சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்..
இப்போதெல்லாம் மனதில் எழும் விஷயங்களை சுருக்கமாக சுருக்கென்று Twitterஇல் சொல்லிவிடக் கூடியதாக இருக்கிறது..
இதனால் தான் பதிவு இடல் குறைந்ததோ என்று யாரும் கேட்கக் கூடாது. ஒரு இடத்தில் இருந்து ஒரு இடுகைக்காகக் குறைந்தது இரு மணிநேரம் செலவழிக்க நேரம் வாய்ப்பது அபூர்வமாகிவிட்டது...
கிடைக்கும் நேரத்தில் சேர்த்து வைத்து ஒட்டுமொத்தமாக Facebook, Twitter, Gmail இல் நண்பர்களின் மடல்களுக்குப் பதில் அளிப்பதுடன் சரி :)இந்த விஷயங்கள் கொஞ்ச நாட்களாகவே மனதில் இருந்தவை..
சில சிலவற்றை விடியலிலும், விடியலில் நான் அண்மையில் அறிமுகப்படுத்திய 'விடியலிசம்' பகுதியிலும் சொல்லி இருந்தேன்.. இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்பதை விட, உரிமையோடு என் நண்பர்களுக்கு சொல்கிற விஷயங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
எனக்கு வாழ்க்கையில் ஏதாவது மனசை மிக நோகடிக்கிற விஷயங்கள் தவிர மற்ற நேரங்களில் உற்சாகமாக நான் இருக்கவேண்டும்.. நான் வேலை செய்கிற , வீட்டில் இருக்கிற , பழகுகிற நண்பர்களின் சூழல் ஆகியவையும் சோர்வில்லாமல், சோகமில்லாமல், உற்சாகமாக, சிரித்த முகங்களோடு இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.
அப்படி நான் பழகும் சூழலில் யாராவது ஒருவர் கொஞ்சம் நீட்டிய முகத்தோடோ, அல்லது upset ஆகவோ, சோர்வாகவோ இருந்தால் மனம் பொறுக்காது.. அவரை எப்படியாவது வழமையான மனநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று முயற்சிப்பேன்..
இல்லை என்னால் தான் அப்படி ஆனார் என்றால் எப்படியாவது அந்த மூடிலிருந்து மாற்ற வேண்டும் என்று நினைப்பேன்..
ஆனால் சிலர் நத்தை கூடுக்குள்ளே தலையை இழுத்து வைத்திருப்பது போல சந்தோஷங்களை உள்ளே மறைத்து எந்த நேரமும் தம்மை சுற்றி ஒரு சோக மேகத்தை இழுத்து வைத்திருப்பது எனக்கும் சேர்த்து மனதில் உள்ள உற்சாகத்தை வடியவைத்துவிடும்..
வீட்டில் உம்மணாமூஞ்சியாக யாராவது இருந்தால் அவர்களை என்னோடு பேச வைக்க முயன்று இறுதியாக அது பெரிய சண்டையாகவும் முடிந்ததுண்டு..
சில நெருக்கமானவர்களை நானே mood out ஆக்கி, பின்னர் நானே மன்னிப்புக் கேட்டு சிறுபிள்ளைத் தனமாக நடந்தும் இருக்கிறேன்.
எதையும் Positive mindஓடு அணுகவேண்டும் என்று நான் நினைப்பதை என்னைச் சூழவுள்ளவர்களுக்கு முடிந்தவரை ஊட்ட முயற்சிக்கிறேன்..
ஒரு செயல் ஒன்றை ஆரம்பிக்கும்போது செய்ய முடியாது, முடிக்க இயலாது, வெற்றிபெற முடியாது என்ற நினைப்புக்களோடு ஆரம்பிக்காமல், நம்பிக்கையோடு ஆரம்பிக்கவேண்டும்.. இடை நடுவே விடப்படும் காரியங்களை விட, நம்பிக்கையீனங்களோடு ஆரம்பிக்கப்படும் செயல்களைவிட ஆரம்பிக்காமல் இருப்பதே நல்லது என்று நினைப்பவன் நான்.
ஆரம்பித்தால் அந்தக் காரியத்தை முடியுமானவரை முடிக்க எப்படியாவது முயல்வேன்.
காலையில் விடியலின் மூன்று மணித்தியாலங்கள் நான் மற்றவர்களை எப்போதும் உற்சாகப்படுத்துகிற நேரம்.. அந்நேரத்தில் எனக்கே ஏதாவது மனப் பிரச்சினைகள், கவலைகள் இருந்தாலும் நான் காட்டிக் கொள்ளக் கூடாது.. காட்டிக் கொள்வதும் கிடையாது.. (அல்லது கூடுமானவரை முயற்சிப்பேன்)
அந்த நேரம் தானாக நானும் உற்சாகமாகிக் கொள்வேன்..
உற்சாகமாக 10 மணிக்கு கலையகம் விட்டு வெளியே வரும்போது அந்த உற்சாகத்தின் அலைகளை அப்படியே எல்லா இடமும் தவழ விடவேண்டும் என்று யோசிப்பேன்.. ஆனால் எங்கள் அலுவலக மூடும் எப்போதும் ஒரே மாதிரியாக இராது இல்லையா? இடை நடுவே சில நாட்கள் மிக சிரமங்களை நாம் அணியாகக் கடந்த நாட்கள்.. உள்ளே கலையகத்தில் இருந்து வெளியே வந்தவுடன் கனத்த மௌனத்துடனும், கவலையுடனும் இருக்கும் பலரைக் கலகலப்பாக்க என்னால் முடிந்ததை செய்யப் பார்ப்பேன்..
அந்த முயற்சியில் சில நேரம் என் மூடே மாறிவிடும்..
அடுத்து என் நண்பர்கள் பலரிடம் நான் காணும் ஒரு விஷயம் வாழ்க்கையின் பல்வேறு தட்டுக்களை, நிலைகளை ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளுதல்.. இதனால் அலுவலகத்திலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது,. தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சந்தோசம் இருக்காது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஊடகத்துறையானது உணர்ச்சிகள் கொட்டப்படும் இடமும் கூட என்பதாலும், (உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தொழிலாக இது இருந்தும் கூட) - இதற்கான காரணம் ரசனையும் அழகியலும் சேர்வதாக இருக்கலாம். - அடிக்கடி குழம்புதல், குமுறுதல், கொந்தளித்தல் என்று சகல விஷயமுமே அன்றாட நடவடிக்கைகளில் இணைந்து இருக்கும்..
அப்படி இல்லாவிட்டால் எம் தொழிலில் ஜீவன் இல்லையே..
ஆனாலும் அந்த உணர்ச்சிகளைக் கட்டுக்குள்ளே வைத்துக்கொள்வதில் தான் எங்கள் வெற்றியும், முன்னேற்றமும் அடங்கி இருக்கிறது.
ஆனாலும் தங்கள் சோகங்களை மறந்து / மறைத்து மிக கலகலப்பாகப் பழகி, மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க முயலும் பல நண்பர்களையும் கவனித்திருக்கிறேன்.. அவர்களை எல்லாம் பார்க்கும்போது என் மனமும் சும்மா உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும். எனையும் விட அதிர்ஷ்டக்காரர்கள் என்று கொஞ்சம் பொறாமையும்படுவேன்..
வாழ்க்கையில் நாம் வாழ்கிற கொஞ்ச நாட்களாவது அதிக சந்தோஷத்துடனும், கவலைகளை மறக்கும் வழிகளோடும், மற்றவர் எவரையும் கவலைப்படுத்தாத வார்த்தைகளோடும் வாழப்பார்ப்போம்..