அலெக்ஸ் பாண்டியன்

ARV Loshan
4


சில சப்பைக் கதைகளைக் குப்பையாய் எடுத்து எப்படியாவது ஒப்பேற்றிவிடலாம் என்று யோசிக்கின்ற இயக்குனர்களுக்கு ஹீரோவின் மாஸ், ஹீரோயினின் கவர்ச்சி, ஹிட் ஆன பாடல்கள், நகைச்சுவை நடிகரின் விளாசல் form ஆகியன துணை இருக்கும்.

இயக்குனர் சுராஜின் முன்னைய திரைப்படங்கள் அவரது 'பெருமை' சொல்லக் கூடியவை, மூவேந்தர், தலைநகரம், மருதமலை, படிக்காதவன் & மாப்பிள்ளை.
இந்தப் படங்கள் எல்லாம் 'எப்படி; என்று நம்ம எல்லோருக்குமே தெரியும்.. ஆனாலும் கலக்கல் காமெடி இந்தப் படங்களில் எல்லாம் இருந்தது.

அலெக்ஸ் பாண்டியனில் கார்த்தி - வழமையான கார்த்தி. தாடி, சண்டை, காமெடி.

என்ன இதிலே கையில் ஒரு tattoo அடித்திருப்பதாலோ என்னவோ எந்த ஒரு வில்லன் அடியாட்களும் இவரை சும்மா அசைத்துக்கூடப் பார்க்க முடியாமல் இருக்கிறது.
ஹீரோவை விட உயரமான அனுஷ்கா கவர்ச்சி காட்ட முயல்கிறார். ஆனால் கிழவியாகத் தெரிகிறார்.

ஒரு பாட்டும் மனசில் நிற்கவில்லை; தேவி ஸ்ரீ பிரசாத் வழமை போலவே போட்டுக் குத்தி எடுத்ததை தாறுமாறாகக் குலுக்கி ஆடி ஒரு வழி பண்ணுகிறார்கள்.


சந்தானம் தான் படத்தின் ஹீரோ. படத்தைத் தனியாளாக நின்று எல்லாப் பக்கமும் அடி வாங்கி (அண்மைக்காலமாக மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்காக ஒருநாள் இனிங்க்ஸ் ஆடுவது போல) , குதம் இரண்டு, மூன்று தரம் கிழிந்தும் கூட கொஞ்சம் ரெட்டை அர்த்தம், நிறைய கலக்கல் பதிலடிகள், கலாய்த்தல்கள் சகிதம் முடிந்தவரை முயன்றிருக்கிறார்.
சண்டையும் கொஞ்சம் போட்டிருந்தால் அவர் தான் படத்தின் ஹீரோ.

A4 காகிதத் தாள் ஒன்றை எடுத்து எட்டாய்க் குறுக்கு வாட்டாய் மடித்துக் கிழித்து வரும் ஒரு கீலத்தில் எழுதக் கூடிய கதை.
படத்தின் இசை வெளியீடு, ட்ரெய்லர் இவற்றுக்கு மினக்கெட்ட அளவுக்குக் கொஞ்சம் கதையை மெருகேற்ற முனைந்திருக்கலாம் என்று சலிக்க வைக்கிற சப்பைக் கதை.

விசு, சுமன், பிதாமகன் மகாதேவன், போதாக்குறைக்கு ஹிந்தி மிலிந்த் சோமன்.... அவ்வ்வ்வவ்
இத்தனை பேர் இருந்தும் அசைக்க முடியாத ஆளாக ஹீரோ அலெக்ஸ் பாண்டியன்.
பேரை மட்டும் ரஜினியிடம் இருந்து சுட்டால் போதுமா?
கதையும் ஒழுங்கான திரைக்கதையும் வேண்டாம்?

பெயர்களின் எழுத்தோட்டம் ஆரம்பிப்பதே மகா நீளமான ஒரு ரயில் சண்டைக் காட்சியுடன்.... எப்படா அடிச்சு முடிப்பாங்க என்று இருக்க, முதல் பாதி முழுக்க சந்தானத்தின் மூன்று 'கும்' சகோதரிகளுடன் கார்த்தி அடிக்கும் இரட்டை அர்த்த, நெளிய வைக்கும் லூட்டிகளுடன்...

அட கதையின் மெயின் டிரக்குக்கு வரச் சொன்னால் இன்னொரு கொட்டாவி விட வைக்கும் வாகன சண்டை..

சுமோக்கள், பஜெரோக்கள், லான்ட் ரோவர்களைஎல்லாம் துவைத்து எடுக்கிறது சந்தானம் வாங்கிய புதிய டப்பா வான். (இதுக்குப் பிறகு நான் ஐந்தாண்டுகளாக வைத்திருக்கும் என் வானைப் பார்க்க பெருமையா இருக்கு. யாராவது ஒரு அமைச்சர் பட்டாளத்துடன் துணிந்து என் வாகனத்தில் இருந்து மோதலாம் போல)

லொஜிக் கொஞ்சம் மீறி எடுத்த படங்கள் பார்த்திருக்கிறேன், லொஜிக்கே இல்லாத படங்கள் கூட பார்த்திருக்கிறேன்.
ஆனால் இப்படியொரு மஜிக் படத்தைப் பார்த்ததே இல்லை மக்கள்ஸ்...
இதுக்கு மேல சொன்னா அழுதுருவேன்.

ஒன்றே ஒன்று சொல்லிட்டு முடிச்சிடலாம்...
என்னுடைய இந்த சின்ன வயசுக்குள்ள, எழுபத்தைந்து வருட சினிமாக்களில் லட்சம் தடவை பார்த்த மகா உன்னதக் காட்சியை மீண்டும் இயக்குனர் சுராஜின் புண்ணியத்தால் பார்க்கக் கிடைத்தது...
நீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட ஹீரோவை வில்லன்கள் விளையாட வெளியே எடுத்தால் கண்ணை திறந்து பார்ப்பாராம்; அடியாட்கள் அவரைத் தொடர்ந்து தாக்கக் கஷ்டப்படும் ஹீரோயின் "ஆம்பிளையா இருந்தா அவிழ்த்து விடுங்கடா அவரை" என்கிறார்.
அதுக்குப் பிறகு தான் என்ன நடக்கும் என்று வில்லன்களுக்கும் தெரியும்... எங்களுக்கு சூனியம்.
இந்த ட்ரிகரைக் கொஞ்சம் இறுக்கி அழுத்தியிருக்கக் கூடாதா ராசா?


இதுக்குள்ள மனோபாலாவை வச்சு 'வேட்டைக்காரனுக்கு' நக்கல் வேறு... தேவை தான்.

கார்த்தி இப்படியே இன்னொரு படம் நடித்தா தொடர்ந்து ப்ரூவுக்கு விளம்பரங்களும், "என்னா மாமா சௌக்கியமா?" என்று அண்ணாவின் பட விழாக்களுக்கு விளம்பரங்களும் செய்துகொண்டு ஜாலியாத் திரியலாம்...


படம் முடிஞ்சுது எழும்பி ஓடிடலாம்னு பார்த்தா கொடுமை 'Bad boy' என்று ஒரு வணக்கம் பாட்டு வேறு.

அய்ய்ய்ய்யய்ய்ய்ய்யய்ய்யொ (சந்தானம் ஸ்டைலில்) சத்தியமா முடியலடா சாமி....

அலெக்ஸ் பாண்டியன் - அலுப்பு + அறுவை 


பி.கு - திரையரங்குகளில் எவ்வளவு தான் படத்துக்கு முன்பும், இடைவேளையின்போதும் புகைப்பிடித்தலுக்கு எதிராக மனதில் பதிகிற மாதிரி விளம்பரம் போட்டாலும், இடைவேளையின்போது கதவைத் திறந்தால் மூச்சே முட்டுகிற மாதிரி புகை மண்டலம்.
நண்டு, சுண்டான் எல்லாம் கையிலும் வாயிலும் எரியும் துண்டுகளோடு.
உங்களையெல்லாம் அலெக்ஸ் பாண்டியனை ஆறேழு தடவை புகைச்சுக்கொண்டே படம் பாருங்கடா என்று வதைச்சு எடுக்கவேண்டும்.

Post a Comment

4Comments

Please Select Embedded Mode To show the Comment System.*