ஏழாம் அறிவு / 7ஆம் அறிவு

ARV Loshan
54


படத்துக்கான கதையை முடிவு செய்தபோது ஆரம்பித்த பரபரப்பு, விளம்பரங்கள், ஏக பில்ட் அப்புகள் வெளிவந்த பின்னரும் இந்தப் பதிவை எழுதும் வரைய தொடர்கின்றன.

A.R.முருகதாஸ் என்ற அற்புதமான திரைக்கதை சிற்பியை, ரசிக்கக் கூடியதாக மசாலாக் கதைகளை விறுவிறுப்பாக த் தந்த திறமையான இயக்குனர் என்று A.R.முருகதாஸ் மீது ஒரு தனி விருப்பம் + நம்பிக்கை இருந்தது.
தமிழில் இருந்து அகில இந்தியாவுக்கு அவர் செல்லக் காரணமாக அமைந்த 'கஜினி' சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார் என்றவுடன் 'நிறைய' எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

பாடல்கள் ஏமாற்றினாலும் படத்தில் திருப்தி கிடைக்கும் என நம்பியிருந்தேன்.
கதைக்களம் என்று தொலைகாட்சி, இணைய, சஞ்சிகைப் பேட்டிகளில் இயக்குனரும், நடிகரும் அவ்வாறே மாறி மாறி சொல்லி நம்ப வைத்திருந்தார்கள்.

ஆனாலும் முருகதாஸ் உலகத்தரம், வெளிநாடுகளுக்கு சவால், தமிழனின் பெருமை, ஈழத் தமிழருக்கு அர்ப்பணிப்பு என்று மீண்டும் மீண்டும் சொல்லி (விளம்பரப்படுத்தி) வந்தது 'அட என்னடா இது' என்ற சலிப்பையும் ஏற்படுத்தியது உண்மை.

வேலாயுதம் - ஏழாம் அறிவு இரண்டுக்கும் ஒரே நேரத்தில் முதல் காட்சி டிக்கெட் தந்து எதற்குப் போயிருப்பேன் என்றால் நிச்சயம் ஏழாம் அறிவு தான் என் தெரிவாக இருந்திருக்கும்.
ஆனால் வேலாயுதம் தான் எனக்கு வாய்த்தது. அந்த நாள் மறக்க முடியாத நாள் ஆகிவிட்டது.
ஏழாம் அறிவு பார்க்க வெள்ளிக்கிழமை தான் அமைந்தது.

அதற்குள் இலங்கையில் கடுமையாக ஏழாம் அறிவுடன் தணிக்கையும் இன்னும் பல விஷயங்களும் விளையாடிவிட்டன.

பௌத்த மதம், சீனா, இந்தியா, தமிழின் தொன்மை, தமிழன் பற்றிய வசனங்கள் என்று பல விடயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிந்தவுடன் தணிக்கைக் குழு உஷாராகி வெட்டிக் கொத்தி விட்டார்கள்.
அப்படியும் இந்தியத் தொலைக்காட்சிகளில் வரும் Trailerகளால் பயந்து போன ஏழாம் அறிவின் இலங்கை இறக்குமதியாளரான தமிழர் ஏன் வம்பு என்று படத்தை EAP நிறுவனத்துக்கு (பெரும்பான்மை உரிமையாளர்) விற்றுவிட்டார்.

நான் போன நேரம் மருதானை சினிசிட்டி திரையரங்கின் நான்கு திரைகளிலும் ஏழாம் அறிவே ஓடிக் கொண்டிருந்தது. (மறுபக்கம் கொட்டாஞ்சேனை சிநிவொர்ல்டில் மூன்று அரங்கிலும் வேலாயுதமாம்) அதில் நாம் இருந்த மண்டபமும் இன்னொன்றும் வெள்ளி இரவுக் காட்சி ஹவுஸ் புல்.

ஏழாம் அறிவு படத்தைப் பற்றி Twitter ஸ்டைலில் சொல்வதானால்

ஏழாம் அறிவு = Genetics + Gymnastics + Gimmicks 

1600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் தமிழ் வீரன் ஒருவனால் சீனருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட தற்பாதுகாப்புக் கலையும், மருத்துவமும் இந்தியாவுக்கு எதிராகத் திரும்புகிறது எனும்போது பரம்பரைகள் கடந்தும் மரபணுக்கள் மூலமாகக் கடத்தப்படும் மரபியல் ஆற்றல்களை மீள எழுப்பி பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த வீரனை மீண்டும் எழுப்பும் ஒரு நவீன புனை கதை??/விஞ்ஞான கதை.

கதையாக இதை சுருக்கமாக சுவை பட எழுதியிருந்தால்.. அதுவும் எழுதியவர் சுஜாதாவாக இருந்தால்?? நினைக்கவே சுகமாக இல்லை?
அதே தான் படம் முடியும்போது என் எண்ணமும்....
முருகதாஸின் பட விவாதங்களில் கலந்துகொள்ளும் ஆரோக்கியமான குழு எடுத்த கதை சுவாரஸ்யமானது தான். திரைக்கதையிலும் இதே குழு செயற்பட்டுள்ளதா என்பதே கேள்வி.

தீனா, ரமணா, கஜினி மூன்று A.R.முருகதாஸின் முன்னைய படங்களிலும் கதைவிடை தெரிந்த, முக்கியமான திருப்பங்கள் சில மட்டும் உள்ளதாக இருந்தாலும், திரைக்கதை அமைக்கப்பட்ட விதம், விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.

ஏழாம் அறிவுக்காக இத்தனை காலம் ஒதுக்கியும்.....
சூர்யாவின் உடலுக்கான உழைப்பு, கதைக்களத்தின் பிரதான கருவான போதி தர்மனின் வரலாறு, அது பற்றிய தகவல்கள், மரபியல் பற்றிய விடயங்கள் என்று பாராட்டக் கூடிய விடயங்கள் படத்தில் நிறைந்திருந்தாலும் நிறைவான விடயங்களை விடக் குறைகள் காணக்கூடிய விடயங்கள் அதிகமாக இருக்கின்றன என்பதை இதுவரை பார்த்தவர்களும், விமர்சனங்கள் பல வாசித்தோரும் உணர்ந்திருப்பீர்கள்.

முதலில்,
வித்தியாசமான முயற்சி, தமிழனின் பெருமை, தமிழனுக்கான படம் இப்படியான படங்களை வெல்ல வையுங்கள் என்று கொடி பிடிப்போருக்கு -

வித்தியாசமான முயற்சி என்றால் இந்த சன் பிக்சர்ஸ் தயாரித்து பாரிய விளம்பரத்தோடு, பெரிய விளம்பர உத்திகள், எங்கே திறந்தாலும் உலகத் தரத்தில் ஒரு முயற்சி என்று பீத்திக்கொள்ளும் இந்த ஏழாம் அறிவுக்கு அல்ல, ஏழைகளின் தயாரிப்பாக வந்து விளம்பரம் இல்லாமல், மக்களை சென்று சேராமல் பெட்டிக்குள்ளே சுருண்டு போய் விலை போகாமல் கிடக்கும் நல்ல, சிறந்த, யதார்த்த படங்களுக்கு ஆதரவைக் கொடுங்கள்..

அழகர் சாமியின் குதிரைக் குட்டி, பூ, அங்காடித் தெரு, மைனா, நந்தலாலா,ஒன்பது ரூபா நோட்டு , தென் மேற்குப் பருவக்காற்று இப்படியான படங்களை நீங்கள் ஆதரித்தால் நானும் உங்கள் கட்சி..
குறைந்தது ஆயிரத்தில் ஒருவன்..
இன்று வரை இயக்குனர் செல்வராகவன் அது ஈழத் தமிழருக்கு சமர்ப்பணம் என்று உருகி பேட்டி கொடுத்து ஆலவட்டம் பிடித்து இலங்கையிலும்,லண்டனிலும், கனடாவிலும், ஜெர்மனியிலும் படத்தை ஓட்ட செய்யவில்லை.

தமிழனின் பெருமை, வீரம் எல்லாம் இப்படி சூர்யாவின் Six pack பார்த்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் ..........................

ஒருவன் இருக்கும் வரை அவன் பற்றிப் பேசாதார், எட்டியும் பாராதார் எல்லாம் இறந்த பின் (இறக்கவில்லை இன்னும் என்று இன்னமும் சொல்வோரும் நிறையவே உண்டு.. எனக்கு ஏன் வம்பு) வீரமா, துரோகமா என்று வசனம் வைப்பதை நாம் கரகோஷம் செய்து உருக வேண்டுமா?

போதி தர்மன் என்ற தமிழர் மூலமாகத் தான் இப்போது சீனர் உலகத்துக்கு வழங்கியதாகக் கூறப்படும் குங் பூ (Kung Fu) சீனருக்கே கற்பிக்கப் பட்டதாக ஏழாம் அறிவு மூலமாகத் தான் நான், இன்னும் பலரும் அறிந்துகொண்டோம் என்பது உண்மை.
ஏழாம் அறிவு பார்த்து வந்து, நள்ளிரவு தாண்டி இரு மணி நேரமாவது அது பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தேன்..
(உண்மையா அல்லது ஏதாவது ஒரு சிறு தகவல்/ எடுகோளை வைத்து இட்டுக் கட்டி விட்டார்களா என்று தேடி அறியும் ஆர்வம் தான்)

http://www.buddhanet.net/e-learning/buddhistworld/chan.htm






தமிழனின் வீரத்தைத் தான் காட்ட இந்தப் படம் என்று முருகதாஸும், சூரியாவும், தயாரிப்பாளர் உதயநிதியும் சொல்வதை நாம் நம்பினால் தெலுங்கில் போதி தர்மன் ஆந்திராவிலே பிறந்ததாகக் காட்டி தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்களாம்.
(அவ்வாறு குறிப்பிடப் படவில்லை என்றும் இன்னும் சிலர் சொல்கிறார்கள்.. தெலுங்குப் பதிப்புப் பார்த்தவர்கள் ஆதாரப் படுத்துக)

போதி தர்மர் தமிழர்தானே? காஞ்சிபுரத்தில் தானே பிறந்தார்.?அப்புறம் ஏன் தெலுங்கு படத்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும் ..ஹிந்தி படத்துல தாரவில பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா சொல்லி இருக்கலாமே ? 
- இன்று Facebookஇல் பார்த்த ஒரு கருத்துப் பகிர்வு 

அத்துடன் தமிழன் என்று வந்த வசனங்கள் எல்லாமே தமிழனுக்குப் பதிலாக அங்கே இந்தியன் பிரதியீடு..

இது எல்லாம் வியாபார தந்திரம், மொழி மாறும் சினிமாவில் இது சகஜம் என்று சொல்வோருக்கு..

படத்திலேயே பல இடங்களில் குழப்பம் வரவில்லையா?

இந்தியருக்காக இந்தியாவுக்காக கதாநாயகனும் நாயகியும் நண்பர்களும் போராடுகிறார்கள்.
ஆனால் எங்கே போனாலும் தமிழர் என்றால் அடிக்கிறார்கள்; இந்தியாவிலும் தமிழரை மதிக்கிறார்கள் இல்லை என்ற புலம்பல்..
"வெளிநாடுகளில் இந்தியன் என்றால் ஒதுக்குகிறார்கள்; இந்தியாவில் தமிழன் என்றால் ஒதுக்குகிறார்கள்"

இறுதியாகவும் ஆரியர் அழித்த திராவிடம் பற்றி கதாநாயகனின் பிரசங்கம்.
இந்தியர்களின் கவனத்துக்கு இது..



சரி பிற விஷயங்கள் கடந்து படத்துக்குள் 'கொஞ்சம்' நுழைவோமானால்,

படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள் -
இயக்குனரின் தேடல் - தகவல் சேகரிப்பும், அதை நுணுக்கமாக ஒரு விவரணம் போல அல்லாமல் கொடுக்க முயன்ற விதமும். (ஆனாலும் போதி தர்மரின் காட்சிகளில் ஒலிக்கும் பின்னணிக் குரலும், போதி தர்மரைத் தெரியுமா என்று மக்களிடம் கேட்கும் காட்சிகளும் கொஞ்சம் Documentary உணர்வைக் கொடுத்துள்ளன என்பதை ஏற்கத் தான் வேண்டும்.
முதல் இருபது நிமிடங்கள் - சூர்யாவின் அமைதி தவழும் முகமும், பின்னணி இசையும், அந்தக் குளிரான சீனப் பகுதிகளை ரவி K சந்திரனின் ஒளிப்பதிவு தந்துள்ள விதமும் அருமை

சூர்யாவின் உழைப்பு - இரு வேடங்களிலும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைத்துள்ளார்.

ஒளிப்பதிவு - பாடல் காட்சிகள் + வீதியில் நடக்கும் ஒரு சண்டைக் காட்சி தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் ரவி K சந்திரன் கலக்கி இருக்கிறார்.
ஆனாலும் ரவி K சந்திரனின் தனித்துவ முத்திரைகளை ஏழாம் அறிவில் காணமுடியவில்லை

வில்லனாக வரும் Johnny Tri Nguyen - இந்த வியட்நாமிய வில்லன், அதிகமாகப் பேசாமலே கண்களாலும் அக்ஷனாலும் மிரட்டி இருக்கிறார்.  பல இடங்களில் சூர்யாவை விடக் கரகோஷங்கள் இவருக்கு..

படம் முழுக்க பரவி இருக்கும் பல தகவல்கள் - சில இடங்களில் இது சாதாரண ரசிகர்களுக்கு Over dose ஆக இருக்கலாம். எனக்குப் பிடித்திருந்தது.
 ஆனால் மரபியல் கற்கைகளை ஒரு கல்லூரி மாணவி சும்மா ஏதோ வீட்டுப் பாடம் செய்வது மாதிரி, வெகு சாதாரணமாக வீட்டிலேயே ஆய்வு கூடம் வைத்து செய்வதெல்லாம் சாத்தியமா? (அப்பா கமல் வைத்துக் கொடுத்திருப்பாரோ?)
கற்றவர் பார்த்துக்குங்கப்பா

அன்டனியின் editing -  காக்க காக்கவில் ஆரம்பித்தவர் இன்றுவரை எந்தப் படத்திலும் சொதப்பியதாக இல்லை.


பிடிக்காத/கடுப்பேற்றிய/உறுத்திய விஷயங்கள்

ஷ்ருதி ஹாசன் - பாடல் காட்சிகள் தவிர வேறு எதிலுமே இவர் அழகாகவும் இல்லை; பொருத்தமாகவும் இல்லை. வெள்ளை வெளேரென்று ஒரு குச்சியாக பல இடங்களில் நின்று விட்டுப் போகிறார். முக பாவத்தைப் பார்த்தால் சும்மாவே அழுதுவிடுவார் போல..
தமிழின் பெருமை பற்றி சொல்கிற படம் என்று விட்டு தமிழை டமிலாகப் பேசும் இவரிடம் தமிழின் பெருமையைப் பேசச் சொல்கிற இடங்கள் இயக்குனருக்கே உறுத்தலாக இருக்கவில்லையோ?

உன்னைப் போல் ஒருவனில் இசையமைப்பாளராகத் தேறியதை ஏனைய எல்லா இடங்களிலும் கோட்டை விட்டுவிட்டார்.
முதலில் ரஹ்மானின் செம்மொழி பாடலைக் குதறியவர், எல்லேலோமமா பாடலில் ளகர, லகரங்களைக் கொன்றார்; படத்தில் அனேக வசனங்களையும்...
தந்தையார் த்ரிஷாவுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க முதல் மகளுக்கு சொல்லிக் கொடுத்தால் புண்ணியம்.

லொஜிக் - விஜய், அஜித், ரஜினி படங்களில் பார்க்கத் தேவையில்லை. ஆனால் சரித்திரத்தையும் தற்காலத்தையும் விஞ்ஞானத்தின் மூலமாக இணைக்கும் படத்தில் இதை A.R.முருகதாஸ் பல இடங்களில் கோட்டை விடுகிறார்.
சில முக்கிய கோட்டைகள்...

இந்தியாவின் முன்னணி விஞ்ஞானி சீனர்களுடன் நடத்தும் ரகசியக் கொடுக்கல் வாங்கலுக்கு சாதாரண மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறாராம். அதுவும் சர்வசாதாரணமாக அவரது மின்னஞ்சலில் இருந்து தகவல்களைப் பிறர் எடுக்கிறார்களாம்.

போலீஸ் நிலையத்தில் வந்து அந்த டொங் லீ அத்தனை பேரைத் தாக்கி வெறியாட்டம் ஆடிய பின்னரும் இப்படி வெளிப்படையாக அவன் நடமாட முடிகிறது. போலீசு என்னாச்சுய்யா?

அதுசரி இலங்கையர் நாம் இந்தியாவுக்குள் நுழையத் தான் இத்தனை கெடுபிடியா? சீனர்கள் அவ்வளவு இலகுவாக நுழைய முடிகிறதா?
இது தான் உண்மை நிலவரமா?

நுணுக்கு காட்டியில் ஷ்ருதி பார்க்கும் மரபியல் அணுக்கள் - முருகதாசின் படத்தில் இப்படி?? நம்ப முடியவில்லை

அந்த வீதியில் நடக்கும் சண்டை + Hypnotism மூலமாக வில்லன் வாகனங்களை வைத்து சூர்யா+ஸ்ருதியைக் கொல்ல எத்தனிக்கும் இடம்..

(கிராபிக்ஸ் சொதப்பலும் அப்படியே உறுத்தித் தெரிகிறது)

சீனாவில் காலமான போதி தர்மரது DNA மூலக் கூறுகள் இந்தியாவில் இருக்கும் சாதாரண கல்லூரி மாணவிக்கு எப்படிக் கிடைக்கிறது?

பாராட்டக் கூடிய பாரிய முயற்சி ஒன்றில் இறங்கிய இயக்குனர் + குழு இப்படியான விடயங்களையும் சரியாகத் திட்டமிட்டிருக்கலாமே..



பாடல்கள் எல்லாமே இடைச் செருகல் போலவும், ஒளிப்பதிவு சீரில்லாததாகவும் தெரிகிறது.
இன்னும் என்ன தோழா பாடல் கதை சொல்லிப் போவதாக இருப்பதாலோ என்னவோ மனதில் நிற்பதாக இல்லை.
(நக்கீரன் You tubeஇல் ஏற்றியுள்ள வீடியோ இதை விட உசுப்பேற்றும்.. ஆனால் இறுதி யுத்தத்தில் வதை பட்ட எங்கள் மக்களைக் காட்சிப் பொருளாக்கி இருப்பது கொடுமை + கண்டிக்கத் தக்கது)

இடைவேளைக்குப் பிறகு எல்லாக் காட்சிகளுமே திருப்பங்களை ஏற்படுத்தாமல், அடுத்தது என்ன என்று இலகுவாக ஊகிக்குமாறு அமைத்திருப்பது வழமையான முருகதாஸின் புத்திசாதுரியத் தனம் எங்கே போனது என்று கேட்க வைக்கிறது.

நோக்கு வர்மம் தான் hyptonizeஇன் ஆரம்பம் என்று காட்டியுள்ள முருகதாஸ் சில கணங்களில் ஒருவரை வசப்படுத்துவது முடியுமா என்ற சாத்தியத்தையும் ஆராய்ந்திருக்கலாமே.
http://www.wikihow.com/Hypnotize-Someone

அடுத்து நோக்கு வர்மம், வசியப் படுத்தல் போன்றவை இலிருந்து வேறுபடுவதையும் அவை பற்றி ஓரளவாவது அறிந்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Hypnotherapy

இக்கால சர்க்கஸ் சாகச வீரன் சூர்யாவின் பாத்திர உருவாக்கம் கொஞ்சம் சறுக்கி இருக்கிறது.
ரிங்கா ரிங்கா பாடல்களில் ஆரம்பிக்கும் பாத்திரம் அதற்குப் பின் இன்னும் ஒரே ஒரு பாடலின் சில இடங்களில் சாகசம் செய்வதோடு சரி..

இலங்கையில் தணிக்கை செய்யப்பட காட்சியை Facebook, You tube இல் நானும் பார்த்திருந்தேன்.
போதி தர்மனின் மரபணுக்கள் தட்டி எழுப்பப்படாமலே வீராவேசம் பொங்க ஸ்ருதிக்கு அவர் வீரம் பற்றி சொல்வது கொஞ்சம் திணிக்கப்பட்ட உறுத்தலாக இருக்கிறது.

கஜினி படத்தில் எனக்கு அலுக்கப் பண்ணிய ஒரே விடயம் சூர்யா இரட்டை வில்லன்களுடன் போடும் அந்தக் கடைசி சண்டை..
அதே போலத் தான் ஏழாம் அறிவிலும் இறுதி சண்டை. வில்லனை சூர்யா வீழ்த்துவார் எனத் தெரியும்.
ஆனால் ஏராளம் கிராபிக்ஸ் சொதப்பல்களுடன் இழுத்து நடக்கும் சண்டை சலிக்க செய்கிறது.

அதுசரி முக்கியமான கேள்வி.. நோக்கு வர்மம் போதி தர்மரின் பரம்பரையில் வந்த சூர்யாவைத் தானே பாதிக்காது? ஸ்ருதியைக் கொள்ள வில்லன் அவரையே பயன்படுத்தியிருக்கலாமே? ஏன் பயன்படுத்தவில்லை ?
இயக்குனர் Johnnyக்கு சொல்லவில்லையோ?

எக்கச் சக்க சொதப்பல்களுடன் இந்தப் படத்தை எனக்கு ஏற்கவும் முடியவில்லை; ரசிக்கவும் முடியவில்லை.

சொல்ல வந்த விஷயம்/ஆதங்கம் எல்லாமே சரி என்று வைத்தாலும் ... சொன்னவிதம்...?????????!!!!!!! இதுக்கு ஏன் இவ்வளவு Build-Up????

அதிலும் எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பதாக சூரியா இறுதியில் மஞ்சளையும் மாக்கோலத்தையும் வைத்து தமிழருக்கு சொல்லும் அறிவுரை சின்னப் பிள்ளைத் தனம். (சொல்லி முடிக்க திரையரங்கிலிருந்து கேட்ட ஒரு குரல் -இதெல்லாம் தெரியும்டா.. போடா ---)
தமிழரைக் கேவலப்படுத்த இதை விட வேறு ஒன்றுமே வேண்டாம்.
அதில் முருகதாசும் பெருமையோடு கமேராவுக்குப் பின்னால் அமர்ந்திருக்கிறாராம்.

சீன இந்திய யுத்தம் என்பதை தமிழ், தமிழர் என்ற உசுப்பேற்றலுடன் + DNA, Bio war விஞ்ஞானப் புதுமையுடன் தரப் பார்த்திருக்கிறார்...
ஆனால் தயாரிப்பு மச மச கொச கொச..

இன்னும் எத்தனை நாள் தான் தமிழ்,தமிழர் என்று எங்களை நாமே உசுப்பேற்றி, ஏமாற்றப் போகிறோம்? ஏமாறப் போகிறோம்....??

ஏழாம் அறிவில் தான் பாடலே வருதே..

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளாய்....

ஏழாம் அறிவு - ஏமாற்றம் 



முக்கிய குறிப்பு - சூர்யா ரசிகர் என்று வராமல் அர்த்தமுள்ள, ஆக்க பூர்வ வாதங்களுடன் வரும் பின்னூட்டங்கள் என்றால் அனானிகளாக வந்தாலும் தாராளமாக வரவேற்கிறேன். :)


Post a Comment

54Comments

Please Select Embedded Mode To show the Comment System.*