பிறந்திருக்கும் இந்த 2013ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் நல்லதைக் கொண்டுவரட்டும்; நிம்மதி, சந்தோசம், சமாதானத்தைக் கொண்டுவரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
இன்று ஒரு சந்தோசம், உற்சாகம், நிம்மதி எல்லாவற்றையும் உணர்ந்தேன்...
கடந்த வருடங்கள் போலவே நண்பர்கள், நேயர்களின் வாழ்த்துக்கள், இரு மாத கால ஓய்வுக்கு இனி வரும் சில நாட்களில் விடை கொடுத்து மீண்டும் நேரமேயில்லாமல் பம்பரமாக ஓடக் கூடிய காலம் வந்துள்ளது என்பதற்கான சில தெளிவான அறிதல்களை நேற்று பெற்றுக்கொண்டேன்.
நேற்றைய நாள் ஒரு முழுமையான மகிழ்ச்சியான நாளே.
கிடைத்த இடைவேளையை எனக்கு, என் தொழிலுக்கு, வருமானத்துக்கு, அறியவேண்டியவற்றை மேலும் பெருக்கிக்கொள்ள, குடும்பத்துக்காக, பிடித்தவர்களுக்காக, நண்பர்களுக்காக பயன்படுத்திக்கொண்டது பெரிய நிம்மதி...
அத்துடன் நீண்ட காலத்துக்குப் பிறகு (சரியாக ஒரு வருடமும் ஒரு நாளினதும் பிறகு)மீண்டும் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் இன்று திரைக்கு வந்திருந்தேன்.
அதே மாதிரியான கடந்து சென்ற வருடத்தின் விளையாட்டு நிகழ்வுகள், சாதனைகளை அலசி, அறிக்கையிடும் 'மீள் பார்வை'. இலங்கையின் CSN தொலைக்காட்சி அழைத்திருந்தது. செய்துகொடுத்தேன்.
ஒளிப்பதிவு என்பதால் நேற்று வருடத்தின் கடைசி நாளில் ஒளிபரப்பாவது போலத் தான் செய்திருந்தேன். பார்த்தால் இன்று தான் ஒளிபரப்பினார்கள். எனவே இந்தவருடத்தில் இந்தவருடத்தில் என்று கடந்த வருடத்தை ஒரு நாள் கழித்தும் கொண்டுவந்துவிட்டேன்.
நீண்டகாலத்தின் பின் என் முகத்தையும், இரு மாதங்களின் பின் என் குரலையும் பார்த்து, கேட்ட நண்பர்களின் வாழ்த்துக்கள் தந்த உற்சாகம்...
ஆனால் CSN தொலைகாட்சி நிறுவனத்தில் நான் இணைந்துகொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியும் இருக்கிறேன்....
Dear friends, don't jump into any conclusions. There is a word called 'Freelancing'. But soon new game will be on :)
மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதே எங்கள் வாழ்க்கையைப் பூரனமாக்கும் என்று எப்போதும் நம்புபவன் நான்... (முன் கோபத்தாலும் சில நேரம் நியாயமான கோபங்களாலும் நான் கொட்டிவிடும் சூடான வார்த்தைகளுக்கான சிறு பரிகாரங்களாக)
இன்றைய நாளிலும் அதைத் தொடர்ந்தேன்.. இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக என்னால் இயன்ற சிறு உதவியை வழங்கி இருந்தேன். அதை நண்பர்களுடன் Facebook மூலமாகப் பகிர்ந்துகொண்டேன்; இதன் மூலமாக இன்னும் பலர் தங்களால் முடிந்த உதவிகளை அந்த பாவப்பட்டவர்களுக்கு வழங்குவார்கள் என்ற எண்ணத்தில்.
(நான் என் பங்களிப்பை வழங்கிய பிறகே மற்றவர்களை உரிமையுடன் உதவுமாறு கேட்க முடியும்)
------
இரவில் நேரம் கிடைத்த போதில் ஜெயா டிவி யில் விஸ்வரூபம் இசை வெளியீடு பார்க்கக் கிடைத்து.
மீண்டும் மனதில் வைரமுத்துவின் கமலுக்கான வைர வரிகள் நின்றாட ஆரம்பித்துள்ளன...
ஆச்சரியம் என்னவென்றால் ஒரு வார்த்தையும் தடுமாறாமல் மகன் ஹர்ஷுவும் பாடுகிறான் இந்த வரிகளை...
சில வரிகள் பாடல் வந்த நாளிலிருந்து எனக்கு உற்சாகம் தந்தவை. அவை தடித்த எழுத்துக்களில்.....
எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்
நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காற்றுக்கும் காயம் இல்லை
எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்றும் முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
(நெருப்புக்கு)
சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம்
என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம்
யார் என்று புரிகிறதா---------------------
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா
முதல் நாளில் வழமையாகப் பெரியோரின் அறிவுரைகளைத் தானே கேட்போம்/ சொல்வோம் / பகிர்வோம்?
ஒரு மாறுதலுக்கு எங்கள் வீட்டுப் பெரியவர் ஹர்ஷு ஐந்து வயதிலேயே தன அனுபவங்களோடு எனக்கு சொல்லும் அறிவுரைகளை இங்கே உங்களோடு பகிரலாம் என்று...
"கோபப்படாதேங்கப்பா" - "கோபம் தான் உங்கட எதிரி"
இந்தச் சின்ன வயதில் அவனின் பக்குவமும், எனக்கு அறிவுரை சொல்கிற நேரம் அவனது முகபாவங்களும், கை அசைவுகளும் அலாதியானவை... ரசித்துக்கொண்டே கேட்பதுண்டு.
நான் ஏதாவது பழைய கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் சொன்னால்
"அப்பா, அப்பப்பா மாதிரி பழைய கதைகள் சொல்லாமல் புதுசா சொல்லுங்கப்பா... Fairy tales or Adventerous stories"
"கஷ்டமான தமிழ்ப் பாட்டு எல்லாம் வேண்டாமப்பா.. அது எல்லாம் பெரிய ரிஸ்க்.. நான் ரோயல் கொலேஜ் போன பிறகு படிக்கிறேன். இப்ப நீங்க ஈசியான தமிழ்ப் பாட்டு சொல்லித் தாங்கோ.. சின்னப் பிள்ளைகள் படிக்கிற மாதிரி"
பாரதி பாடல்களும், ஆத்திசூடியும் பிடிக்கும் அளவுக்கு மனைவியும் அப்பாவும் சொல்லித்தரும் தேவாரங்கள் பிடிப்பதில்லை.
வீதியில் வாகனம் போக்குவரத்து சமிஞ்சை விளக்கில் நிற்கும் நேரம் பிச்சைகேட்டு யாராவது வந்தால் நான் அங்கவீனருக்கு மட்டுமே பிச்சை போடுவதுண்டு; குழந்தையுடன் யாராவது பெண்மணிகள் வந்து வலிந்து பரிதாபத்தை உண்டுபண்ணப் பார்த்தால் நான் கொடுப்பதே கிடையாது.
அத்துடன் உடல் ஆரோக்கியமாக இருக்கும் யாருக்கும் பிச்சை இடுவது கிடையாது...
மனைவி இயற்கையாகவே இளகிய மனது என்பதால் கேட்டவுடன் கொடுத்துவிடுவார். நான் தடுத்துவிடுவேன்.
உடனே ஹர்ஷு "அப்பா Sharing is the best thing in the world . நாங்க குடுக்கவேணும் அப்பா" என்பான். நான் அவனுக்குப் புரிந்த விதத்தில் விளக்கினால்
"அப்பா, எங்களிட்ட காசு இருக்கு. அவங்க பாவம். இல்லைத் தானே? கொஞ்சம் காசு குடுத்தா சந்தோசமா இருப்பாங்க தானே. அம்மாக்கு இரக்கம் இருக்கு. நீங்க ஏனப்பா இப்பிடி?"
என்பான் பெரிய மனிதத் தோரணையுடன்.
அன்றொரு நாள் தூங்கத் தயாரான நேரம் திடீரெனக் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
என்னடா என்று கேட்டால் - Meditation என்றான்.
இதுபற்றி எப்படித் தெரியும் என்றால் ஜாக்கி சான் கார்ட்டூனில் பார்த்திருக்கிறானாம்.
"மனதில் டென்ஷன் இல்லாமல் இருக்கு மெடிடேஷன் நல்லது அப்பா" என்றான்.
நல்ல காலம் என்னை செய்யுங்கோ என்று உத்தரவு இடவில்லை.
கடவுள்கள் பற்றி அவனுக்கு இருக்கும் கேள்விகள் பற்றி பெரிய இடுகையே போடவேண்டும்... அதை இன்னொரு நாள் பார்க்கலாம்.
ஆனால் அண்மையில் எங்கள் அப்பாவிடம் அவன் கேட்ட கேள்வி...
"விநாயகர் இறந்திட்டாரா அப்பப்பா?"
அப்பா கேட்டார் "ஏனப்பன் அப்பிடி கேட்கிறீங்கள்?"
"இல்லை எங்கே பார்த்தாலும் அவர்ட போட்டோ இருக்கு இல்லாட்டா சிலை இருக்கு. அதான்"