குருவியின் தோல்வியால் மூன்று வருஷம் ரூம் போட்டு யோசித்து, ஹிந்தியில் பெரு வெற்றி பெற்ற சல்மான் கானின் டபாங்கைத் தமிழில் தந்திருக்கிறார்.
லொஜிக்கே இப்படியான படத்தில் தேடக் கூடாது என்பது ஹிந்தி டபாங் பார்த்தவர்களுக்குத் தெரியும். ஆனால் சாதாரண தமிழ் ரசிகர்களுக்கு?
ஹிந்தியில் அந்தக் கால போலீஸ்கார கதாநாயகர்களையும், சில பல சென்டிமென்ட்களையும் போட்டுக் கலாய்த்திருப்பார்கள்.
தமிழில் இது அந்தக் கலாய்த்தல்கள் இல்லாத வழமையான மசாலாவாகத் தெரிவதால் பெரிதாக ஈர்ப்பில்லை.. சிம்பு + சந்தானம் செய்யும் அலம்பல்களைத் தவிர.
தரணியின் பழைய போர்ம் மிஸ்ஸிங். ஒருவேளை டபாங்கின் ஒரிஜினல் கதையில் கை வைக்கக் கூடாது என்பதால் தரணி மாற்றம் ஏதும் செய்யாததால் அப்படி எமக்குத் தெரிகிறதோ தெரியவில்லை.
எண்பதுகளில் வந்த போலீஸ் கதை.. ஒரு அம்மாவுக்குப் பிறந்த இரு மகன்கள் (அப்பா வேறு வேறு.. குழம்பாதீங்க மக்கள்ஸ்.. போய்ப் பாருங்க புரியும்) அவர்களின் மோதலில் கொளுத்திப் போடவேரும் அரசியல்வாதி வில்லன்.. பிறகென்ன மோதல், காதல் பின் சாதல் தான்.
ஒரு Spoof படமாக ஹிந்தியில் நான் பார்த்ததை தமிழில் பார்க்க நினைத்தால் கொஞ்சம் சீரியசாகவே போன மாதிரி இருந்ததால் உண்மையாகக் கொஞ்சம் அயர்ச்சி.
என்ன ஒன்று சந்தானம் எழுந்து உட்கார வைக்கிறார். சிம்புவையும் ஓரங்கட்டி, ஜொலிக்கிறார்.
அண்மைக்காலத்தில் கதை சொதப்புதா, கதாநாயகன் சொங்கியா கூப்பிடு சந்தானத்தை என்ற நிலை தோன்றியிருக்கிறது.
வடிவேலுவின் வெற்றிடம், விவேக்கின் வறட்சி ஆகியவற்றை சந்தானம் நன்றாகவே பயன்படுத்தி கலக்குகிறார்.
சிம்பு + சந்தானம் கூட்டணி மன்மதன் முதல் ஹிட் அடிக்கிறதும் கவனிக்கக் கூடியது.
கோபப் படுற மாதிரி ஜோக் அடிக்காதே.. சிரிக்கிற மாதிரி செண்டிமெண்ட் வசனம் பேசாதே..
மயில்சாமியைக் கலாய்க்கும் இடங்கள்..
சிம்புவுக்கே ரிவிட் அடிக்கும் இடங்கள்...
தேசிய விருது வாங்கிய தம்பி ராமையாவை அதை வைத்தே நக்கல் அடிக்கும் இடங்கள் என்று சந்தானம் கலகலக்க வைக்கிறார்.
“ஆக்ரோஷமா பேச வேண்டிய வசனத்தை, ஆட்டுக்குட்டியை தடவிக் குடுக்குற மாதிரி பேசுறியே..” பீர் பாட்டிலை லுங்கில ஒளிச்சு வைக்கிற மாதிரி என்ற உவமை,
"கோவைப் பழம் மாதிரி ஹீரோயின், எரிச்சுப் போட்ட கொட்டாங்குச்சி மாதிரி அப்பன்க"
கிடைக்கிற gapஎல்லாம் ஸ்கோர் செய்துகொள்கிறார்..
மங்காத்தா டா.. கலகல..
சிம்பு மாதிரி நடனமாடுவது..
இது எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுவது மாதிரி ப்ரேம்ஜியா நீ என்று ஒரு பரட்டைத் தலை நகைச்சுவை நடிகரைப் போட்டுப் படுத்தி எடுக்கிறார். அப்படி என்னதான் ப்ரேம்ஜியில் கோபமோ?
சிம்பு வழமையாகவே பஞ்ச் வசனம், விரல் சேட்டை, ஓவர் பில்ட் அப் என்று அலம்புகிறவர் என்பதால் டபாங்கில் சல்மான் செய்த அத்தனை கூத்துக்களும் பொருந்திப் போகின்றன.
ஆனால் என்ன உயரம் தான் உறுத்துகிறது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கொஞ்சம் குள்ளமாகவே தெரிகிறார். போலீஸ் உடையில் பார்த்தாலும் சின்னப் பையன் போலவே தெரிகிறார்.
ஆனால் அந்தக் கண்ணாடி, எகத்தாளமான பேச்சு, ஒரு கெத்தான நடை என்று சமாளித்து விடுகிறார்.
"நான் கண்ணாடி மாதிரி டா. நீ சிரிச்சா சிரிப்பேன்.. முறைச்சா முறைப்பேன்" பரதனின் வசனங்கள் சூடு..
ஆனால் நெல்லைத் தமிழ் கொஞ்சம் ஓவரோ? சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் தெரிந்துகொள்கிறேன்.
லே,தே என்று கொஞ்சம் கடுப்பேத்திறாங்க தரணி சார்.
ரிச்சாவுடன் காதல் வயப்படும் (வழியும்) காட்சிகள் கலகல.. சில இடங்களில் சல்மானையும் முந்துகிறார் என்று சொல்லலாம்.
ஆனால் தனுஷை வம்புக்கு அடிக்கடி இழுப்பது தேவையா?
கொன்னே புடுவேன் - சுட்டே புடுவேன்..
அந்தக் கண்ணாடியும் நடிக்கிறதே ;)(ச்ச்சும்மா)
அட நான் கடைசியா வாங்கியுள்ள Cooling glassஉம் இதே மாதிரியே தான் ;)
ஆனால் கடைசிக் காட்சியில் six pack இரண்டு மாதம் பட்டினி போட்டு எலும்புகள் துருத்தும் உடம்பைக் காட்டுவது கொஞ்சம் என்ன நிறையவே ஓவர் STR.
தல அஜித்தின் ரசிகர் என்று கிடைக்கும் இடங்களில் காட்டப் பார்ப்பதும் புரிகிறது.
ரிச்சா - இவர் தான் மயக்கம் என்னவில் அப்படி அசத்தியவரா?
என்று அறிமுகக் காட்சியில் அசத்தலாக ஒரு சிலை போல அறிமுகமாகும் போது அடடா போடா வைத்தவர், மயக்கம் என்ன போதை போகாதவராக அதே முறைப்போடு திரிவது தான் சகிக்கவில்லை.
தந்தை இறந்த காட்சியில் முகத்தை மூடி அழும் அளவுக்கு ஒஸ்தியில் என்னாச்சு இவரின் நடிப்பாற்றலுக்கு?
பளீர் இடுப்பும் பளபள சங்கிலியோடும் வலம் வருகிறார்.
சில நேரங்களில் சிம்புவை விட பெரியவராக ஒரு தோற்றம். தமிழில் இவரை விட அழகான நாயகிகள் இல்லையா?
சரண்யா மோகன் - பாவம். இனி எப்போதும் இப்படியான பாத்திரங்கள் தானம்மா உனக்கு. அழகும் நடிப்பும் இருந்து என்ன பயன்?
ஜித்தன் ரமேஷ் - வாவ்.. முதல் தடவையாக நடித்திருக்கிறார். இனி ஒரு குணச்சித்திர நடிகராக (ஸ்ரீமன் மாதிரி) அல்லது வில்லனாக வலம் வந்தால் பிழைக்கலாம்.
வில்லன் சோனு சூட் - மறைந்த ரகுவரனை ஞாபகப்படுத்தும் முகத் தோற்றமும் உருவ அமைப்பும். பின்னணி பேசி இருப்பவரும் ரகுவரனையே மனதில் கொண்டு வருகிறார். ஆனால் வில்லனாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
நாசர், ரேவதி - அப்பா, அம்மா என்றால் இவர்கள் நடிப்பில் உயிர் பெற்று நிற்குமே.. சொல்லவும் வேண்டுமா?
அழகம்பெருமாளும், தம்பி ராமையாவும் கிடைத்த பாத்திரத்தில் நிறைவைத் தந்துள்ளார்கள்.
வில்லன் பக்கம் இருந்துகொண்டு இன்ஸ்பெக்டர் ஒஸ்தி வேலனுக்கு விசில் அடிக்கும் அந்த ரசனையான அடியாள் கலக்குகிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயாவில் கலகலக்க வைத்து, பின் வானத்திலும் சிம்புவுடன் சேர்ந்த கணேஷும் இருக்கிறார்.
(அவர் சாகும் இடத்தில் திரையரங்கில் சிரிப்பொலி.. என்ன வாழ்க்கடா இது)
கலாசலா பாடலில் குத்தாட்டத்துக்கு மல்லிகா ஷெராவத். பெரிதாக விசேஷம் இல்லையே.. அப்புறம் ஏன் அவ்ளோ 'பெரீய' பில்ட் அப்?
இதற்கு நாங்கள் அடிக்கடி பார்க்கும் சோனாவோ, கானாவோ, பாபிலோனாவோ போதுமே..
இல்லாவிட்டால் STR இன் தந்தையார் விஜய.Tராஜேந்தரையாவது ஆட விட்டிருந்தால் ஒரு கிக் இருந்திருக்கும்.
குருவி படமே தனது திரை வாழ்க்கையின் மோசமான படம் என்பதை ஒஸ்தி மூலம் மாற்றியமைக்க இயக்குனர் தரணி கடுமையாக முயன்றாரோ என்ற சந்தேகம் சில இடங்களில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆனால் ஒரு மசாலாவாக அலுக்காமல் கொண்டு செல்வது டபாங்கின் ஒரிஜினல் கதை தானோ?
ஆனால் அதே டபாங் தான் தில், தூள், கில்லியில் தரணி தந்த விறுவிறு திருப்பங்களை உருவாக்க விடாமலும் செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
சண்டைக் காட்சிகளில் இன்னும் 'குருவி' பறப்பு மறக்கவில்லை.
தமிழ்நாட்டு cop பாடலில் சிம்புவுடன் ஆடுகிறார்; கடைசியில் பட்டினி கிடக்கும் சிம்புவுக்கு பிரியாணி ஊட்டுகிறார்.
symbolicஆக ஒற்றை கோழிக்காலுடன் தரணி நிற்க படம் சுபம்.
பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும், திரையில் பாடல்களாக, பின்னணி இசையில் தரணியின் வழமையான தோஸ்து வித்யாசாகரை அவர் மிஸ் பண்ணினாரோ இல்லையோ நாம் பண்ணினோம்.
வசனங்களில் பரதன் பின்னி எடுத்திருக்கிறார். பக்கம் பக்கமாக வசனம் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.
தரணியின் வழமையான ஒளிப்பதிவாளர் கோபிநாத். இதனால் தானோ என்னவோ படப்பிடிப்பு இடங்கள் புதுசாக இருந்தாலும் குருவி கடப்பா, கில்லி பிரகாஷ்ராஜின் கிராமமும் ஞாபகம் வந்து தொலைக்கிறது.
மோசம் என்று ஒதுக்கவும் முடியாது, ஆகா அற்புதம் என்று தரணிக்கு கில்லி டைப்பில் கொடி பிடிக்கவும் முடியாது.
ஆனால் ஒன்று சொல்லியே ஆகவேண்டும்.
ஹவுஸ்புல்லாக நான் பார்த்த ஒஸ்தி படக்காட்சியில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் போது தூங்கிப்போனேன். திடீரென விசில் சத்தங்கள், சிரிப்பொலிகள் காதைப் பிளக்க எழும்பினால் சிம்பு தனது six packக் கிழிக்கிறார்.
சூர்யா, சல்மான், ஏன் சோனு சூட் எல்லாம் சூசைட் பண்ணிக்கலாம்.
சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள், சிம்புவின் அலட்டலான பஞ்ச் வசனங்கள், சிம்பு "காவல் துறை" காதல் காட்சிகளை மட்டும் வைத்து ஓட்டினால் நான் மீண்டும் பார்க்கத் தயார்.
ஒஸ்தி - ஒரிஜினல் அளவுக்கு இல்லை; ஆனாலும் ஒப்பேத்தியாச்சு