உங்கள் வாக்கு....

ARV Loshan
10

நாளை முக்கியமான கொழும்பு மாநகரசபை உட்பட சபைகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல்.

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கட்சிகளின் பலத்தைத் தீர்மானிக்கவும், கூட்டணிகளுக்கான பேரம் பேசவும் மட்டுமே இந்தத் தேர்தல் பயன்படப் போகிறது என்று நீங்கள் யாராவது நினைப்பீர்களேயானால், அது தவறு.
அடி மட்டத்திலிருந்து மேல் செல்லும் அரசாங்கப்படிகளின் முதலாவது அடியாக அமைவது இந்த உள்ளூராட்சி சபைகள் தான்.
மக்கள் தங்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதும் இந்த முதலாவது படியில் தான்.

இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன. கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸ, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகர சபைகளுக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை - முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ ஆகிய 5 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி நடைபெற்றதால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்காகவும் ஏனைய சில சபைகளுக்கும் நாளை வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.

கொழும்பில் இம்முறை ஒன்பது கட்சிகளும் பத்து சுயேச்சைக் குழுக்களும்..
தோற்பது தெரிந்தே ஏன் தான் இப்படியொரு சுயேச்சை ஆசையோ?

கொழும்பில் இம்முறை என்றும் இல்லாதவாறு ஊகிக்க முடியாதாவாறு தேர்தல் முடிவுகள் வரும் என்று நம்பப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) மிலிந்த மொரகொட தலைமையிலும், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) முசம்மில் தலைமையிலும் களம் காணுகின்றன.

ஆண்டாண்டு காலமாக கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை. ஆனால் என்றும் இல்லாதவாறு அரசாங்கம் முழுப் பலத்துடன் இருக்கையில் நொந்து நூலாகிப் போன நிலையில் கட்சிக்குள் ஏராளமான உடைவுகளோடு இம்முறை ஐ.தே.க தேர்தல் களம் காண்கிறது.
முசம்மிலுக்கு மக்களின் ஆதரவு இருந்தாலும் அடிக்கடி கட்சிகள் தாவியவர் என்ற பெயரும் சேர்ந்தே இருக்கிறது.
அத்துடன் பிளவுகள் பல கண்டு சிக்கி சின்னாபின்னமாகியுள்ள ஐ.தே.கவுக்கு இம்முறை பாரம்பரிய வாக்கு வங்கியிலும் பாரிய சரிவு ஏற்படலாம்.

மறுபக்கம் மிலிந்த மொரகொடவும் கட்சி மாறியவராக இருந்தும் நாகரிக அரசியலை முன்னெடுப்பவர் என்ற நற்பெயர் உள்ளது.
முதல் தடவை தேர்தலில் போட்டியிட்டபோது அறிவித்தபடியே இன்று வரை சூழலை சுவரொட்டிகள், பதாதைகள் மூலம் மாசுபடுத்தாது பிரசாரம் செய்து வருபவர்.
இத்துடன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித நற்பணித் திட்டங்கள், அபிவிருத்திகளும் சேர்ந்து சிங்கள வாக்காளர் மத்தியில் ஒரு அரச ஆதரவு அலையை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறேன்.

முதலாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத ஒரு கட்சி (2006ஆம் ஆண்டு ஐ.தே.க வின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஐ.தே.கவின் ஆதரவுடைய சுயேச்சைக் குழு வெற்றிஈட்டியதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று) கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றக் கூடிய வாக்குகள் உள்ளது.

முஸ்லிம் வாக்காளர்களின் தெரிவு இம்முறை சிதறுமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மர சின்னத்தில் போட்டியிடுகிறது.
ஆனால் முஸ்லிம் மக்களின் கணிசமான ஆதரவை உள்ளடக்கிய முக்கிய வேட்பாளர்கள் பிரதான கட்சியில்..
குழப்பம் தான்.
ஸ்ரீ.ல.மு.கா ஓரிரு ஆசனங்கள் பெற்றாலே திருப்தி காணும்.

மறுபக்கம் முன்னாள் மூன்றாவது பெரிய கட்சி இம்முறை படு மோசமான நிலையில்..
மீண்டும் ஒரு உடைவு. இம்முறை மேலும் மூக்குடையலாம்.

ஆனாலும் தமிழரின் வாக்குகள் மிக அதிகமாக இம்முறை இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் செல்லாமல் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு செல்லும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

கொழும்பில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக இக் கட்சியே களம் காண்கிறது என்றால் அந்தக் கூற்றில் மறுப்பேதும் இருக்காது.
அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது பகிரங்க ஆதரவை வழங்கி இருக்கும் நிலையில் தமிழ்ப் பிரதிநிதிகளை சரியாகத் தெரிவு செய்யவேண்டிய ஒரு கடமை கொழும்பு தமிழ் வாக்காளர்களுக்கு இருக்கிறது.

மனோ கணேசன் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் தேவையான சந்தர்ப்பங்களில் துணிச்சலாகக் குரல் கொடுத்த ஒருவர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக கண்டியில் அவர் தோற்றுப் போனாலும் அவருக்கென கொழும்பில் ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கி இருப்பதை மறுக்க முடியாது.

அதிலும் இம்முறை அவரது கட்சி ஏணிச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் சேர்ந்திருப்பதும் குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினரையவாது தெரிவு செய்ய எதுவாக அமையும் என்று நம்பி இருக்கலாம்.
அத்தனை கொழும்பில் வாழும் தமிழரின் வாக்குகளும் சிதறாமல் கிடைத்தல் பத்துக்கு மேல் ஆசனங்கள் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.




ஆனால் எம் தமிழ் வாக்காளர்கள் வழமை போல வீட்டுக்குள்ளே இருக்காமல் தம் வாக்குப் பலத்தைப் பயன்படுத்த வெளிவரவேண்டும்.
எல்லாவகையான எம் இருப்புக்களும் தொலைந்து போகாமால் இருக்க இதை ஒரு வழியாக மாற்றவேண்டும்.

வாக்களிக்கும்பொது ஒரு முக்கியமான விடயத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும்..

எமது பிரதிநிதியை நாம் தெரிவு செய்கிறோம்..
ஒருவன் பணக்காரன் ஆக வழியை நாம் காட்டவில்லை; எமக்கு சேவை செய்ய, எமக்கு வேண்டியதை செய்ய எம்மில் இருந்து ஒருவரை நாம் அனுப்புகிறோம்.
வாக்களித்த பிறகும் எமக்குப் பொறுப்புக் கோரும் நம்பிக்கை உடைய, நாம் அணுகக் கூடிய ஒருவருக்கா வாக்களிக்கிறோம் என்று பார்த்து எமது வாக்கை அளிக்க வேண்டும்.

முதலில் எமது வாக்குரிமையை நாம் பயன்படுத்தவேண்டும்.
எமக்கென்ன ஆச்சு என்று இருந்தால் எம்மை ஆள்வதற்கு மற்றொருவரைத் தீர்மானிக்க விட்டுவிடுகிறோம்.
எமக்கான எமது உரிமையை நாம் எடுத்துக் கொள்ளாமல் விடுவது எம்மை நாமே கவனிக்காமல் விடுவதன்றோ?

என்னைப் பொறுத்தவரை எனது வாக்கை இம்முறை பகிரங்கமாக அறிவித்தே அளிக்கிறேன்..
எனது நண்பன் குகவரதன்.. (குகன்) 
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் இலக்கம் 16.

எனது நண்பன் என்பதற்காக சொல்லவில்லை.
நம்பிக்கைக்குரியவர்;
சேவைகளை மனப்பூர்வமாக இதுவரை ஆற்றியவர்.
லயன்ஸ் கழகத்தில் நாம் இருவரும் இணைந்து சேவையாற்றியபோது எந்தவொரு பிரதிபலனும் பாராது லட்சங்களாக வாரியிறைத்தவர்.
இனித் தான் பணம் குவிக்க வேண்டும் என்ற தேவை இல்லாத ஒருவர்.
இலகுவாக அணுகக் கூடிய ஒருவர்.
உழைத்து முன்னேறியவர் என்பதால் எம் கஷ்டங்களும் புரிந்த ஒருவர்.

கடந்த 15 வருடங்களாகத் தெரிந்தவர் என்பதனால் நம்பி சொல்கிறேன்.. நீங்கள் நம்பலாம் இவரை.
என்னை நம்பி இவருக்கு வாக்களியுங்கள் என்று உரிமையோடு எனது நண்பர்களைக் கேட்கிறேன்.

குகன் வெற்றி பெற்றால் தகுதியான ஒரு நல்ல அரசியல்வாதியை உருவாக்கியதில் எனது சிறிய பங்கும் இருக்கிறது என்று நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வேன். அந்தப் பெருமையில் பங்கெடுக்க உங்களையும் அழைக்கிறேன்.


பார்த்து வாக்களியுங்கள் ஏணி பதினாறிற்கு.

அதே போல இன்னும் ஒரு நல்லவர் தெஹிவளை - கல்கிசை மாநகர சபையில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.
அவர் சிங்களவராக இருந்தாலும் தமிழரின் உரிமைகளுக்காகவும் சம நீதிக்காகவும் ஆண்டாண்டு காலம் குரல் கொடுத்து என்றும் தோல்வியையே சுமந்து வரும் கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்ன.

இம்முறை தனது கட்சியை ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைத்து ஏணிச் சின்னத்தின் தலைமை வேட்பாளராகப் போட்டி இடுகிறார்.
தெகிவளை - கல்கிசை நண்பர்கள் இந்த நல்ல மனிதருக்கு உரிய கௌரவத்தினை வழங்குங்கள்.

இது எனது விருப்பம் + சிபாரிசு + வேண்டுகோள்கள் மட்டுமே.
இதர இடங்களில் உங்கள் உங்கள் தேவைகள் அறிந்த உங்களைப் புரிந்த நல்லவர்களை உங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள்.

உங்கள் விரல்களில் நகம் பூசி உங்கள் முகங்களில் நீங்களே கரியைப் பூசிக் கொள்ளாதீர்கள்.

நாளை விடியல் நமக்காக இருக்கட்டும்.

(ஒரு விடயம் - இம்முறை தேர்தல் முடிவுகள் அனைத்தும் தேர்தல்கள் செயலகத்திலிருந்து அரசாங்கத் தகவல் திணைக்களத்துக்கு சென்று அங்கிருந்து தான் ஊடங்களுக்கும் மக்களுக்கும் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறே முடிவுகள் அறிவிக்கப்பட்டதை ஞாபகப் படுத்துவது எனது கடமை மக்கள்ஸ்)

Post a Comment

10Comments

Please Select Embedded Mode To show the Comment System.*