சில பேர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கையில் அந்த நம்பிக்கையை எல்லாம் சும்மா அலேக்காப் போட்டு மிதிச்சு உங்கள் முகத்தில் கரி பூசுவார்கள் பாருங்கள்..
ராஜபாட்டை பார்த்த போதும் அதே உணர்வு.
அழகர்சாமியின் குதிரைக் குட்டி படத்தைப் பற்றி நான் இட்ட இடுகையின் சில முக்கிய வரிகளைக் கவனியுங்கள்..
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் காட்டிவரும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படத்தை இப்போதே எதிர்பார்க்கும் முதலாமவன் நான் ஆகட்டும்.
சுசீந்திரன் எனது அபிமானத்துக்குரிய இயக்குனர்களில் ஒருவராக இப்போதே மாறியுள்ளார்.
நான் மகான் அல்ல பார்த்தபோதே சிலாகித்தவன் நான். ராஜபாட்டையிலும் ஏதாவது புதுசா (அது மசாலா என்று ஆரம்பத்திலேயே சுசீந்திரன் சொல்லி இருந்தாலும் கூட) செய்திருப்பார் என்று நம்பினேன்.
அதே போல விக்ரம் - தெய்வத் திருமகள் தந்த பெயரால் ஏமாற்ற மாட்டார் என்றும் நம்பி இருந்தேன்.
அந்த யுகபாரதியின் பாடலைப் போட்டு தாளிச்சிருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நல்லாவே இருந்தன என்பதை எல்லோருமே ஏற்கத் தான் வேண்டும்.
பார்க்கப் போறதுக்கு முதலில் எந்தவொரு விமர்சனமும் வாசிப்பதில்லையாயினும், விமர்சனத் தலைப்பிலேயே படம் பற்றிப் பலர் கருத்து சொல்லிவிடுவதால் ராஜபாட்டை பற்றியும் ஓரளவு அறிந்துகொண்டே தான் ஈரோஸ் போனேன்..
(சத்தியமா ஓசி டிக்கெட் என்றபடியால் தான் போனேன் )
இப்போது தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நில அபகரிப்புத் தான் திரைப்படத்தின் முக்கிய கரு..
கதாநாயகனை ஒரு திரைப்பட அடியாள் நடிகன் (Gym Boy).. ஒரு சிறந்த வில்லன் நடிகனாக உயரவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கும் அவர் தற்செயலாக நில அபகரிப்பு சிக்கலுக்குள் அகப்படும் பெரியவர் ஒருவருடன் சம்பந்தப்பட, இதனால் பலம் மிக்க அரசியல்வாதியுடனும் அவரது கொலைவெறிக் கும்பல், அரசியல்வாதியின் பினாமி ஆகியோருடன் மோதல் ஏற்படுவதும் அதன் பிறகு நடக்கும் டிஷ்யூம், டிஷ்யூம் களும் தான் கதை..
வழமையான இந்த மாதிரி மசாலாத் திரைப்படங்கள் என்றால் மன்னிக்கலாம்.. இது இப்படித் தான் என்பது தெரியும்.
ஆனால் நல்ல படங்கள் மூன்றைத் தந்த சுசீந்திரன் ஒரு மசாலாவைத் தந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவர் என்று தானே எதிர்பார்ப்போம்?
அதிலும் மிகப் பலமான ஆரோக்கியமான கூட்டணியுடன் சுசீந்திரன் களம் இறங்கும்போது இன்னும் எதிர்பார்ப்பு ஏற்படும் தானே?
இசை - யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு -R. மதி
வசனம் - பாஸ்கர் சக்தி
அத்தனை உழைப்பும் வீண்..
கூடவே விக்ரமின் உடல் உழைப்பு + அர்ப்பணிப்பு & புகழ்பெற்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் இந்தத் தள்ளாத வயதிலும் வெளிப்படுத்திய துடிப்பு..
லொஜிக்கை விடுங்கள்.. ஒரு லொசுக்குக் கூட ஒழுங்காக இல்லையே...
படத்தின் நல்ல விஷயங்களை விரல்விட்டு எண்ணலாம்....
விக்ரமின் உழைப்பு...
தெய்வத் திருமகளில் நோஞ்சானாக இருந்தவர் என்ன மாதிரியாக உடலை வருத்தி ஒரு மாமிச மலையாகக் கட்டுமஸ்தான உடலோடு வருகிறார்.
உடலை வருத்தி உழைத்தவர் கொஞ்சம் கதையையும் கவனித்திருக்கலாம் தான்.
(ஆனால் சாதாரண ஒரு அடியாள் நடிகர் ஒவ்வொரு நாளும் புதிய புதிய dress + Cooling glass உடன் வருவது பயங்கரமாக உதைப்பது வேறு கதை)
வில்லாதி வில்லன் பாட்டில் பல வேஷம் கட்டி ஆடுவதில் நீண்ட நாள் ஆசையை எல்லாம் தீர்த்திருப்பது தான் விக்ரமுக்கு ஒரே ஆறுதல் போலும்..
"கமலுக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்தவனாக்கும்" என்று சொல்கின்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் நடிப்பு.
தம்பி ராமையாவின் இயல்பான நடிப்புடனான நகைச்சுவை & அடியாளாக வரும் அருள்தாசின் நகைச்சுவை....
புதிய அறிமுகமாக வரும் வில்லி.. அக்கா என்று படம் முழுக்க மிரட்டலாக அவர் வலம் வரும்போது (பெயர் சனாவாம்) ஜெயலலிதா ஞாபகம் வருகிறது.
நில அபகரிப்பு, வழக்குகள், பினாமி, அடியாட்கள், கை அசைப்பு என்று பல ஒற்றுமைகள்..
தமிழக நண்பர்கள் தான் சொல்லவேண்டும்..
சுசீந்திரன் டச் சில காட்சிகளில் இருக்கின்றன; அவை ரசிக்கவும் வைக்கின்றன.
ஆனால் இடைவேளையின் பின்னதான பாதியிலும் அவசர முடிவினாலும் முடிவுறும் இந்த ஆண்டின் மோசமான படங்களில் ஒன்றாக மாறிவிடுகிறது.
சினிமா அறிவு போதியளவு இல்லாத எமக்கே இந்தப் படம் தேறாது என்று தெரிகிற நேரம், இயக்குனர், நடிகர்கள், லட்சக்கணக்கைக் கொட்டிப் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்குப் படம் எடுத்து முடிந்து முழுக்கப் பார்க்கையில் விளங்கி இருக்காதா?
அவசரமாக முடிந்த மாதிரி ஒரு சப் முடிவு..
முடிந்த பிறகு தான் ஸ்ரேயாவும், ரீமா சென்னும் சேர்ந்து ஆடும் 'லட்டு லட்டு' பாட்டு வருகிறது..
படத்தில் இதை விட மோசமான விடயங்கள்...
கதாநாயகி .. வட இந்திய இறக்குமதியாம்.
தீக்ஷா சேத். என்ன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்?
ஒன்றுமே இல்லை இவரிடம்... இவருக்காக விக்ரம் கனவுப் பாட்டுப் பாடும்போது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த "பொடிப்பையன் " பாடல் செத்துப் போச்சு.
திருப்பங்கள் என்று எதுவுமே இல்லாத கதை.
வரட்சியான கற்பனை..
சுசீந்திரனின் சரக்குத் தீர்ந்து விட்டதோ?
பாவம் விக்ரம்....
விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று அத்தனை பேரும் மாறி மாறி பெரிய ஹிட்டுக்கள் கொடுக்கிற நேரம் இப்படியொரு புஸ் கறுப்புப் புள்ளியாக.
ராஜபாட்டை சொல்லும் நீதி - எவ்வளவு தான் நட்சத்திரங்கள் சேர்ந்தாலும் நல்ல கதையும், சீரான திட்டமிடலும் இல்லாவிட்டால் கதை கந்தல் தான்.
ராஜபாட்டை - எல்லாம் ஓட்டை.
குறிப்பு -
2011 வருடம் முடியும் தருணம், இந்த வருடத்தின் எனது இறுதி திரைப்பட விமர்சனமாக இருக்கும்.
இந்த வருடத்தில் எழுத ஆசைப்பட்ட சில நல்ல திரைப்படங்களை நேரம் இல்லாமலும், தாமதமாகப் பார்த்தமையினாலும், எழுத எண்ணியபோது நேரம் வராமையினாலும் தவறிப்போன நல்ல திரைப்படங்கள் ஐந்தினையும் சொல்லிப் பரிகாரம் தேடிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
மைனா (2010 இறுதியில் வெளிவந்தாலும் பார்த்தது இவ்வாண்டில் தான்)
வாகை சூட வா
பயணம்
காஞ்சனா
ஆரண்ய காண்டம்
விரைவில் போராளி, உச்சி தனை முகர்ந்தால் ஆகியவற்றைப் பார்த்துவிடுவேன்.
புதுவருடத்துக்கான வாழ்த்துக்களை இப்பொழுதே தர எண்ணமில்லை; இந்த எஞ்சிய மூன்று தினங்களுக்குள் ஒரு பதிவாவது தர மாட்டேனா? ;)