நேற்று விடியல் நிகழ்ச்சியில் நேயர்கள் கருத்து சொல்வதற்காக நான் கொடுத்திருந்த தலைப்பு -
நீங்கள் வாழும் சமூகத்தில் ஒழிக்கப்படவேண்டிய/ தடுக்கப்படவேண்டிய சில பழக்க வழக்கங்கள்..
இதன் மூலம் இந்தக் காலகட்டத்தில் எம் சமூகத்தில் என்னென்ன விஷயங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று அறிந்துகொள்ள விரும்பினேன்.
எல்லோரும் தொலை பேசி, sms , மின்னஞ்சல், facebook மூலமாக சொன்ன கருத்துக்களின் தொகுப்பு
மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும்
மனிதர்களைக் கடவுளாக்குதல் தவிர்க்கப்பட/தடுக்கப்பட வேண்டும்
புகைப்பிடித்தலை இளைஞரிடம் இருந்து ஒழித்தல் வேண்டும்
மதுபானப் பழக்க வழக்கம், போதை வஸ்துப் பாவனை இல்லாதொழிக்கப்படவேண்டும்
இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள இணைய, செல்பேசி பாவனைகளைக் குறைக்க வேண்டும்
மாணவர் மத்தியில் அதிகரித்துள்ள இணைய மோகம்.. குறிப்பாக பேஸ்புக் பாவனை குறைக்கப்பட வேண்டும்
புதிய பாஷன் என்ற பெயரில் அரை,குறை ஆடைகள் அலங்கோலமாகத் திரிவது
இன்னும் பல இடங்களில் காணப்படும் சாதி வெறி
எல்லா இனத்தவரிடமும் காணப்படும் இன, மதவெறி
காதல் என்ற பெயரில் பொது இடங்களில் அரங்கேற்றும் காமக் கூத்துக்கள்
ஐந்து வருடத்துக்கொரு முறை தேர்தலில் சுயநல அரசியல்வாதிகளிடம் முட்டாள்தனமாக ஏமாறுவது
சினிமா மீதான அதிகூடிய மோகம் (சில நடிக, நடிகையரிடம் ரசிகர்கள் என்ற பெயரில் வெறியர்களாக இருப்பதும் கண்டிக்கப்பட்டது)
கிரிக்கெட்டின் மீதான அளவுக்கதிகமான மோகம் (எனக்கும் ஒருவர் நேரடியாகவே கண்டனம் தெரிவித்தார்)
இவற்றிலே பார்த்தோமானால் சில அளவுடன் இருந்தால் ரசனை; இன்னும் சிலவற்றை முற்றாகவே இல்லாதொழித்தால் நன்மை.
=========================
இலங்கையின் முதலாவது 3D - முப்பரிமாணத் திரையரங்கு கொழும்பு மஜெஸ்டிக் சினிப்லேக்சில் (Majestic Cineplex) கடந்த வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று சக பதிவர் நண்பர் நிரூசா(மாலவன்) அவர்களின் அனுசரணையில் (பிறந்தநாள் + இன்னொரு ஸ்பெஷல் ட்ரீட்) 3 Musketeers படத்தை 3D யில் பார்க்கக் கிடைத்தது.
ஏற்கெனவே சிங்கப்பூரில் ஒரு தடவை 3D படம் பார்த்திருந்தாலும், (செந்தோசாவில் 4D பட அனுபவமும் பெற்றிருந்தேன் )இலங்கையில் இது ஒரு அருமையான அனுபவம்..
விசேட கண்ணாடியுடன் தான்.
படம் முடிந்து வெளியே வரும்போது கண்ணாடியைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.. நினைவுச் சின்னமாகக் கண்ணாடியைக் கொண்டுவர முயன்றால் மாட்டிவிடுவீர்கள். Detecting Device உள்ளது.
டிக்கெட் விலை அறுநூறு ரூபாய்.
எல்லாப் படங்களையும் அடிக்கடி பார்க்கக் கட்டுப்படியாகாது தான்.
அடுத்து Puss in Boots 3Dயில் வருகிறது.
ஆனால் அய்யா இப்போதே இங்கே Tin Tin வரும் என்று வெயிட்டிங்.
மூன்று திரையரங்குகள் கொண்ட புதிதான திரையரங்கத் தொகுதியில் மற்றத் திரையரங்குகளையும் அந்த மஜெஸ்டிக் திரையரங்க முகாமையாளர் என் நண்பர் என்பதால் பார்க்கக் கிடைத்தது.
MC Ultra, MC Gold & MC 3D Superior
நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரையரங்கங்களில் ஒன்று வழமையானதைப் போன்றது (டிக்கெட் விலை - 400 ரூபா); மூன்றாவது சிறுவர், சிறுமியர் விரும்பக் கூடிய Super Deluxe திரையரங்கம்.. டிக்கெட் விலை 750 ரூபா. விசேடம் என்னவென்றால் டிக்கெட்டோடு KFC/McDonalds சிற்றுண்டியும் தருகிறார்கள்.
இனியென்ன 3D ஜாலி தான்..
========================
கொலை'விரு'
இன்று பிற்பகல் முழுக்க எல்லா கிரிக்கெட் பிரியர்களாலும் உச்சரிக்கப்பட்ட ஒரே பெயர் சேவாக்.
கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் படைத்த முறியடிக்கப்பட முடியாத (அல்லது மிக சிரமமான) சாதனை என்று கருதப்பட்ட ஒரு நாள் சர்வதேச இரட்டை சதத்தை இன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கேதிராக விரேந்தர் சேவாக் பெற்ற அபார ஆட்டம்...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளில் தடுமாறி இருந்த சேவாக் (மற்றும் கம்பீர்+ ரெய்னா) இந்தப் போட்டியிலாவது formக்குத் திரும்புவாரா என்று இன்று காலை எனது விளையாட்டு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தேன்..
அதுக்காக இப்படியா?
என்னா கொலைவெறி... 219 off 147 balls - 25 4s + 7 6s
இப்போது இந்தியா சார்பாக Test & ODI சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கைக்கு சொந்தக்காரர் சேவாக் தான்.
சச்சின் டெண்டுல்கர் படைத்த கிரிக்கெட் துடுப்பாட்ட சாதனைகள் பொதுவாக முறியடிக்கப்பட்டதில்லை.
செவாக்கினால் தான் அது முடிந்திருக்கிறது. அதுவும் சச்சின் டெண்டுல்கர் விளையாடிக் கொண்டிருக்கும்போதே..
அபாரம்..
ஒரு வருடம் மட்டுமே சச்சின் படைத்த இந்த சாதனை நின்றிருக்கிறது.
ஆனால் ஒரு நாள் சர்வதேசப் போட்டியின் முதலாவது இரட்டை சதம் பெற நாற்பது ஆண்டுகள் ஆகியிருந்தன.
கொலைவெறி ட்ரெண்டை இன்று கொலை'விரு'வாக மாற்றியிருந்தார் சேவாக்.
விரேந்தர் சேவாக்கின் இந்த அபார ஒரு நாள் சாதனை பற்றியே சுவாரஸ்யக் குறிப்புக்களை நாளை இன்னொரு தனிப்பதிவாகத் தருகிறேன்.
*எதிர்பார்க்கப்பட்ட புதிய சுழல் பந்துவீச்சாளர் ராகுல் ஷர்மா தனது அறிமுகப் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியதும் இந்தியாவுக்கு நிச்சயம் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கும்.