தோற்றுப் போன இலங்கையும், கோழையான கிளார்க்கும் - ஒரு கிரிக்கெட் வலம்

ARV Loshan
10

இலங்கையில் வைத்து இந்த மைக்கேல் கிளார்க்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை தோற்கும் என்று கனவிலும் யாரும் நினைத்திரார்கள்.நானும் தான்..
ஆனால் இப்போது கிரிக்கெட்டில் நினைத்த எது தான் நடக்கிறது?

டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாம் இடத்திலிருந்த இந்தியா இங்கிலாந்திடம் நான்கு டெஸ்ட்டிலுமே தோற்று முதலாம் இடத்தை இப்படி மோசமாகப் பறிகொடுக்கும் என்று யாராவது நினைத்தோமா?
காயமடைந்த இந்திய வீரர்களைக் கொண்டு இன்னொரு Indian XIஐயே உருவாக்கலாம் என்று நாம் நினைத்தோமா?
உலக சாம்பியன்கள் ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்தால் உருட்டப்பட்டு உருளைக்கிழங்கு பஜ்ஜியாவார்கள் என்று தான் நினைத்தோமா?
சச்சின் டெண்டுல்கர் சதமே அடிக்காமல் நாடு திரும்புவார் என்று யாராவது நினைத்தோமா?
இல்லை டிராவிட் மீண்டும் ஒரு நாள் போட்டிகள் விளையாடுவோர் என்றோ, அல்லது T 20 போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வார் என்று தான் நினைத்தோமா?

கிளார்க்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தில் ஓரளவு பலம் வாய்ந்த அணியாகவே இருந்தாலும், ஜோன்சன் தவிர பந்துவீச்சை நம்ப முடியாது என்று முன்னைய பதிவில் சொல்லி இருந்தேன்.


சுருட்டப்பட்ட இந்தியாவும், சுழற்றக் காத்துள்ள இலங்கையும்.. ஒரு கிரிக்கெட் சுழல் அலசல்.



வழமையான விக்கிரமாதித்த மூக்குடைவு தான்.

ஆனாலும் சொன்ன விஷயங்கள் சிலது நடந்திருக்கே..

சுழல்பந்துவீச்சை சிறப்பாக, நேர்த்தியாக எதிர்கொள்ளக் கூடிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம்..ரிக்கி பொன்டிங் + மைகேல் கிளார்க்.
இந்த இருவருடன் சுழல் பந்தை எதிர்கொண்டு ஆடக்கூடிய வொட்சன், மைக்கேல் ஹசி ஆகியோரும் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்ததாலேயே ஆஸ்திரேலியா வெல்வதைப் பற்றியல்ல, தோல்வியிலிருந்து தப்புவதைப் பற்றியே சிந்திக்கலாம்.
ஆனால் அண்மைக்காலத்தில் இலங்கை வந்த அணிகளில் ஆஸ்திரேலியா கொஞ்சம் வித்தியாசமானது.. இலங்கை அணியை அச்சுறுத்தக் கூடிய வேகப்பந்துவீச்சு அவர்களின் பலம்.

என்ன ஒன்று முரளிக்குப் பின்னதான சுழல் பந்துவீச்சுத் தேடல் (ரங்கன ஹேரத்தை விடுவோம்) இன்னும் சரிவரவில்லை.
இந்தியா கூட அஷ்வினை நம்பிக்கையோடு நோக்குகிறது.
இலங்கையில் ரண்டீவ், மென்டிஸ், சீக்குகே பிரசன்னா மூவருமே இம்முறை ஏமாற்றிவிட்டார்கள்.

இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் எதிர்கொள்ளும் சிக்கலான ஸ்விங் + பவுன்சர் பந்துக்கு எதிரான தடுமாற்றங்களை இம்முறை சொந்த மண்ணிலேயே சந்தித்ததும், வழமையாக வெளிநாட்டு அணிகளை உருட்டிப்போடும் காலியிலே வைத்து ஒரு புதிய, பெயர் அறியப்படாத ஆஸ்திரேலிய சுழல் பந்துக் கற்றுக் குட்டியிடம் கவிழ்ந்து போனதும் நம்பவே முடியாத விஷயங்கள்..

மஹேல , சங்கா, டில்ஷான், சமரவீர இத்தனை துடுப்பாட்ட சிங்கங்கள் இருந்தும் சுண்டெலிக் கூட்டம் ஆகிப்போனது இலங்கை அணி.

இதற்குப் பரிசு பாகிஸ்தானுடனான மத்திய கிழக்கு தொடருக்கு சாம் அங்கிள் அணியில் இல்லை.

ஒரு தொடரின் இரு போட்டிகளில் சறுக்கிய சமரவீரவை அணியை விட்டு நீக்கியது தவறு என சொல்வோருக்கேல்லாம் நான் சொல்வது, ஆஸ்திரேலியா போல இந்த விடயத்தில் நாம் நடப்பதே நல்லது. சமரவீரவின் வயது கவனிக்க வேண்டிய ஒன்று. அதே போல ஷார்ஜா, துபாய், அபுதாபியின் தட்டை ஆடுகளங்களில் யார் வேண்டுமானாலும் ஓட்டங்களை மலையாகக் குவிக்கக் கூடும். அந்த வாய்ப்பை ஒரு இளையவருக்குக் கொடுப்பதன் மூலம் நம்பிக்கையை ஓட்டத் தேர்வாளர் எடுத்த முடிவு சரியே.

அஜந்த மென்டிஸ் ஆஸ்திரேலியாவை T 20  போட்டிகளில் உருட்டிய விதம் என்ன, அது அப்படியே தேய்ந்து புஸ் ஆகிப் போனதென்ன?
இலங்கைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கிடைத்த மிகப் பெரிய நன்மைகள், ஷமிந்த எரங்க, சுரங்க லக்மல் என்ற இளைய வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் உப தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் பொறுப்பு உணர்ந்தது.

எல்லாம் சரி, காலியில் வென்ற பின், மழையினால் இலங்கை பல்லேக்கலையில் தப்பித்த பின், பெரிதாக முடிவுகள் தராது என்று நம்பப்பட்ட மைதானத்தில் முதல் இன்னிங்க்சில் தடுமாறினாலும், பின்னர் ஹியூஸ், ஹசி, தலைவர் கிளார்க்கினால் நல்லதொரு ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்திருந்தது.

நல்ல ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருந்தபோதும் இலங்கையை அழுத்தத்துக்குள் தள்ள க்கு முயற்சிக்கவேயில்லை கிளார்க்.
ஏன்??
1-0 என்று தொடரை வென்றால் போதும் என்ற ஒரு defensive மனப்பான்மையா?
ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் இலங்கை அணியின் மீதும் பயமா?
மார்க் டெய்லர், ஸ்டீவ் வோ போன்றோர் தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணிகள் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் வெற்றி பெற எப்படியாவது முனைவார்கள்.
ஆனால் பொன்டிங் கூட சிலவேளை இதே சுய பாதுகாப்பைத் தான் பார்த்துக் கொண்டார்.

இது தான் சிறந்த அணித் தலைவர்களுக்கும் 'சாதா' அணித் தலைவர்களுக்கும் இடையிலான வித்தியாசம்.
கிளார்க்கின் ஆஸ்திரேலிய அணி முன்னைய அணிகள் போலப் பலம் இல்லாவிட்டாலும், இலக்கை முன்னொரு தாண்டிய பிறகாவது ஒரு முப்பது ஓவர்களில் துரத்தக் கொடுத்து வந்திருந்த ரசிகர்களைக் குஷிப்படுத்தி இருக்கலாம்..

கோழை கிளார்க்.



இன்னொரு விஷயம்,
வோர்ன் - முரளிதரன் என்று தொடருக்குப் பெயரிட்டுவிட்டு பரிசளிப்பு நிகழ்வில் இலங்கையிலிருந்து முரளிதரன் அழைக்கப்படாமையும் , தொலைக்காட்சி ஒளிபரப்பில் எந்தவொரு இடத்திலும் இத்தொடர் வோர்ன் - முரளிதரன் கிண்ணத்துக்கான தொடர் என்று குறிப்பிடப்படாமையும் கவலை + கனடனத்துக்குரியவை.



கடந்தமுறை இத்தொடர் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றபோது ஷேன் வோர்ன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிக்குக் கிண்ணத்தை வழங்கிவைத்ததை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிந்திருக்குமோ, மறந்திருக்குமோ?

முரளி இனி வேறு நாடுகளுக்கு பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சென்றால் இதுவும் ஒரு காரணமாக அமையும்.


-----------------------

இப்போது இலங்கை அணி நீண்ட காலத் தேடலில் இருந்த நிரந்தரப் பயிற்றுவிப்பாளராக ஜெப் மார்ஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் உப தலைவர், உலகக் கிண்ணம் வென்று கொடுத்த பயிற்றுவிப்பாளர், ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய இளம் நட்சத்திரம் ஷோன் மார்ஷின் பெருமை மிகு தந்தையார்.
அனுபவஸ்தராகவும், சிம்பாப்வே அணிக்கும் ஒரு இக்கட்டான சூழலில் பயிற்றுவிப்பாளராக இருந்த அனுபவமும் உள்ளதனால் இலங்கை அணிக்கு இக்கால கட்டத்தில் இவர் பொருத்தமான பயிற்றுவிப்பாளராகவே தெரிகிறார்.

இலங்கைக்கு வருகின்ற 6வது ஆஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் இவர் என்பது இலங்கை - ஆஸ்திரேலியக் கிரிக்கெட் தொடர்பு நீடிப்பதைக் காட்டுகிறது.
டேவ் வட்மொரோடு ஆரம்பித்த இந்தப் பயணம் வட்மோர், மூடியைப் போல நல்லதொரு பயிற்றுவிப்பாளராக மார்ஷைத் தந்து தொடரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கை அணிக்கு இப்போது தேவை நல்லதொரு கண்டிப்பான, வழிகாட்டக் கூடிய வாத்தியார்.
மகன் எதிரணியோன்றில் விளையாடும்போது தந்தை இன்னொரு அணிக்குப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் முதலாவது சந்தர்ப்பம் (சர்வதேச கிரிக்கெட்டில்) அரிது தான்.
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தமுறை இலங்கை செல்லும்போது இதன் சாதக, பாதகங்கள் தெரியும்.

-----------

புதன் கிழமை கொழும்பின் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த அடுத்த வருடம் இலங்கையில் நடக்கவுள்ள ICC World Twenty 20 உலக கிண்ணத்துக்கான அறிமுக விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

புதிய சின்னம் அறிமுகம், ஆண்கள், பெண்களின் உலகக் கிண்ணங்கள் போன்றவற்றைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும், சரியாக ஒரு வருடத்தின் பின்னர் ஆரம்பிக்க உள்ள இந்த ICC World Twenty 20 உலகக் கிண்ணத்தின் போட்டி அட்டவணை ஒழுங்குகள் பற்றிய விளக்கத்தை அறியக் கூடிய வாய்ப்பும் கிட்டியது.
 ஆண்கள், பெண்களுக்கான உலகக் கிண்ணங்கள்....

பெண்களுக்கான உலகக் கிண்ணத்துடன் இலங்கை மகளிர் அணித்தலைவி சசிகலா, ஆடவர் உலகக் கிண்ணத்துடன் முன்னாள் தலைவர் சங்கக்கார ஆகியோருடன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட்.


கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடைபெறுவதைப் போலவே, இம்முறையும் பெண்களுக்கான World Twenty 20 கிண்ணமும் அதே காலகட்டத்தில் நடைபெறவுள்ளதொடு, அரையிறுதிகளும், இறுதிப் போட்டியும் ஆண்களுக்கான போட்டிகளுக்கு முதல் அதே மைதானத்தில் இடம்பெறவுள்ளமை விசேடம்.

கிரீஸ் மனிதன் போன்ற உடலோடு ஒட்டிய கரிய உடையணிந்த, முகமூடியணிந்த ஒரு உருவமே இந்த சின்னத்தை உத்தியோகபூர்வமாக திரையில் அறிமுகப்படுத்தியது காலத்துடன் ஒட்டிய ஒரு திட்டமிடலோ? ;)


இலங்கையை அதிர வைக்கும் விறு விறு T20 போட்டிகளுக்காக காத்திருந்தாலும், இங்கே இடம்பெறுவதால் இலங்கைக்குக் கூடுதலான வாய்ப்புக்கள் இருப்பதை விட இந்தியாவுக்கே அதிக வாய்ப்புக்கள் இருக்கும் என்பது ஒருபக்கம் இப்போதைய நிலையாக இருக்க, என்ன தான் கொழும்பிலிருந்து, கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை என்று ஓடித் திரியவேண்டும் என்பதை விட, எல்லாப் போட்டிகளும் இங்கேயே என்பது தான் கொஞ்சம் கவலை ;)

-------------------

காலமான முன்னாள் இந்திய அணித்தலைவர் டைகர் பட்டோடிக்கு அஞ்சலிகள்..

சாம்பியன்ஸ் லீக் ஆரம்பிச்சு நடக்குது.. ம்ம்ம் பார்க்கிறேன்..
நடக்கட்டும். பார்க்கலாம். :)

ஷோயிப் அக்தாரின் சுயசரிதை கிளப்பியுள்ள சர்ச்சைகள் தான் நாளை முதல் பதிவுலக பரபரப்பாக இருக்கும்.. அதையும் கவனிப்போம்.



Post a Comment

10Comments

Please Select Embedded Mode To show the Comment System.*