போடா போடி

ARV Loshan
7

சிம்பு ரசிகரா நீங்கள்? நடனம், குத்து, இடைவிடாமல் காட்சிக்கொரு பாடல், படம் முழுக்கத் தூவி விடப்படும் கவர்ச்சி என்கிற பெயரிலான ஆபாசம், லண்டன் காட்சிகள் இதெல்லாம் பார்க்க விருப்பமா? அப்படியென்றால் 'போடா போடி' உங்களுக்கான படம்...



பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்..
கல்யாணம் பண்ணிய பிறகு இப்படித் தான் நடக்கவேண்டும்...
குழந்தை பெறுவது இதற்காகத் தான்..
லண்டன் / வெளிநாட்டு தமிழர் வாழ்க்கை இப்படித்தான்
இப்படியான சில அபத்தமான விஷயங்களை எழுதப்படாத சட்டம் போல அடிக்கடி வசனங்களால் போட்டு சாகடிக்கிறார் சிம்பு படம் முழுக்க...

இடை நடுவே காதலின் உருக்கம் பேசி 'விண்ணைத் தாண்டி வருவாயா' வை ஞாபகப்படுத்தி ஹிட் அடித்துக்கொள்ளும் முயற்சி வேறு.
ஆனால் படம் முழுக்க சிம்புவே நிறைந்திருக்கிறார்..

தண்ணீர் போல செலவழிக்க ஒரு தயாரிப்பாளரும், தனது சொல்லைக் கேட்க ஒரு புதிய இயக்குனரும், ஹிட்டான பாடல்கள் தர இசையமைப்பாளரும், கவர்ச்சி காட்டித் தன் சொல் கேட்டு ஆட ஒரு கதாநாயகியும் கிடைத்தால் போதுமே, சிம்புவுக்கு.. சொல்லவா வேண்டும்.....

இறுதியாக இப்படி சிலம்பாட்டம் வந்தது ஞாபகம் இருக்குமே...

போடா போடியும் இப்படித் தான்.. இளைஞர்களைக் குறிவைத்து அவர்களுக்கு மட்டுமேயாக..
அவசரக் காதல், அவசரக் கல்யாணம், சந்தேகம் என்று இந்தக் கால இளைஞரின் வாழ்க்கை முறையைக் காட்டி இருப்பதால் அதுவும் இளைஞருக்குப் பிடித்த சகல அம்சங்களுடனும், இளைஞருக்கு இந்த சிம்பு படம் பிடித்ததில் ஆச்சரியம் இல்லை.

எனக்கும் சில படங்கள் வருமே, இது பிடித்த ரகமா, பிடிக்காத ரகமா என்று.. அப்படியொரு இரண்டாம் கெட்டான் வகையறா..
ஒரேயடியாக போர் அடிக்கவுமில்லை; ஆனால் ஆகா ஓகோ என்றும் இல்லை.
முடியும் இடமும் சடார் என்று...

சல்சா நடனமும் லண்டன் பின்னணியும் தான் படத்தின் முக்கிய அம்சங்கள் என்று முடிவான பின்னர், கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமாரை (வரு சரத்குமார் என்று பெயர் போடுகிறார்கள்)தெரிவு செய்தார்களோ?

பிரமாதமாக உடலை வளைக்கிறார்.. தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார்.
ஆடுகிறார் - சுமாராக.. சிம்புக்கு ஈடுகொடுக்கையில் தடுமாறத் தானே வேண்டும்?
ஆனால் ஆண்பிள்ளைத் தனம் ஒன்று அவரிடம் எட்டிப் பார்ப்பதால் ஈர்ப்பு ஒன்றும் வருவதாக இல்லை.
தந்தையின் தோள்களும் கழுத்தும் அப்படியே வருவிடம்..

சிம்பு ஒரு all rounder தான்.. நடனம், பாடல், வசனம் என்று கலக்குகிறார். கலர் கலராக ஆடைகள் மட்டும் இல்லாமல், கட்டுமஸ்தான உடம்பையும் காட்டுகிறார்.
முன்னைய தனது திரைப்பட கெட் அப்புக்களையும் ஞாபகப்படுத்தி ஒரு பாடல்.. முன்னைய தனது ஹிட் திரைப்படப் பாடல்களை மிக்ஸ் செய்து ஒரு பாடல்.

ஒரு காதலராக, கணவனாக, இளம் தந்தையாக கொஞ்சம் உணர்ச்சிகளையும் கொட்டி நடிக்க முனைந்திருக்கிறார். ஆனால் அந்த இடங்களில் இவரது தந்தை TR ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு திறமையுள்ள நடிகன், சகலதுறையாளன் தன்னை தேவையற்ற இப்படியான படங்கள் மூலம் வீணடிப்பது உண்மையில் கவலையே.

தரன்குமார் பாடல்கள் நிறையவற்றை இசையமைத்துத் தந்திருக்கிறார் என்பதற்காக இப்படியொரு Musical Movie யா? இடைவேளைக்கு முதல் ஐந்து பாடல்கள்.. முடியல.

போடா போடி பற்றி விலாவாரியாகப் பேசப் போனால் குழப்பமே எஞ்சும் என்பதால் பிடித்த சில வெகு சில விஷயங்கள்....

அண்டனியின் எடிட்டிங்.. இதுவும் இல்லாவிட்டால் படம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அதுவும் பாடல் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

சிம்புவின் நடனம் - இப்போதுள்ள நடிகர்களில் விஜயைக் கூடப் பின் தள்ளிவிடக் கூடியவர் சிம்பு என்று அடித்து சொல்லலாம்.
சல்சாவிலிருந்து குத்துக்கு நாயகியை சிம்பு மாற்றும் இடமும், சிம்புவின் "இதாம்மா நம்ம டான்ஸ்" என்று சொல்லும் இடங்களுக்கும் திரையரங்கு அதிர்கிறது.
ம்ம்ம் சிம்புவுக்கும் ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது.


ஒளிப்பதிவு செய்திருப்பவர் Duncan Telford. லண்டனையும் Hong Kong Disneyland ஐயும் அழகாக நாங்கள் பார்ப்பது மாதிரியே கண்ணில் கொண்டுவந்திருக்கிறார்.

ஷோபனா - இவரை மீண்டும் தமிழ்ப்படம் ஒன்றில் பார்த்ததே சந்தோசம். அண்மையில் தான் இவரது நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியபோது இவரது திறமை + அடக்கம் பற்றி நான் வியந்துபோயிருந்தேன்.
ஆனால் இவரது பாத்திரம் தான் ஷோபனாவுக்கு ஏன் இந்த தவறான தெரிவு என்று யோசிக்க வைத்தது.

சிம்பு படம் என்பதால் சில சில அபத்தங்களை சகித்துக்கொண்டே கலகல காட்சிகளை ரசிக்கலாம் தான்; ஆனால் சிம்பு சொல்வதைப் போல 'விண்ணைத் தாண்டி வருவாயா' வின் தொடர்ச்சி என்றால் வாயில் வரும் கெட்ட வார்த்தைகளால் திட்டவேண்டி வரும்.

போடா போடி - பொழுதைப் போக்கடிக்க மட்டும் 


Post a Comment

7Comments

Please Select Embedded Mode To show the Comment System.*