27 போட்டிகள் கொண்ட உலக T20 கிண்ணத்தின் பன்னிரண்டு போட்டிகள் நிறைவடைந்து இன்று பிற்பகல் முதல் Super 8 சுற்று ஆரம்பிக்கிறது.
இதிலும் பன்னிரண்டு போட்டிகள்.
ஆனால் இரு பிரிவுகள்...
இந்தப் போட்டிகள் பற்றியும், நடந்து முடிந்த முதல் சுற்றுப் போட்டிகள் பற்றியும் முடிந்தளவு முழுமையாக தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.
'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை
அதில் எழுதாத மேலும் சில விடயங்கள்.....
காலியில் நேற்று முதல் ஆரம்பித்துள்ள மகளிர் உலக T20 யின் முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு இலவசம். இதன் மூலமாவது பெண்கள் கிரிக்கெட்டைப் பிரபல்யப்படுத்த முயல்கிறது ICC.
முதல் தடவையாக மகளிருக்கான தரப்படுத்தல்களும் இம்முறையே வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இம்முறையும் கிண்ணம் வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகள் என்று தெரிந்தாலும், வேகமாக வளர்ந்து வரும் இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடம் இருந்து போட்டியை எதிர்பார்க்கிறேன்.
இலங்கை மகளிர் அணி முதல் சுற்றில் ஒரு போட்டியை வென்றாலே பெரிது.
ஆனால் உலகமே இம்முறை அதிகமாகப் பார்க்கப் போகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த உலக T20 கிண்ணத்தொடர் மழையினால் விழுங்கப்படும் அபாயம் இருக்கிறது.
பள்ளேக்கலை போட்டிகள் மழையினால் பெரிதாகப் பாதிக்கப்படாது எனினும் கொழும்புப் போட்டிகளை மழை கழுவி முடிக்கும் அபாயம் உள்ளது.
முதல் சுற்றில் ஒரேயொரு போட்டி மழையினால் சமநிலையில் முடிந்தது.
இரு போட்டிகளில் டக்வேர்த்-லூயிஸ் (Duckworth - Lewis) விதி பயன்படுத்தப்பட்டது.
எனினும் இந்த முக்கியமான இரண்டாம் சுற்றில் எத்தனை போட்டிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருமோ என்ற கேள்வி எழுகிறது.
மழைத் தொந்தரவு இல்லாமல் போட்டிகள் நடந்தால் எல்லாப் போட்டிகளுமே மிக விறுவிறுப்பாக அமையும் என்பது எல்லோரதும் எதிர்பார்ப்பு.
இலங்கை அணி விளையாடுகின்ற மூன்று போட்டிகளுக்குமே டிக்கெட்டுகள் விற்று முடிந்துள்ளன.
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்திய - பாகிஸ்தான் போட்டியினது டிக்கெட்டுக்களும் முடிந்துள்ளன.
ஒரே நாளில், ஒரே மைதானத்தில் இரு போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்களுக்கு ஒரே டிக்கெட்டில் இரண்டு விறுவிறு போட்டிகள் என்னும் மகிழ்ச்சி.
மேற்கிந்தியத் தீவுகளை Favorites என்று கொண்டாடிக் கொண்டிருந்த பந்தயக்கரர்கள் எல்லாரும் இப்போது தென் ஆபிரிக்காவை முதலாவது தெரிவாக்கி விட்டார்கள்.
இலங்கை இரண்டாவது, இந்தியா மூன்றாவது & பாகிஸ்தான் நான்காவது.
சங்கக்கார வேறு இப்போதைய இலங்கை ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் சாதகத் தன்மை வழங்குவதில்லை; ஆடுகளங்கள் மாறியுள்ளன. வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு சாதகத் தன்மையை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியுள்ளதைப் பார்க்கையிலும், முதல் சுற்றின் சில பெறுபேறுகளைப் பார்க்கையிலும் யார் வேண்டுமானாலும் சிறப்பாக ஆடினால் ஆதிக்கம் செலுத்தலாம் என்பது உறுதியாகிறது.
இதுவரை புதிய வீரர்கள் எவரும் தம்மை இந்தத் தொடர் மூலமாக அடையாள படுத்தாவிட்டாலும்,
ஹர்பஜன் சிங், அஜந்த மென்டிஸ், இம்ரான் நசீர், பிரெண்டன் மக்கலம், ரோஹித் ஷர்மா, நசீர் ஜம்ஷெட், லக்ஷ்மிபதி பாலாஜி, யசீர் அரபாத் ஆகிய 'பழைய' மறந்து போனவர்கள் தம்மை நிரூபித்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.
நான் எதிர்பார்த்த எந்தவொரு அதிர்ச்சி (upset) முடிவும் இம்முதற் சுற்றில் இடம் பெறவில்லை எனினும் , தென் ஆபிரிக்கா இலங்கையை வென்றதும், ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதும், நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து இந்தியாவிடம் தோற்றதையும் இந்த வகைக்குள் சேர்க்கலாம்.
தொடர் ஆரம்பிக்க முதலே எதிர்பார்த்தது போல சாதனைகள் சில உடைக்கப்பட்டுள்ளன. இனியும் சில உடையலாம்.
மக்கலம் அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுள்ளார்.
அஜந்த மென்டிஸ் மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றுள்ளார்.
இனி உடையப் போகின்றவை என்னென்ன?
ஏற்கெனவே நேற்று எதிர்வுகூறியது போல அகில தனஞ்செய விளையாடுகிறார். ஆனால் காயத்திலிருந்து குணம் அடைந்துவிட்டாரா என்று சந்த்கத்தில் இருந்து அஜந்தா மென்டிசும் இன்று விளையாடுகிறார் என்பது இலங்கை ரசிகர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய செய்தி இது.
டில்ஷான் முனவீர தனக்கான வாய்ப்புக்கள் இரண்டைப் பயன்படுத்துவதால் மஹேல மீண்டும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆகிறார்.
பிறந்தநாளை இன்று கொண்டாடும் பிரெண்டன் மக்கலமும் அவரது அணியும் இன்று ஒன்றுக்கு இரண்டு மந்திரவாதிகளை எப்படி சமாளிப்பார்கள் என்று பார்க்க ஆவலாகவுள்ளது.
அத்துடன் அறிமுகமாகவுள்ள 18 வயதான தனஞ்செயவின் நான்கு ஓவர்களையும் தவறவிடப் போவதில்லை.
தம்பி என்ன செய்வார் என்று பார்ப்போம்.
இலங்கைக்காக T20 சர்வதேசப் போட்டியில் விளையாடும் மிக இள வயதானவர் இவர் தான்.
காத்திருந்து ரசிக்கலாம்..
போட்டி நடைபெறும் நாட்களில் இன்னும் சுவாரஸ்ய, பின்னணிக் கதைகளையும், பரபர விஷயங்களையும் கூடப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஷஹிட் அப்ரிடி எமக்கு சொன்ன கதையும், நான் அவருடன் சீண்டிக்கொண்ட ஒரு விடயமும் கூட வரும்..