இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தனியார் தொலைக்காட்சியான CSN தொலைக்காட்சியில் (இதன் பின்னணி, பக்கபலம் பற்றி விமர்சனங்கள் உண்டு.. எனக்கும் கூட.. அது கிடக்கட்டும் ஒரு பக்கம்)வாராந்த விளையாட்டுத் தொகுப்பான Sports week என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன்.
சர்வதேச விளையாட்டுச் செய்திகளையும், அதிகமாக இலங்கையில் இடம்பெறும் உள்ளூர் விளையாட்டுச் செய்திகளையும் தொகுப்பாகத் தரும் இந்த வாராந்த நிகழ்ச்சியில் அந்த வாரம் இடம்பெற்ற மிக முக்கிய நிகழ்வை சிறப்பு விவரணத் தொகுப்பாகவும் வழங்கி வருகிறோம்.
அத்துடன் வாராந்தம் முடியுமானவரை தமிழ்பேசும் இலங்கை விளையாட்டு விற்பன்னர்கள், சாதனையாளர்கள் அல்லது வளர்ந்துவரும் நட்சத்திரங்களை சிறு பேட்டிகள் மூலம் அறிமுகப்படுத்தலாம் என்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் நானும் முடிவெடுத்தோம்.
தேடி அழைத்துவருவது தயாரிப்பாளரின் பொறுப்பு....
முதல் வாரம் - ஒரு துறுதுறுப்பான மெல்லிய இளம் பையனை (இளைஞனாக மாறிக்கொண்டிருக்கும்) அறிமுகப்படுத்தி "இவர் தான் தினேஷ் காந்தன். டென்னிஸ் வீரர்" என்றார் தயாரிப்பாளர்.
உண்மையாக அவரைப் பற்றி எதுவுமே தெரியாததால் "தம்பி உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.. மன்னிக்கவும் உண்மையாக உள்ளூர் டென்னிஸ் போட்டிகள் பற்றி எதுவுமே தெரியாது" என்று கேட்டேன்.
"அண்ணா நான் தான் இப்போ இலங்கையின் தேசிய டென்னிஸ் சாம்பியன்" என்று தன்னடக்கமாகவே சொன்னார் அந்த இளைஞர்.
உண்மையாக மனவருத்தமாக இருந்தது.
தமிழ்பேசும் ஒரு தேசிய சம்பியனைத் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று.
நிகழ்ச்சிக்காகப் பேட்டி எடுக்க முன்பதாக சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது பெருமையாக இருந்தது.
மட்டக்களப்பில் பிறந்த தினேஷ் காந்தன் சிறுவயது முதல் தனது மூத்த சகோதரர்களைப் போல ஆர்வத்துடன் டென்னிஸ் விளையாடிவந்தவர்.
சிங்களப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் இவர் திறமையைக் கண்டு கொழும்புக்கு அழைத்துவந்த பின்னர் ஒவ்வொரு வயதுப் பிரிவாக வெற்றிகளைக் குவித்து இப்போது தேசிய டென்னிஸ் சாம்பியன் ஆகியிருக்கிறார்.
சிறு வயதுப் பிரிவுகளில் கிடைத்த அனுசரணைகள் இப்போது தனக்குக் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்று கொஞ்சம் வருத்தப்பட்ட தினேஷுக்கு சர்வதேச மட்டத்தில் ATP தரப்படுத்தலில் இடம் பிடிக்குமளவுக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடவேண்டும். தரப்படுத்தலில் இணையும் வரை சொந்த செலவு தான். அதற்குப் பிறகு தான் இப்போது பெடரரும், நடாலும் குவிப்பது போல பணத்தையும் புகழையும் குவிக்கலாம்.
நம்பிக்கையோடு போராடும் தம்பி தினேஷ் காந்தனுக்கு வாழ்த்துக்கள்.
--------------
அடுத்த வாரம் ஒரு தமிழ் கராத்தே வீரனை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
நான் கல்விகற்ற கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியிலே எனக்கு இளவல்.
வேணு சுதர்ஷன்... இப்போது ஜப்பானின் அங்கீகாரம் பெற்ற கராத்தே கறுப்புப் பட்டித் தேர்ச்சியில் தரநிலை மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
இலங்கையின் முன்னணி கராத்தே பயிற்றுவிப்பாளாராக இருக்கிறார்.
பெருமையாக இருந்தது.
கடந்த வருடம் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப்பில் அதிக தங்கப்பதக்கங்களை அள்ளியவர்கள் இவரது மாணவர்கள் தான்.
சர்வதேசப் போட்டிகளில் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்று சாதனை படைக்கும் வகையில் மாணவர்களைத் தயார் செய்யும் இலட்சியத்தோடு இருக்கிறார் சுதர்ஷன்.
--------------
கடந்த சனிக்கிழமை கொழும்பு NCC மைதானத்தில் ஒரு கண்காட்சி கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.
இலங்கைக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்த அணிக்கு எதிராக இலங்கையை கிரிக்கெட்டில் பிரதிநிதித்துவப் படுத்திய முன்னாள் வீரர்கள் விளையாடும் போட்டி.
டிக்கெட் வெறும் 50 ரூபாய் தான்.
1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த அந்த ஹீரோக்களை மீண்டும் ஆடுகளத்தில் காணும் வாய்ப்பைத் தவற விட முடியுமா?
இன்னமும் Twenty 20 போட்டிகளில் தன் மாயவித்தைகளைக் காட்டிவரும் முத்தையா முரளிதரன், கடந்த வருடத்தின் சிறந்த நடுவர் விருது பெற்ற குமார் தர்மசேன (இப்போது தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுவரும் தொடரில் நடுவராகக் கடமையாற்றுகிறார்) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்.
சேருகின்ற நிதி எல்லாம் சிறுவர் இருதய சத்திர சிகிச்சை நிதியத்துக்காக என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நல்ல காரியத்துக்கும், இலங்கைக்கு இதுவரை கிடைத்த மிகப் பெரிய கிரிக்கெட் பெருமையைப் பெற்றுத் தந்த ஹீரோக்களைப் பார்ப்பதற்கும் (இனி அடுத்த உலகக் கிண்ணம் எப்போதோ?) மைதானம் நிறைய ரசிகர்கள்...
எதிரணியில் (Sri Lanka Legends) விளையாடிய பலரும் கூட இலங்கையின் புகழ் பெற்ற வீரர்களே..
ஆனால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மறைமுக எதிர்ப்போ என்னவோ சமரவீர அறிவிக்கப்பட்டிருந்தும் அணியில் இடம் பெறவில்லை. முதல் நாள் நடக்கவிருந்த கழகங்களுக்கு இடையிலான இறுதிப்போட்டியும் இதே நாளில் பக்கத்துக்கு மைதானத்தில் - SSC நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல சிரேஷ்ட வீரர்களான துலிப் மென்டிஸ் , லப்ரூய் போன்றோரும் இல்லை.
ஆனால் முன்பு அப்பா மூலமாக அறிந்த, கொஞ்சம் பார்த்தும் இருக்கிற ஹேமந்த தேவப்ரிய, சிதத் வெத்திமுனி போன்றோரின் சிறப்பான, stylishஆன துடுப்பாட்டப் பிரயோகங்களைப் பார்த்தது மிக மகிழ்ச்சி.
வயசு போனாலும் சிங்கங்கள் சிங்கங்களே...
அதற்குப் பிறகு தானே சாம்பியன் சிங்கங்கள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கின.
ஒரு நாள் கிரிக்கெட்டின் விதிமுறைகளை வசப்படுத்தி வெளுத்து நொறுக்கிய அதே சனத் - களு ஆரம்பத் துடுப்பாட்டம். கண்கொள்ளாக் காட்சி என்று யோசிக்கும்போதே மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவசர அரசியல் பணி போலும், ஒரே ஓட்டத்துடன் வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த அசங்க குருசிங்க கொஞ்ச நேரம் துடுப்பெடுத்தாடினார்.
அடுத்து நான் எப்போது பார்த்தாலும் பரவசப்படும் இலங்கையின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக எப்போதுமே நான் கருதும் அரவிந்த டி சில்வா...
அரவிந்தவும் களுவிதாரணவும் கொஞ்ச நேரம் அளித்த துடுப்பாட்ட விருந்துக்குப் பின்னர், அரவிந்த ஆட்டமிழக்க மைதானத்தின் பெருமளவு கோஷங்களுடன் ஆடுகளத்துக்குள் நுழைந்தவர் கப்டன் கூல் (இவர் தான் ஒரிஜினல் Captain Cool) அர்ஜுன ரணதுங்க...
இரண்டு பெரிய ஆறு ஓட்டங்களையும் அடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.
முன்னதாக ரணதுங்க களத்தடுப்பில் ஈடுபட்டபோதும் , பந்துவீசி விக்கெட் எடுத்தபோதும் ரொம்ப ரசித்திருந்தோம்...
களு வழமையான அதே அதிரடியில் அரைச் சதம் பெற்ற பின் ஆடுகளத்திலிருந்து விலகி, ரொஷான் மகாநாமாவை உள்ளே அனுப்பிவைத்தார்.
எனக்கு மிகப் பிடித்த ஒரு கண்ணியமான கிரிக்கெட் வீரர். அதே நுணுக்கமான, அழகான ஆட்டப்பிரயோகங்கள்.. மகாநாமவையும் துடுப்பெடுத்தாடிப் பார்த்தது ஜென்ம சாபல்யம் போல..
எதிர்பார்த்ததைப் போல முன்னைய உலக சாம்பியன்களுக்கு வெற்றி.
மீண்டும் ஒரு உலகக் கிண்ணம் வென்றது போல ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு உற்சாகம்.
வந்த பயன் முடிந்தது.
முன்னதாக சமிந்த வாசின் பந்துவீச்சையும் முன்னைய காலத்தை ரீவைண்ட் செய்து பார்த்தது போல பார்த்த அனுபவம் ரசனை.
வெளியே வருகின்ற நேரம், இலங்கை அணி அண்மைக்காலத்தில் தவற விட்ட மூன்று உலகக் கிண்ணங்களும் - குறிப்பாக கைகளுக்குள் வந்தும் கடைசியாகத் தவறவிட்ட உலக T20 கிண்ணம் மனதில் வந்து போனது..... ம்ம்ம்ம்ம்ம்
இனி எப்பவோ?
--------
அடுத்த உலகக் கிண்ணம், இலங்கையின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றிப் பேசுகின்றபோது இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் வீரர்களில் ஞாபகம் வரும் ஒருவரை நேற்று தற்செயலாக சந்தித்திருந்தேன்...
அவர் திமுது கருணாரத்ன.
என்னை அறிமுகம் செய்துகொண்டு கொஞ்சம் பேசிய வேளையில் அவர் பற்றி நான் இறுதியாக எழுதிய தமிழ் மிரர் கட்டுரையில் குறிப்பிட்ட விடயத்தையும் சொன்னேன்.
மிக மனம் திறந்து பேசிய திமுது சொன்ன விடயங்களைத் தனியொரு இடுகையாகத் தருகிறேன்.
இறுதியாக நான் எழுதியிருக்கும் கட்டுரை...