிறது போல... ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர்களால் சாதிக்க முடிந்த எல்லாம் சாதித்துக் காட்டி விட்டார்களே. ஆனால் ஒன்று, அவர்கள் வெளிநாடுகள் போல, டெஸ்ட்டில் இருந்து மட்டும் ஒய்வு என்று அறிவித்தால் இங்கே உள்ளவர்கள் (தெரிவாளர்கள்) அவர்களைப் புதைத்தே விடுவார்கள். இரண்டு பேரும் விமர்சனங்கள் தாண்டியவர்கள். அவர்களுக்குத் தெரியும் , எப்போது முடிவெடுக்க வேண்டும் என்று.
என்ன ஒரு சின்ன ஆதங்கம் எங்களைப் போல சில இளையவர்கள் இன்னும் கொஞ்சக் காலம் டியூன் (form) இறங்காமல் தொடர்ந்து போராடிப் பத்திரிகைத் தலைப்புக்களில் பெயர் வருமாறு விளையாடவேண்டும்" என்றார் கொஞ்சம் யோசனை, நிறைய உறுதியோடு.
இந்தியாவின் திவாரிகள், ரஹானேக்களின் நிலையில் தான் இலங்கையிலும் திரிமன்னேக்களும் , சந்திமால்களும் இன்னும் பலரும் இருக்கிறார்கள்.
வாழ்த்துக்களை சொல்லிவிட்டு இதை இடுகையாகத் தமிழில் போடுகிறேன் என்றேன்..
"பாசை விளங்காது.. பார்த்து சிக்கலில் என்னை மாட்டாது நல்லபடியா எழுதுங்கோ அண்ணே. முடிந்தால் மாகான அணிகளின் போட்டிகளைப் பார்க்க வந்தால் வந்து சந்தியுங்கோ" என்று விடைபெற்றார்.
நல்லபடி பராமரித்தால் எதிர்காலத்துக்கான ஒரு நீண்டகால முதலீடு திமுத் கருணாரத்ன.
------
நியூ சீலாந்து அணி பற்றிய அலசல் ஒன்று....