கடுப்பைக் கிளப்பும் விடுப்பு

ARV Loshan
7

விடுமுறைகள் மலிந்த ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது பெருமையான விஷயமா தெரியவில்லை; ஆனால் நிச்சயமாக தனிப்பட்ட முறையில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. உடனே தொழில்துறை, ஆக்கபூர்வம், நாட்டின் மொத்த உற்பத்தி எப்படி இப்படி பெரிதாக சிந்தித்து என்னை ரொம்பப் பெரிசா எல்லாம் மாற்றிவிடாதீர்கள்.

இவ்வளவு விடுமுறை இருந்தும் நீண்ட விடுமுறைகளையோ, மற்றவர்கள் விடுமுறை அனுபவிக்கும் பண்டிகைக்கால விடுமுறைகளையோ அனுபவிக்க முடியாதவன் என்பதால் தான் இந்தக் கடுப்பு.
அவனவன் ஆசையாகக் கேட்டு, அனுதாபம் தேடி விடுமுறை கேட்கிற நேரம் அள்ளி அள்ளிக் கொடுக்கும் எனக்கு அனேக நேரங்களில் விடுமுறை இல்லை.

விடுமுறை இல்லாமலே வேலை செய்து (விடியல் செய்து) பழகியதோ என்னவோ, விடுமுறை எடுப்பதிலும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.. அத்துடன் விடுமுறை கொடுப்பதும் நானே என்பதனாலும் இருக்கலாம்..
ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி விடுமுறை எடுப்பதில் ஒரு சுவாரஸ்யம் தான். அத்துடன் பணிபுரியும் இடம் ஊடகத்துறை என்பதால் அனாவசிய விடுமுறைகளை எம்மவர்கள் எடுப்பதும் கிடையாது; பொறுப்பானவர்கள். :))


இந்திய கார்ட்டூனிஸ்ட் நண்பர் சதீஷ் ஆச்சார்யாவின் கைவண்ணம்..


ஆனால் வேறு வேறு இடங்களில் எடுக்கப்படும் விடுமுறைகளைப் பற்றி ஒருமுறை விடியல் செய்தபோது நிறைய சுவாரஸ்யமான விடயங்கள் வெளிவந்தன..
அதுபற்றி இந்த இடுகைக்குப் பின்னர் இதுபற்றி ஒரு விடியல் செய்து எல்லாவற்றையும் தொகுத்துப் பதிகிறேன்..

அண்மையில் வாசித்த இணையத்தளக் கட்டுரை ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களைக் கண்டேன்.. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று..

தொழிலாளர்கள் பொதுவாக எடுக்கும் சுகயீன விடுமுறைகளில் என்ன செய்கிறார்கள்? என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன.
அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு உண்மையிலேயே உடல்நலம் சரியில்லை என்று இந்த ஆய்வு சொல்லியிருப்பது ஆச்சரியமானது.

அண்மையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல்வேறுபட்ட வேலைகளில் மற்றும் பல மட்டங்களிலான சம்பளங்களிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் புள்ளிவிபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய வேலை வாய்ப்புத்தளமான theFIT இந்த ஆய்வை, 5000 பேரை மையமாகக்கொண்டு நடாத்தியுள்ளது.
இந்த ஆய்வின்படி 84 சதவீதமானோர் அவர்கள் கடைசியாக எடுத்த சுகயீன விடுமுறையானது, உடல் நிலை சரியில்லாத தமது குழந்தைகளைக் கவனிக்கவே எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதிசயிக்கத்தக்கதாக ஐந்து ஆண்களில் ஒருவரும் ஏழு பெண்களில் ஒருவரும் மட்டுமே சுகயீனம் என பொய்யான காரணத்தைக்கொண்டு விடுப்பு எடுத்துள்ளனர். உண்மையான காரணத்தை சொல்ல முடியாத சந்தர்ப்பங்களில், ஒருநாளேனும் ஓய்வாக இருப்பதற்கு, வேறுவேலைகளுக்கான நேர்முகத்தேர்வுகள் போன்ற காரணங்களுக்காகவே சுகயீனம் என்று அவர்கள் சொல்லியுள்ளதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. (இந்த ஆய்வு அமெரிக்கா மற்றும் மேலைத்தேயத்தில் எடுத்திருக்கிறாங்க என்று மனசுக்குள் சொல்லுவீங்களே)  

பெண்களைப் பொறுத்தவரை இப்படிப் பொய்யான விடுப்புகள் எடுப்பது குறைவாகவே உள்ளது. அதிலும் அவர்களுக்குரிய விடுமுறை நாட்களில் கூட வேலை செய்வதில் பெண்கள் விருப்பம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (அட இதை நம்ப முடியலையே... இலங்கையில் இந்தக் கருத்துக்கணிப்பை யாராவது எடுப்பீங்களா?)

41 வீதமான ஆண்களுடன் ஒப்பிடும் போது 54 சதவீதமான பெண்கள், ஒன்பது மணிநேரம் வரை வேலையில் ஈடுபடுவதாகவும்  இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் 91 சதவீதமானவர்கள், வாரநாட்கள் ஐந்திலும் தங்களது வேலையை வேலைநேரத்தில் செய்வதுடன்,  ஆண்களில் கிட்டத்தட்ட பாதியளவான 47 சதவீதம் பேர், எட்டு மணித்தியாலங்கள் வரை வேலை செய்வதாகவும், 41 சதவீதம் பேர், எட்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வேலையில் ஈடுபடுவதாகவும் மேற்படி ஆய்வு குறிப்பிட்டுள்ளது. (ஆகா என்னைப் போலவும் கணிசமானோர் இருக்கிறார்கள் என்று ஒரு ஆறுதல் )



மொத்த வேலைபுரிபவர்களில் 65 வீதமானோரும்,அதில் பெண்களில் 67 வீதம் மற்றும் ஆண்களில் 60 வீதமானோரும் தங்களது விடுமுறை நாட்களில் கூட வேலை புரிவதாகவும் ஆய்வு கூறியுள்ளது. மேலும் பெண்கள், தாம் செலவிடும் நேரம் பயனுள்ளதாக அமையவேண்டுமெனவும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இறுதியாக விசித்திரமான கருத்தொன்றையும் வெளியிட்டுள்ளது இந்த ஆய்வறிக்கை.
இது உண்மையில் என்னை ஆச்சரியப்படுத்தியது.
 26 வீதமான ஆண்கள் தமது சம்பள விவரங்களை நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்களாம். பெண்களில் கூட 17 வீதமானோருக்கு இதே மனநிலை காணப்படுகிறதாம்!

யோசித்துப் பார்த்தேன்.. சரியாகத் தான் இருக்கும்.. இந்தக் காலப் பொருளாதார நிலையில் நண்பர்களிடம் கூட இதைச் சொல்லாமல் இருப்பது தான் சரியாக இருக்கும்..
எங்களைப் பிச்சைக்காரன் என்று கேவலப்படுத்தாமல் இருக்கவும், பெரும் பணக்காரன் என்று நினைத்துக் கடன் கேட்டுத் தொல்லை தராமல் இருக்கவும்..

நண்பர்ஸ்.... இப்ப இதை வாசித்த பிறகு என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?
விடுமுறை எப்படி எடுப்பது என்று ஐடியா போடவா? அல்லது உண்மை மட்டுமே சொல்லி இனிமேல் விடுப்புக் கேட்கப் போகிறீர்கள் என்றா?
எப்படி முடிவெடுத்தாலும் அது எனக்கு மட்டும் எப்போதும் கடுப்பைத் தரும் என்பது நிச்சயம்.

குறிப்பு - ஊர்ப்பேச்சு வழக்கில் விடுமுறையை விடுப்பு என்று சொல்வதும் வழக்கம்.

இதே மாதிரியான முன்னைய இடுகைக்குக் கிடைத்த வரவேற்பும், திருப்தியும் இந்த இடுகையை இட எனக்கு உற்சாகம் தந்தது..
படித்த, பிடித்த விஷயங்களைத் தானே பிடித்த மாதிரியாகப் பகிர ஆசைவரும்.
இந்த இணைப்பு உங்கள் வாசிப்புக்காகவும் தொடர்ந்து வரும்..


Post a Comment

7Comments

Please Select Embedded Mode To show the Comment System.*