அண்மையில் நாம் வாழும் சமூகம் எத்தகையது என்று அருவருப்பும், வெறுப்பும், கொஞ்சம் அச்சமும் கொள்ள வைத்த ஒரு நிகழ்வு கிருலப்பனையில் இடம்பெற்ற சிறுமியின் மீதான பாலியல் வல்லுறவும் கொலையும்.
எதுவும் அறியாத ஏழு வயது சிறுமி.. அதுவும் உறவுக்கார இளைஞர்களால்.
எப்படிப்பட்ட ஒரு இழிவான, வக்கிரமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?
அதைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
ஒரு பிரதேச சபைத் தலைவர் ஐந்து வயது சிறுமி ஒருத்தியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை அடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளதாக.
கடந்த வாரம், அரசாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவலில், கடந்த வருடத்தில் மாத்திரம் 1000க்கு மேற்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றுள் கிட்டத்தட்ட பாதியளவானவை சிறுவர், சிறுமியர் மீதானவையாம்.
அதிலும் அண்மைய இரு வருடங்களில் இப்படியான வக்கிரங்கள் ஐந்து வீதத்தால் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி வேறு.
எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?
இந்த செய்திகளை பார்த்தபோது மனதில் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன..
இப்படியான வக்கிரபுத்தியுள்ளவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை..
மரண தண்டனை வழங்குவது இனி யாராவது இதே தவறை செய்ய எண்ணினால் அச்சுறுத்தும் என்பது சரி தான்.. ஆனால் தவறு செய்தவனுக்கு அது கொடுக்கப் போவது வெறும் சில நிமிடத் துயரத்தை மட்டுமே.
ஆனால் அவனால் சீரழிக்கப்பட்ட அந்த சிறு மொட்டுக்கள்? பாதிக்கப்பட்ட , பலியாக்கப்பட்ட அப்பாவிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் என்ன பதில்? என்ன பரிகாரம்?
இனி எவரும் இந்தக் குற்றங்களை இழைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் இப்படியான குற்றங்களுக்கான தண்டனைகள் வீரியம் குறைந்தனவாகவே இருக்கின்றன என்றொரு கருத்து இருக்கிறது.
நேற்று காலை விடியலிலும் நேயர்களிடம் இது பற்றிய கருத்துப் பகிர்வொன்றை நடத்தியிருந்தேன்.
ஒவ்வொருவரும் கொதித்துப் போய்த் தங்கள் கருத்துக்களைக் கொட்டியிருந்தார்கள்.
மரண தண்டனை முதல் பகிரங்க மரண தண்டனை, அவயங்களைத் துண்டித்தல், கல்லெறிந்து கொல்லல் ... மத்திய கிழக்கில் வழங்கப்படும் தண்டனைகள், மாறா வடுக்களை ஏற்படுத்தல், பாலியல் குற்றவாளி என்பதை உடலில் தெரியக் கூடிய இடத்தில் பொறித்தல்...
இன்னும் சிட்டிசன் படப் பாணியில் குடியுரிமை பறித்தல் இப்படி பல தண்டனைகள் சொல்லப்பட்டன.
அதில் ஒருவர் நான் மனதில் நினைத்த ஒரு விடயத்தைத் தெளிவாக சொல்லியிருந்தார்.
வழங்கப்படும் தண்டனையானது குற்றம் செய்தவருக்கு படிப்பினையாகவும், இனி இப்படியான செயல்களைச் செய்ய எண்ணுவோருக்கு பயம் தருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு கொஞ்சமாவது ஆறுதல் தருவதாகவும் அமையவேண்டும்.
உண்மை தான்....
குழந்தைகளை வீட்டிலோ, பாடசாலைகளிலோ அடித்துத் தண்டனை கொடுப்பதே தவறு எனக் கூறும் ஒரு பக்குவப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டே இப்படிப் படுபாதக செயல்களில் ஈடுபடுவர்களைக் கொலை செய்யும் அளவுக்குக் கோபம் வருவதில் தவறு இல்லையே
தண்டனைகள் அச்சப்படுத்தும்.. திருத்தத் தான் தண்டனைகள் என்பது இந்தக் குற்றங்களைப் பொறுத்தவரை பொருந்தாது.
இந்த மிருகங்கள் எப்படியும் இனித் திருந்தாது. எதிர்காலத்துக்கான இளசுகளை சிதைத்தவர்கள் இனியும் வாழக் கூடாது.
இப்பொழுது கொலையுண்டதால் தான் அந்தக் குறித்த சிறுமியின் விடயம் வெளியே வந்தது.. அதற்கு முதலே ஒரு மாத காலம் இந்தக் கொடூரம் அந்தக் காமுகர்களால் நிகழ்ந்துள்ளது.
இப்படி இன்னும் வெளிவராத கொடூரங்கள் இலங்கையின் எந்தெந்த மூலைகளில் நடந்துகொண்டிருக்கின்றனவோ?
இலங்கையில் மட்டுமல்ல.. இன்னும் பல்வேறு இடங்களிலும் கூட..
பாலியல் கல்வி பாடசாலைகளில் கற்பிக்கப்படவேண்டியதன் அவசியம் இப்போது முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகமாகப் பேசப்படுகிறது.
ஆனால் அதைவிட குடும்ப சூழல் ஆரோக்கியமானதாகவும், நட்புறவு, சகஜபூர்வமாகவும் இருக்கவேண்டியுள்ளது.
குழந்தைகள் தயக்கம், பயம் இன்றி பெற்றோருடன் தங்கள் பிரச்சினைகள், சந்தேகங்கள், பயன்களைக் கலந்துபேசக் கூடிய சூழல் வரவேண்டும்.
அதற்கு பெற்றோரும் தக்கவர்களாக, தவறுகள் இல்லாதோராக, உதாரணமாகக் கொள்ளக் கூடியோராக நடந்துகொள்ளல் அவசியம்.
எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் தங்கள் குழந்தைகள் மீது யாராவது ஒரு பெற்றோராவது தங்கள் குழந்தையை அக்கறையாக, கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்துக் கவனிக்கவேண்டும்.
காரணம் பெற்றோரின் கவனிப்பு இல்லாத குழந்தைகள் இலகுவாகக் காமுகரிடம் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு அடிப்படையான விஷயம் ஒன்றை சொல்லிக் கொடுங்கள்.
Good touch & Bad touch என்பவை என்னென்ன என்று ஆறுதலாக சொல்லிக் கொடுங்கள்.
பிறரின் தப்பான தொடுகைகளைத் தவிர்க்கச் சொல்லுங்கள். கை கொடுத்தல், தலையைத் தடவுதல்/ தொடுதல் தவிர வேறு உடம்பின் பகுதிகளில் பிறர் அனாவசியமாக தொட்டால் உங்களுக்கு உடனே சொல்லச் சொல்லுங்கள்.
அன்னியர் யாராவது தனி இடங்களுக்கு அழைத்தல், தவறாகப் பேசுதல், சந்தேகமான நடத்தையுடன் அணுகுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் உடனே உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.
இதெல்லாவற்றையும் விட அன்றாடம் அவர்கள் சந்திக்கின்ற அசாதாரணமான நிகழ்வுகளை மறக்காமல் உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
இளம் பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான சேஷ்டைகள், வன்முறைகளைக் கூட அவர்களால் எதிர்க்கவோ, தடுக்கவோ முடியும்..
ஆனால் இந்தப் பிஞ்சுகள், பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் குழந்தைகளால் என்ன செய்ய முடியும்?
பெரியவர்களிடம் முறையிடுவதைத் தவிர...
தண்டிப்பதை விட தடுப்பது முக்கியம் என்று கருதும் எம்மவருக்கு அவசியமான முற்காப்பு நடவடிக்கைகள் இவை.
ஆனால் கேவலமான விஷயம் என்னவென்றால் சில இடங்களில் மகள்மாரையே சிதைத்த தந்தை மார், சிற்றப்பான்மார், மாமன்மார் ஏன் தாத்தாமாரும் இருப்பது தான்..
என்ன கீழ்த்தரமான பிறவிகள்..
எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் யாருக்கும் தெரியாமல் இப்படி பாழாகப் போனது என்று கணக்கெடுப்பு இல்லை.. அவர்களின் மனநிலையும் சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்கால சுமுகவாழ்வு இல்லாமல் போய் ஒரு எதிர்கால சந்ததியே கருக்கப்படும் இந்தப் பாதகத்துக்குக் காரணமானவர்கள் வெளிச்சத்துக்கு வருவது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர் கையிலுமே தங்கியுள்ளது.
யுத்தகாலத்திலே நடந்த ஆக்கிரமிப்பு அட்டூழியங்களால் எத்தனை பெண்களின் உள்ளமும் உடலும் சிதைக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வராமலே போனது போல, குழந்தைகள் மீதான வன்முறைகளும் வெளியுலகுக்குத் தெரியாமலே வந்திருக்கும்.
ஆயுதங்கள் காட்டிய துஷ்பிரயோகம் முடிந்து இப்போது மனதுக்குள் அடங்கியிருக்கும் வக்கிரங்கள் இந்தப் பிஞ்சு நெஞ்சங்கள் மீது குடும்ப சூழலுக்குள்ளிருந்தே பாய்வதா?
பாவம் அந்தப் பிஞ்சுகள் விட்டுவிடுங்கள்..
இனி வீதியிலோ, வெளியிலோ, சொந்தக்காரர் அல்லது விருந்தினர் வீடுகளிலோ அழகான, செல்லமான சுட்டிக் குழந்தைகளை நாம் செல்லமாகக் கொஞ்சுவதோ, தட்டிக் கொடுப்பதோ, ஏன் பேசுவதோ கூட தப்பான அர்த்தத்திலும், சந்தேகமான பார்வையோடும் நோக்கப்படலாம்.
எங்கள் குழந்தைகளோடும் இனித் தெரிந்தவர் உறவினர்கள் கூட நெருங்கிப் பழகத் தயங்கும் ஒரு இறுக்கமான சூழல் இருக்கப் போகிறது..
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இறுதியாக முக்கியமான ஒன்று..
சமூகத்தில் நடக்கும் அத்தனை தவறுகள், இழி செயல்கள், பாதகங்களையும் எங்களால் தடுக்க முடியாவிடினும் குறைந்தபட்சம் குரல் எழுபலாம்..
இல்லாவிட்டால் இப்படியோ சமூக வலைத்தளங்கள், ஊடகங்களின் மூலம் குமுறலைக் கொட்டித் தீர்த்து சமூகத்துக்கு வெளிப்படுத்தலாம்.
இதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஆனால் அதெல்லாவற்றையும் விட எங்களை நாமே தனிப்படத் திருத்திக்கொள்வோம்.
இதனால் உலகில் ஒரு கெட்டவர் குறையலாம்.. சில தவறுகள் நிகழலாமல் போகும்.
இப்படியே சமூகத்தவரின் ஒவ்வொரு அங்கத்தவராகத் தங்கள் குற்றங்களைக் குறைக்க குறைக்க ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகும் இல்லையா?
உணர்வோம்; உயர்வோம்.