பாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழமும்

ARV Loshan
15

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்ததினம்...


தமிழை நேசிக்கும் எவருக்கும் பாரதியைப் பிடிக்காமல் போகாது.

தமிழின் சுவையையும், எளிமையையும், வீரியத்தையும், பல்வகைமையையும் எடுத்துக்காட்டும் கவிதைகள், பாடல்களை பாரதியை விட இந்த நவீன காலத்தில் தந்த 'ஏற்றுக்கொள்ளப்பட்ட' இன்னொரு கவிஞனைக் காண்பதும் அரிது.

அந்த மாபெரும் மகாகவிக்கு மீண்டும் ஒரு மரியாதை கலந்த வணக்கம்..

கவிதைகளில் ஈடுபாடும், தமிழில் விருப்பும் வர சிறுவயது முதல் வாசித்த இன்றும் வாசித்தும் நேசித்தும் வரும் பாரதி கவிதைகள் + பாடல்கள் தான் முக்கியமான காரணம்.

பாரதியை நினைவுபடுத்தும் இன்றைய நாளில், இன்னொரு பாரதிக் கவிஞனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டி இருக்கிறது...

யுகபாரதி..
திறமையும், தேடலும் நிறைந்த இளைய தலைமுறைக் கவிஞர் + பாடலாசிரியர்.

கண்ணாடி என்ற இவரது கவிதைத் தொகுப்பு நான் ரசித்தவொன்று..
அதே போல யுகபாரதி என்றவுடன் ஞாபகம் வரும் சில இனிய திரைப்பாடல்களும் இருக்கின்றன.

கனாக் கண்டேனடி - பார்த்திபன் கனவு
சித்திரையில் என்ன வரும் - சிவப்பதிகாரம்
இப்படி மழை அடித்தால் - வெடி
பேரூந்தில் - பொறி
யார் இந்த தேவதை - உன்னை நினைத்து

கவித்துவமான பாடல்கள் மட்டுமன்றி, கலகல, குத்துப் பாடல்களையும் தருகிறார் இவர்.

அண்மையில் வெளியான 'ஒஸ்தி' பாடல்களிலும் பட்டை கிளப்பி இருந்தார் யுகபாரதி.

இதைவிட இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள 'ராஜபாட்டை' திரைப்படத்தின் அத்தனை பாடல்களையும் யுகபாரதியே எழுதியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை..
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்.
நேற்று கேட்டேன்.. ம்ம்ம் ரசிக்கலாம்.

அவற்றுள் ஒன்று "பனியே... பனிப்பூவே.." என்று ஆரம்பிக்கும் காதல் பாடல்.

அண்மையில் ஒரு சில பாடல்களில் ரசிக்க வைத்த ஜாவேத் அலியும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ரேணு கண்ணனும் (ரேணுகா) பாடியுள்ளார்கள்.

இந்தப் பாடலில் கவிஞர் யுகபாரதியின் கவித்துவம் சும்மா அப்படிப் புகுந்து விளையாடி இருக்கிறது..

பாடலின் இரண்டாவது சரணத்தில் நாயகன் பாடுவதாக இரு வரிகள்...

"முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே.... 
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே." 

நான் அறிந்தவரை தமிழ் ஈழம் என்ற சொல் ஒரு தென்னிந்தியத் திரைப்பாடலில் பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென நினைக்கிறேன்.

ஆனால்...
தமிழ் ஈழம் என்பது ஒரு வெறும் வார்த்தை அல்ல..
அது ஒரு உணர்வு, ஒரு நீண்ட காலக் கனவு என்பது அறியாத ஒரு தமிழ்க் கவிஞரா யுகபாரதி?

யுகபாரதி, 

உங்கள் காதல் போதைக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் உவமையா தமிழ் ஈழம்?

முள்வேலிக்குள் வாடும் மக்களின் வேதனையும் காதலில் உருகும் நாயகனின் இன்ப வேதனையும் ஒன்றா?

தனிநாட்டுக் கோரிக்கை பலியெடுத்த இத்தனை மக்களின் சோகங்களும் இன்றுவரை எம்மவர் பலர் அனுபவிக்கும் வேதனைகளும் நாயகன் காதலில் உருகுவதொடு ஒப்பிடப்படுவது அபத்தமாக இல்லையா?

காதலுக்கு என்று தான் காலாகாலமாக நிலா, காற்று, நதி, மேகம் என்று உயிரற்ற உவமைகள் இருக்கையில் எம் மக்கள் இரத்தத்தோடு தான் காதல் விளையாடக் கிடைத்ததா உங்களுக்கு?

அதுவும் தமிழ் ஈழம் என்ற சொல்....

இந்த தமிழ் ஈழம் என்பது கிடைக்காமலே போகட்டும்.. ஆனால் அது தந்த வடுக்களும், தமிழ் ஈழம் என்பதற்காக தம் உயிரை ஈந்த எம்மவரின் நினைவுகளும் மறந்துவிடக் கூடியவையா?

என்னை விட, எம்மவரில் சிலரை விட ஈழம், ஈழத் தமிழ் மக்களை, அவர் தம் சோகங்கள் + உணர்வுகளைப் புரிந்துகொள்வோர் வாழும் தமிழகத்தில் அண்மைக்காலத்தில் அரசியலுக்காகவும், சினிமாவுக்காகவும் எங்கள் தமிழ் உணர்வுகள் விற்கப்படுவது கண்டு கொதிப்பு வருகிறது.

ஏழாம் அறிவில் எனக்கு வந்த கோபத்துக்கான காரணமும் அதுவே...
"ஒருவனை ஒன்பது நாடுகள் சேர்ந்து கொன்றதே" வசனம் மட்டும் விளம்பரமாக எத்தனை தடவை தொலைக்காட்சித் திரைகளில் சென்றது என்று ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

இந்த இடத்தில் தான் எனது முன்னைய பதிவொன்றும் ஞாபகம் வருகிறது.

அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்!

எமக்காகக் குரல் கொடுப்பது, இரக்கப்படுவது வேறு.. அப்படியில்லாவிட்டாலும் பரவாயில்லை.
ஆனால் செத்த பிணங்களின் மேலும், சாகாத உணர்வுகளோடும் தங்கள் வர்த்தகக் கோட்டைகளை அமைப்பதை சகிக்க முடியாமல் உள்ளது. 

அதுசரி, மகாகவி பாரதியே "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று தானே பாடிவைத்தான்.
ம்ம்ம்ம்ம்ம்.....

தமிழ் ஈழம் என்ற வரிகளைத் தணிக்கை செய்து ஒலிபரப்பிய காலமும் உண்டு..
டைலாமோ பாடல் வந்த நேரம் என்ற வரிகளைத் தணிக்கை செய்யவேண்டுமா என்று யோசித்து பின் அப்படியே ஒலிபரப்பிய ஞாபகம். (அப்போது நான் சூரியன் FM இல்)
இப்போது தணிக்கை செய்யவேண்டி வருமோ (தகவல் திணைக்களம் உத்தரவிட்டால்)தெரியாது. ஆனால் அவ்வாறு தணிக்கை செய்தாலும் சந்தோஷமே..
காதலனின் சோகத்தைத் தமிழ் ஈழத்துடன் ஒப்பிட்டதனால்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...

ஏழாம் அறிவு எங்களைப் பற்றிப் பேசுது என்று உணர்ச்சிவசப்பட்டு காவடி தூக்கிய எம்மில் பலரைப் போல, தமிழ் ஈழம் பற்றி விக்ரமின் படத்தில் பாட்டு வந்திருக்கு என்று இந்தப் பாட்டை எங்களவர்கள் ஹிட் ஆக்கத தான்  போகிறார்கள்..
நானும் விடியலில் நேயர்கள் கேட்டதற்காக வேண்டாவெறுப்பாகப் போடத் தான் போறேன்....
(நீயும் சினிமாக்காரன் மாதிரித் தானே என்று உங்களில் சிலரும் திட்டத் தான் போகிறீர்கள். ஆனாலும் ஏழாம் அறிவின் எல்லோலமா பாடல் எவ்வளவு தான் ஹிட் ஆகியும் ஸ்ருதி ஹாசனின் உச்சரிப்புக் கொலையினால் இன்றுவரை நான் விடியலில் ஒலிபரப்பியதே இல்லை.)

ம்ம்ம்ம்ம்ம்

எல்லாம் எங்கள் தலைவிதி..


Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*