உலக T20 கிண்ண வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிடைத்து பற்றி இப்பொழுது சொல்லவந்தால் "அண்ணோய் டீ ஆறிட்டுது" என்று குரல் வரும்....
கொஞ்சம் நேரக் குறைவு, அதைவிட அலுவலகத்தில் பெரிய பெரிய ஆணி புடுங்கல்கள், அலவாங்கு புடுங்கல்கள், சில அதிமுக்கிய முடிவுகளை எடுத்தல்கள் எல்லாம் இருந்ததால், வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை.
இலங்கை அணி தோற்றதால் மனம் உடைஞ்சு போயிட்டீங்களா அண்ணே என்று கேட்டு சந்தோசத்தில் மிதக்கும் அன்பு நண்பர்கள்....
கடமையில் என்றைக்கும் கண்ணாய் இருக்கும் உங்கள் லோஷன் தமிழ் மிரரில் உலக T20 கிண்ணம், உலக T20 கிண்ண இறுதி பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.
மேற்கிந்தியத்தீவுகள்: கொண்டாடப்படவேண்டிய கோலாகலச் சாம்பியன்கள்
இந்த உலகக் கிண்ண இறுதியிலும் இலங்கை அணி தோற்றதன் பின்னர் எழுந்த பரவலான கருத்துப் பகிர்வுகள், தொடர் நக்கல்கள், எதிர்வு கூறல்கள், எதிர்ப்புக்கள், விமர்சனங்கள், விவாதங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வாசித்து, அவதானித்து, பங்குபற்றி வந்தவன் என்ற அடிப்படையில் சில விஷயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் பகிர்ந்துவிட்டு செல்லலாம் என்று நினைக்கின்றேன்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு எனும் தளத்தில் நான் நிற்பதால் சிலருக்கு (வெகு சிலருக்கு) நான் துரோகி, எதிரி & கோமாளி.
அது பற்றி பரவாயில்லை.
அரசியல் ரீதியாக ஒரு அணியை , அதிலும் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது பொருத்தமற்றது என்பதே என் வாதம்.
எங்கள் அடையாளமாக இருக்கப் போகிற இலங்கையன், இலங்கையில் பிறந்தவன் என்பது எப்போதும் இலங்கை கிரிக்கெட் அணிக்கான எனது ஆதரவுக்குக் காரணங்களில் ஒன்று.
சரி, இலங்கை கிரிக்கெட் அணியை விட மற்ற அணிகளைப் பிடித்திருந்தால் அந்த அணிகளுக்கான ஆதரவை வழங்குவதில் தவறேதும் இல்லை; ஆனால் இலங்கை அணி தோற்கவேண்டும்; இலங்கை அணி எந்த கிரிக்கெட் அணியோடு விளையாடினாலும் எதிர்க்கவேண்டும் என்ற எண்ணப் பாங்கில் பலர் இருப்பதை அவதானிக்கிறேன்.
அரசியல் காரணங்கள், இலங்கை அரசாங்கம், இராணுவத்தைப் பலர் இதற்கான காரணங்களாக சுட்டி பலர் வாதிட்டதை அவதானித்தேன்.
இதில் அளவுக்கதிகமாக இறங்கி என்னை 'துரோகி' ஆக்கிக்கொள்ள எனக்கு ஆசையில்லை.
ஆனால் தமிழ்த் தேசியம், தமிழருக்கான விடுதலை ஆகியவற்றுக்காக இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்த்தே ஆகவேண்டும்; இந்த எதிர்ப்பு உலகம் முழுதும் தொனிப்பதால் தமிழருக்கான சர்வதேச ஆதரவும் தமிழர் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.
எங்கள் ஆழமான, உணர்வுபூர்மான போராட்டம், கிரிக்கெட்டை எதிர்த்து இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியைக் கொண்டாடி ஆறுதல் படும் அளவுக்கு மழுங்கிவிட்டதா என்ற கவலை என்னைப் போல் பலருக்கு.
சிம்பாப்வேயின் ஹென்றி ஒலோங்கா, அன்டி பிளவர் போன்றோர் கறுப்புப் பட்டி அணிந்து போராடியதை ஒரு சிலர் உதாரணம் காட்டியிருந்தார்கள்.
அதன் அடிப்படை விடயத்தை மறந்தார்களா தெரியவில்லை...
நான் இதில் இன்னும் விளக்கவோ, விவாதிடவோ தயாராக இல்லை.
என் நிலைப்பாடு மிகத் தெளிவானது...
இலங்கை கிரிக்கெட் அணிக்கான என் ஆதரவானது எந்த விதத்திலும் இலங்கியில் நடந்த இனப்படுகொலையை மறைக்க ஒரு ஆயுதமாக இருக்கப் போவதில்லை.
இலங்கை அணிக்கான ஆதரவு ஜனாதிபதிக்கான ஆதரவும் கிடையாது.
இலங்கை கிரிக்கெட் அணியைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவிடலாம் என்று நினைப்பவர்கள் யாராவது இருந்தால் அதைவிட முப்பது வருடங்களாக வெளியுலகத்தை எட்டிப் பார்க்கவைத்த எக்கச்சக்கமான விடயங்கள் செய்யாததையா இவை செய்துவிடப் போகின்றன?
அடுத்து பேஸ்புக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியைக் 'கொண்டாடி' மகிழ்ந்து இலங்கை அரசின் இனப்படுகொலை, தமிழரை ஒதுக்குவது பற்றிய விடயங்களால் தான் இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்ப்பதாகச் சொன்ன பலரில் சிலரது Facebook Wallஐப் பார்த்தேன்.... பூராக இந்திய அணியின் ஆதரவு நிலைத் தகவல்கள், படங்கள், ஆதரவு கோஷங்கள்..
இனி நான் ஏதாவது சொல்லணுமா?
சிலருக்கு சிலதைப் புரியவைப்பதை விட நாம் முட்டாள்களாக, முரடர்களாக, கெட்டவர்களாக, சுயநலவாதிகளாக, துரோகிகளாக அல்லது கோழைகளாகவே இருந்துவிட்டுப் போகலாம்.-------------------------------
இன்னொரு விடயத்தையும் நான் தெளிவுபடுத்த வேண்டும்...
ஒரு ஊடகவியலாளனாக, ஒலிபரப்பாளனாக நான் எந்த செய்திகளுக்கும் (விளையாட்டு செய்திகளுக்கும் கூட) நான் நடுநிலையாளன் தான்.
ஆனால் இலங்கையில் இருந்து இயங்கும் எமது அடையாளம் இலங்கை. இதனால் இலங்கைக்குத் தான் செய்திகளில், அது விளையாட்டு செய்தியாக இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியது இலங்கைக்குத் தான் என்பதை அனைவரும் மனதில் கொள்க.
விளக்கம் தேவையாயின் ஒலிம்பிக் நேரத்தில் BBC பிரித்தானிய அணிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும், NDTV, Cricinfo, TOI, Star Networks முதலாயன இந்தியாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பாருங்கள்.
அதே போல இந்த வலைத்தளத்தில் நான் என் சொந்த விருப்பு வெறுப்புக்களை மட்டுமே பொதுவாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
----------------------------------
இந்த உலக T20 யின் பின்னர், மஹேலவின் T20 தலைமைப் பதவித் துறப்பு இலங்கை அணிக்கு ஒரு புதிய தலைமைத்துவத்தையும், புதிய வழியில் இலங்கை இனி பயணிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதையும் காட்டி இருக்கிறது.
மஹேல ஜெயவர்தன மீண்டும் தலைமைப் பதவியை ஏற்கும்போதே சொன்னது போல வருகின்ற டிசெம்பர் மாதத்துடன் டெஸ்ட், ஒருநாள் தலைமைப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக உள்ளார்.
மத்தியூசைத் தலைமைப் பதவிக்குத் தள்ளி இனிப் பழக்கத்தான் வேண்டும்.. ஆனால் தடுமாற்றம் கொஞ்சக் காலத்துக்கு இருக்கத் தான் போகிறது.
சாம்பியன்கள் ஆன மேற்கிந்தியத்தீவுகளின் தலைவர் டரன் சமியை இனிக் கொஞ்சக் காலத்துக்காவது யாரும் இவ்வளவு காலமும் கிண்டலடித்துத் தள்ளியது போல Non playing captain என்று சொல்லமுடியாது.
நல்லதொரு ஆளணி முகாமைத்துவம் தெரிந்த ஒருவராக சமி தன்னை ஆரம்பம் முதல் நிரூபித்து வந்திருக்கிறார் என்பதை நான் மீண்டும் நினைவூட்டுகிறேன்.
ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லியும் கடைசியாக அடித்த ஒரு அரைச்சதம் மூலமாகத் தன் இருப்பைக் கேள்வி கேட்டவர்களைக் கொஞ்சமாவது மௌனிக்க வைத்திருக்கிறார் போலும்.
இந்தியாவின் அரையிறுதிக்கு முன்னதான வெளியேற்றத்தை அடுத்து தோனி மீது மீண்டும் விமர்சனங்கள்.. துடுப்பாட்ட வரிசையில் முன்னே ஏன் அவர் வரவில்லை; துடுப்பாட்ட வரிசை அடிக்கடி மாற்றப்படுவது, அணி வரிசை மாற்றப்படுவது என்றெல்லாம் இனிப் புதிது புதிதாய்க் கிளம்பும்..
அதற்கெல்லாம் சேர்த்துத் தான் இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் தான் விளையாடப்போவதில்லை என்று உறுதிபட தோனி அறிவித்துவிட்டார்.
மற்றைய அணித்தலைவர்களுக்கு இத்தொடரின் வெற்றி-தோல்விகள் பெரிதாக தாக்கம் எதையும் கொடுக்கப் போவதில்லை.
--------
நடந்து முடிந்த உலக T20 கிண்ணம் தொடர்பான இன்னும் சுவாரஸ்யங்கள், சாதனைகள், முக்கியமான விடயங்கள் குறித்து தமிழ் மிரரில் இன்னொரு கட்டுரை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.
பருவப்பெயர்ச்சி மழை இந்த உலகக் கிண்ணப் போட்டிகளைப் பதம் பார்க்கப் போகிறது என்று பதறிக்கொண்டிருந்த எமக்கு, அதை விட, இறுதிப் போட்டியில் மழை வந்து விளையாடிவிடப் போகிறது என்று மஹேல ஜெயவர்தன உட்பட நாம் அனைவருமே தேவையற்று டென்ஷன் ஆனாலும் மழை விட்டுக்கொடுத்திருந்தது.
அதற்குப் பிறகு கொட்டிய மழையும், கிழக்கு மாகாணத்தில் தொடர் மழையும் இப்போது எப்பூடி என்று கேட்க வைத்திருக்குமே ,....
அதற்கிடையில் கிரிக்கெட் மழை விடாமல் தொடர்கிறது. தென் ஆபிரிக்காவில் சம்பியன்ஸ் லீக்.
உலக T20 கிண்ணம் போல இதனைத் தீவிரமாகத் தொடராவிட்டாலும் பார்க்கிறேன்..
இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த ஊவா நெக்ஸ்ட் தகுதிகாண் சுற்றோடு வெளியேறியிருக்க, இனி பத்து அணிகள் மோதுகின்றன....
தத்தம் நாடுகளுக்காக உலக T20 யில் ஒன்றாக விளையாடிய சர்வதேச வீரர்கள் நான்கு இந்திய அணிகள், இரு ஆஸ்திரேலிய அணிகள், இரு தென் ஆபிரிக்க அணிகள், நியூ சீலாந்து, இங்கிலாந்திலிருந்து தலா ஒவ்வொரு அணிகளுக்காக எதிரிகளாக விளையாடப் போகிறார்கள்..
ரசிக்கலாம்...