இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
தனக்கான வாய்ப்பை உலகின் தலைசிறந்த Twenty 20 அணிகளில் ஒன்றான பாகிஸ்தானை அதன் வழியிலேயே வீழ்த்தி இலங்கை அணி தன் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
தொடர முதல் அரையிறுதிகள் ஆரம்பிக்க முதல் தமிழ் மிரருக்காக எழுதிய Super 8 சுற்றைப் பற்றிய அலசல் & அரையிறுதிக்கான அறிமுகத்தை வாசித்துவிடுங்கள் (இதுவரை வாசிக்காவிட்டால்)
அரையிறுதிகள் அழைக்கின்றன: ICC உலக Twenty 20
சொந்த மண் ஆடுகளங்கள், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவுப் பலம் இவற்றைத் தாண்டியும் எந்த சூழ்நிலையையும் தன் வசப்படுத்தக் கூடிய பந்துவீச்சாளர்களும் அவர்களை சரியாக வேளை அறிந்து பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த தலைவர் ஆகிய காரணிகளும் இலங்கையின் இந்த இறுதிப் போட்டி நோக்கிய வெற்றிப் பயணத்துக்கான முக்கிய காரணிகளாகும்.
குறிப்பாக நேற்றைய அரையிறுதி.... சிக்கலான, ஓட்டங்கள் குவிப்பதில் சிரமம் தருகின்ற ஒரு ஆடுகளத்தில் சராசரி ஓட்ட எண்ணிக்கை ஒன்றைப் பெற்ற பிறகு அதை ஒரு பயங்கரமான (அதிரடி, நம்ப முடியாத, ஆச்சரியப்படுத்தும் என்று எவ்வகையாகவும் எடுக்கலாம்) துடுப்பாட்ட வரிசைக்கு எதிராகக் காப்பாற்றி அபாரமான வெற்றியீட்டியது உண்மையில் உலகின் மிகச் சிறந்த ஒரு Twenty 20 வெற்றி.
தலைமைத்துவத்தின் பொறுப்பும் அதன் பக்குவமும் மஹேல மூலமாக நேற்றைய தினம் மிகச் சிறந்த முறையில் வெளிப்பட்டதாகக் கருதுகிறேன். பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம் மட்டுமல்லாமல், உரிய களத்தடுப்பு வியூகம், ஒவ்வொரு எதிரணி வீரரையும் தனித்தனியாக மனதில் கொண்டு அமைக்கப்பட்ட தாக்குதல் முறைகள், அதற்கெல்லாம் மேலாக (இங்கிலாந்துடன்)வெற்றிபெற்ற போட்டியில் இருந்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்திய ஒரு பந்துவீச்சாளரை வெளியேற்றி இதுவரை ஐந்தே ஐந்து T20 போட்டிகளை மட்டும் விளையாடிய ஒரு சுழல் பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டுவருவதென்பது எல்லாத் தலைவர்களும் துணிச்சலாக செய்யும் ஒரு விடயமல்ல..
ஆனால் ரங்கன ஹேரத் பாகிஸ்தானின் துடுப்பாட்ட முதுகெலும்பை உடைத்துப்போட்டு தன்னுடைய மிகச் சிறந்த T20 பந்துவீச்சுப் பெறுதியை எடுத்த பின்னர் பெருமையில்லாமல் "நாங்கள்" பாகிஸ்தான் இடது கைப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுவதையும் ஹேரத் பாகிஸ்தானுக்கு எதிராகச் சிறப்பாகப் பெறுபேறுகளைக் காட்டியுள்ளதையும் அவதானித்துள்ளோம்.
இதனால் தான் ஹேரத்தை இறக்கினோம் என்று அமைதியாக சொன்னது எத்தனை பேருக்கு வரக்கூடிய ஒரு விடயம்?
அணிக்கு அதிரடிக்கு என்று இருக்கிற ஒரு துடுப்பாட்ட வீரர் ஓட்டங்களைப் பெறத் தடுமாறித் துழாவும் நேரம் (இந்தியாவுக்கு சேவாக்கும், மேற்கிந்தியத்தீவுகளுக்கு கெய்லும் தடுமாறி இருந்தால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்) மாற்றுத் திட்டம் என்னவென்று மற்ற அணித்தலைவர்கள் மண்டையைப் பிய்த்திருப்பார்கள்..
ஆனால் மஹேல தானே அந்த ஓட்டவேகத்தை அதிகரிக்கும் பொறுப்பை எடுத்து வழமையாக ஒரு நேர்த்தியான டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக அவர் ஆடாத துடுப்பாட்டப் பிரயோகங்களை எல்லாம் விளையாடி (டெல்லி டெயார்டெவில்சுக்கு இனி வரும் சம்பியன்ஸ் லீக்கில் சேவாக்கும் இல்லாத நிலையில் இவை நிறையவே தேவைப்படும்) ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
நேற்றைய அரையிறுதியை இலங்கையின் பக்கம் மாற்றியதில் மஹேலவின் இந்த 42 க்குப் பெரிய பங்கு இருக்கிறது. பாகிஸ்தானின் தலைவர் ஹபீசும் சரியாக இதேயளவு ஓட்டங்களைப் பெற்றதும் சுவாரஸ்யம்.
மஹேல , ரங்கன ஹேரத் ஆகியோரைத் தவிர்த்து இலங்கையின் நேற்றைய மற்றும் இரு கதாநாயகர்கள் அஞ்சேலோ மத்தியூஸ் & திசர பெரேரா.. மத்தியூசின் ஒரே ஓவரில் வீழ்த்தப்பட்ட இரு விக்கெட்டுகளும், திசர இறுதி ஓவரில் குவித்த ஓட்டங்களும் இலங்கைக்கு பெருமளவில் உதவியிருந்தன. மத்தியூசின் இன்னொரு விக்கெட் மாலிங்கவின் பிடி தவறலால் இல்லாமல் போனது.
டில்ஷான் தன் துடுப்பாட்டத்தில் சறுக்கியிருந்தாலும் அபாரமான களத்தடுப்பின் மூலம் குறைந்தபட்சம் பத்து ஓட்டங்களையாவது காப்பாற்றிக் கொடுத்திருந்தார்.
மாலிங்க களத்தடுப்பில் விட்ட சறுக்கல்களைக் கட்டுப்பாடான பந்துவீச்சுமூலம் ஈடுகட்டிக் கொண்டார்.
சங்காவின் விக்கெட் காப்பு, குறிப்பாக ஹபீசை ஸ்டம்ப் செய்து ஆட்டமிழக்கச் செய்தது அபாரம்.
பாகிஸ்தான் தனது பந்துவீச்சாளர்கள் மூலம் உருவாக்கிய வெற்றிக்கான சாதகம் அனைத்தையும் தடுப்பாட்ட வீரர்களின் தடுமாற்றம் மூலமாக இழந்தது.
சொஹய்ல் தன்வீர், ராஸா ஹசன், உமர் குல் ஆகியோர் நேற்றுப் பந்துவீசியபோது இலங்கை வீரர்களுக்கு ஓட்ட வறட்சியும் தடுமாற்றமும் தாராளம்.
ஆனால் வழமையாக இலங்கை தடுமாறும் சயீத் அஜ்மல், ஷஹிட் அப்ரிடி ஆகியோரை இலங்கை ஆரம்பம் முதல் குறிவைத்துத் தாக்கியது முக்கியமான ஒரு வியூகமாகும்.
பாகிஸ்தானிய அணியின் துடுப்பாட்டம் நேற்று இலங்கையின் பந்துவீச்சு மாற்றங்கள், ஆடுகளத்தின் மாறுபட்ட தன்மை ஆகியவற்றை சரியாக உணர்ந்துகொள்ளாமல் சரிந்தபோது, ஹபீஸ்,உமர் அக்மல் ஆகிய இருவரைத் தவிர ஏனைய அனைவருமே அவசரமாக, சிந்திக்காது, அல்லது பந்துவீச்சின் மர்மங்களை அவிழ்க்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டார்கள்.
அதிலும் ஷஹிட் அப்ரிடி , இப்போதெல்லாம் இவர் பூம் பூம் அல்ல.. வெறும் பூச்சாண்டி ஆகிவிட்டார்.
நேற்றைய தினத்தோடு இந்த உலக T20 யில் இரண்டாவது தடவையாக தான் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டமிழந்தார். (Golden Duck)
இது T20 போட்டிகளில் அப்ரிடி பெற்றுள்ள ஆறாவது பூச்சியம். லூக் ரைட் & டுமினி ஆகியோரும் இதேயளவு பூச்சியங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்கள்.
ஆனால் அப்ரிடி பெற்ற ஆறுமே முதல் பந்து பூச்சியங்கள். Golden ducks.
டெஸ்ட், ஒருநாள், T20 இம்மூன்று வகைப் போட்டிகளிலும் சேர்த்து அப்ரிடி பெற்ற 40வது பூச்சியம் இது.
முழுமையான பூச்சிய விபரங்கள் இந்த சுட்டியில்..
http://stats.espncricinfo.com/ci/content/records/284057.html
பாகிஸ்தானிய அணி தோற்று நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கடுமையான விமர்சனங்கள் அணியின் சிரேஷ்ட வீரர் தொடர்பிலும், குறிப்பாக அப்ரிடி தொடர்பிலும் எழுப்பப்பட்ட நிலையில் ஹபீஸ் கோபப்படாமல் பதில் அளித்ததும், எந்தக் குறைகளும் சொல்லாமல் தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதும் அவர் மீது மதிப்பை உயர்த்தி இருக்கின்றன.
தோனி தோற்கும்போதெல்லாம் காரணங்கள் சொல்லிச் சொல்லி , இப்போது இந்திய ரசிகர்களும் அவ்வாறே மாறிவிட்டார்கள் என்பது கடுப்பாக்குகிறது.
இந்திய அணி, ரசிகர்கள் இதர விஷயங்கள் பற்றி பிறிதொரு நாள் ஆராயலாம்..
மஹேல பற்றிப் பேசும்போது இன்னொரு முக்கிய விடயம் எங்களுக்கு அண்மைக்காலத்தில் ஞாபகம் வரும்.. பந்துவீச அதிக பேரம் எடுத்துக்கொண்டதும், தடைப் பயம் காரணமாக தலைமைப் பதவியை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மாற்றியதும். நேற்றும் இவ்வாறு நடக்கலாம் என்று சங்கா மீண்டும் தலைவராக இறங்கலாம் என்று ஊர்ஜிதமாகாத ஆனால் எதிர்பார்க்கப்பட்ட செய்திகள் உலவின.
ஆனால் மஹேல தான் தலைவராகக் களம் இறங்கினார்.
நாணய சுழற்சிக்காகவேனும் மீண்டும் சந்காவை இறக்கியிருக்கும் வாய்ப்பு இருந்தாலும்.
இலங்கை தலைவரை மாற்றிய விதம் விதிமுறைகளை மீறாத செயலாக இருந்தாலும் 'சூழ்ச்சி' , Spirit of cricket என்னாவது போன்ற கேள்விகளும் விமர்சனங்களும் மஹேலவை சங்கடப்படுத்தி இருக்கக் கூடும்.
நேற்று தான் ஒரு முக்கிய போட்டியில் தன் அணிக்குத் தலைமை தாங்கவேண்டும் என்றே துணிச்சலாக இறங்கியதாகப் பின்னர் மஹேல தெரிவித்தார்.
இலங்கை தலைவரைக் காப்பாற்ற சங்காவை பிரதி(ஈட்டுத்) தலைவராகப் பயன்படுத்தியது சரியா தவறா என விவாதிப்பவர்கள் தம்பி கன்கோனின் கீழே உள்ள ஆங்கில இடுகையையும் வாசிப்பது நல்லது.
How Mahela and Co. caught ICC off-guard!
இலங்கை அணி அண்மைக்காலமாகத் தொடர்ந்து பெற்று வரும் T20 வெற்றிகளும் தென் ஆபிரிக்காவின் மூன்று தொடர்ச்சியான தோல்விகளும் இலங்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் T20 தரப்படுத்தலில் முதலாம் இடத்துக்கு இட்டுச் சென்றுள்ளன.
நேற்றைய அரையிறுதிக்குப் பிறகு அணிகளின் நிலைகள்...
http://www.espncricinfo.com/rankings/content/current/page/211271.html
நேற்றைய போட்டியில் இலங்கை அணி வென்று அரையிறுதி நுழைந்திருப்பதானது இலங்கையின் இருவருக்கு தந்திருக்கும் இழப்பு பெரியது.
ஒருவர் ரஞ்சன் மடுகல்ல, அடுத்தவர் குமார் தர்மசேன.
இருவரும் முறையே போட்டித் தீர்ப்பாளராகவும் நடுவராகவும் இறுதிப் போட்டியில் கடமையாற்ற இருந்தார்கள்.
ஆனால் இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடுவதால் அந்த வாய்ப்பு போச்சு..
அதே போல இன்று இடம் பெறும் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றால், நேற்றைய போட்டியே சைமன் டௌபிளின் இறுதிப் போட்டியாகும். அவர் இத்தொடரின் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தது எல்லோரும் அறிந்ததே.
நேற்றைய வெற்றியானது இலங்கை பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற இரண்டாவது உலக T20 வெற்றியாகும்.
அத்துடன் இலங்கையின் இரண்டாவது உலக T20 கிண்ண இறுதிப் போட்டி வாய்ப்புக் கிட்டியுள்ளது. 2009 இல் இங்கிலாந்தில், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடமே இலங்கை தோற்றிருந்தது.
இனி எந்த அணி இலங்கையை சந்தித்தாலும் இம்முறை கிண்ணம் வெல்லப் போவது இதுவரை உலக T20 கிண்ணத்தை வெல்லாத அணி என்பது மட்டும் உறுதி.
ஆனால் மகளிர் உலகக் கிண்ணமானது ஏற்கெனவே வென்றுள்ள அணிகளும் மகளிர் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணிகளுமான ஆஸ்திரேலிய(நடப்பு சாம்பியன்கள்), இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலே தான் தீர்மானிக்கப்பட இருக்கிறது.
இன்று விளையாடப்பட இருக்கும் இரண்டாவது அரையிறுதியில் மோதவுள்ள இரு அணிகளும் இதுவரை சந்தித்துள்ள எட்டு T20 போட்டிகளில் ஐந்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
உலக T20 போட்டிகளில் இரண்டில் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகளும் வென்றுள்ளன.
இன்றைய போட்டி கெயில், வொட்சனுக்கிடையிலான போட்டியா, சாமுவேல்ஸ், ஹஸிக்கு இடையிலான போட்டியா அல்லது சுனில் நரேன் - சேவியர் டோஹெர்ட்டிக்கு இடையிலான போட்டியா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இவ்வளவு நாளும் பதுக்கி வைத்திருந்த டேவிட் ஹசியையும் ஆஸ்திரேலியா களம் இறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
முடிக்க முதல், தோற்றால் தோல்வியை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் பண்பு எல்லோருக்கும் இருப்பதில்லை..
சப்பைக்கட்டும், சவடாலும் இருக்கும் மதிப்பையும் குறைத்துவிடும்..
இந்திய அணியின் வெளியேற்றத்தில் எத்தனை ரசிகருக்கு மனவுடைவோ அதே போல அதேயளவு ரசிகர்கள் கொண்டாடியும் மகிழ்ந்தனர்.
இதற்கான காரணங்களில் ஒன்று இது...
இப்படியான கோமாளித் தனங்களால் இன்னும் இன்னும் இந்திய ரசிகர்களை சீண்டுவது தொடரப் போகிறது.
ஒரு அணிக்கு ரசிகராக இருப்பது தவறு அல்ல. ஆனால் அந்த அணியை மட்டுமே கொண்டாடி மகிழும் மனப்பாங்கும், விமர்சனங்களையும் தோல்விகளையும், உண்மையான தரவுகள் & கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளாத மனப்பாங்கே தவறானது.
சிறந்த, வெற்றி பெற்ற அணிகளை வாழ்த்துவதும் கூட உண்மையான ரசிகர்களின் பக்குவம் தான்.