வாயை மூடி சும்மா இருடா - கோளிக்கு ஒரு பாட்டு - #ICCWT20

ARV Loshan
12

இந்தியாவின் அண்மைக்கால நம்பிக்கை விராட் கோளி...
இவர் அடித்தால் தான் இந்தியா ஜெயிக்கும் என்ற நிலை.
தனது சிறப்பான, தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகள், அணிக்கான அர்ப்பணிப்பு என்பவற்றால் நிரந்தர இடத்தை மூன்று வகை கிரிக்கெட் அணிகளிலும் (டெஸ்ட், ODI, T20) பெற்றுக் கொண்டதோடு அணியின் உப தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.

 அண்மையில் ICC விருதுகளில் கடந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதையும் வென்ற திறமையாளர்.

எல்லா நாடுகளிலும் இவருக்கென்று ரசிகர் பட்டாளம்..  அதைவிட ரசிகையர் எண்ணிக்கை அதிகம்.

ஆனால் இந்தச் சின்னத் தம்பி எவ்வளவுக்கெவ்வளவு நல்லா மைதானத்தில் விளையாடுகிறாரோ, எவ்வளவுக்கெவ்வளவு உயிரைக் கொடுத்து இந்திய அணியைப் பல தடவை காப்பாற்றுகிறாரோ, அதேயளவுக்கு எதிரணி வீரர்கள், ரசிகர்களின் கடுப்புக்கும் ஆளானவர்.

காரணம் வாய் நிறைய இவர் வைத்துள்ள வசை வார்த்தைகள்.. ஹிந்தி தெரியாதவர்களும் கூட அகராதி தேடி அர்த்தம் தெரிந்து புல்லரித்துப் போயுள்ளார்கள்.

பொதுவாக விளையாடிக்கொண்டிருக்கும்போது விரக்தியான, கோபமான நேரங்களில் எதிரணியை வசை பாட, தன்னைத் தானே நொந்துகொள்ளவே இவ்வாறான தகாத வார்த்தைகள்/தூசணங்களை - காது கொடுத்துக் கேட்கவே முடியாத வார்த்தைகளை வெளிவிடுவதுண்டு.
(sledging and swearing)

ஆனால் இந்த இளம் வீரர், இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் தலைவர், எதிர்கால இந்திய அணியின் தலைவர், தன் சந்தோஷங்களைக் கொண்டாடவும், சதங்களை அடையும்போதும், அரைச் சதங்களைப் பெறும்போதும் ஏன் பிடிகளை எடுக்கும்போது கூட வாயிலிருந்து துப்புகின்ற வார்த்தைகள்?

இப்படி சாதனைகளைக் கொண்டாடும் போதும் தகாத வார்த்தைகளை உதிர்ப்பது அதை வாழ்த்துகின்ற ரசிகர்களையும் கேவலப்படுத்தும்  என்று தம்பிக்கு அனுபவமுள்ள இந்திய வீரர்கள் யாராவது சொல்ல மாட்டார்களா ?

அப்பப்பா.... கடும் கோபம் வருகையில் கூட நாகரிகமான நாம் அவ்வாறு பேச மாட்டோம்..

நேற்றும் கூட அப்பாவி ஆப்கானிஸ்தானிய அணிக்கெதிராக அரைச் சதம் பெற்ற பிறகு அந்த வீரர்களின் அம்மாக்களை இழிவுபடுத்தியிருந்தார்.
இன்னும் கொஞ்சமென்றால் அந்த அப்பாவி அணி இந்தியாவுக்கு ஆப்பு அடித்த அணியாக மாறியிருக்கும்.

ஹ்ம்ம் இவரெல்லாம் இந்திய அணியின் தலைவராக வந்து.....


சர்வதேசக் கிரிக்கெட்டில் இப்போதிருக்கும் மிகச் சிறந்த இளம் வீரர் என்றும் எதிர்காலத்துக்கான மிகச் சிறந்த நம்பிக்கையான வீரர்களில் ஒருவர் என்றும் சொல்லக் கூடிய ஒருவர் தூஷண வார்த்தைகளால் தான் ஞாபகிக்கப் படுகிறார் என்பது அவருக்கே அசிங்கம் தானே?

ஆஸ்திரேலியாவில் நடுவிரல் காட்டிப் பரபரப்பானவர் என்பதும் கோளி தனது குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில் பதித்துள்ள மற்றொரு சாதனை.


நேற்றைய போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்ட கோளி ஊடகவியலாளர் சந்திப்புக்கு வந்திருந்தார்.

கொஞ்சம் இறுக்கமாகவே காணப்பட்ட அவரிடம் சில சீண்டல் கேள்விகளும் தொடுக்கப்பட்டன.

குறிப்பாக இந்திய ஊடகவியலாளர்களே இவரை சீண்டப் பார்த்தார்கள்.
நானும் பார்த்தேன் விராட் கோளி அந்த ஊடகவியலாளர்களின் அம்மாக்கள், சகோதரிகளையும் அர்ச்சிக்கப் போகிறார் என்று.
ஆனால் கோபத்தை முகத்தில் காட்டினாலும் வார்த்தைகளைப் பார்த்துப் பக்குவமாகக் கையாண்டார்.

அந்தக் கேள்விகளும் கோளியின் பதில்களும்...

தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்துவருகிறீர்களே.. உங்களில் தான் இந்திய அணி அதிகமாகத் தங்கி இருக்கிறதா?

இல்லையே.. இந்திய அணியின் துடுப்பாட்ட வலிமை உலகம் அறிந்தது. இப்போது நான் சிறப்பான formஇல் இருப்பதாக உணர்கிறேன். (Presently i'm going through a purple patch, i think) அது அணிக்கும் பயன்பெறுவதில் மகிழ்ச்சி.

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் அண்மைக்கால மோசமான பெறுபேறுகள் பற்றி?
(முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டே) இதே ஆரம்ப வீரர்களில் ஒருவர் தான் ஒரு நாள் போட்டியொன்றில் இரட்டை சதம் அடித்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். கிரிக்கெட் என்றால் அப்படித்தான். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது.
உங்களுக்கு எல்லாம் இன்று நாங்கள் பெற்ற ஓட்டங்கள் 159 என்பது மட்டும் தான தெரிகிறது.
ஆனால் அதன் முக்கியத்துவம், அதைப் பெற நாம் எடுத்த முயற்சி எல்லாம் பெரியவை.


இதற்கு முந்தைய போட்டிகளிலும் நீங்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியும் உங்கள் மோசமான பந்துவீச்சால் இந்தியா தோற்றிருக்கிறதே...

எங்கள் பந்துவீச்சு ஆரம்பத்தில் இன்றும் சிறப்பாகத் தான் இருந்தது. ஆனால் கடைசி ஓவர்கள் சில நேரங்களில் தடுமாறிவிடுகிறோம். இனி அதை சரி செய்வோம்.
எங்கள் பந்துவீச்சாளர்களில் முழுமையான நம்பிக்கை இருக்கிறது.


அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறீர்களே.. இது உங்கள் பெறுபேறுகளைப் பாதிக்கும் என்று உணரவில்லையா?

அந்த உணர்ச்சி தான் என்னை ஊக்குவிக்கிறது. அது எனக்குத் தேவை. ஆனால் முன்பு போல இல்லாமல் இப்போது கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.



இந்த ஊடகவியலாளர் சந்திப்பு முடிந்து வெளியே போன கோளியைக் கேள்வி கேட்ட இந்திய நிருபர்களில் ஒருவர் அணுகி ஹிந்தியில் எதோ கேட்டார் ..
அதற்கு கோளி ஆங்கிலத்தில் கொஞ்சம் சூடாகவே சொன்ன பதில் "Call and ask our selectors"
அந்த ஹிந்தி நண்பரிடம் என்ன கேட்டீர்கள் என்று ஆர்வமாகக் கேட்டேன்.
ரோஹித் ஷர்மா பற்றிக் கேட்டாராம்.

கோளி இலங்கையில் சில ரசிகர்களோடு காட்டிய பந்தா பற்றியும் பலர் என்னிடம் புலம்பியதையும், அவரிடமே நேரடியாக ட்விட்டரில் கண்டித்ததையும் உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள்.

தம்பி நல்லா விளையாடுகிறீர்கள்.. ஆனால் உங்கள் துடுக்கான வாயை விட துடுப்பை அதிகமாகப் பேசவிடுங்கள்.
இன்னும் நல்லா வருவீர்கள்.


-----------------------

10 விக்கெட்டுக்களால் இன்று தென் ஆபிரிக்காவிடம் சரணடைந்து இம்முறை   ICC WORLD TWENTY20இலிருந்து வெளியேறும் முதல் அணியாக மாறியுள்ளது சிம்பாப்வே.
திறமையான வீரர்கள் பலர் இருந்தும் அடுத்தடுத்த போட்டிகளில் இலங்கையிடமும் தென் ஆபிரிக்காவிடமும் இப்படி சிம்பாப்வே சுருளும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் அணிஇடம் இருந்து பிரெண்டன் டெய்லரின் அணி நிறையக் கற்க வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் சிம்பாப்வே பற்றிப் பரிதாபமும் கொள்ளவேண்டியுள்ளது.. பின்னே இலங்கை, தென் ஆபிரிக்க அணிகளோடு ஒரே பிரிவில் அகப்பட்டுக் கொண்டால்?

ஆனால் நாளை இரவு ஆப்கானிஸ்தானும் கூட மூட்டை கட்டலாம்.
இந்திய அணியோடு சவால் விட்டு விளையாடி இருந்தாலும், இங்கிலாந்தின் இரு பயிற்சிப் போட்டி வெற்றிகளும் அவர்களைப் பலமான அணியாகக் காட்டுகிறது.


இத்தொடரின் முதலாவது அதிர்ச்சியை நாளை காபூல் மைந்தர்கள் தரட்டும் என வாழ்த்துகிறேன்....


Post a Comment

12Comments

Please Select Embedded Mode To show the Comment System.*