மிகத் தாமதமாக 'தோனி' படம் பற்றி நான் பேசுவதால் இதை விமர்சனமாக எடுக்காதீர்கள். நல்ல படம் ஒன்றைப் பற்றி பார்த்த, பார்க்காத உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை.
வீட்டிலே சொந்த செலவில் எழுபது ரூபாயில் வாங்கிய தரமான DVDயில் பார்த்தது.
தரமான, வித்தியாசமான படங்களை தயாரிப்பதில் மற்றவரை ஊக்குவித்து, தானும் பங்கேற்று வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் முதல் தடவையாக இயக்கியுள்ள படம். கதை, திரைக்கதை, தயாரிப்பு & பிரதான பாத்திரமும் அவரே.
பிரகாஷ் ராஜ் முதலிலேயே அறிவித்தது போல இந்தக் காலக் கல்விமுறையால் மாணவ,மாணவியர் சிறுவயதிலேயே சந்திக்கும் அழுத்தங்கள், அவர்களது பெற்றோர் மீது சுமத்தப்படும் மன, பண சுமைகள் பற்றி அழுத்தமாகப் பேசியுள்ளது தோனி.
தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப்படாத இரு விடயங்கள் பற்றிப் படம் முழுக்க இயக்குனராக பிரகாஷ் ராஜ் பேசுகிறார்..
1.(ஆரம்ப) பாடசாலைக் கல்வி - (கல்லூரிக் கல்வி பற்றி இறுதியாக வெளிவந்த நண்பன் வரை இந்திய தமிழ் சினிமாக்கள் பேசிவிட்டன)
2.Single Parents என்று சொல்லப்படும் ஒற்றைப் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பில் இருக்கும் சிக்கல்கள்.. இதிலும் தந்தை இல்லாமல் தாயின் வளர்ப்பில் வளரும் பிள்ளைகள் பலரைத் தமிழ் சினிமாக்களில் பார்த்தாலும், தந்தை வளர்க்கும் குழந்தைகள் பற்றிக் கவனித்து குறைவே.
மனைவியை இழந்தும் ஒரு ஆண், மற்றும் ஒரு பெண் குழந்தையோடு அரச உத்தியோகத்தில் இருந்துகொண்டு வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சிக்கன வாழ்க்கை வாழும் ஒரு அப்பாவி, நல்ல மனிதர் பிரகாஷ் ராஜ். தன குழந்தைகளின் எதிர்காலம் கல்வியால் வளப்படும் என நினைப்பதனால், குடும்பம் நல்ல நிலைக்கு வரும் என்று அவர்களுக்கு கல்வியைக் கஷ்டப்பட்டு நல்ல இடங்களில் வழங்க முயல்கிறார்.
ஆனால் கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடுகொண்ட அவரது மகனுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையிலான கிரிக்கெட் - கல்வி போராட்டம் தான் அமைதியான குடும்பத்தைக் குலைத்துப்போடும் முக்கியமான விடயமாக மாறுகிறது.
இந்த இடம், இலங்கையில் பாடசாலைக் கல்வியில் மாணவர், பெற்றோர் சந்திக்கும் குழப்பத்துக்கும் பொருத்தமாகவே உள்ளது. கல்வி தவிர்ந்த புறக் கிருத்திய நடவடிக்கைகளில் தம் பிள்ளைகளை ஈடுபடுத்தத் தயங்கும் தமிழ் மொழி பேசும் பெற்றோருக்கும் பல முக்கியமான விஷயங்களைக் காட்டுவதாக உள்ளது.
நான் படித்த காலத்திலும் இதே குழப்பம் என் வாழ்விலும், எங்கள் குடும்பத்திலும் நிலவியது.
கிரிக்கெட்டில் அளவு கடந்த விருப்பம் கொண்டிருக்கும் மகன் அதில் காட்டும் அக்கறையில் ஒரு பாதியளவாவது கல்வியிலும் காட்டினால் என்ன என்று அவனிடம் கெஞ்சும் இடங்களிலும், கல்வியில் மந்தமாகிக் கொண்டே போகிறானே என்று ஆதங்கப்பட்டு அவனிடம் கெஞ்சி, கோபப்பட்டு, விரக்தியடையும் இடங்களிலும் தேசிய விருது பெற்ற முதிர்ச்சியைக் காட்டி ஜொலிக்கிறார் பிரகாஷ் ராஜ்.
அதீத கோபத்தினால் மகனை அடித்துவிடுவதும் அதற்குப் பின் வரும் காட்சிகளும் பிரகாஷ் ராஜ் தவிர வேறு யாராலும் அவ்வளவு அற்புதமாக செய்திருக்க முடியாதவை.
தான் மகனை அடிக்கவில்லை; இந்தக் கல்வி முறை தான் அடிக்க வைத்தது என்று பொருமுகின்ற இடங்கள், பொங்கி வெடிக்கின்ற இடங்கள் யதார்த்ததிலிருந்து கொஞ்சம் மிகையாக நின்றாலும் ஒரு தந்தையின் பொருமலை, உண்மையை சொல்லப் போய் தான் சந்திக்கும் சிக்கல்களை அடக்க முடியாமல் வெடிக்கும் இடங்களை வேறு விதமாக ஒரு இயக்குனராகக் காட்ட முடியாது என்பது தெளிவு.
இயக்குனராகவும் பி.ரா முதல் படத்திலேயே வென்றுவிட்டார் என்று நம்புகிறேன்.
இப்படியான படங்களில் வருகின்ற காட்சிகளை ஒரேயடியாக சோக சாயம் பூசி எம்மையும் அழவைக்காமல், நகைச்சுவைக் காட்சிகளுடன் இணைத்துக் கொண்டு சென்றுள்ள விதம் ரசிக்கக் கூடியது.
ஒரு நடுத்தர அப்பாவி மனிதனின் வாழ்க்கையின் நாளாந்த அவஸ்தைகளை, அவனை சூழ வாழும், அலுவலகத்தில் அவனுடன் பணிபுரியும் வேறுபட்ட குணாம்சம் கொண்டவரைக் காட்டுகின்ற உத்தியும் ரசனை. ஆனால் சொல்லும் விதத்தில் பி.ரா தனது குருநாதர் பாலசந்தரைக் கொஞ்சம் தழுவியிருக்கிறார்.
பாத்திர உருவாக்கங்களில் பொருத்தமான பாத்திரங்களை ஒவ்வொரு இடங்களிலும் இருந்து தேடி எடுத்திருப்பதில் இருந்து எவ்வளவு சிரத்தையாக தனது சக பாத்திரங்களில் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
மகன் கார்த்திக்காக நடித்திருக்கும் - அசத்தியிருக்கும் சிறுவன் ஆகாஷ் பூரி, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் மகன்.
அயலவராக வரும் அழகான பெண் (நளினி) ஒரு மராத்தி நடிகையாம்.. இயல்பான நடிப்பு + இயற்கையான அழகால் கவர்கிறார். பெயர் ராதிகா ஆப்தே.
நாசர், பிரம்மானந்தம், சரத் பாபு, தலைவாசல் விஜய் ஆகியோரின் பாத்திரங்கள் அவர்களுக்கானவை :)
பிரபுதேவா பிரகாஷ் ராஜுடனான நட்புக்காக ஒரு ஆட்டம் போட்டு செல்கிறார்.
கந்துவட்டிக்காரனாக வரும் நடிகர் முரளி ஷர்மா இன்னும் சில படங்களில் வில்லனாக வரக்கூடும்.
அந்தப் பாத்திரத்தின் குணாம்சங்கள் ரசிக்கக் கூடியவை.
இளையராஜாவின் இசையில் பாடல்களில் மூன்று மனதில் நிற்கிறது. காட்சிகளுடன் நகர்ந்து செல்வதால் பாடல்களின் அர்த்தமும் அழுத்தமும் அதிகமாக எடுபடுகிறது.
படத்தின் பிரதான கதையம்சம் கல்வி நடைமுறை, அதற்கு அடுத்ததாக நடுத்தர வர்க்க குடும்பத்தின் போராட்டம் என்று இருந்தாலும், தனியாக வாழும் நளினி என்ற பெண்ணின் அவல வாழ்க்கையும் இடைச் செருகலாக வந்துபோவது மற்றொரு நடுத்தர வர்க்க சமூகத்தின் அவலம் என்று எடுத்துக்கொள்ளலாம் ; ஆனால் சில சிக்கல்களையும் போகிறபோக்கில் நகைச்சுவையாக சொல்வதில் சிலது அழுத்தமில்லாமல் போய்விடுகிறது.
சொல்லவேண்டிய விடயமும், சமூகத்தில் நடக்கிற விடயமுமாக இருக்கிறது. ஆனால் பிரகாஷ் ராஜ் சொல்லவந்த விடயத்தை இடை நடுவே குழப்பிக் கொண்டதாக ஒரு நெருடல்.
பொதுவாக இலங்கை சூழலில், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் கல்வி தான் வாழ்க்கையின் முதலீடாகக் கருதப்படுகிறது. அதிலும் மத்திய வர்க்கக் குடும்பங்கள் இன்றும் கல்வியைக் கொண்டே தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.
ஒரு சாதாரண குடும்பத்த் தந்தையாக பிரகாஷ்ராஜ் தனது மகனிடம் எதிர்பார்த்து ஏங்குவது இயல்பானது; ஏற்றுக் கொள்ளக் கூடியது.
நிரந்தர மாத வருமானம் போதாமல் கடன் பட்டு, ஊறுகாய் விற்று , அலைந்து திரிந்து பிள்ளைகளைப் படிப்பிக்க பாடுபடும் ஒரு தந்தையின் பதைபதைப்பை எம்மால் உணரக் கூடியதாகவே உள்ளது.
தோனியையும் சச்சினையும் அவர் வெறுப்பதும், சாபமிடுவதும் கிரிக்கெட்டை மகன் விட்டாலே அவனது கல்வி உருப்படும் என்று அவர் எதிர்பார்ப்பதும் அவரது நிலையிலிருந்து பார்க்கும்போது சரியாகவே தோன்றுகிறது. அதுவும் இவ்வளவு செலவழித்தும் மகன் சித்தியடையவில்லை; பாடசாலையிலிருந்து அவனை நீக்கிவிடப் போகிறார்கள் என்று தெரியவரும்போது அவர் அடையும் மனவருத்தமும் யதார்த்தமானது.
அந்த நேரத்தில் அவர் மகன் கிரிக்கெட் பார்க்கும் காட்சிகள் எங்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தி பிரகாஷ்ராஜ் மீது அனுதாபத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால் மகனுக்கு எப்போது அடிக்கிறாரோ அப்போது எங்கள் அனுதாபத்தின் ஆதரவு மகன் பக்கம் மாறுகிறது.
அவன் "எனக்கு maths வராது; கிரிக்கெட் தான் தெரியும்" என்று சொல்லும் இடத்திலிருந்து எங்கள் அனுதாபக் கோணம் மாறுகிறது.
அதற்குப் பிறகு தான் படத்தின் அடிநாதமான கல்விமுறையின் குறைபாடு பற்றி பிரகாஷ் ராஜ் கொதிப்படைய நாமும் இணைந்துகொள்கிறோம்..
அதற்குப் பிறகு தான் அந்த விடயத்தின் சீரியஸ் தன்மை எம்மாலும் உணரப்படுகிறது; பிரகாஷ் ராஜின் உணர்ச்சிமயமான போராட்டத்தின் உண்மைத் தன்மையும் புலப்படுகிறது.
ஆனால் ஏதோ ஒரு முரண்பாடு இதற்குள் இருப்பதாக மனம் சொன்னது...
கொஞ்சம் பிரசாரத் தன்மையும் சேர்ந்துகொண்டது போல..
ஆனாலும் தோனி போன்ற படங்கள் வரவேண்டும்.. யதார்த்த, சமூகவியல் பிரச்சினைகளைத் தெளிவாக முன்வைக்கும் படங்கள் பிரசார நெடி இல்லாமல் வந்தால் மக்களை இலகுவாகப் போய்ச்சேரும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தயாரிப்பாளராக இருக்கும்போது சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்து மற்றவரின் தயாரிப்பில் பிரம்மாண்டத் திரைப்படங்களைத் தயாரிக்கும் இயக்குனர் வரிசையில் இல்லாமல், பிரகாஷ் ராஜ் தான் இயக்கிய முதல் திரைப்படத்தைத் தானே தயாரித்து துணிச்சலாக தண்ணி முன்னிறுத்தியே நடித்திருக்கிறார் என்பது பாராட்டுதலுக்குரியது.
இன்னும் எதிர்பார்க்கிறேன்.