மங்காத்தா

ARV Loshan
29


அப்பாடா ஒரு மாதிரியாக மங்காத்தாவை எந்தவொரு இடையூறும் இல்லாமல் ஒரு காட்சியையும் தவறவிடாமல் பார்த்துமுடித்தேன்...

முதல் நாள் காட்சியில் படத்தின் ஆரம்பத்திலேயே எனக்கு க்ளைமாக்ஸ் அமைந்துவிட்டதால்,(அல்லது நான் க்ளைமாக்ஸ் காட்டிவிட்டதால்) பார்க்க முடியாமல் போன மங்காத்தாவை நேற்றும் கொஞ்சம் என்றால் தவறவிட்டிருப்பேன்..

முதல் வாரங்கள் என்பதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
அதை சமாளிக்கவும், அதில் சம்பாதிக்கவும் எப்படியெல்லாம் திரையரங்குகள் ஐடியா செய்கிறார்கள்..

தெகிவளை கொன்கோர்டில் இன்று முதல் தான் முற்கூட்டிய பதிவாம்.. (Advance Bookings)
இதனால் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கமுடியாது என்பதால் சினிசிட்டியில் முற்பதிவுக்குப் போனால் அங்கே 6.30 காட்சியை 5.30க்கு காட்டுவோம் என்றார்கள்..

அதற்கிடையில் வந்த ஒரு விளம்பர ஒலிப்பதிவை முடித்து மங்காத்தாவில் அஜித் கார் ஒட்டிய வேகத்துக்கு நிகராக (என்ன இருந்தாலும் தலையை முந்த முடியுமா?) ஓடி முடித்து சினிசிட்டிக்கு வியர்க்க, விறுவிறுக்க ஓடி அமர்ந்தால், கூட்டம் வந்து சேர்ந்த பிறகு தான் படம் ஆரம்பித்தார்கள்.. நேரம் 5.50.

அஜித்தின் ஐம்பதாவது படம்.. முக்கிய மைல் கல்.
வெங்கட் பிரபுக்கு ஹிட் அடித்துக் காட்டவேண்டிய போராட்டம்..

இரண்டிலுமே இருவரும் ஜெயித்துள்ளார்கள் என்று இப்போதே மங்காத்தாவுக்கான வரவேற்பு சொல்கிறதே.. நான் வேறு தனியாக சொல்லவேண்டுமா?

மங்காத்தா ஹிந்தியில் வெளிவந்த ஜென்னத் படத்தின் நேரடி கொப்பி என்று முதலில் சொன்னார்கள்.. இயக்குனர் வெங்கட் பிரபு அதை முற்றாக மறுத்திருந்தார். நான் பார்க்கவில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள்..
பின்னர் இப்போது 2001ஆம் ஆண்டு வந்த ஆங்கிலப்படமான Ocean's 11 இன் கொப்பி/ தழுவல் என்று பலரும் சொல்லக் கேட்டேன்..

ஆனால் சூதாட்டப் பணக் கொள்ளை, மற்றும் திட்டமிட்டுக் கொள்ளையடித்தல் தவிரக் கதையில் வேறு ஏதும் ஒற்றுமை இருக்கக் காணவில்லை. இன்னொரு முக்கியவிடயம் அதில் வரும் George Clooneyயின் நரைத்த முடியுடனான Hair style போலவே அஜித் மங்காத்தாவில் நடித்திருப்பதும் அது தான் இது என்று எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் பலருக்கும் அவலாகக் கிடைத்திருக்கும்..

முடிந்தால் 2001இல் வெளிவந்த Ocean's 11 மற்றும் அதைத் தொடர்ந்துவந்த Ocean's 12, Ocean's 13 ஆகியவற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வரட்டும்..

ஆனாலும் The Italian Job படத்தின் சில காட்சிகளை கொஞ்சம் உல்டா பண்ணி இருக்கிறார்கள்.. திருட்டுக் காட்சிகளில்.


கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்திய பரபர கதை.. IPL முடிந்தவுடன் படம் வெளியாகி இருந்தால் மேலும் பரபரப்பாக இருந்திருக்கும்..

மும்பையை மையமாகக் கொண்ட பெரும் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலைக் கண்டுபிடிக்க போலீசில் தனிப்படை அமைக்கப்படுகிறது.
IPL இறுதிப் போட்டிக்காக வரும் பெரும் சூதாட்டப் பணத்தைக் கொள்ளையடிக்க நால்வர் திட்டமிட, அதை அறிந்துகொண்டு ஐந்தாவதாக இணையும் அஜித்தும், சூதாட்டக் கும்பலும், போலீசும் விளையாடும் மங்காத்தா தான் கதை..
வேகமும், திருப்பங்களும், விறுவிறுப்பும், தான் வெற்றிக்கான அடிப்படை என்பதை இயக்குனர் கோவாவின் பின்னர் கற்றுள்ளார் என்று தெரிகிறது.


பெரிய நட்சத்திரப்பட்டாளம் இருக்கே.. அஜித், அர்ஜுன் இருவரும் இருப்பதால் வேறு யாரும் முக்கியத்துவம் பெற மாட்டார்கள் என நினைத்தால் தப்பு.. அங்கே தான் நிற்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு..

அஜித் தன் அட்டகாசமான நடிப்பால் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும், அர்ஜுன் கடைசிக் காட்சிகளில் அள்ளி எடுத்தாலும்,
ஜெயப்பிரகாஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, மஹத் (அவரது உண்மைப்பெயரும் மஹத் தானாமே), அஷ்வின் என்று அனைவருமே படம் முழுக்க வரும் runing roles.

ஆனால் அட்டகாசமாக அஜித் இவர்கள் அத்தனை பேரிலும் அதிகமாக தனித்துத் தெரிகிறார். கூட்டமாக இருக்கும்போதும், தனியாக நடிக்கும் போதும், ஏன் நடக்கும்போதும் கூட அஜித் one man show.

அறிமுகக் காட்சி சண்டையின் போது போலீஸ் உடையில் கொஞ்சம் வயதுபோன தோற்றம் தெரிந்தாலும், நரைமுடி, குளிர் கண்ணாடியுடன் வில்லத்தனமாக கலக்குகிறார் அஜித்.
அதிலும் முக்கியமாக இடைவேளைக்கு முன்னதாக தனியா சதுரங்கம் ஆடும்போதும், கொள்ளையடித்த பணம் காணாமல் தேடும்போது வெறிவந்தவராக அதிரும்போதும், அர்ஜுனுடனான ஆக்ரோஷமான சண்டைகளின் போதும், அதற்கு முன்னர் தொலைபேசும் காட்சியிலும் அஜித் 'மங்காத்தா' பாணியிலேயே சொல்வதாக இருந்தால் Well, I'm Impressed.

வாலி, வரலாறு, பில்லா போன்றே இந்தப் படத்தின் எதிர்மறை, விளத்தனப் பாத்திரம் அஜித் தவிர வேறு யாராலும் இவ்வளவு அற்புதமாக, அசத்தலாக செய்திருக்க முடியாது.
இப்படியொரு வில்லத் தனம், கபடத்தனம், வெறி ஆகியவற்றை வெளிப்படுத்தத் தக்கவாறு காட்சிகளைப் பின்னியிருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள்...
முகபாவங்கள், வசன உச்சரிப்புக்கள், உடல் அசைவுகள் வாவ் கலக்கல்.. இப்படியொரு அஜித் இதற்கு முதல் பார்த்ததில்லை.

I m a bad man என்று அஜித் சொல்லும் இடமும், Give me more... என்று கர்ஜிக்கும் இடமும் கலக்கல்.. ஆனால் சரளமாக சில இடங்களில் அஜித் உதிர்க்கும் ஆங்கில தூசணங்கள் கௌதம் மேனனா பட இயக்குனர் என்ற சந்தேகத்தையும் தருகிறது.
வில்லன், கெட்டவன் என்று காட்டத் தான் வேண்டும்.. அதற்காக இத்தனை சிகரெட்டும், மதுப் போத்தல்களுமா? கொஞ்சம் ஓவர் தான்..

மங்காத்தா பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பேச அஜித் பற்றி அதிகமாகவே புகழ வேண்டி இருக்கிறது.
காரணம் அஜித் இல்லாமல் மங்காத்தா.. கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்.

நரைத்த முடியுடனும் முழுக்க முழுக்க வில்லத்தனம் உள்ள ஒரு பாத்திரத்தில் எந்தவொரு உச்சபட்ச ஹீரோவும் தங்கள் ஐம்பதாவது திரைப்படத்தில் நடிக்க முன்வந்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி. அதிலும் அர்ஜுன் போன்ற இன்னொரு பிரபல கதாநாயகரும் இருக்கும் படத்தில் இப்படியான பாத்திரத்தை ஏற்க தனி தில் வேண்டும்.
இன்னொன்று அழகான தோற்றமுள்ள இளம் நடிகர்களும் படத்தில் இருக்கையில் வயதான தோற்றத்துடன் நடிக்க வேறு யாராவது தயாரா? (கமல், ரஜினி தவிர)
நடக்கிறார் என்று அஜித்தை நக்கல் செய்பவர்களுக்கேன்றே வெங்கட் பிரபு நடந்தே சென்று எதிரிகளைத் துவம்சம் செய்வதாக சில சண்டைக் காட்சிகளை அமைத்திருப்பாரோ? யுவனின் பின்னணி இசையோடு கலக்கல் + கம்பீர நடை வருகிறார் அஜித்.

கொஞ்சம் ஆடியும் அசத்தியுள்ளார். கால்களை விட கைகளை அதிகமாகப் பயன்படுத்தி இருந்தாலும் நடன இயக்குனர்களின் அஜித்தின் பலம், பலவீனம் அறிந்து ஆட்டுவித்துள்ளர்கள்.
மச்சி ஓப்பின் தி பாட்டில் பாடலின் இறுதியில் அஜித்தின் குத்து கலக்கல்.

அஜித்திற்கு அடுத்தபடியாக அர்ஜுன்.. கொஞ்சம் அடக்கி வாசித்த்காலும், அமைதியாகவே அதிரடிக்கிறார். மேக்கப் இல்லாத முகத் தோற்றமும், ஆழமான ஊடுருவும் பார்வையுமாக மிளிர்கிறார்.
அஜித்தின் பாத்திரத்துக்கு முன்னால் ஒடுங்கிப்போகாமல் அவரது பாத்திரமும் இருக்கிறது.

கடைசிக் காட்சி கலக்கல்.

அடுத்துக் குறிப்பிடத்தக்கவர் ஜெயப்பிரகாஷ்.
நான் முன்னைய படங்களில் இவர் நடிப்பை சிலாகித்தது போல, இந்தப் படத்திலும் வெளுத்துவாங்கியுள்ளார்.
ரௌத்திரம் படத்தில் இவரது நடிப்பைப் பற்றி நான் சொல்லியிருப்பதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்.

வைபவ், அரவிந்த் ஆகாஷ் - வெங்கட் பிரபுவின் வழமையான நடிகர்கள்.. துடிப்பும் முன்னேற்றமும் தெரிகிறது.

பிரேம்ஜி - வரும்போதே மொக்கையான பில்ட் அப். சிரிக்க வைக்க முயல்கிறார். அஜித்துடனான கார் பயணக் காட்சி சிரிப்பு..
அஜித் இவரது முன்னைய 'பஞ்சர்' டயலாக்குகளை வைத்தே மொக்கை போடுவது கல கல.. ஆனால் சீரியசான காட்சிகளிலும் பிரேம்ஜி Blade போடுவது தான் கொடுமை.
இயக்குனர் கவனித்திருக்கலாம்.
தம்பிக்கு இந்தப் படத்திலும் கொஞ்சம் கூடுதலாகவே இடம் கொடுத்துள்ளார் அண்ணன்.. பாடல்கள் உட்பட.

ஆண்களை மையப்படுத்திய இடத்தில் நான்கு நாயகிகள் தேவையா?
தேவையான இடங்களில் மட்டும் பாவித்து படத்தின் சுவைகெடாமல் பார்த்துக்கொண்ட வெங்கட் பிரபு வாழ்க.

லக்ஷ்மி ராய் தான் உண்மையான ஹீரோயின்.

IPL போட்டிகள், கிரிக்கெட் சூதாட்டம், சென்னை சுப்பர் கிங்க்ஸ், பிரேம்ஜி அணியும் தோனியின் ஜெர்சி .. இவற்றோடு லக்ஷ்மி ராய்?
ஏதாவது லிங்க்ஸ் உண்டோ இயக்குனர் சார்?

தேவையானதைக் காட்டி, கலக்கி இருக்கிறார் ல.ரா.

த்ரிஷா அஜித்தின் ஜோடி.. சொந்தக் குரல்.. சிம்பிள் அலங்காரம்.. கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் கலங்கி, கொஞ்சம் ஆடிக் கலக்கி இடையே காணாமல் போய்விடுகிறார்.

வாடா பின் லேடா பாடல் ரசனை.. உள்ளக அரங்கிலேயே பின்னணிகள் மாறுவதும், த்ரிஷா, அஜித்தின் ஆடைகள் மாறுவதும் அழகு.
அஜித் கொஞ்சம் ஆடிக்கூட இருக்கிறார். ;)

அங்காடித் தெரு அஞ்சலிக்கு என்னாயிற்று? உப்பிய கன்னங்களும், வீங்கிய உடலுமாக.. அதிலும் இப்படியொரு சப்பை பாத்திரம்..
ஆண்ட்ரியா பேசாமல் பாடிக்கொண்டே இருந்திருக்கலாம்..
அஞ்சலியும் இவருமாகப் பங்குபோட்ட பாடலில் கொஞ்சம் அழகாக இருக்கிறார்.

படத்தின் விறுவிறுப்பிலும் பிரம்மாண்டத்திலும் பெரும் பங்கை எடுத்துள்ள இன்னும் இருவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா & ஒளிப்பதிவாளர் ஷக்தி சரவணன்.
இருவரும் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான ஆட்கள் தானே? இயக்குனரைப் புரிந்து படத்தைக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அக்ஷன் காட்சிகள், சேஸிங் காட்சிகளில் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியாது எனும் அளவிற்கு கலக்கல்..

யுவன் பாடல்கள் தான் மங்காத்தாவின் ஆரம்பப் பரபரப்புக்குக் காரணம். அதே ஐ படம் முழுக்க பின்னணி இசையாலும் கொண்டு போயிருக்கிறார்.
முக்கியமாக ஒரு சண்டைக் காட்சியில் அஜீத் வெறி பிடித்தவர் போல அடித்து நொறுக்க அவ்வளவு நேரம் போய்க்கொண்டிருந்த அதிரடி இசை நின்று லத்தீன் பாணியிலான இசை ஒன்று வரும்.. கலக்கல்.

பாடல் காட்சிகளை ரசித்தாலும் கூட, கொஞ்சம் வேகத்தை இந்தப் பாடல்கள் படத்தில் மட்டுப்படுத்தியதாக உணர்ந்தேன்.. மற்றவர்களுக்கு எப்படியோ?

அதே போல சக்தி சரவணன் பல காட்சிகளில் கையாண்டிருக்கும் கமெராக் கோணங்கள் படத்தை மேலும் பிரம்மாண்டப் படுத்துகின்றன. உறுத்தாத கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஒளிப்பதிவையும் நுணுக்கமாக எடிட் செய்துள்ள இருவரும் தம் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.

மங்காத்தாவில் முக்கியமாகப் பாராட்டப்படவேண்டியவர்கள் வாகன ஓட்டுனர்கள்.
அப்படியொரு மிரட்டல்..
அஜித் ஒரு காட்சியில் மோட்டார் பைக் ஓட்டுகிறார். (அவர் தானே?> டூப் இல்லையே?) பிரமாதம்.

இப்படியான படங்களில் வேகம் தான் லொஜிக் மீறல்களை மறைக்கும். அதை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் வெங்கட் பிரபு.
எந்தவொரு விஷயத்தையும் அதிகமாக எம்மை யோசிக்க விடாமல் 'அட' என்று ஆச்சரியப்படுத்தி ரசிக்க வைப்பதோடு, திருப்பங்களை நம்பும்படியாகத் தந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.
அதிலும் கடைசி முடிவு இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று யோசிக்க வைத்து தருகிறார் பாருங்கள் ஒரு திருப்பம்.. கை தட்டல்கள் காது பிளக்கின்றன..

(கடைசிக் காட்சியில் அஜித்தைப் பார்த்து என் புகைப்படம் தேடுவோரே - நான் இந்த ஸ்டைலுக்கு மாறி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்)


வெங்கட் பிரபுவின் திரைப்படங்கள் இளைய தலைமுறைக்கு மிகப் பிடிக்க காரணமான அத்தனை அம்சங்களும் மங்காத்தாவில் நிறைந்தே இருக்கின்றன.

ரசித்த மேலும் சில..
அஜித்தின் சதுரங்கக் காட்சியும் கற்பனையிலே போடும் வியூகமும்.. King maker என்பது மங்காத்தவைப் பொறுத்தவரை அஜித் அல்ல.. அஜித் King, வெங்கட் பிரபு தான் King Maker
வசந்த் வரும் சாராயக் கடைக் காட்சியில் அஜித் அடிக்கும் லூட்டி..
"நான் என்ன சந்தானமா?"
"என்னய்யா அக்ஷன் கிங்?" என்ற அஜித்தின் மிதப்பு..
"மப்பானாலேயே இசைஞானியின் பாட்டு தான்யா வருது" (இசைஞானி ரசிகர்களுக்கு சந்தோசமா /காண்டா?)
த்ரிஷா - அஜித் லவ்(?) காட்சிகள்
சத்தியமா இனிக் குடிக்க மாட்டேம்பா

மங்காத்தா - மிகவும் ரசித்தேன்.. உற்சாகமாக உணர்ந்தேன்..

மங்காத்தா - It's really his game :) Well I am impressed :)



Post a Comment

29Comments

Please Select Embedded Mode To show the Comment System.*