நடிகர் கலைஞானி கமல்ஹாசனின் பிறந்தநாளுக்காக இட்ட பதிவின் தொடர்ச்சி இது...
கமல் - இந்தப் பெயரைக் கேட்டவுடன் எனக்கு (உங்களில் பலருக்கும் கூட இருக்கலாம்) மனதில் ஞாபகம் வரும் சில விஷயங்கள் - கலை, காதல், புதுமை, தேடல், அறிவுஜீவித்தனம், துணிச்சல், நாத்திகம், வெளிப்படை...
இன்னும் பல பல...
இவற்றுள் எல்லாமே வரம்புகள் மீறியவையாகவும், மரபுகள் தாண்டியவையாகவும், இதனால் சர்ச்சைக்குரியவையாகவும் அமைந்திருப்பது உண்மை தான்.
அப்படி இருந்தும் பின் வாங்காமல் ஒளிந்துகொள்ளாமல் சமுதாயத்துக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளாமல், விமர்சனங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தான் தானாகவே வாழ்கிறார் பாருங்கள், அந்த விடயம் பதின்ம வயதுகளில் எனக்கு ஒரு கிளர்ச்சியையும் கமல் மீதான அபிமானத்தையும் அதிகரித்தது.
ஊடகத் துறைக்கு வந்து தான் என்னால் பல துறைசார் பிரபலங்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது.
ஆனால் என் மனதுக்கு மிக நெருக்கமான நால்வரை நான் ஊடகத் துறைக்கு வராத பாடசாலைக் காலத்திலேயே சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.
ஒருவர் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் முன்னாள் தலைவர் அலன் போர்டர்.
இலங்கையின் சாதனை மைந்தன் முத்தையா முரளிதரன்
எனக்கு மிகப் பிடித்த கவிப் பேரரசு வைரமுத்து
அடுத்தவர் ஹீரோ கமல்..
ஆனால் வேதனையான விடயம்...
முதல் மூவரையும் சந்தித்துக் கை குலுக்கி ஒரு சில வார்த்தைகள் பேசும் வாய்ப்புக் கிட்டியது;புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்; கவிஞர் வைரமுத்துவிடம் என் கவிதையைக் கொடுத்து ஆசியும் எழுதிப் பெற்றுக் கொண்டேன்.
ஆனால் கமலை நான் நேரில் கண்டது கொழும்பில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கு விழா எடுத்த வேளையில் வந்திருந்த நம் ஹீரோவை மிகத் தொலைவிலிருந்து பார்த்துக் கை காட்டியபோது தான்.
அதற்குப் பின்னர் இன்று வரை அப்படியொரு வாய்ப்புக் கூடக் கிட்டவில்லை.
ஆனால் முன்பு சூரியன் FM வானொலியில் வேலை செய்தபோது தொலைபேசி மூலமாகக் கமல்ஹாசன் அவர்களைப் பேட்டி எடுக்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. (2005)
எந்தவொரு தயாரிப்பும் இல்லாமல் அவசர அவசரமாக உடனடியாக எடுத்த பேட்டி அது.
கமலையே நிறைய வாசித்தவன் என்பதால் சுருக்கமாக, ஆனால் சுவாரஸ்யமாக அவரைக் கிளறி ஒரு பதினைத்து நிமிடத்தில் பல விஷயங்களை அவரிடம் இருந்து எடுத்தேன்.
மும்பாய் எக்ஸ்பிரஸ் படம் வர முதல் அவர் அளித்த அந்தப் பேட்டியில் தமிழ்ப் படத் தலைப்பு, அவர் படங்களில் சொல்லும் 'அவரது' கருத்துக்கள், நகைச்சுவை, வாசிப்பு, சகலதுறைத் தன்மை என்று சில விடயங்களை மனம் திறந்து பேசி இருந்தார்.
அந்தப் பேட்டியை ஒலிபரப்பிய நேரம் என் கால்கள் நிலத்தில் நிலை கொண்டிருந்ததா என்று எனக்கு ஞாபகம் இல்லை.
அதிலும் கடைசியாக "உங்கள் தமிழ் அருமை; சென்னை வரும்போது வாருங்கள், சந்திக்கலாம். சில நூல்களும் தருகிறேன்" என்று கமலின் குரலில் கேட்ட வார்த்தைகள் மெய்ம்மறக்க வைத்திருந்தன.
ஆனால் அதன் பின் சென்னை பல தடவை போனபோதும் ஏனோ ஆழ்வார்ப்பேட்டை (அங்கே தானே இன்னும் இருக்கிறார்) பக்கம் போக எண்ணவில்லை.
ஆனால் இன்று அந்த ஒலிப்பதிவும் என்னிடம் இல்லை..
பார்க்கலாம் என்றாவது ஒருநாள் ஒரு முழுப் பேட்டி எடுக்காமல் போய்விடுவேனா?
இன்னொரு விடயம், எனது பதினாறாவது வயதில் முதல் தரம் அம்மாவுடன் இந்தியா போன வேளையில் (அந்த நேரம் தான் கவிஞர் வைரமுத்து அவர்களையும் முதல் தடவையாக அவர்களின் வீட்டிலேயே சந்தித்தது)
தெருவுக்குத் தெரு ஒவ்வொரு நடிகருக்கு ரசிகர் மன்றத் தட்டிகளும்,கதாநாயகர்களின் கட் அவுட்டுகளும் எழுந்து நின்றதைப் பார்த்துக் கொண்டே போன எனக்கு "கமல்ஹாசன் நற்பணி மன்றம்", "கமல் நற்பணி மன்றம் முன்னெடுக்கும் இரத்த தான முகாம்" போன்ற தட்டிகள் மனத்தைக் கவர்ந்தன.
அன்று முதல் இன்று வரை எனது பிறந்த நாளின் போதும், வருடத்தில் குறைந்தது இரு தடவையும் மறக்காமல் இரத்த தானம் செய்து வருகிறேன்.
(அதுவும் உரியவருக்கு மட்டும் என்று உறுதிப்படுத்தியே வழங்குகிறேன். தேவையானவரை எனது இரத்தம் போய்ச் சேரவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறேன்)
கமல் என்றவுடன் அவரது புதிய முயற்சிகளும் அதனோடு சேர்ந்த riskகளும் ஞாபகம் வருவது இயல்பே..
(சிலரின் பொதுப் பார்வையில் தோற்றுப் போகும் அவரது படங்கள்)
கமலின் தோற்றுப் போன சில அருமையான படங்கள் அந்தந்தக் கால கட்டத்தில் அவர் மீது பெரும் மதிப்பையும், இக்காலத்தில் அந்தத் திரைப்படங்களைப் பார்க்கும் போதும், அதே மாதிரியான தழுவலில் வரும் இந்தக் காலப் படங்களைப் பார்க்கும்போதும் வியப்பையும் தருகின்றன.
அந்தக் காலத்தில் காலத்தால் முந்தியனவாகக் கருதப்பட்டு, தோல்வியைத் தழுவிய கமல் படங்கள், இந்தக் காலத்தில் புதிய இயக்குனர்களால் கொண்டுவரப்பட்டு வெற்றி காணும்போது கொஞ்சம் கடுப்பாகவும் இருக்கும்.
ஆனால் இப்போதைய நடப்புக்களை அப்போதே நினைத்தவர் இந்தக் கலைஞானி என்ற பெருமையும் எட்டிப் பார்க்கும்....
ஒரு நடிகனைத் தாண்டி, படைப்பாளியாக கமலை ரசித்த, வியந்த படங்கள் பல..
முன்பு ரஜினி 12 தந்தது போல கமலின் ரசித்த படங்களைப் பட்டியல் இட்டுத் தொடர் பதிவாகத் தரும் எண்ணம் இருப்பதால் அவற்றைப் பின்னர் பார்க்கலாம்..
எனினும் கமல்ஹாசன் என்ற கலைஞனின் சில 'தோல்வியுற்ற' (வர்த்தக ரீதியாக) மகாநதி, குணா, குருதிப்புனல், அன்பே சிவம்,ஹே ராம் போன்ற திரைப்படங்கள் எனக்கு மனதில் இன்றும் எதோ சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தியவை.
அவை தழுவல்கள், உருவல்கள் என்று உணர்ந்த காலம் அண்மையில் வந்தபோதும், தமிழில் அந்தத் துணிச்சலான முயற்சிகள் எடுத்தவர் என்பதால் பெருமையே.
கமலின் சீர்திருத்தக் கருத்துக்கள், சீரியஸ் கருத்துக்கள் சிந்திக்க, சிலிர்க்க வைத்த அளவுக்கு அவரது சமயோசித நகைச்சுவைகளையும், கோர்வையாக வந்துவிழும் சாதுரிய கலகல சிரிப்பு வெடிகளையும் ரசிக்கிறேன்.
அந்த நகைச்சுவைகளிலும் ஒருவித அறிவுஜீவித்தனம் சிந்திக்க வைக்கும் ஆற்றல் விரவிக் கிடக்கும்.
தொடர்ச்சியாக உரையாடலை அவதானிக்காது போனால் தவறிவிடும்..
இதனால் சாதாரண அடி, உதை விழும் / இரட்டை அர்த்த நகைச்சுவைகளை ரசிக்கும் பலருக்கு கமல் பாணி நகைச்சுவைகள் பிடிக்காமல் போவதில் ஆச்சரியமில்லை.
மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி, சிங்காரவேலன், தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் K சம்பந்தம் என்று கமல் சிரிக்கவைத்த திரைப்படங்களின் வரிசையும் நீண்டது.
அதிலும் கமல் - கிரேசி மோகன் இணைப்பு நான் ரசிக்கும் ஒன்று..
இதே போல கமலின் சில முக்கிய இணைப்புக்களை ஒரு ரசிகனாக இன்றும் ரசிக்கிறேன்..
கமல் - பாலசந்தர்
கமல்- சுஜாதா
கமல் - இளையராஜா
கமல் - வைரமுத்து
கமல் - SPB
கமல் - ரஜினி
கமல் - ஸ்ரீதேவி
கமல் - அம்பிகா
கமல் - K.S.ரவிக்குமார்
கமல் - சிங்கீதம் சீனிவாசராவ்
கமலை வைத்து யார் இயக்கினாலும் நிச்சயமாக மறைமுகமாகக் கமல் தான் அங்கே இயக்குனராகிறார் என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் கமல் தனித்து இயக்குனராக வெளிப்பட்ட இரு சிறந்த படங்கள் என நான் நினைப்பது - விருமாண்டி, ஹே ராம்..
இரண்டிலும் கமல் சினிமா விட்டுக்கொடுப்புக்களுக்கு உட்படவில்லை என்பதே நான் உணரும் யதார்த்தம்.
அப்படியான படைப்புக்களை ஒரு கமல் ரசிகனாக அல்லாமல் சினிமா ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.
மர்மயோகி, மருதநாயகம் இரண்டையும் அதற்காகவேனும் யாராவது தயாரித்தால் என்ன?
கமலை ஒரு பாடகனாக நாம் பலர் ரசித்திருப்போம்..
பேசும்போதே கமலிடம் இருக்கும் அந்தத் தீர்க்கமான ஆழமான கம்பீரமான குரல் பாடலில் வரும்போது உணர்ச்சிகளின் குவியலாக வரும்....
அந்தக் கால பன்னீர்ப் புஷ்பங்களே, மூன்றாம் பிறையில் நரிக்கதை, நினைவோ ஒரு பறவை என்று ரசித்த பாடல்களில் உச்சம் என்று சொல்லக் கூடிய மேலும் சில கமலின் குரலில் பாடல்கள்..
தென் பாண்டி சீமையிலே - நாயகன்
யார் யார் சிவம் - அன்பே சிவம்
கண்மணி அன்போடு - குணா
பேய்களை நம்பாதே - மகா நதி
கடவுள் பாதி - ஆளவந்தான்
தசாவதாரம் பாடல்
உங்களில் யாராவது கமல், அமரர் சுஜாதா ஆகியோரின் பங்களிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த The Blast இசைத் தொகுப்பு பாடல்கள் கேட்டுள்ளீர்களா?
அத்தனை அருமையாக இருக்கும்.
கமலை ஒரு எழுத்தாளராக, கவிஞராக ரசிக்க நிறையவே பொறுமையும், ரசனையும் தேவை..
கமலின் எழுத்துக்கள் அவரையே மாதிரி விரிவானவை, பரந்து சிந்திப்பவை + மேலோட்டமாகப் பார்த்தால் சர்ச்சைகளுக்குரியவை.
உதாரணத்துக்கு இந்தக் கவிதை.....
ஈழத் தமிழர்களின் வலியைப் பதிவு செய்ய ‘போருக்கெதிரான பத்திரிகையாளர்கள்’ உருவாக்கியுள்ள ‘மௌனத்தின் வலி’ புத்தகத்தில்…
‘விட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக்கும்!’
காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…
-கமல்ஹாஸன்
இன்னொன்று மன்மதன் அம்புக்காக கமல் எழுதியது..
சும்மா யோசித்துப் பார்த்தேன்.. இதுவரை கமல் எடுக்காத அவதாரம் எது?
மகளை இசையமைப்பாளராகவும் ஆக்கிவிட்டார்.
எனினும் கமலை ஒரு முழு எழுத்தாளராக ஒரு நூல் வழியாக வாசித்து இன்னும் உணர,அறிய ஆசைப்படுகிறேன்.
கமல் பற்றிப் பதிவிட இன்னும் இருக்கு.. ஏராளம் இருக்கு.
எடுத்துக் கோர்க்கவும் கொட்டவும் நேரம் தான் இல்லை.
கிடைக்கும் நேரத்தில் வருகின்ற விஷயங்களை இனியொரு தடவை தருகிறேன்.
குறிப்பு - படங்கள் அனைத்தும் இணையத்தில் சுட்டு நான் செதுக்கி (சொதப்பி) மெருகேற்றியவை.