எதிரிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது; சுவையே இல்லாதது.
ஆனால் நண்பர்களே இல்லாத, எதிரிகள் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள்...
ஒரே கொலைவெறியாக இல்லை?
எதிரிகள் எப்போதுமே எங்களை மேலும் மேலும் போராட செய்கிறார்கள்; ஓய்வாக இருக்க விடாது தொடர்ந்து சிந்திக்க, செயற்பட செய்கிறார்கள்..
ஆனால் இதே எதிரிகள் தான் எங்கள் நிம்மதியையும் பல நேரங்களில் கெடுத்துவிடுகிறார்கள்.
உங்களுக்கு எதிரிகளே வேண்டாமா?
மிக இலகுவான வழியொன்று இருக்கிறது..
ஒன்றும் செய்யாமல் 'சும்மா' இருங்கள்..
எதிரிகள் உருவாவது எங்கள் செயற்பாடுகளிலும் உள்ளதைப் போலவே எங்கள் மனநிலையிலும் இருக்கிறது. காரணம் நாம் செய்யும் செயல்களில் ஒருவர் எமது எதிரியாக மாறுவதைப் போல, எம்மாலும் எதிரிகளை உருவாக்கிவிட முடியும். இதே போல நாம் ஒருவரை எதிரியாகக் கற்பிதம் செய்துகொள்ளவும் முடிகிறது. ஆனால் சிலவேளைகளில் அவர் உண்மையாக எமது எதிரியாக இல்லாதிருக்கலாம்.
எனக்கு ஒருவரை எதிரியாகப் பார்ப்பது எப்போதுமே பிடிக்காத விஷயம்.
காரணம் நண்பர்கள் எப்போதுமே எனது பலம்; நட்பு எப்போதுமே எனது வாழ்க்கையை வளப்படுத்துகிறது. நண்பர்கள் எனக்கு மிக அதிகம்; தொடர்ந்து நாளாந்தம் நட்பு வட்டம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
மறுபக்கம் பகையும், பகையாளிகளும் இருக்கிறார்கள் என்று எண்ணும்போதே அது ஒருவிதமான பலவீனத்தைத் தருவதாக எண்ணுகிறேன்.
இதனால் என்னால் எனக்கு எதிரியொருவர் உருவாகுவதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஆனால் எனது சில கருத்துவெளிப்பாடுகள் நான் அறிந்தோ, அறியாமலோ எதிர்க் கருத்துடையவர்களையும், அதன் வழி எதிரிகளையும் உருவாக்கிவிட்டிருக்கிறது; உருவாக்கி வந்துகொண்டே இருக்கிறது.. இது எனக்கும் தெரியும்.
இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
அப்படியானவர்கள் என்னுடன் பழகுகின்ற சந்தர்ப்பங்களில் தான் அவர்களுக்கு நான் அதிப் புரியவைக்கவும் முடியும்; அவர்களாலும் புரிந்துகொள்ளவும் முடியும்.
எதிரிகளைப் பற்றி நான் வாசித்து, பின்பற்றும் நான்கு வழிகளை உங்களோடும் பகிர்ந்துகொள்ள இந்தப் பதிவு..
1.உங்கள் நண்பர்களை எப்போதும் எதிரிகளாக மாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களை விடவும் உங்களை அறிந்தவர்கள் உங்கள் நண்பர்கள் தான். அவர்கள் உங்கள் எதிரிகளாக மாறும்போது அதை விட ஆபத்து வேறேதும் கிடையாது.
2.உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை எதிரியாகக் கணித்துக் கொண்டிருந்தால் உங்களது இயல்புகளை அவருக்கு சரியாகப் புரியச் செய்து ஒரு எதிரியைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
3.நீங்கள் அறியாத ஒருவர் உங்களை எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கிறாரா? விட்டுவிடுங்கள்.. தெரியாத ஒருவர் பற்றித் தேவையில்லாமல் யோசித்து மனதை ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?
வேலி-ஓணான் கதை தான் இது.
4.வேண்டும் ஒன்றே ஒருவர் உங்களைத் தன் எதிரியாக்கி உங்களுடன் மோதுகிறாரா? நீங்கள் நண்பராக அணுக விரும்பினாலும் எதிரியாகவே இருப்பேன் என்று முரண்பிடிக்கிறாரா?
இல்லாவிடில் நண்பராக அவரை மாற்றிக் கொண்டாலும் 'துரோகியாக' மாறி விடுவார் என்று நீங்கள் தயங்குகிறீர்களா? விட்டுவிடுங்கள்..
அவர் தானாக உங்களுக்குப் பிரபல்யத்தையும் புகழையும் உருவாக்கித் தருகிறார்.
அதை உங்களுக்கான வெகுமதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
முக்கியமான ஒன்றே ஒன்று எதிரிகள் இருக்கிறார்களோ இல்லையோ, நண்பர்களை உருவாக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
ஆனால் தொடர்ந்து குழிபறிப்பில் ஈடுபடும் எதிரிகள், உங்களைக் கொலைவெறியுடன் துரத்துவோர், உங்கள் நிம்மதியைப் பறிப்போராக இருந்தால் அடித்து நொறுக்கி அழித்தே விடுங்கள்...
பி.கு - மக்கள்ஸ் இது யாருக்குமான உள்குத்துப் பதிவல்ல :)
வெள்ளிக்கிழமை விடியலில் தலைப்புக்குப் பொருத்தமாக சொந்தமாக அவிழ்த்துவிட்ட சிந்தனைகளின் விரிவு :)
நேற்றைய மரணம்/ கொலை ஒன்று (தொழில்முறை எதிரிகளாலான கொலை என்றும் ஒரு சந்தேகம் நிலவுவதால்) மேலும் எதிரிகள் பற்றி சிந்திக்கச் செய்துவிட்டது. அவ்வளவு தான்.....