நல்ல வடிவா எழுதுங்கப்பா #ஹர்ஷு

ARV Loshan
17
ஹர்ஷு


"எனக்கு போர் அடிக்குது அப்பா.. என்னோட விளையாட வாங்களேன்.." சரியாகக் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் என்னை ஹர்ஷு எக்கச்சக்க ப்ளீஸ் போட்டு அழைக்கும்போது தட்ட முடிவதில்லை. அதுவும் இந்த IPL ஆரம்பித்த பிறகு ஒன்பது அணிகளின் பெயர்களையும் மனப்பாடமாக சொல்லிச் சொல்லியே, தான் ஒரு அணி, நான் ஒரு அணிஎன்று பந்து வீசச் சொல்லித் தான் துடுப்பெடுத்தாடுவதும், பின் தான் வீசும் பந்துகளுக்கு ஆட்டமிழக்கச் சொல்வதும் நாளாந்தம் நடப்பவை. 

ஒரு நாள் சரியான களைப்போடு சொன்னேன் "ஹர்ஷு, அப்பாக்கு கொஞ்ச வேலை இருக்கு.. நீங்க ஒருநாளைக்கு உங்கட பிரென்ட்சைக் கூட்டிக்கொண்டு வந்து 
விளையாடலாமே"

உடனே பதில் வந்தது சலிப்புடன் " இல்லையப்பா அவங்கல்லாம் சரியான பிசி.. வர மாட்டாங்க"

எனக்கு சிரிப்பும் வந்துவிட்டது .. "அப்படி என்னடா அவங்களுக்கு பிசி?" 

"இல்லையப்பா ஸ்கூல்ல (நேர்சரி) நிறைய எழுத்து வேலை குடுக்கிறாங்களே.. English writing, Tamil hand writing எண்டு அப்பா... அவங்க பாவம்" 

அட.. என்று நினைத்துக்கொண்டே " அப்போ உங்களுக்கு? நீங்க எல்லாம் முடிச்சிட்டீங்களா?" என்று கேட்டேன்..
"இல்லையப்பா... அதெல்லாம் விளையாடி முடிச்ச பிறகு தானே செய்யலாம்.. அது study timeல தானே"

ம்ம்ம்ம்... நாலரை வயசில கதைக்கிற கதையைப் பாருங்களேன்.. 
இப்போதெல்லாம் என்னை விட அவன் தான் IPL அட்டவணையை எல்லாம் சரியா ஞாபகம் வைத்திருக்கிறான். 


ஹர்ஷுசென்னை சுப்பர் கிங்க்சின் தீவிர ஆதரவாளன். சென்னை அல்லது அவன் ஒரு நாளில் ஆதரவளிக்கும் அணி தோற்றுவிட்டால் கொஞ்சம் அப்செட் ஆக இருப்பான். நான் "இதெல்லாம் சும்மா விளையாட்டுத் தானே அப்பன்.. இன்றைக்குத் தோற்றால் நாளைக்கு வெல்வார்கள்" என்று சொல்லி சொல்லி இப்போ 
"அப்பா இண்டைக்கு சென்னை தோத்தா நான் கவலைப்பட மாட்டேனே.. நான் இப்போ Big Boy தானே.. its just a game தானே"என்கிறான்.


---------------------------

அன்றொரு ஞாயிற்றுக்கிழமை... எந்தவொரு வேலையும் வைத்துக்கொள்ளாமல் வீட்டிலிருக்கும் நாள் என்பதால் ஹர்ஷுவுடன் அவன் ஆசைப்படும் விளையாட்டு எல்லாம் விளையாடி அவனைக் குஷிப்படுத்துவது வழக்கம்.
திடீரென்று கேட்டான் "அப்பா நாங்க சண்டைப்பிடிப்போமா? நான் விஜய் நீங்க வில்லன் ஓகேயா?"
சரி என்று சொல்லி முடிக்க முதல் சரமாரியாக தன் பிஞ்சுக்காலாலும்கையாலும் மெத்து மெத்து என்று மொத்த ஆரம்பித்தான்.. 

நான் சும்மா விழுவது போல நடிக்க, "வில்லன் வில்லன், ப்ளீஸ் கொஞ்சம் இங்கே வெயிட் பண்ணுங்கோ, நான் என்டை கண்ணை (Gun) எடுத்துக்கொண்டு வந்து உங்களை ஷூட் பண்றேன்" என்று தனக்கேயுரிய மழலையில் சொல்லிவிட்டு ஓடினான்.

---------------------
அசதியாக, வசதியாக சோபாவில் சாய்ந்துகொண்டே கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருந்தேன்.. இவன் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று சொல்லி ஓடி வந்து எனக்கு மேலே விழுந்துகொண்டிருந்தான்.. எனது இரு கால்களினாலும் அமுக்கி ஆளைப் பிடித்துக்கொண்டே " You are under arrest" என்றேன்.
"I'm cricket player. Leave me" என்று பதிலுக்கு சொன்னான் ஹர்ஷு.


"So what?" என்று பிடியை விடாமல் நான் கேட்டேன்..
உடனே அவனிடமிருந்து பதில் " என்ன குற்றம் செய்தேன் நான்?"


-------------------------------
அன்றொருநாள் எனது மனைவி எதையோ காணவில்லை என்று முமுரமாகத் தேடி, கிடைக்கவில்லை என்றவுடன் கவலையுடன் புலம்பிக்கொண்டிருந்திருக்கிறார்.
பெரிய மனுஷத்தமாக நம்ம ஹர்ஷு சொன்னாராம் " விட்டுத் தள்ளுங்கம்மா.. எப்ப பார்த்தாலும் சும்மா யோசிச்சுக் கொண்டு"

எங்கே இருந்து தான் இதெல்லாம் பொறுக்கிறானோ...

---------------------------------

இப்போதெல்லாம் இவன் செய்யும் குறும்புகள் கொஞ்சம் அதிகமாகும்போது என் மனைவி கேட்பார் "ஹர்ஷுவின் இந்தக் குழப்படி பற்றி எழுதப்போறீங்களா?"
ஒருநாள் இவன் உடனே என்னைப் பார்த்து சொல்கிறான் " நல்ல வடிவா எழுதுங்கப்பா.. எல்லாருக்கும் சொல்லுங்கப்பா வாசிக்க சொல்லி"

இன்னும் வ(ள)ரும் ஹர்ஷு குறும்புகள்.... 

Post a Comment

17Comments

Please Select Embedded Mode To show the Comment System.*