ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் முதல் வாரம்..
ஐரோப்பியக் கிண்ண ஆரம்பத்தில் எனது இடுகையொன்றில் மேலோட்டமாக சில விஷயங்களை சொல்லி இருந்த நான், தமிழ் மிர்ரரில் விரிவாக ஒரு கட்டுரை வரைந்திருந்தேன். வாசிக்காதவர்கள் இந்த சுட்டி வழியாக செல்லுங்கள்.
A பிரிவு தவிர ஏனைய எல்லாப் பிரிவுகளிலும் உள்ள அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளையே விளையாடியுள்ளன.
இந்த கால்பந்துத் தொடர் ஆரம்பிக்க முதல் UEFA Euro 2012 கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகள் என்ற வரிசை
நடப்புச் சாம்பியன் ஸ்பெய்ன்
ஜெர்மனி
பிரான்ஸ்
இங்கிலாந்து
இத்தாலி
ரஷ்யா
ஒல்லாந்து
போர்த்துக்கல்
ஆனால் இந்த வரிசையில் உள்ள அணிகளில் தத்தம் முதலாவது போட்டியில் வெற்றி எட்டிய அணிகள், ஜெர்மனி, ரஷ்யா ஆகியன மட்டுமே..
ஏனைய அணிகளில் ஒல்லாந்து டென்மார்க் அணிக்கெதிராக அதிர்ச்சித் தோல்வியைக் கண்டது. மற்றைய அணிகள் வெற்றி தோல்வியற்ற முடிவுகளையே கண்டன.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை எல்லா அணிகளுமே சராசரியாகப் பலமான அணிகள் என்ற அடிப்படையில் இறுக்கமான போட்டிகள் சாதாரணமாக எதிர்பார்க்கப்படுவதே.
அத்துடன் எவ்வளவு தான் பலம் வாய்ந்த அணியாக ஸ்பெய்ன் இருந்தாலும் பொதுவாக எந்தவொரு தொடரிலும் மந்தமாகவே ஆரம்பிப்பது வழக்கம்.
நான் கூட ஸ்பெய்ன் அணி பற்றி ட்விட்டரில் Slow starters but strong finishers :) #spain
என்று குறிப்பிட்டு இருந்தேன்.
(நம்பிக்கை தான்யா வாழ்க்கை)
உலகக் கால்பந்து அணிகளில் எனக்கு மிகப் பிடித்த அணி ஆர்ஜென்டீனா. (இது உங்களில் பலருக்கும் 2010 உலகக் கிண்ண நேரமே தெரிந்திருக்குமே)
இதற்கு அடுத்தபடியாக ஆசிய அணிகள் சிலவற்றைப் பிடிக்கும்.. பாவம் முன்னேறக் காத்திருக்கும் அணிகள் என்ற பச்சாதாபம்.
அதேபோல எந்த விளையாட்டிலும் நான் விரும்புகின்ற ஆஸ்திரேலியாவை கால்பந்திலும் பிடிக்கிறது.
ஐரோப்பாவில் இருக்கும் அணிகளில் பிரதானமாக ஸ்பெய்ன், போர்த்துக்கல், ஒல்லாந்து போன்ற அணிகளைப் பிடிக்கும்.. ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக ஸ்வீடன், அயர்லாந்து, நோர்வே, க்ரோஷியா, செக், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, செவ்ஷேன்கே என்ற ஒரு தனி நபருக்காக உக்ரெய்ன் என்று சில அணிகளின் மீதும் அவை எனது விருப்புக்குரிய அணிகளுக்கெதிராக விளையாடாத நேரத்தில் விருப்பம் இருக்கும்..
இந்த இடுகை இமுறை ஐரோப்பியக் கிண்ணத்தில் எனது விருப்ப அணிகள் மீதான எதிர்பார்ப்பு & கால் இறுதிப் போட்டிகளுக்கு செல்லக் கூடியதான எல்லா அணிகளின் வாய்ப்புக்கள் பற்றி ஆராய்கிறது.
(யாரது அங்கே 'விக்கிரமாத்தித்தாய நமஹா' என்று மந்திரம் சொல்வது?)
இந்த இடுகை மூலமாக என் விக்கிரமாதித்தன் பட்டத்தைக் கழற்றி வைத்துவிடும் மறைமுக நப்பாசையும் இருக்கிறது.
ஆனால் கடந்த 2010 கால்பந்து உலகக் கிண்ணத்தின்போது எனது எதிர்பார்ப்புக்கள்/ ஊகங்கள் வீதம் சரியாக இருந்தமையை நான் இங்கே பெருமையுடன் சொல்லத் தான் வேண்டும்.
பிரிவு A
இப்போதைக்கு ரஷ்ய அணிக்கு கால் இறுதி செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
செல்லும் என்று நானும் நம்புகிறேன். இதன் இறுதிப் போட்டி கிரீஸ் அணிக்கு எதிராக என்பதால் உறுதியாகிறது.
செக் அணிக்கும் போட்டிகளை நடத்துகின்ற போலந்து அணிக்கும் இடையில் இரண்டாம் இடத்துக்கான இழுபறியில் சொந்த மைதானம் + ரசிகர்களின் ஆதரவு என்று போலந்துக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும் செக் அணி முதல் இரு போட்டிகளில் விட்ட தவறுகளை கடைசிப் போட்டியில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்.
சிவப்புக் கலர் செக் அணி
செக்கோஸ்லாவேக்கியா உடைந்ப்து செக் அணி உருவான போது 1996ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தின்போது இந்த அணியின் வேகமும் விறுவிறுப்புமான ஆட்டம் பிடித்துக்கொண்டது. சிறு அணி ஒன்று என்பதால் ஆதரவு வழங்கி இருந்தேன்.
அதே போல அதே ஐரோப்பியக் கிண்ணத்தில் முதல் தடவை களமிறங்கிய யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த க்ரோஷியாவையும் பிடித்துப்போனது.
(பிரிந்து போய் தனியாக நின்று போராடும் அணிகளை யாருக்குத் தான் பிடிக்காது?)
நேற்று கிரீஸ் அணியை வென்றாலும் முதல் ஆறு நிமிடங்களில் பெற்ற கோல்கள் தவிர தொடர்ந்து வந்த நிமிடங்களில் க்ரீசிடம் திணறியது.
மிலன் பரோஸ்,ரொசிக்கி, பிலர், பெட்டர் செக் போன்ற பிரபல வீரர்களிடம் இன்னும் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம்.
பிரிவு B
இது தான் இம்முறை ஐரோப்பியக் கிண்ணத்தின் சிக்கலான பிரிவு. Group of Death என்று சொல்லலாம்..
கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் என்று கருதப்படும் மூன்று அணிகள் உள்ள பயங்கரப் பிரிவு. டென்மார்க் தான் இந்த நான்கு அணிகளில் பலவீனமான அணி என்று கருதினாலும் முதலாவது போட்டியிலேயே ஒல்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது டென்மார்க்.
இந்தப் பிரிவில் கடந்த ஐரோப்பியக் கிண்ணத்தில் இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கல் மட்டுமே இதுவரை ஐரோப்பியக் கிண்ணம் வெல்லாத அணி. (இம்முறை போர்த்துக்கல் வென்றால் மகிழ்வடையும் முதலாவது நபராக நான் இருப்பேன்)
ஜெர்மனி - போர்த்துக்கல் மோதல் ஒரு காட்சி
அடுத்த சுற்றுக்கு இப்பிரிவில் இருந்து போர்த்துக்கலும் ,ஒல்லாந்தும் செல்லவேண்டும் என்பதே என் விருப்பம்.
ஆனாலும் ஜெர்மனியைத் தாண்டி இவ்விரு அணிகளும் செல்ல முடியும் என்பது சாத்தியமில்லைத் தான்.
அதிலும் போர்த்துக்கல் - ஒல்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் இருக்கிறது.
ஒல்லாந்து இனி ஜெர்மனியையும் சந்திக்கவேண்டி இருப்பதால் போர்த்துக்கலுக்கே இரண்டாவது அணியாகத் தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன்.
ரொனால்டோ, நானி ஆகியோர் இன்றிரவு டென்மார்க்குக்கு எதிராகத் தமது வழமையான formக்குத் திரும்புவார்கள் என நம்பி இருக்கிறேன்.
நெதர்லாந்து இன்றிரவு ஜெர்மனியை சந்திக்கும் போட்டி மிக விறுவிறுப்பானதாக அமையும் என்று நம்புகிறேன். உலகின் மிகப் பிரபல நட்சத்திரங்கள் இரு தரப்பிலும் விளையாடினாலும், அணியாக விளையாடும் போது ஜெர்மனியின் பலம் உயர்வு.
ஜெர்மனியின் கோமேஸ், ஒசில், பொடோல்ஸ்கி, போட்டேங்,முல்லேர்,லாம் ஆகிய ஆறு நட்சத்திரங்களும் கழக மட்டத்தில் விளையாடிய தமது formஐ Euro 2012க்கும் கொண்டு வந்துள்ளார்கள் என்பது சிறப்பு.
ஒல்லாந்து அணியின் செம்மஞ்சள் சட்டை வீரர்களிலும் இப்படியே பல நட்சத்திரங்களை அடுக்கலாம்..
ஆர்ஜென் ரொப்பேன், வெஸ்லி ஸ்னைடர், வான் பேர்சி, வன் பொம்மேல்,ஹைட்டிங்கா இப்படி...
ம்ம்ம்ம் ஒல்லாந்து வெல்லும் என்று சொல்லவில்லை; வென்றால் நல்லா இருக்குமே என்கிறேன்.
பிரிவு C
மேலோட்டாமாக பார்த்தால் நடப்பு ஐரோப்பிய, உலக சாம்பியனான ஸ்பெய்னும், பாரம்பரிய கால்பந்து பயில்வான் இத்தாலியும் இலகுவாகக் காலிறுதிக்குள் நுழைவார்கள் என்று தெரிந்தாலும், அயர்லாந்தும் க்ரோஷியாவும் இந்த இரு அணிகளையும் கவிழ்க்கும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை மறுக்க முடியாது.
நடப்பு சாம்பியன்கள் ஸ்பெய்ன்
எனக்கு என்றால் இப்பிரிவிலிருந்து ஸ்பெய்னும், க்ரோஷியாவும் தெரிவானால் திருப்தி.
அதற்கேற்றது போல க்ரோஷியா முதலாவது போட்டியில் அயர்லாந்து அணியை அசரடித்துள்ளது.
ஆனால் ஸ்பெய்னுக்கு ஈடு கொடுத்து இத்தாலி விளையாடிஇருந்ததைப் பார்த்தால் இத்தாலி நிறைய வாய்ப்புள்ள அணியாகவே தெரிகிறது.
ஸ்பெய்ன், இத்தாலி இவ்விரு அணிகளின் கோல் காப்பாளர்களுமேமே இந்த அணிகளின் அத்திவாரங்கள்.
அனுபவம் வாய்ந்த கசியாஸ் மற்றும் பபன்(நம்ம குஞ்சு பவன் இல்லை.. இது Buffon)
ஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி அணியின் பெரும்பான்மையான வீரர்களான பாப்ரேகாஸ், டொரெஸ், சவி ஹெர்னாண்டஸ், இனியெஸ்டா , பிக்கே, சில்வா போன்றோர் இருந்தாலும், ஓய்வுபெற்ற தலைவர் புயோலும், காயமுற்றுள்ள டேவிட் வியாவும் இல்லாமை ஸ்பெய்னை முதலாவது போட்டியில் மிக சிரமப்படுத்தியிருந்தது.
நாளை அயர்லாந்தை எதிர்கொள்ளும்போது எப்படி விளையாடுகிறது என ஆர்வத்துடன் காத்துள்ளேன்.
இத்தாலி கிரிக்கெட்டில் பாகிஸ்தான் போல.. அடிக்கடி ஏற்படும் சூதாட்ட சர்ச்சைகள், வீரர்களை அடிக்கடி மாற்றுவது இப்படி பல.. ஆனாலும் முன்னணி அணி தான்.. முக்கிய அணி தான்..
இந்த அணியில் பிர்லோ, டி ரோச்சி ஆகிய முக்கிய வீரர்கள் கவனிக்கக் கூடியவர்கள்.
குரோஷியா அணியைப் பொறுத்தவரை, ஒலிக், க்ரஞ்ச்கர்,எடுவார்டோ, ஸ்ர்னா, மொட்றிக் ஆகிய வீரர்கள் அசத்தக் கூடியவர்கள்.
குரோஷியா இத்தாலியை நாளை என்னுடைய ராசியான நாளில் வீழ்த்தும் என்று நம்பி இருக்கிறேன். (நல்ல மூக்கு பிளாஸ்டிக் சேர்ஜரி எங்கே செய்யலாம் நண்பர்ஸ்?)
பிரிவு D
பிரான்ஸ் - இங்கிலாந்து என்ற பழைய எதிரிகள் இருக்கும் பிரிவு. யாருக்கும் சேதாரமில்லாமல் தமக்கிடையேயான முதல் போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டார்கள்.
அன்றே செவ்ஷேங்கோ என்ற ஒரு வயதேறிய போராளி விளையாடும் உக்ரெய்ன் தன் சொந்த மண்ணில் விளையாடுவதால் (அதிலும் உக்ரேய்னின் முதலாவது ஐரோப்பியக் கிண்ணம் இது) உக்ரெய்ன் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அடுத்த அணி பிரான்ஸ் என்றே கருதப்படுகிறது.
நானும் அப்படியே கருதுகிறேன்.
இங்கிலாந்து - ரூனி இல்லாமலும் முடியுமா?
ஆனால் இங்கிலாந்தும் சுவீடனும் எனக்குப் பிடித்த அணிகளில் உள்ளன..
நான்கு அணிகளிலும் உள்ள ஒற்றுமை ஒரு குறித்த நாளில் உலகின் எந்த அணியையும் இவை வீழ்த்தும்.. இன்னொரு நாளில் சொதப்பும்.
ஸ்வீடன் அணி 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கிண்ணத்தில் விளையாடிய விதத்தினால் என்னைக் கவர்ந்த அணி. இன்று வரை இந்த அணியின் விளையாட்டு விதம், மற்றும் சீருடை வர்ணம் ஆகியன மனம் கவர்ந்தவை.
இப்ராஹிமொவிச், கல்ஸ்ட்றோம், லார்சன் ஆகியோர் நட்சத்திரங்கள்...
ஆனால் உக்ரெய்னிடம் தோற்ற விதத்தைப் பார்த்தால் பிரான்சை வெல்ல முடியாது என்றே தோன்றுகிறது.
பிரான்சிடம் உள்ள அவர்களது அனுபவமும் துடிப்பும் கலந்த சமபல அணி..
ரிபேரி, நஸ்ரி, பென்சீமா, பென் அப்ரா, மலூடா, பட்ரிஸ் எவரா என்று நட்சத்திரப் பட்டாளம்.
மறுபக்கம் உலகம் முழுக்கப் பிரபலமான இங்கிலாந்து ஏனோ ஒரு அணியாகப் பலமானதாக தெரியவில்லை..
ரூனியின் தடை முதல் ஆட்டத்தில் அவரை விளையாட விடவில்லை.அடுத்த ஸ்வீடன் போட்டியிலும் அவர் விளையாட முடியாது. இறுதி முதல் சுற்று ஆட்டத்தில் ரூனி வர முதலே இங்கிலாந்து வெளிஈரிவிடுமோ என்பதே கேள்வி.
ரூனி இல்லாத இங்கிலாந்தில், டெரி, ஜெரார்ட், ஆஷ்லி கோல், வோல்கொட், டீ போ போன்ற வீரர்கள் இருந்தாலும் ஏனோ சறுக்கி விடுகிறார்கள்.
இறுதியாக ஷேவ்ஷேங்கோவின் உக்ரெய்ன். 35 வயதான இவரை நம்பியே இன்னமும் இந்த அணி ஓடுகிறது. வொரோனின், குசேவ் போன்ற வீரர்கள் முன்னணி வீரர்களாக இருந்தாலும் கிழட்டுக் குதிரை தான் இன்னமும் இந்த வண்டியை இழுக்கிறது. கால் இறுதிக்கு சென்றால் நிம்மதியாக ஷேவ்ஷேங்கோ தன் ஓய்வை அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.
இவை என் கணிப்புக்கள் & விருப்பங்கள்.
எத்தனை நடக்கும் என்று பார்க்கலாம்.
தமிழ் மிரரின் ஆசிரியர் நண்பர் மதன் கேட்டதற்கிணங்க வாரத்தில் சில விளையாட்டுக் கட்டுரைகளை அதற்கென்று பிரத்தியகமாக எழுத ஆரம்பித்துள்ளேன். அவற்றையும் வாசித்து விமர்சனங்களை வழங்குங்கள்.
இதுவரை பிரசுரிக்கப்பட்ட இரு கட்டுரைகள்.
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடர்
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டி: ஒரு முழுமையான பார்வை
(என்னுடைய வலைப்பதிவுகளில் இருக்கின்ற ஏதோ இந்தக் கட்டுரைகளில் இல்லை என்றும், இங்கே இல்லாத ஏதோ அங்கே இருக்கின்றது என்றும் நண்பர்கள் சிலர் கருத்து சொல்லி இருந்தார்கள்.. அது தான் தேவை.. எனவே மகிழ்ச்சி)