முற்குறிப்பு - கூகிள் திடீரென எனது வலைப்பதிவுகளை சுருட்டி இரு நாள் ஒளித்து வைத்ததனால் பதறிப்போனேன். என்னுடன் சேர்ந்து தேடிய, கவலைப்பட்டு விசாரித்த அத்தனை அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள்.
காணாமல் போன பொக்கிஷம் மீண்டும் வந்த மகிழ்ச்சியோடு, நேற்று வந்திருக்க வேண்டிய இடுகை இன்று..
காணாமல் போன பொக்கிஷம் மீண்டும் வந்த மகிழ்ச்சியோடு, நேற்று வந்திருக்க வேண்டிய இடுகை இன்று..
காதலர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
மனது முழுக்கக் காதல் இருக்கையில் எல்லா நாளும் எங்களுக்கு காதலர் தினம் தானே?
ஆனாலும் இந்த நாளில் மனதில் ஒரு அதிகப்படியான சந்தோஷமும், எங்களுக்கான நாள் என்ற ஒரு உற்சாகமும் வருகிறது தானே?
அது தான் இந்த விசேட நாளின் சிறப்பு.
நான் என்று இருப்பதை நாம் என்று மாற்றிக்கொள்ளவே நாம் அனைவருமே விரும்புகிறோம்..
தனித்து வாழ்வதில், தனித்து சுவைப்பதில் எப்போதுமே ஆர்வம் இருக்காது எவருக்கும்..
நானை நாமாக மாற்றுவதில் யாருக்கும் துணை வருவது உரிமையுள்ள 'நீ'
இந்த 'நீ' மீது எப்போதுமே எனக்கு ஒரு தீராக் காதல்..
நீ என்பது மரியாதை இல்லாத சொல்லாக 'நீ' சொல்லப்படலாம்.. ஆனாலும் 'நீ'யில் இல்லாத உரிமை வேறெதிலும் இல்லை.
நெருக்கமானவர்களை நீ என்று அழைத்து உரிமை கொண்டாடுவது எப்போதுமே எனக்குப் பிடித்தமானது.
உரிமை + அன்பு இருந்தால் மட்டுமே அந்த 'நீ ' வரும்....
ஆனால் இந்த 'நீ' கொஞ்சம் வித்தியாசமான நீ.. உரிமையான நீ.. கொஞ்சம் பழைய நீ..
நான் என்றோ எழுதி.. என் டயரியில் கிடந்தது, பின் ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி..
மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு இடுகையாக வந்தது..
இப்போது மீண்டும் :)
அண்மையில் ஒரு அழகான கையெழுத்தில் இந்த 'நீ' கவிதையைப் பார்த்து என் கவிதை என்பதே மறந்து போய், அந்த எழுத்தின் அழகில் (லும்) இந்தக் கவிதையை புதிதாய் உணர்ந்து ரசித்து அதன் பின் தான் இதை எழுதியதே 'லோஷன்' என்று உணர்ந்து சிலிர்த்தேன் :)
நல்ல காலம் காதலர் தின நேரம் ஞாபகம் வந்தது..
நீ...
நீ...
ஒற்றைச் சொல்லில் உரிமையெடுத்து
உயிரனைத்தையும் ஒன்றுபடுத்தி
ஒருமையில் - தனிமையளித்தும்
தன்மையை அழித்தும்
தன்மையாக ஒலிக்கும் -
முன்னிலையாக உள்ள
படர்க்கைச் சொல் இது!
நீயெல்லாம் - நானாக
நானென்பது நீயென்ன
நீயும் நானும் - நீயானோம்!
நானும் நீயும் - நானானோம்!
நீயின்றி – நானும்
நானின்றி நீயும் - தீயானோம்!
நீ – நீண்டு ஒலிக்கையில்
அளவற்ற அன்பு!
குறுகிச் சிறுக்கையில்
சுருக்கமான தெளிவு!
ஆங்கில YOUவில் இல்லாத
அழகு – அன்பின் அடர்த்தி
தமிழின் 'நீ'யில் உண்டு
தமிழின் 'நீ' மெல்லினம்!
எனவே மென்மையுண்டு!
தனிச் சொல்லாதலால் - மேன்மையுமுண்டு!
நீங்களில் 'கள்' இருக்கலாம்
ஆனால் மயக்கம் இல்லை
ஆம்!
அன்பின் மயக்கம் இல்லை!
நீயில் உரிமையுண்டு
உணர்ச்சியும் உண்டு!
நீரின் குளிர்மை!
தீயின் வெம்மை!
நீரோட்டத்தின் வேகம்!
தீராத மோகம்!
அத்தனையும் சேர்ந்த அற்புதக் கலவை நீ!
புரிந்து கொள்ள முடியாத புதிர் நீ!
கனவு போலக் கலைவாய்
காற்றுப் போலவும் நீ
சிலநேரம் வீசியடிக்கும் கோபப்புயல்
சிலநேரம் இன்பம் தரும் தென்றல்
அடிக்கடி மாறும் காலநிலை போல்
புரிந்து கொள்ள முடியாத புதிர்ப்புதையல் நீ!
யாரோ நீ என்று தேடுவதிலே கழியும்
என் சந்தோஷக் கணங்கள்..
கண்டு விட்டால் கலைந்துவிடுமோ
இல்லை காதலால்
நீயும் நானும்
நாமுமாகி
நீ என்பதே நானாகுமோ??
நானெல்லாம் நீயான பின்
தனியாக 'நீ' ஏது?