கும்கி
மைனா தந்த பிரபு சொலமனின் இன்னொரு களத்தில் அமைந்த படம்.
காட்டு யானை, மலைவாசிகளும் அவர்களது வாழ்க்கையும் கலந்த கதை என்று இயக்குனர் பேட்டியளித்துத் தந்த ஆர்வங்கள் தூண்டிவிட்டது ஒருபக்கம், பிரபுவின் மகனின் அறிமுகம் இன்னொரு பக்கம், பிரபு சொலமன் மைனா மூலம் ஏற்படுத்தி வைத்துள்ள பிம்பம் இன்னொரு பக்கம்... இவையெல்லாம் தாண்டி 'கும்கி' பாடல்கள் எல்லாம் மனதை அள்ளி இருந்தன.
ஒரு படத்தின் அத்தனை பாடல்களும் ரசிக்கவைக்கும் அந்த சூட்சுமம் இசையமைப்பாளர் இமானுக்கு அண்மைக்காலத்தில் தெரிந்திருக்கிறது.
இந்த கும்கி பாடல்களையெல்லாம் கேட்கும்போது மனதில் ஒரு ரசனை கலந்த பிழியும் உணர்வு.
மலை வாழ் மக்களின் நீண்ட காலப் பாரம்பரியமும் அமைதியும் கலந்த வாழ்க்கை மற்றும் அவர்கள் தம் விவசாயத்தையும் சுமுக வாழ்க்கையையும் ஒரு மூர்க்கமான கொம்பன் யானை கெடுக்கிறது. அரசாங்க, போலீஸ் உதவிகள் இல்லாமல் இருக்கும் அவர்கள் தாங்களாகவே பணம் சேர்த்து காட்டு யானையை விரட்டும் 'கும்கி' எனப்படும் யானையைத் தங்கள் கிராமத்துக்கு வரவழைக்கிறார்கள்.
அந்த கும்கியின் பாகன், அந்த யானை மேல் பாசத்தைக் கொட்டி வளர்க்கும் இளைஞன் பிரபு விக்ரம்.
கிராமத் தலைவரின் மகள் மீது கண்டதும் காதல்...
ஆனால் அவளோ அது பற்றி உணராமலே யானை மீது மட்டும் பாசம் வைத்துத் திரிவது அவ்வளவு அந்தக் காதலை எங்களை ரசிக்கச் செய்யவில்லை.
இதனால் நாயகனின் காதல் உருக்கம் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது.
ஒளிப்பதிவு தான் படத்தின் ஹீரோ. ஆரம்பம் முதல் சிலிர்க்கவும் ரசிக்கவும் உருகவும் பிரமிக்கவும் வைக்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இயற்கை அழகை இவரது கமெரா காட்டியது போல அண்மைக்காலத்தில் வேறு எந்தப் படத்திலும் பார்த்து ரசித்த ஞாபகம் இல்லை.
அதிலும் பாடல் காட்சிகளில் துல்லியமும், பிரமாண்டமும் அற்புதம்.
சொல்லிட்டாளே பாடலில் காட்டப்படும் அருவி, மலையுச்சி அப்படியொரு அழகு. அந்த ஒளிப்பதிவில் தொலைந்த மனது இன்னும் அதைச் சுற்றியே... உடனடியாக ஒரு இறுவட்டு வாங்கி மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் இயக்குனர் பாடல்கள், ஒளிப்பதிவில் கிடைத்த பலன்களை எல்லாம் கதை சொல்லும் விதத்தில் தவற விட்டுவிட்டார்.
படத்தின் முக்கிய விஷயமாக ஆரம்பம் முதல் சொல்லப்படும் கொம்பன் யானையின் கோரத் தாக்குதலைப் பற்றி பெரிய Build up கொடுத்துவிட்டு, கடைசி யானைச் சண்டையை கொமெடியாக்கி விடுகிறார்.
கிராமியப் பண்டைப் பாரம்பரியம், யானைப் பயிற்சி, தம்பி ராமையாவின் கொஞ்சம் நகைச்சுவை, நிறையப் புலம்பல் என்று அலையும் பகுதிகள் என்று அலையும் கதையில் இயக்குனர் படமாக்குவதில் தடுமாறியிருக்கிறார் என்று புரிகிறது.
ஆனால் மைனாவில் தந்த அதிர்ச்சியான முடிவைப் போலவே துணிச்சலான முடிவு ஒன்றை கும்கியிலும் தந்திருப்பதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்களை சொல்லியே ஆகவேண்டும்.
அறிமுகம் பிரபு விக்ரமிடம் பரம்பரை அலகுகள் செறிந்து இருக்கின்றன. தேவையான அளவு நடித்திருக்கிறார். நடிகர் திலகம், பிரபு இருவரதும் சாயல்கள், கண்கள், மூக்கில் தெரிகின்றன.
ஏற்கெனவே சுந்தரபாண்டியனில் அறிமுகமான லக்ஷ்மி மேனன் புதிய ஆரோக்கியமான கண்டுபிடிப்பு.
கிராமத் தலைவராக வரும் நடிகரும் சிறப்பாக செய்திருக்கிறார்.
காட்சிகள் கவர்ந்த அளவுக்குக் கதையும் திரைக்கதையும் மனதில் ஒட்டவில்லை.
கும்கி - கண்ணுக்குக் குளிர்ச்சி
------------------------
பிட்சா
தமிழில் திகில் படங்கள் வருவது மிகக் குறைவு என்று குறைப்படும் ரசிகர்களில் ஒருவரா நீங்கள்? உங்களுக்கான திகில் த்ரில்லர் பிட்சா.
திரையரங்கு ஒன்றில் தனியே இருந்து இந்தப்படத்தைப் பார்த்தால் நீங்கள் கெட்டிக்காரர் தான்.
நாங்கள் பார்த்த மாளிகாவத்தை ரூபி (திருத்திக்கட்டி A/Cயும் போட்டுள்ளார்கள்) திரையரங்கிலும் அன்று எம்முடன் சேர்த்து இருந்தவர்கள் இருபதுக்கும் குறைவே.
அதில் வேடிக்கை முன் இருக்கைகளில் தனியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் அவசர அவசரமாகக் கொஞ்ச நேரத்தின் பின்னர் பின்னால் வந்து அமர்ந்துகொண்டார்கள்.
விசில் படத்துக்குப் பிறகு (காஞ்சனா, முனி எல்லாம் சில காட்சிகளில் தானே) ஒரு தமிழ்ப்படம் முழுமையாகப் பயமுறுத்துகின்ற அளவுக்குக் காட்சித் தொடர்ச்சியோடும், படத்தோடு ஓட்டிச் செல்லும் கதையோடும் வந்துள்ளது என்றால் அது பிட்சா தான்.
முன்னர் கலைஞர் TV யின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இப்படத்தைக் குறும்பட வடிவில் பார்த்த ஞாபகம். யாராவது உறுதிப்படுத்தி சொன்னால் நல்லது...
பிட்சா கடையொன்றில் Delivery boy ஆகக் கடமையாற்றும் இளைஞன் மைக்கேல், அவனோடு வாழும் அவன் காதலி (திருமணமும் செய்கிறான்) - இவளுக்கு அமானுஷ்ய விஷயங்கள், பேய் பற்றி ஆராய ,வாசிக்க விருப்பம், அந்த பிட்சா கடை முதலாளி, அங்கே பணிபுரியும் இருவர் என்ற வட்டத்தில் நிற்கும் கதை, மைக்கேல் ஒரு இரவில் தனியான பங்களா ஒன்றுக்கு பிட்சா கொடுக்கச் செல்லும் நேரம் இடம்பெறும் சம்பவங்களுடன் திகிலாகிறது.
முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாகச் செல்லும் கதை இடைவேளையின் பின்னர் எடுக்கும் வேகமும் அத்தோடு சேர்ந்து திகிலுமாக படத்தோடு ஓட்ட வைக்கிறது.
அளவான பட்ஜெட்டில் படம் முழுக்க பிரமிக்க வைத்துள்ளார் புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
இவரது இளமைக் கூட்டணி (இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், எடிட்டர் லியோ ஜோன் போல்) கலக்கியிருக்கிறது.
யதார்த்தத்தை மீறி, அல்லது பயமுறுத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், நிறைவான ஒரு கதையைத் தந்து ரசிக்கிற விதத்தில் பயமுறுத்தியதற்கு வாழ்த்துக்கள்.
நடிகர்களில் அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக இயல்பான நடிப்பால் கவர்ந்துவரும் விஜய சேதுபதி இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். (அடுத்து இவரது நடுவில சில பக்கத்தைக் காணோம் பார்க்கணும்)
குள்ளநரிக் கூட்டம் மூலமாக மனத்தைக் கொள்ளையடித்த ரம்யா நம்பீசன், நிறைவாக இருக்கிறார். அழகாக சிரிக்கிறார். ரசிக்கவைப்பது போல நடித்தும் இருக்கிறார். இவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புக்கள் வரவேண்டுமே...
ஆடுகளம் நரேன் - ஜெயப்பிரகாஷ் அண்மைக்காலத்தில் பல்வேறு பாத்திரங்களில் கலக்கி வருவது போல இந்த நரேனும் கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வெளுத்து வாங்கி வருகிறார்.
அந்த நித்யா யாரப்பா? அந்தக் கண்களும் பார்வையும்... பெயரைக் கேட்டாலும், அந்த பங்களாவை நினைத்தாலும் லேசா மயிர்க் கூச்செறிகிறது.
காட்சிகள் சிலவற்றை அதிகமாக ரசித்தேன்... குறிப்பாக சேதுபதியும் ரம்யாவும் அமர்ந்திருந்து பேசும் அறைக் காட்சிகள்... காதல் பேசுகையில் லைட்டிங், கமெராக் கோணங்களும், பின்னர் அமானுஷ்ய விஷயங்கள் பேசுகையில் மாற்றங்களும் கலக்கல்.
அந்த பங்களாக் காட்சிகளின் பயமுறுத்தல்களுக்கும் கமெரா, இசையோடு எடிட்டிங்கின் நுட்பத்தையும் லாவகமாகக் கையாண்டுள்ளார் இயக்குனர்.
அத்துடன் ஒரு காதல் பாடல் கதையோட்டத்துடன் செல்லுகையில் சற்றே மெதுவாக இருந்தாலும் ரசிக்கலாம்.
தெளிவான கதையோட்டம், திடீர் திருப்பங்கள், அளவான பாத்திரங்கள், நேர்த்தியான நடிப்பு, படைப்பு என்று குறைந்த பட்ஜெட்டில் வெற்றியையும் அள்ளி, பாராட்டுக்களையும் அள்ளி எடுத்துள்ள பிட்சா குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
இது போன்ற ஆரோக்கியமான படைப்புகளை நாளை பிறக்கும் 2013இலும் நாம் எதிர்பார்ப்போம்.
பிட்சா - சுவை, சுவாரஸ்யம் & சூடு.
---------------------
இன்றைய நாள் பழைய ஆண்டுக்கு விடை கொடுக்கும் ஒரு இனிய, மாறாக முடியாத நாள்.
இந்த ஆண்டில் நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே, கவலை தந்த, அழிவு தந்த நினைவுகளைக் கழுவித் துடைத்துத் தூர எறிந்துவிட்டு, பிறக்கும் 2013ஐ நம்பிக்கையோடும் நல்ல எண்ணங்களோடும் வரவேற்போம்...
இனிய புது வருட வாழ்த்துக்கள் நண்பர்களே...