Amazing Spider-Manஉம் சில அரை குறைகளும்

ARV Loshan
11

"எவனுக்கு என்ன பலம் எவனுக்கு என்ன குணம் கண்டதில்லை ஒருவருமே!ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்முழிக்கும் அதுவரை பொறு மனமே!"

இது வைரமுத்து படையப்பாவுக்காக எழுதிய பாடல் வரிகள்..

இது சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமல்ல எம்மைப் போல சாதாரணர்களுக்கும் பொருத்தமே.
எமக்குள் ஒளிந்து கிடக்கும் ஒரு அசாதாரண சக்தி அபரிதமாக வெளிப்படுவதற்கு ஒரு காலமும், அதற்கான களமும் அமையவேண்டும்.
தூண்டல்களும், சரியான வாய்ப்புக்களும் இல்லாமல் பலருக்குள்ளே இன்னும் எவ்வளவோ ஆற்றல்கள் தூங்கிக் கிடக்கலாம்.

அந்த ஆற்றல்கள் தூண்டப்படும் நேரம் நாம் தான் Super Man, Spider Man or Batman

இப்படியான  சூப்பர் ஹீரோக்கள் படங்கள் நம்பமுடியாத சாகசங்களோடு வந்தும் மக்களை வயது வேறுபாடின்றி, மொழி, நாடுகள் வேறுபாடின்றிக் கவர்ந்துகொள்ளக் காரணமும் எமக்குள் இருக்கும் இவ்வாறான ஆசைகளே.

தனக்குத் தனக்கென்றும் தன் நெருங்கியோருக்கும் ஏதாவது ஆபத்து, அனர்த்தம் நிகழ்கையில் தான் அநேகர் கதாநாயக அவதாரம் எடுக்கிறோம். அதற்குப் பிறகு சமூக நலன் விரும்பிகளாக, சமூகக் காவலர்களாக மாறிவிடுகிறோம்.

பீட்டர் பார்க்கரும் அவ்வாறு தான்..
சாதாரண ஒரு கல்லூரி மாணவன். மனதுக்குள் ஒரு சிறு காதல். புகைப்படம் எடுத்தல் அவனது பொழுதுபோக்கு. நல்லவன் ஆனால் கொஞ்சம் பயந்தவன். கண் முன்னால் நடக்கும் அநீதிகளை வெறுப்பான்; ஆனால் தடுக்கும் அளவுக்குத் துணிச்சல் இல்லை.

தன்னை வளர்க்கும் உறவினர் கண் முன்னால் சுடப்பட்டு இறப்பதைப் பார்ப்பதும், அவர் இறக்கும் முன் ஒரு திருடனுடன் போராடி இறப்பதும் பார்க்கரின் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களும், பின்னர் ஆய்வுகூடத்தில் சிலந்திக் கடியும் சேர்ந்து அப்பாவி பார்க்கரை அசகாயசூரனாக மாற்றுகின்றன.

அதன் பின் பலம் வாய்ந்த வில்லனை எதிர்ப்பதும், வீழ்த்துவதும், இடையே காதல் , சென்டிமென்ட் என்று ஒரு தமிழ் சினிமா மாதிரி, அல்லது வழமையான ஆங்கில Super hero படங்களின் பாணியில் தான் படம்.

ஆனால் 3D இல் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் பரவசம். ஏதோ கண்ணுக்கு முன்னால் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கிற மாதிரி.
ஸ்பைடர் மான் பாய்கிற காட்சிகளும், வேகமான விறுவிறுப்பு சாகச சண்டைகளும் அப்படியொரு தத்ரூபமும், 3Dஇல் பார்த்தால் தான் அதன் மெய்ப்பாடுகள் விளங்கும் என்கிற மாதிரியும் இருக்கின்றன.



எனக்கு இந்த சாகச வீரர்களின் படங்களில் சிறுவயதிலிருந்து தனியான ஆர்வம் இருந்து வந்தாலும் இந்த Man களில் எல்லாம் Spider Manஇல் மட்டும் தனியான ஒரு அனுதாபம்.
காரணம் Batman க்குத் துணையாக ரொபின், ஒரு சகல வசதிகளும் படைத்த கார் என்று சொகுசான வாழ்க்கை.
Super Man கிரிப்டன் கிரகத்து மனிதர். அதீத சக்தி, வசதியான வேலை என்று அவருக்கும் குறை இல்லை.

ஆனால் இந்த சிலந்தி மனிதன் பாவம்.
பெற்றோர் இன்றிய இளவயதுக் காலம். தனியாகவே போராடவேண்டிய நிர்ப்பந்தம்.
போலீசும், இன்னும் பலரும் ஸ்பைடர் மானையும் கூடக் கெட்டவனாகவே நினைத்துக்கொள்கிற துரதிர்ஷ்ட நிலை வேறு.
காயங்களும் உபாதைகளும் இரத்தக் கீறல்களும் மட்டுமல்ல சோகங்களும் சிக்கல்களும் கூட எம்மைப் போலவே இவரும் தாங்கிக்கொள்ள வேண்டும்.
இதற்கு முந்தைய ஸ்பைடர் மான் படத்தின் கடைசிக் காட்சியில் ஒரு வசனம் சுய புலம்பலாக வரும் " ஸ்பைடர் மானாக நான் இருப்பது எனக்கு வரம் அல்ல; சாபமே" என்று.

இது ஒவ்வொரு ஸ்பைடர் மானிலும் மீண்டும் மீண்டும் அடிநாதமாக வரும்.
சொந்த வாழ்க்கையா? அல்லது சமூகத்துக்கான அர்ப்பணிப்பா என்ற கேள்வி அவருக்குள் ஏற்படுத்தும் போராட்டம் ஒரு அசாத்திய பலம் பொருந்தியவனுக்கானதல்ல; எம் போன்ற ஒரு சாதாரணுக்கானது என்பதே ஸ்பைடர் மானை எம்முள் ஒருவனாக நெருங்க வைத்துவிடுகிறது.
ஆனால் அதிலிருந்து தெளிவு பெற்று மக்களுக்கான, சமூகத்துக்கான கடமை தனக்கு உள்ளது என்பதை உணர்ந்து கொள்வது தான் எமக்கும் இந்த Super Heroவுக்கும் இடையிலுள்ள வித்தியாசம்.

"நீ நல்லவன்; இந்த சமூகத்துக்கு நீ தேவை. ஆனால் உன்னை விரும்புவோர் அதிகரிப்பது போலவே உனக்கு எதிரிகளும் அதிகரிப்பார்கள். இந்தக் கஷ்டத்தில் க்வேன் (பீட்டர் பார்க்கரின் காதலி) அகப்படவேண்டாம். தயவு செய்து அவளிடமிருந்து விலகிவிடு" என்று இறக்கும் தறுவாயில் காதலியின் தந்தை கேட்கும் வாக்குறுதியை மீற முடியாமல் தவிக்கும் இடம் மனதைத் தொடக் கூடியது.

அந்த அழகான, அன்பான காதலியை அவ்வளவு இலகுவாக மறந்துவிட யாருக்குத் தான் முடியும்?
காதலியைப் புரிந்து அவளையும் ஏற்று, அந்தக் காதலியும் தன் காதலன் தனக்கானவன் மட்டுமல்ல, சமூகத்துக்கானவனும் கூட என்பதை உணர்ந்துகொள்வதும் கூட எல்லோராலும் முடிவது இல்லை.

ஒரு சிலந்திக் கடியினாலும், தந்தையின் விஞ்ஞானப் பரம்பரை அலகுகள் வழியாகவும் தனக்குள் கடத்தப்படும் ஆற்றல் + அறிவியலைத் தனக்குள் வைத்திருக்காமல் அல்லது தனக்கென மட்டும் பயன்படுத்தாமல் மக்களுக்காகப் பயன்படுத்தி அதில் தனக்கு வரும் கஷ்ட, நஷ்டங்களைத் தான் தனியாக ஏற்றுக்கொள்வது எல்லா சாதாரணர்களாலும் முடியக்கூடிய விஷயமல்ல.

ஆற்றல்களும் இருந்து, அடக்கமும் இருந்து, தனக்கான கடமைகளையும் உணர்ந்து, அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் சரியான நோக்கில் தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்துவதால் தான் அந்த பீட்டர் பார்க்கர் என்ற சாதாரணன், சிலந்தி மனிதனாக மாறுகையில் The Amazing Spiderman ஆகிறான்.

எல்லாவற்றையும் அரைகுறையாக வைத்துக்கொண்டு, எமக்குள்ளேயே குறைகள் ஆயிரத்தை வைத்துக்கொண்டு மற்றவர் குறைகளைப் பூதக்கண்ணாடி வைத்துத் தேடி அதை ஊதிப் பெருப்பித்து, ஊகங்கள் பூசியும், ஊரெல்லாம் பரப்பியும் குறுக்குவழியில் கோட்டையைப் பிடிக்க முயல்வதால் நாம் இன்னும் அரை குறைகளாவே இருக்கிறோம்.

(நாம் என்கையில் நாம் எல்லோரும் அல்ல... தொப்பி அளவானவர்கள் மட்டும்)

எமது ஆற்றல்கள் புரிந்தால், எமக்குள்ளே இருக்கும் திறமையை நாம் உணர்ந்தால் அவற்றை மற்றவர் அறிந்து எம்மை ஏற்றிவிடாவிட்டாலும், எம்மாலேயே எமக்கான பாதைகளை வகுத்து எம்மையும் உயர்த்தி, எமக்கானவரையும் , மற்றவரையும் கூட அவர்களுக்கானவற்றை சரியாக வழங்கிட முடியும்.
அப்போது நாங்களும் எங்கள் மட்டத்தில் ஒவ்வொரு Super Heroes தான்....

Post a Comment

11Comments

Please Select Embedded Mode To show the Comment System.*