தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே சுவைக்கும் ஒருவருக்கு இடையே ஒரு தோல்வி கிடைத்தால் தான் தன்னிலையை உணர்ந்துகொள்ளக் கூடியதாகவும் அடுத்த தோல்வியைத் தவிர்க்க உதவுவதாகவும் இருக்கும்.
தோதான பாத்திரங்களாலும், கொஞ்சம் அதிர்ஷ்டத்தினாலும் தொடர்ச்சியாக வெற்றியையும் நல்ல பெயரையும் பெற்று வந்த கார்த்திக்கு முதலாவது பெரிய சறுக்கலாக, திருஷ்டி கழிக்க வந்துள்ளது சகுனி.
நான் எங்கள் ஒலிபரப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் (Trailers) செய்யும்போது அடிக்கடி சொல்வது "விளம்பரங்கள் நன்றாக இருக்கத் தான் வேண்டும்; ஆனால் விளம்பரங்களைவிட நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கவேண்டும் " என்று.
சகுனியின் நிலையும் அது தான்..
ஆகா ஓகோ.. வசூல் வெற்றி.. கமல் - ரஜினி என்று ஆர்வத்தை ஏற்படுத்திய விளம்பரங்களைப் பார்த்துவிட்டு திரையரங்கு போனால் ஏமாற்றம் பாதி.. எரிச்சல் மீதி.
சிறுத்தையில் கார்த்தி - சந்தானம் கலக்கிய பிறகு அதே formulaவில் கதை கொஞ்சம் கலகலப்பு நிறைய என்று தந்தால் ரசிகர்கள் சிரித்துக்கொண்டே ரசிப்பார்கள் என்று நினைத்து அறிமுக இயக்குனர் ஷங்கர் தயாள் தானும் ஏமாறி, கார்த்தியையும் எம்மையும் சேர்த்தே ஏமாற்றி இருக்கிறார்.
பலம் வாய்ந்த அரசிய்லவாதியை எந்தப் பக்கபலமும் இல்லாத சாதாரண இளைஞன் புத்தி, சூழ்ச்சி, சாதுரியம் என்பவற்றைப் பயன்படுத்தி, கட்டம் கட்டி ஜெயிப்பதே கதை.
இறுதியாக இதே போன்ற கதையை தூளில் இயக்குனர் தரணி தந்திருந்தார். ஆனால் விக்ரமின் அதிரடியும் சேர்ந்து ரியல் மசாலா ஆகி மிகப்பெரிய வெற்றியையும் தூள் பெற்றிருந்தது.அந்த வேகம்,சுவாரஸ்யம் சகுனியில் இல்லை. சந்தானமாவது கொஞ்சம் ஈடுகட்டுவார், வீடு கட்டி விளையாடுவார் என்று பார்த்தால், சச்சின் என்ன எல்லாப் போட்டியிலும் சதம் அடித்து வென்று கொடுக்க முடியுமா என்று சந்தானம் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.
தூளில் சகுனியளவுக்கு நட்சத்திரப் பட்டாளம் கிடையாது. ஆனால் திருப்பங்களையும் கதையின் முடிச்சுக்களையும் அழகாகப் பின்னியிருப்பார் இயக்குனர்.
முடிச்சு அவிழ்ப்பது பற்றியெல்லாம் Trailerஇல் அவிழ்த்துவிட்டுவிட்டு மொக்கை போட்டிருக்கிறார் புதுமுக இயக்குனர்.
தயாரிப்பாளரும் எம்மைப் போல பாவம்.
சகுனியில் ஸ்டார் அந்தஸ்துள்ள கார்த்தி, இன்னொரு ஹீரோவாகவே வலம் வரும், திரையில் அறிமுகமாகும்போதே கார்த்தியை விட அதிக கை தட்டல்களை அள்ளிக்கொள்ளும் சந்தானம், தேசிய விருது நடிகன் பிரகாஷ் ராஜ், நாசர், ராதிகா, கோட்டா சீனிவாசராவ், ரோஜா என்று வரிசையாக திறமையும் அனுபவமும் வாய்ந்த நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு கதையைக் கோட்டை விட்டால் என்ன செய்வது?
இதை விட முன்னைய கதா(சதை)நாயகி கிரண் , இப்போதைய நட்சத்திரங்கள் அனுஷ்கா (ஆமாம் அருந்ததியே தான்) & அன்ட்ரியாவும் உண்டு....
ஆனால் ஏன்?
கார்த்தியை முன்னிறுத்தியே சகல விளம்பரங்களும் என்பதால் எக்ஸ்ட்ரா பில்ட் அப்?
ஆரம்பக் காட்சிகளில் ஏதோ வித்தியாசம் வரப்போகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தால் கமல் - ரஜினி (கமலக்கண்ணன் - அப்பாதுரை ரஜினி யாம்) உரையாடலை நீட்டி இழுத்தே அறுக்கிறார்.
ஒரு கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அறுவை. கதாநாயகி பேரும் வேறு ஸ்ரீதேவி என்று நகைச்சுவைக்குப் பதிலாக 'கடி'க்கிறார்.
பிறகு கார்த்தி - பிரணதி காதல்.. சுவையாகவே இல்லை. அப்படியே பழைய வாசனையும் சப்பென்ற நகர்வுகளும்.
அதன் பின்னர் கமல் (கார்த்தி) சகுனியாக மாறுகிறாராம்.
அந்தக் கொடுமையை என்னவென்பது? சகுனியின் பெயருக்கே அவமானம்.. எந்தவொரு சூழ்ச்சியும் பெரிதாக இல்லை..
கார்த்தி என்கிற கமலக்கண்ணன் சொல்வதை முதலமைச்சர் பிரகாஷ் ராஜ் தவிர எல்லாருமே வேதவாக்காக எடுத்துக் கேட்கிறார்கள் ; வெல்கிறார்கள்.
ஆனால் அவர் எதற்காக அவசரமாக மீட்க வேண்டிய தன் வீட்டை மீட்பதற்கு நீண்ட கால நோக்கில் சில விடயங்கள் செய்கிறார் என்பது மண்டையை இறுதிவரை பிளக்கும் ஒரு கேள்வி.
கந்துவட்டிக்காரியை மேயராக்குகிறார்; சாதா சாமியாரை சகல வல்லமையுள்ள சர்வதேச சாமியார் ஆக்குகிறார் (அந்த சாமியாரின் இறுதி கெட் அப் இன்னும் ஒரு பிரபல சாமியாரை ஞாபகப்படுத்தவில்லை?) ; இறுதியாக அரசியல் அனாதையாக (இந்த கோட்டா பாத்திரம் ஒரு தமிழக அரசியல் வாதிரி மாதிரியே இல்லை?) இருந்தவரை முதலமைச்சர் ஆக்குகிறார்.
இதெல்லாம் செய்து தன்னை ஏமாற்றிய அரசியல்வாதியை தோற்கடிப்பது தான் சகுனி ஆட்டம்.. ஆனால் ஆட்டத்தில் சுவையும் இல்லை; சுவாரஸ்யமும் இல்லை என்பது தான் ஏமாற்றம்.
அதுசரி தேர்தல்கள் எல்லாம் என்ன சென்னை மின்வெட்டும், இலங்கை விலைவாசி உயர்வும் மாதிரியா? நினைத்த நினைத்த நேரம் வருகிறதே...
இசை - பிரகாஷ் குமாராம்.. பாடல்கள் சுமார். பின்னணி இசை வெகு சுமார்.
ஒலிப்பதிவு, எடிட்டிங், சண்டைக் காட்சிகள் என்று அலட்டிக்கொள்ளவே வேண்டாம்...
இயக்குனர் ரொம்பக் காலம் வாய்ப்புக்காகக் காத்திருந்து தூங்கி எழுந்து வந்தது போல எப்பவோ வந்து நாம் பார்த்து அழுத்த ஐடியாக்களைக் கொண்டு வந்து கொட்டாவி விடவைக்கிறார்.
காதல் காட்சிகள், ராதிகா, நாசர் வகையறாக்களை கார்த்தி தன் வலையில் போட்டுக்கொள்ளும் இடங்கள்.. இப்படி பல..
சகுனியில் பிடித்த வெகு சில...
சந்தானம்.. (ஆனால் முன்னைய படங்கள் அளவுக்கு இல்லை.. கொஞ்சம் தன் பாதையை மாற்றிக்கொள்ளவேண்டும்)
கார்த்தி (சில இடங்களில் வெகுளி, கோமாளி & ரசிக்கவைக்கும் குறும்புத்தனங்கள்.. ஆனாலும் நடனங்களிலும் சரி, நடிப்பிலும் சரி முழுமையான ஈடுபாடில்லாதவர் போலத் தெரிகிறதே.. அப்படியா கார்த்தி?)
சந்தானம் - கார்த்தி ஆரம்பக் காட்சிகள்..
இடையிடையே வரும் சிற்சில வசனங்கள்....
முன்னைய, இந்நாள் தமிழக அரசியல்/ ஆட்சியை ஞாபகப்படுத்தும் சில விடயங்கள் & வசனங்கள்
சில ஹீரோக்களின் படங்களில் நடப்பது போல நேரடியாக கார்த்தியை முதல்வர் ஆக்காதது..
பிடிக்காத/ கடுப்பேற்றிய/ அலுப்பு அளித்த/ கொட்டாவி விடவைத்த .. ஏதாவது போட்டுக்கொள்ளுங்கள்
தும்மல் வரவழைத்த தூசு தட்டிய ஐடியாக்கள்
லொஜிக்கே இல்லாத கதை
கதையே இல்லாத ஓட்டம்
தெரிந்த திருப்பங்கள்
வீணடிக்கப்பட்ட முக்கிய நடிக/நடிகையர்
எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது
இன்னொரு முக்கியமான கடுப்பேற்றும் விடயம்....
சன் மூவீஸ் போலவே இன்னமும் மாபெரும் வெற்றி மண்ணாங்கட்டி வெற்றி என்று தொலைக்காட்சியில் விளம்பரம் போட்டு அறுப்பது.
கார்த்தி & சந்தானம் - அடுத்த கதைத் தேர்வில் வெகு அவதானமாக இருங்கள்.
இயக்குனர் - அடுத்த வாய்ப்பு என்று ஒன்று வந்தால் முதலில் கதை & திரைக்கதையை தீர்மானியுங்கள்....
சகுனி - சப்பை