ஆரம்பமாகிறது IPL 2012

ARV Loshan
9

2012ஆம் ஆண்டுக்கான IPL இதோ நாளை ஆரம்பமாகிறது. இன்று இரவு இடம்பெற்ற கோலாகல ஆரம்ப விழாவுடன்...



எவ்வளவு தான் திட்டினாலும், விமர்சித்தாலும், ராமராஜன், விஜயகாந்த், S.J.சூர்யா, சிம்பு படங்களைப் பார்க்காமல் இருக்கமாட்டோமோ (இன்னொரு மூன்றெழுத்து ஹீரோவை விட்டதை யாரோ சுட்டிக்காட்டுறது தெரியுது) அதேபோல இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணைகளையும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தாய் நாட்டுக்கான பற்றையும், தமது நாட்டு அணிகளுக்காக விளையாடும் விசுவாசங்களையும் மாற்றி, மறைத்து, கிழித்துப் போட்டாலும், ஏப்ரல், மே மாதங்கள் வந்தால் அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களது பார்வையும், கிரிக்கெட் வீரர்களின் சிந்தனையும் இந்தியாவின் பக்கம் திரும்பிவிடுவதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவின் அண்மைக்கால சரவதேச கிரிக்கெட்டின் மீதான ஆதிக்கத்தினால் IPL நடக்கும் காலத்தில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளுக்கு எல்லாம் கட்டாய ஓய்வு வழங்கப்படவே வேண்டியுள்ளது.
பாருங்கள்.. இலங்கை - இங்கிலாந்து தொடர் இரண்டு டெஸ்ட் போட்டிகளோடு குறை மாச முடிவு எட்டப் படவும் காரணம் இந்த கவனக்கலைப்பான், காசு விழுங்கி IPL தான் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க பரிதாபமாக ஒப்புக்கொள்கிறார்.
நல்ல காலம், இலங்கை அணி வீரர்களின் தேசப் பற்று vs பணப் பற்று மோதல் தவிர்க்கப்பட்டது.
(ஆனாலும் ஓராண்டுக்கு மேல் சம்பளம் இல்லாமல் கிரிக்கெட்டின் மேல் உள்ள காதலால் விளையாடிய அர்ப்பணிப்புடைய வீரர்கள் நம்மவர்கள் என்ற மதிப்பு எப்போதுமே உண்டு)

இவ்வளவு நாளும் IPL வேண்டாம்.. நல்ல முறையில் ஓய்வெடுத்துக்கொண்டு தாய் நாட்டுக்காக சர்வதேசப் போட்டிகளில் மட்டும் விளையாடுகிறேன் என்று அறிவித்து வந்த ஆஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கும் இம்முறை களம் இறங்குகிறார் என்றல் பாருங்களேன்.



கடந்த ஆண்டு விளையாடிய பத்து அணிகளில் கொச்சி இல்லாமல் ஒன்பது அணிகள் இம்முறை களமிறங்குகின்றன.
முதல்மூன்றுஆண்டுகளிலும் நான் மனதார ஆதரவளித்தது சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணிக்கு.. தமிழக அணி என்பதைத்தாண்டி, எங்கள் முத்தையா முரளிதரனுக்காக.. கடந்த ஆண்டு அதே காரணத்தாலும், மஹேலவுக்கும் சேர்த்து கொச்சி டஸ்கேர்ஸ்அணியை விரும்பினேன்.

ஆனால் இம்முறை கொஞ்சம் குழப்பம் தான்.. இவ்வளவு நாளும் அறவே பிடிக்காத இரண்டு அணிகளுக்கு ஆதரவளிக்க வேண்டி வருமோ என்று யோசிக்கிறேன்..
முரளிதரன் விளையாடுவது றோயல் சல்லேஞ்சர்ஸ் பெங்களுர்.. (விஜய் மல்லையா & க்றிஸ் கெய்லினால் பிடிக்காமல் போன அணி)
மஹேல ஜெயவர்த்தன விளையாடுவது டெல்லி டெயார்டெவில்ஸ்.. (ஏனோ முன்பிருந்தே இந்த அணியைப் பிடிக்காது)

இன்னொரு பக்கம் சங்கக்கார விளையாடும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் இருக்கிறது. இந்த அணியில் விளையாடும் கமெரோன் வைட்டும் எனக்குப் பிடித்த வீரர்களில் ஒருவர்.

ஆனால் என்ன தான் இருந்தாலும் மொழியினால் தானாக சென்னை சுப்பர் கிங்க்சில் ஒரு ஈர்ப்பு வந்தேவிடும்.. கடந்த வருட IPL இலும் கொச்சி அணி வெளியேறிய பிறகு சென்னை அணிக்கே எனது ஆதரவு இருந்தது.

இனி இம்முறை விளையாடும் ஒன்பது அணிகளையும் சுருக்கமாக ஒரு அலசல் அலசலாம் என்றிருக்கிறேன்..

முன்னைய IPL பற்றிய அலசல்கள்...

IPL 3 ஆரம்பம்.. அணிகள் ஒரு பார்வை




சென்னை சுப்பர் கிங்க்ஸ்

நடப்பு சாம்பியன்.. இம்முறையும் கிண்ணம் வென்றால் hat trick அடிக்கும் வாய்ப்பு.
தோனியின் தலைமைத்துவமும் இருப்புமே அணியின் மிகப்பெரும் பலம்.
இன்னும் சில முக்கியமான வீரர்களாக மைக்கேல் ஹசி, ரவிச்சந்திரன் அஷ்வின், சுரேஷ் ரெய்னா, ட்வெய்ன் பிராவோ, அல்பி மோர்கல், முரளி விஜய், டக் போல்லின்ஜர், சுராஜ் ரண்டிவ் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இலங்கையின் நுவான் குலசெகரவும் இருக்கிறார்.

அதேபோல நல்ல Formஇல் இருக்கின்ற தென் ஆபிரிக்காவின் பாப் டு ப்லேஸ்சிஸ், ஆஸ்திரேலியாவின் பென் ஹில்பென்ஹோஸ் ஆகியோரும் அணியில் இருப்பதால் நல்ல ஒரு சமபலமுள்ள அணியாகத் தெரிகிறது.

கடந்த IPLஇல் ஒரு ஹீரோவாக மாறிய ரவீந்திர ஜடேஜாவும் இம்முறை சென்னையில்.. அண்மைக்கால விமர்சனங்களுக்குப் பதில் கொடுப்பாரா பார்க்கலாம்.

ஹசி தவிர அனைவரும் ஆரம்பம் முதல் விளையாடலாம்.

இளைய வீரர் அனிருத ஸ்ரீக்காந்த் அண்மைய உள்ளூர்ப் போட்டிகளில் நல்ல form இல் இருப்பதால் அவரையும் எதிர்பார்க்கலாம்.
இலங்கை வீரர்களுக்கு பெரியளவில் விளையாட வாய்ப்புக் கிடைக்கும் என நம்பவில்லை.

என்னைக் கவர்ந்த பத்ரிநாத் இம்முறையும் அணியில் ஒரு முக்கிய துரும்புச் சீட்டாக விளங்குவார் என நம்பி இருக்கிறேன்.
தோனி, ஹசி, மோர்க்கல், அஷ்வின் மற்றும் டூ ப்லேஸ்சிஸ் ஆகியோரைக் கவனிக்கலாம்.

அரையிறுதி செல்லும் பலம் நிச்சயம் இருக்கிறது.


டெக்கான் சார்ஜர்ஸ்



குமார் சங்கக்கார தலைமை தாங்கும் அணி என்பதே இவர்களின் அடையாளம். (இரு ஆண்டுகளுக்கு முன்பு கில்க்ரிஸ்ட்டின் அணி என அடையாளப்படுத்தப்பட்டது )
சர்வதேசரீதியில் பிரபலமான ஒரு சில வீரர்களே இருக்கிறார்கள்.
வளர்ந்துவரும் இளைய வீரர்கள் கை கொடுத்தால் ஒழிய பிரகாசிப்பதில் இடர்ப்பாடுகள் இருக்கும்.

முக்கிய வீரர்கள் - டேல் ஸ்டெய்ன், கமேரோன் வெயிட், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா(காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று கருதப்படுகிறது), டுமினி, பார்த்திவ் பட்டேல், டானியேல் கிறிஸ்டியன் மற்றும் இம்முறை பெருமளவு எதிர்பார்ப்போடு வாங்கப்பட்ட டறேன் பிராவோ ஆகியோர் (ஆனால் பிராவோ துடுப்பாட்டத்தில் ஆஸ்திரேலியாவோடு தடுமாறி அணியை விட்டு அனுப்பப்பட்டுள்ளார்)

உள்ளூர் வீரர்களில் ஷீக்கார் தவான், ரவி தேஜா, இஷான்க் ஜக்கி ஆகியோரை நம்பி இருக்கலாம்.

சங்கா முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் - டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால்.

இந்த அணியின் துடுப்பாட்டம் தான் நம்பிக்கை என்கிறார் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன்.
உண்மை தான்.. சங்கா & குழுவின் துடுப்பாட்ட, சரியாக அமைந்தால் மட்டுமே அரையிறுதியை நினைத்துப்பார்க்க முடியும்.



டெல்லி டெயார்டெவில்ஸ்



கடந்த ஆண்டில் சரியான வீரர்கள், சமபலமான அணி இல்லாமல் மரண அடி வாங்கிய அணி, இம்முறை வீரர்கள் ஏலத்தில் விலைகொடுத்து பிரபலமான, பெரிய வீரர்களை வாங்கி எதிர்பார்ப்போடு களம் இறங்குகிறது.

இந்திய அணியிலிருந்து 'ஓய்வு' வழங்கப்பட்டுள்ள செவாக் தன்னை நிரூபித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மஹேல ஜெயவர்த்தன, கெவின் பீட்டர்சன், மோர்னி மோர்கல், டேவிட் வோர்னர், ரொஸ் டெய்லர் (இவரது கை முறிவு அவ்வளவு சீக்கிரத்தில் குணமடைந்து விடுமா என்பது தெரியவில்லை), டேவிட் வோர்னர், கொலின் இங்க்ராம் என்று அடுக்கடுக்காக அதிரடி + அனுபவம் வாய்ந்த வீரர்கள்.

போதாக்குறைக்கு இந்தியாவின் அனுபவம் வாய்ந்த (அணியில் நிரந்தர இடம் இல்லாவிட்டாலும்) அஜித் அகார்கார், இர்பான் பதான் போன்ற சகலதுறை வீரர்களும் தென் ஆபிரிக்காவின் வான் டேர் மேர்வும் இருக்கிறார்கள்.

இதை விட என் மனது சொல்வது சரியாக இருந்தால் டெல்லி இம்முறை ஏலத்தில் எடுத்துள்ள, பெரியளவில் பிரபலமாகாத ஏரன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), டக் ப்ரேஸ்வேல் (நியூ சீலாந்து) ஆகியோரும் நம்பி இருக்கக் கூடிய வேணுகோபால் ராவும் இம்முறை ஏதாவது செய்வார்கள்.

இவர்களோடு அண்மைக்காலத்தில் புயல் கிளப்பிவரும் மேற்கிந்தியத் தீவுகளின் புதிய சகலதுறை வீரர் அன்ட்ரே ரசலையும் டெல்லி வாங்கியுள்ளது. ட்வெய்ன் பிராவோ, கெரோன் பொல்லார்ட் வழியில் இவரும் முத்திரை பதிப்பார் என்று நம்பலாம். இம்முறை பங்களாதேசிலும் (BPL) ஒரு கலக்கு கலக்கி இருந்தார்.

உள்ளூர் வீரர்களில் விக்கெட் காப்பாளர் நாமன் ஓஜா, அண்மைக்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் பிரகாசமாகத் தெரிகிறார்கள்.
டெல்லியின் சகலதுறை சமபலமானது இம்முறை வெல்லக் கூடிய வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
ஆனால் வெளிநாட்டு வீரர்கள் நால்வரை டெல்லி எவ்வாறு தெரிவு செய்யப் போகிறது என்பதிலும், செவாக் தன்னை தலைவராகவும், அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டவீரராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதிலும் தான் அரையிறுதி வாய்ப்புத் தங்கியுள்ளது.

ஆனால் வீரர்களின் தற்போதைய formஇல் (குறிப்பாக மஹேல, ரசல், வோர்னர், மோர்க்கல்) டெல்லி அரையிறுதி செல்லும் என்று நம்பியிருக்கலாம்.


கிங்க்ஸ் XI பஞ்சாப் 



நாற்பது வயதிலும் நச்சென்று இளமையோடு அணித் தலைவராகவும், பயிற்றுவிப்பாளராகவும் துடிப்போடு வலம் வரும் கில்க்ரிஸ்ட்டின் விஸ்வரூபத்தை மீண்டும் நம்பிக் களத்தில் இறங்குகிறது பஞ்சாப்.
பாகிஸ்தானின் வீரர் ஒரேயொருவர் இம்முறை IPL இல் விளையாடுவதும் இந்த அணிக்கே.. அசார் மஹ்மூத். உலகில் முதல்தரப் போட்டிகளில் விளையாடும் ஒரு மிகச் சிறந்த சகலதுறையாளர். ஆனால் இவர் பஞ்சாப்பினால் ஏலத்தில் எடுக்கப்பட்டது ஒரு இங்கிலாந்து வீரராக.

டேவிட் ஹசி, ரயான் ஹரிஸ், ஷோன் மார்ஷ் போன்ற ஆஸ்திரேலிய பிரபலங்களோடு, இங்கிலாந்தின் மஸ்கேரனாஸ்,இந்தியாவின் அனுபவம் வாய்ந்த பியுஷ் சாவ்லா, பிரவீன் குமார் மற்றும் உள்ளூரில் கலக்கி வரும் இளையவீரர்களான அபிஷேக் நாயர், மந்தீப் சிங் ஆகியோரும் கடந்த IPLஐ அதிர வைத்த போல் வல்தாட்டியும் இருக்கிறார்கள்.
இவர்களோடு மும்பாய் அணியில் முக்கிய வீரராக இருந்த ராஜகோபால் சதீஷ் இம்முறை பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார்.

கில்லியை பிரதானமாக நம்பி இருக்கும் பஞ்சாபுக்கு இம்முறை இங்கிலாந்தின் சகலதுறை வீரர் ஸ்டுவர்ட் ப்ரோடின் உபாதை பெரும் இழப்பே..

அரையிறுதி செல்வதற்கு ஆஸ்திரேலியர்கள் நால்வரின் தொடர்ச்சியான உழைப்பு அவசியம்..


ஏனைய ஐந்து அணிகள் பற்றி நாளை முதலாவது IPL 2012 போட்டி ஆரம்பிக்க முதல் இடுகை வரும்.. (நம்பி இருங்கப்பா.. நம்பிக்கை தானே வாழ்க்கை)



Post a Comment

9Comments

Please Select Embedded Mode To show the Comment System.*