பாரதி - 12-12-12 - ரஜினி

ARV Loshan
1

பாரதி


கவிதை - தமிழ் - பாடல் இவை மூன்றையும் நேசிக்கச் செய்த என் அன்புக்குரிய பாரதியின் பிறந்தநாள் நேற்று.

வழமையாக வானொலியில் சிறப்பு நிகழ்ச்சி செய்கின்ற வாய்ப்பு இம்முறை இல்லாமல் போனாலும், காலையில் Dialog தலைப்பு செய்திகள் வாசிக்க எழுந்த பொழுதிலிருந்து, மனதுக்குப் பிடித்த பாரதி கவிதைகளை வாசித்து, நயந்து கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பாரதி கவிதைகளை முழுமையாகத் தேடும் நண்பர்களுக்கு நான் வாசித்த வரையில் தவறுகள், எழுத்துப் பிழைகள் இல்லாத ஒரு இணையப் பக்கம் கிடைத்தது.
உங்களோடும் பகிர்ந்துகொள்வதன் மூலம் பாரதியை இன்னும் பலருக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க....

மகாகவி பாரதியார் கவிதைகள்

(வேறு இணையத் தளங்கள் இருந்தாலும் பின்னூட்டங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அறியத் தாருங்கள் நண்பர்களே)

பாரதி என்பவனை பாடல்கள், கவிதைகள் மட்டுமே எழுதிய ஒருவனாக எண்ணுகின்ற எம்மிற் பலர் உள்ளார்கள். அவர்களில் தப்பில்லை....
பாரதியின் கட்டுரைகளை பதிப்பித்தவர்களோ, வாசித்துப் பகிர்ந்தவர்களோ ஒப்பீட்டளவில் குறைவு தானே?
இணையத்தில் பாரதி கட்டுரைகளைத் தேடியவேளையில் கிடைத்த அரிய தளம் ஒன்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் திருப்தி.

பாரதியார் கட்டுரைகள்


தமிழை பண்டிதரிடமிருந்து பாமரருக்குக் கொண்டுசென்று சேர்த்த முதலாமவன் என்ற பெருமையுடன், எமது எதிர்காலத் தலைமுறைக்கும் தமிழைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கவும் பாரதி கவிதைகள் & பாடல்கள் ஒரு மிகச் சிறந்த ஊடகம் என்று மனமார நம்புவதால், பெருமையுடனும் பூரிப்புடனும் பாரதியை மீண்டும் நன்றியுடன் வாழ்த்துகிறேன்.

--------

12-12-12


இப்படியான வித்தியாசமான எண் கோலங்கள் திகதிகளாக வரும்போது அதில் கிளர்வும், அதிசயமும் காணும் பலர் எம்மில் இருக்கிறோம்.

1900களில் இருந்து 2000 என்பதற்குள் பயணித்த வாய்ப்புடையவர்கள் என்பதால் எமக்கு இப்படி பல எண் கோலங்களைப் பார்த்து சுவாரஸ்யப்படும் வாய்ப்புக் கிடைத்தது.

இன்றைய திகதி போல இன்னொரு திகதி இன்னும் நூறு வருடத்துக்கு வராது (12-12-2112) என்று சிலரும், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு தான் வரும் (12-12-3012) என்று சிலரும் வேறு சண்டை.

இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளுமே போனால் வராது.. இதை மட்டும் ஏன்டா கொண்டாடுறீங்க என்று சலித்துக்கொள்ளும் சிலரையும் Facebook மூலைகளில் கண்டேன்...

எவ்வளவோ விஷயங்களை அர்த்தமே இல்லாமல் கொண்டாடும் எமக்கு இது மட்டும் பெரியதொரு விஷயமா? கொண்டாடி குஷிப்படுபவர்கள் கொண்டாடிட்டுப் போகட்டுமே..

ஆனால் பாருங்கள், இந்த முறை மட்டும் இந்த அதிசயமான திகதியில் கொஞ்சம் நடுக்கமும் சிலருக்கு.

மாயன் கலண்டர், உலக அழிவு பற்றிப் பேசி மாய்ந்து கொண்டிருக்கும் உலக மாந்தருக்கு, இந்தத் திகதியும் பயம் தருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லையே...
இன்றைய நாளையே உலகத்தின் இறுதி நாளாகக் கருதும் பலரும் இருக்கிறார்களாம்.


12/12/12 Is it the end?



மாயன் கலண்டரில் உலக அழிவு நாளாக சொல்லப்பட்டிருப்பது 2112-2012.
அதாவது அவர்களது 5125 வருடங்கள் நீண்டு செல்லும் நாட்காட்டி அந்தத் திகதியுடன் முடிகிறது.

(புது வருஷத்துக்கு வாழ்த்து சொல்றதுக்கு தயாராகும் என்னைப் போன்றவர் எல்லாம் என்ன செய்வது? )

இது பற்றி சில வருடங்களாகவே....
உலகம் அழியப் போகிறது.... இதோ வருகிறது உலகத்தின் இறுதிநாள்.
இப்படியான பரப்புரைகள், பதற்றங்கள் ஒரு பக்கம்...
இதன் மூலமான மதம் சார்ந்த பிரசாரங்கள் ஒரு பக்கம்..
உலகம் அழியுமா அழியாதா என்ற வீண் வாதங்கள், விவாதங்கள் இன்னொரு பக்கம்...

என்று ஒரே அலம்பல்களும், அழிச்சாட்டியங்களும்..
அதை விட இப்போது சில நாட்களாக, Twitter, Facebook, பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள், ஏன் தனிப்பட்ட மின்னஞ்சல்கள், sms வழியாகவும் பயமுறுத்தல்களும், கேள்விகளும்...
முடியலடா..

கலண்டர், டைரி விற்பனை கூட இம்முறை மந்தமாம்..
இவங்கல்லாம் 21ம் திகதிக்குப் பிறகும் உலகம் இருந்தால் என்ன செய்யப் போறாங்க?

அண்மையில் இது பற்றித் தேடி வாசித்த சில ஆராய்ச்சி விஷயங்களை - இவை பயமுறுத்தல்கள்- பினாத்தல்களாக இல்லாமல் - பல்வேறு கோணங்களில் தேடி எழுதப்பட்ட விடயங்களாக இருப்பதனால் - உங்களோடும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.



அடுத்து தமிழில் இது பற்றிய முழுமையான ஒரு ஆராய்ச்சியாக ஒரே கட்டுரையை/ தொடர் கட்டுரையை அவதானித்தேன்.
 ராஜ் சிவா உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரையின் தொகுப்பு இது.


2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் 



என்ன ஆச்சரியம் என்றால், முன்பு வானொலியில் வியாழக்கிழமைகளில் நேயர்கள் கேள்விகளைக் கேட்டு என்னிடம் பதிலைத் தேடித் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் வாராந்தம் ஒரு மூன்று பேராவது கேட்கும் ஒரு கேள்வி தான்
"உலகம் இந்த வருடத்துடன் அழியுமா?"

அதற்கு நான் சிரித்துக்கொண்டே சொல்லும் பதிலைப் போன்ற ஒரு பதிலைத் தான் ராஜ் சிவா அவர்களும் கொடுத்துள்ளார்கள்..

"22ம் திகதி ஒரு தேநீர் விருந்தில் சந்திக்கலாமே"

அழிந்தாலும் தனியே நீங்களோ நானோ மட்டுமே போகப் போறதில்லையே? எல்லாரும் எல்லாமும் சேர்ந்து தானே? அதுக்கெல்லாம்  போய் அலட்டிக் கொள்ளலாமா?
வாழும் வரை நல்லபடியா வாழ்ந்திட்டுப் போகலாம்...

நாசாவே சொன்ன பிறகு நான் வேறயா?
அதெல்லாம் ஒன்னும் அழியாது.. போய்ப் பிழைப்புக்களைப் பாருங்கய்யா...



ரஜினி



63 வயது - நடிக்க வந்து 36 வருடங்கள்...
பேரனும் பாடசாலை செல்ல ஆரம்பித்துவிட்டான்.
தலையில் நரையுடன், வழுக்கை..
சுருங்கிப்போன தேகத் தசைகள்.
பெரிதாக அழகென்றும் சொல்ல முடியாது.

ஆனால் இன்றும் பாடசாலை மாணவரும் கூட இவரை ரசிக்கிறார்கள்...
என் வீட்டில் எனது ஐந்து வயது மகனுக்கும் இவரது படங்கள் பிடிக்கிறது.

இவரது அடுத்த படத்தை எதிர்பார்க்கும் கூட்டமும், இந்தக் கால இளைய நடிகர்களுக்கே இல்லாத வசூல் நம்பிக்கையும் இவர் மேலே...
காரணம் - ஏதோ ஒரு ஈர்ப்பு.... அந்த ஸ்டைல் , screen presence அதையெல்லாம் தாண்டிய எளிமை.

நான் ரஜினி ரசிகன் இல்லை.. ஆனாலும் ரஜினியை அவருக்கென்று பொருந்தும் பல ரசனையான இடங்களில் ரசித்திருக்கிறேன். (சில இடங்களில் விமர்சித்திருந்தாலும்)

இன்னொரு பக்கம் ஒரு தனிமனிதனாக  தன்னம்பிக்கையோடு முன்னேறி, ஏறிய  ஒரு வெற்றிகர உழைப்பாளியாகவும் ரஜினியை மிக மதிக்கிறேன்.
சினிமா ஹீரோக்களுக்கான இலக்கணம் என்று சொல்லப்படும் (சொல்லப்பட்ட என்பதே பொருத்தம்) எதுவும் அற்ற சிவாஜிராவ் தன்னை வளர்த்து வளப்படுத்தி இன்று தன்னை ஒரு மைல் கல்லாக இப்போதைய ஹீரோக்களுக்கு உருவாக்கிவைத்திருப்பது வாழ்க்கைக்கான நம்பிக்கை தானே?

ரஜினியின் சில அரிதான படங்களைத் தொகுத்து அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் இடுகைகளாக எனது படங்கள், காணொளிகளை பதிவேற்றும் வலைப்பதிவில் தந்துள்ளேன்.


ரகம் ரகமாக ரஜினி - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் 1




இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார்.


Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*