சிரிக்க வைக்கப் போகிறோம் தயாராக வாங்கோ... என்று சந்தானம் அழைத்தபிறகு, போதாக்குறைக்கு இணையம் மூலமாகவே கடந்த இரண்டாண்டுகளில் எங்கள் இதயம் கவர்ந்த பவர் ஸ்டார் இருக்கும்போது கேட்கவா வேண்டும்?
இரட்டை அர்த்தம் இல்லாமல், சலிக்கவைக்காமல், தொய்வில்லாமல் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுப்பதும் சவாலான விடயம் தான்.
ஆனால் சாதித்துக் காட்டியிருக்கிறார் சந்தானம் ஒரு தயாரிப்பாளராக.
மணிகண்டன் இயக்குனர். அவருக்குப் பெரிதாக வேலையில்லை - காரணம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாக்யராஜ் இயக்கி நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'இன்று போய் நாளை வா' படத்தின் ரீமேக் தான் இந்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'
காலத்துக்குப் பொருத்தமாக மட்டும் சில மாற்றங்கள் செய்து, பக்குவமாகப் பாத்திரங்களைத் தெரிவு செய்து இளைஞரின் இந்தக் கால டேஸ்ட் அறிந்து பவர் ஸ்டாரையும் இறக்கி ஹிட் அடித்திருக்கிறார்கள்.
இன்று போய் நாளை வா போலவே ஒரு அழகான பெண்ணை வட்டமடிக்கும் நான்கு வாலிபர்கள்.அவளை அடைய இவர்கள் படாத பாடு படுவதை நகைச்சுவையாக சொல்கிறது படம்.
பொதுவாகவே இப்படியான தழுவல்கள் அல்லது ரீ மேக்குகள் என்றால் பழைய படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. இதுவே புதிதாக வரும் படங்களின் மீது அழுத்தத்தைக் கொடுத்து பழசு சிறப்பானதாகத் தெரியும்.
க.ல.தி.ஆசையாக்கும் அதே நிலை தான்.
திரைக்கதை சக்கரவர்த்தி பாக்யராஜை யாராவது நெருங்க முடியுமா? அவரது இ.போ.நா.வாவில் பாக்யராஜ் மீது ஒரு பரிதாபம் தானாக ஒட்டி, அவருக்கு ராதிகா கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கத்தை எமக்கு ஏற்படுத்தும்.
இங்கே அந்த செண்டிமெண்ட் மிஸ்ஸிங்... ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு சிக்சர், பவுண்டரிகள் அடித்து க.ல.தி.ஆசையாவைக் கரை சேர்க்கிறார்கள் சந்தானமும் பவர் ஸ்டாரும்.
ஆரம்பிக்கும்போதே பலருக்கு நன்றிகளுடன் தான் ஆரம்பம்..
முக்கியமாக இயக்குனர் K.பாக்யராஜுக்கு நன்றி சொல்லி பிரச்சினையைத் தீர்த்துவிட்டார்கள்.
படம் ஆரம்பிக்கும் போதே N.சந்தானம் வழங்கும் என்ற எழுத்துக்கள் தோன்றும்போதே கரகோஷங்கள்... பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் வரும்போது எழுந்த கரகோஷம் இருக்கே... அட அட அட.. மனுஷன் நின்று சாதிச்சிட்டார்.
இவ்வளவுக்கும் பவர் ஸ்டாரின் எந்த ஒரு படமும் இலங்கையில் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.
ஹீரோவா அப்பாவியா சேது என்று ஒரு புதுமுகம் அறிமுகமாகிறார். (பையன் வைத்தியராம்.. சேதுராமன் தான் முழுப்பெயர் என்று அறிந்தேன்)
ஆனாலும் சீனியர்கள் சந்தானம், பவர் ஸ்டாரின் பெயர்களுக்குப் பிறகே சேதுவின் பெயர் திரையில்.
வசனங்கள், கலாய்த்தல், கடிகளில் சந்தானம் புகுந்து விளையாடுகிறார் படம் முழுவதுமே..
"பல் இருக்கிறவன் பட்டாணி சாப்பிடலாம்.. ஆனால் இப்பிடி பல் இருந்தால் பாறாங்கல்லையே உடைக்கலாம்"பவர் ஸ்டாரின் பல்லுக்கு அடிக்கும் கமென்ட் முதல், பவரின் முகத்தையே பப்பாளி என்று நக்கல் அடிப்பது இன்னும் கிடைக்கும்போதெல்லாம் அப்பாவி பவர் ஸ்டாரை வாருவது என்று கலக்குகிறார் சந்தானம்.
சந்தானம் காட்டில் (மட்டும்) இப்போ கன மழை போலும்....
"எத்தனை காலத்துக்குத் தான் மற்றவங்க காதலையே ஊட்டி வளர்க்கிறது? எனக்கும் ஊட்டில்லாம் போய் டூயட் பாட ஆசை வராதா மச்சான்?' கலக்கல்..
ஆனால் இப்படிக் கலாய்க்கப்படும் நேரமெல்லாம் பச்சைக் குழந்தை போல அப்பாவி லுக்கைக் காட்டுவதாலேயே பரிதாபத்தை வெளிப்படுத்தி மனதை வென்றுவிடுகிறார் பவர் ஸ்டார்.
அவரது வழமையான அலப்பறைகளுக்குப் படத்திலே பொருத்தமான பாத்திரம்.. அலட்டிக்கொள்ளாமல் அந்தப் பார்வை, மீசை, உடல் அசைவு என்று சிரிக்கவைக்கிறார்.
கூடவே அவரது அண்ணன், அப்பா ஆகிய பாத்திரங்களும் சேர்ந்து ஜாலியோ ஜிம்கானோ தான்.
புதுமுக ஹீரோ சேது அழகாக இருக்கிறார். ஆனால் பாவமாகத் தெரிகிறார். பின்னே, சந்தானமும், பவரும் அடிக்கிற லூட்டிக்கு ரஜினி, கமலே நடித்திருந்தாலும் கூட எடுபட்டிருக்காது போல.
கதாநாயகி விஷாகா அழகு தான்.. நடித்தும் இருக்கிறார். எந்த நேரமும் இதழோரம் ஒரு சிரிப்பு.. ஒரேயொரு பாடலில் தாராளமாகக் காட்டுவதைத் தவிர அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறார்.
எங்கேயோ பார்த்த முகமாய் இருக்கே என்று பார்த்தால் சாமர்த்தியமாக தேவதர்ஷனி பேசும் வசனத்திநூடாக சொல்லிவிடுகிறார்கள்..
த்ரிஷாவோடு ஒரு விளம்பரத்தில் டல் திவ்யாவாக வந்து தூள் திவ்யாவாக வருவாரே, அவர் தான்.
VTV கணேஷ், டான்ஸ் மாஸ்டர் சிவஷங்கர், கோவை சரளா, தேவதர்ஷினி என்று ஒரு பட்டாளமே சிரிக்கவைக்க..
இன்று போய் நாளை வாவின் பாத்திரங்களையே கொஞ்சம் மாற்றியுள்ளார்கள்.
ஆனால் இங்கே மேலதிகமாக சிம்புவையும் கௌதம் வாசுதேவ மேனனையும் கொண்டுவந்து கலர் ஏற்றியுள்ளார்கள்.
சிம்பு தனது இமேஜை உயர்த்திக்கொள்ள கிடைத்த சிறு இடம் பயன்படுகிறது.
தமனின் பின்னணி இசையும் பாடல்களும் பட ஓட்டத்துடனேயே பயணிக்கத் துணை வருகின்றன.
ஆசையே அலை போலே, அடியே அத்தை மகளே இரண்டும் ஆட வைக்கும் ராகம் என்றால்.. நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் ரீ மெக்கான லவ் லெட்டர் கலக்கல் ரகம்...
M.பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவை இந்தத் திரைப்படத்திலும் (முன்னதாக ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை) ரசித்தேன். இவரது plus point அந்த விரிந்து பரந்த Long shot & Top angle அன்று நினைக்கிறேன்.
நடன இயக்குநர்களைப் பற்றியும் இங்கே சொல்லியே ஆகவேண்டும்.
காரணம் சந்தானத்தையும் பவர் ஸ்டாரையும் ஆட வைத்து அதையும் ரசிக்கச் செய்துள்ளார்களே.
மூவரினதும் அறிமுகங்கள், அதிலும் பவரின் அறிமுகம் கலக்கல்.
அதேபோல மூவரும் வீட்டில் நுழைய எடுக்கும் முயற்சிகளில் பவர் ஸ்டாரின் நடனமும், சந்தானத்தின் பாட்டும் வயிறு வலிக்க சிரிக்கவைக்கின்றன.
ஒவ்வொரு காட்சிக்கும் வாய்விட்டு சிரிக்க, வசனங்களைக் கேட்டு கேட்டு ரசிக்க, கவலைகளை மறக்க நிச்சயமாக நம்பிப் பார்க்கலாம் - கண்ணா லட்டு தின்ன ஆசையா
(முக்கியமாக பாக்யராஜின் ஒரிஜினலோடு ஒப்பிடாமல் பார்த்தால்)
முக்கியமாக இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமலே நகைச்சுவை விருந்தளித்தமைக்கு பெரிய பாராட்டுக்கள்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா - டபிள் ஸ்பெஷல் (சந்தானம் & பவர் ஸ்டார்) பொங்கல் விருந்து
அனைத்து நண்பர்களுக்கும் இனிய தைப்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.