இன்று நள்ளிரவு முதல் ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன.
கால் இறுதிப் போட்டிகளுக்கு எந்த அணிகள் தெரிவாக வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேனோ, அவற்றில் நெதர்லாந்து, குரோஷியா, உக்ரெய்ன், ஸ்வீடன் ஆகிய அணிகள் அவுட்.
ஆனால் இவற்றில் நான்குமே தெரிவாகும் என்று நான் உறுதியாகத் தெரிவித்திருக்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவே வேண்டும்.
(விக்கிரமாதித்தன் இங்கே விளையாடவில்லை)
ஆனால் சில அணிகள் பலமான அணிகள்; நிச்சயம் காலிறுதிக்குத் தெரிவாகும் என்று நம்பி இருந்தேன்.. நான் மட்டுமா உலகமே நம்பி இருந்தது.
அந்த அணிகளில் எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரே அணி ரஷ்யா.
ரஷ்யா தனது கடைசிக் குழுநிலைப் போட்டியில் கிரீசிடம் தோற்றதால் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மற்றும்படி எல்லாம் கணித்தது போலவே நடந்திருப்பது.
கிரிக்கெட்டில் என்னோடு விளையாடுவது போல விக்கிரமாதித்தன் கால் பந்தில் விளையாட்டுக் காட்டி மூக்குடைப்பது மிக மிக அரிது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தோசம்.
எனது முன்னைய ஐரோப்பிய கால்பந்து இடுகையை மீண்டும் ஒவ்வொரு பிரிவாக வாசித்தீர்களாயின் எனது கணிப்புக்களில் பிரிவு பற்றி சொல்லியுள்ள விடயங்கள் தவிர ஏனைய அனைத்தும் அச்சுப் பிசகாமல் சரியாக வந்திருப்பதை உணர்வீர்கள்.
முதல் சுற்று ஆட்டங்கள் பற்றிய விரிவான ஒரு அலசலை தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.
அதையும் முழுமையாக வாசித்து விடுங்கள்..
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து; கால் இறுதிகளுக்கான அணிகள் எட்டும் தெரிவாகின
உங்கள் கருத்துக்களை அங்கேயே பதியலாம்.. அல்லது இங்கேயே கூடப் பதியலாம் :)
முதல் சுற்று ஆட்டங்களில் எனக்குப் பிடித்த அணியான ஸ்பெய்ன் நான் முன்னைய இடுகையில் சொன்னதைப் போலவே மந்தமாக ஆரம்பித்து பிரகாசமாக அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள்..
பிரான்சை அடுத்து சந்திப்பது தான் காலிறுதியின் முக்கியமான போட்டியாக அமையப் போகிறது.
டொரெஸ் மீண்டும் கோல்களைக் குவிக்க ஆரம்பித்திருப்பதும், ஏனைய வீரர்களும் உறுதியாக விளையாடுவதும், கோல் காப்பாளரும் தலைவருமான கசியாஸ் இதுவரை யாராலும் சோதிக்கப்படாமையும் அரையிறுதிக்கான இடம் உறுதி என்பதைக் காட்டுகிறது.
ஸ்பெய்னுக்கு சவாலாக இருக்கப் போகிற ஒரே அணி ஜெர்மனி.
ஆனால் பந்தயக்காரர்கள் இப்போது ஸ்பெய்னை விட ஜெர்மனியையே கூடுதல் வாய்ப்புள்ள அணியாகக் கருதுகிறார்கள்.
கோமேஸ் முன்னணி நட்சத்திரமாகத் தெரிந்தாலும் ஏனைய பின்புலத்தில் இயங்கும் அத்தனை வீரர்களுமே சிறப்பாக விளையாடுகிறார்கள்.
கிரீஸ் அணியின் கிடுக்கிப்பிடித் தனமான தடுப்பு ஆட்டத்தை நிதானமாக முறியடித்தால் அரையிறுதி உறுதி.
இன்னொரு கால் இறுதியும் ஒரு கால் பந்து யுத்தம் போல எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து எதிர் இத்தாலி.
இத்தாலி இங்கிலாந்தை விடப் பலமானது என்று தொடர் ஆரம்பிக்க முதல் கருதிய பலருக்கும், இங்கிலாந்தின் இறுதி இரண்டு வெற்றிகளும் இலேசுப்பட்ட அணியல்ல இது என்பதைக் காட்டி இருக்கும்.
அடுத்து இன்று நள்ளிரவு இடம்பெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டி.
செக் குடியரசு எதிர் போர்த்துக்கல்.
செக் அணியின் முதலாவது தோல்விக்கு அடுத்த நாள் நான் எழுதிய இடுகையின் வசனங்கள்....
செக் அணிக்கும் போட்டிகளை நடத்துகின்ற போலந்து அணிக்கும் இடையில் இரண்டாம் இடத்துக்கான இழுபறியில் சொந்த மைதானம் + ரசிகர்களின் ஆதரவு என்று போலந்துக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும் செக் அணி முதல் இரு போட்டிகளில் விட்ட தவறுகளை கடைசிப் போட்டியில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்.
ஆனால் இன்று போர்த்துக்கலும் எனக்குப் பிடித்த அணி. தனி நபராகப் பிடிக்காவிட்டாலும் போர்த்துக்கலுக்காக விளையாடும்போது பிடித்துப் போகிற ரொனால்டோ விமர்சனங்களைஎல்லாம் தாண்டி கோல் குவிப்பாளராக மாறியுள்ளார்.
செக்கின் விறுவிறுப்பான பதிலடிகளை எதிர்பார்க்கிறேன்.
கால் பந்து ரசிகர்களுக்காக ஒரு மினிக் கருத்துக் கணிப்பையும் Facebookஇலே நடத்துகிறேன்..
எது வெல்லும் என்று நீங்கள் சொல்லுங்கள்..
Who is going to lift the 2012 UEFA Euro cup?
இதயத் துடிப்பை எகிற வைக்கும் இறுக்கமான போட்டிகள், மேலதிக நேரங்கள், பெனால்டி உதைகள் என்று இனித் தான் உணர்ச்சியான ஐரோப்பியக் கால்பந்துத் திருவிழா... ரசிப்போம் வாருங்கள்..