மண்ணாகிப் போன மங்காத்தா

ARV Loshan
19

அஜித்தின் ஐம்பதாவது படம், அதிலும் பெரிய நட்சத்திரப் பட்டாளம்.. வெங்கட் பிரபுவின் இயக்கம்.. ஏற்கெனவே ஹிட் ஆகிய பாடல்கள் என்று மங்காத்தாவுக்காகக் காத்திருந்ததன் பலனை அனுபவிக்க ஊடக அனுசரணை வழங்கியதால் கிடைத்த ஓசி டிக்கேட்டுக்களுடன் நிம்மதியாக இரவுக் காட்சிக்குப் போயிருந்தோம்...

ஆனால் சவோய் திரையரங்கில் முதல் காட்சி என்றது கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. காரணம் வழமையாகவே ஆங்கில, ஹிந்தி, சிங்களத் திரைப்படங்களை மட்டுமே திரையிடும் அத்திரையரங்கில் ஏதாவது வெகு சில பெரிய தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே திரையிடுவதுண்டு.

இல்லாவிட்டால் EAP நிறுவனம் வாங்கும் தமிழ்த் திரைப்படங்களின் முதல் காட்சியோடு சரி.
அதற்கும் ஆப்பு வைப்பதாக வேட்டைக்காரனின் முதல் காட்சி அமைந்தது பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் ஆவேசப்பட்டு திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் சவோய் திரையரங்குக்குப் பல லட்ச ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டதனால், இனி மேலும் தமிழ்த் திரைப்படங்களை த்திரையிடுவதே இல்லை என  EAP நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனாலும் இந்த மங்காத்தா அறிவிப்பு கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேலை அஜித் ரசிகர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நினைத்தார்களோ? 
ஆனால் திடீரெனப் பெய்த மழையும் சேர்ந்துகொள்ள, 10.30 க்கு ஆரம்பிகவேண்டிய காட்சி திரையரகுக்கு முன்னால் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களின் முண்டியடித்தலுடன்  உள்ளே நுழைவதே பெரும்பாடாகியது.
கடைசியில் நண்பர்களின் கடும் முயற்சியினால் உள்ளே நுழைந்து ஆசனத்தில் இடம் பிடித்து 'மங்காத்தா' ஆரம்பிக்கும்போது நேரம் இரவு 11.45. 

ஓரளவு வசதியான ஆசனம் எனக்கும், என்னுடன் வந்தோருக்கும் கிடைத்தாலும், என் அருகே இருந்த இரு ஆசனங்களை வெளியே எங்களை உள்ளே எடுக்க உதவி மற்றவர்களை உள்ளே எடுத்துக்கொண்டிருந்த நண்பர்களுக்காகப் பிடித்துவைத்திருந்தேன்.
அந்த ஆசனங்களை வம்பினால் எடுக்க முயன்று, வாய்த்தர்க்கம் புரிந்து வலுச் சண்டைக்கு வந்த ஒருவரால் எழுத்தோட்டம், அஜித்தின் அதிரடி அறிமுகம் எல்லாம் பார்க்க முடியாமலே போச்சு...

ஆனால் ஒரே விஷயத்தை அந்தக் களேபரத்திலும் கவனித்தேன்.. அஜித் திரையில் வர கீழே இருந்த ஒருவர் ஓடிச் சென்று சீட்டுக்கட்டினால் திரைக்கு அபிஷேகம் செய்த 'கன் கொள்ளாக்' காட்சி... (அட பாவிகளா.. இங்கேயுமா?)

கொஞ்சம் அமைதியாக இன்னும் சில நிமிடங்கள் போக, கொஞ்சம் திரைப்படத்தோடு ஒன்றிக்க, மீண்டும் அதே வம்பு.. இம்முறை கொஞ்சம் கோபமாகக் கையினால் அடக்க வேண்டியேற்பட்டது எனக்கு.. 
பொது இடம், பதவி என்பதெல்லாம் கடந்து எழுந்த அந்தக் கோபம் தவிர்க்க முடியாதது.
நண்பர்களும் பொங்கி எழுந்துவிட்டார்கள்.
சில நிமிடப் பரபரப்புக்குப் பிறகு அந்த வம்பு நபர் வெளியே போய்விட அமைதியாகிப் போனாலும் எழுத்தோட்டம் தவற விட்டது, எழுந்த கோபம் குறையாதது படத்தை ரசிக்கவிடவில்லை.
எனினும் கதையின் வேகம் ரசிக்கவைத்துவிட இடைவேளையில் 'Strictly No Rules' அஜித் சொல்லிவிட , இனித் தான் "மங்காத்தாடா" என்று நானும் நினைத்துக்கொண்டேன்.

இன்று விடுமுறை முதலிலேயே எடுக்கத் தீர்மானித்திருந்ததனால் வீடு போனவுடன் விமர்சனப் பதிவொன்று போட்டிட வேண்டும் என்று திருப்தியோடு 'தலை'யை ரசிக்க ஆரம்பித்தால், எனக்குப் பின்னால் இருந்து படம் பார்த்துக்கொண்டிருந்த நம் நிறுவனத்தலைவர் 
"அடிபட்டு வெளியே நாம் தூக்கியெறிந்த பாம்பு அவ்வளவு நல்லதில்லை" என்று எச்சரிக்கை செய்ததால், சூழ்நிலை கருதியும், குடும்பத்தோடு வந்ததாலும் கொஞ்சநேரத்தில் புறப்படலாம் என்று முடிவெடுத்தேன்..
(அதற்குள் வெளியே காவல்துறை வேறு வந்து என்ன நடந்தது என்று என்னை அழைத்துக் கேட்டுப் போனதாலும் சில நிமிடங்கள் போயிருந்ததால் மீண்டும் ஒரு தடவை ஆரம்பமுதல் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்)

கடத்திய பணம் என்னவாச்சு என்று விநாயக், சகாக்களோடு தேடிக்கொண்டிருக்க, வாகனத்தை தேடி நாங்கள் வெளியே வந்தோம்..

படம் பாதியில் போச்சே என்ற கடுப்பு ஒரு பக்கம், தனியாக வந்திருந்தாள் துணிவாக நின்றிருக்கலாமே என்ற வெறுப்பு ஒரு பக்கமாக "மங்காத்தா" மண்ணாகிப் போச்சு எனக்கு.

பார்த்தவுடன் இப்படியான படங்களுக்கு சூடான விமர்சனம் வந்துவிடுமே, மங்காத்தாவுக்கு மட்டும் என்னாச்சு என்று அக்கறையாகக் கேட்டு மின்னஞ்சல், குறுஞ்செய்தி எனுப்பிய நண்பர்களுக்காக ஒரு சுய விளக்கம் இது..

(ரௌத்திரம் பார்க்கப் போனால் ஒரு வித்தியாச அனுபவம்.. மங்காத்தா முதல் நாளிலேயே ரௌத்திரம் காட்டவேண்டிய நிலை.. என்னடா லோஷா நடக்குது..
நல்லவனா இருக்க விடமாட்டாங்க போல..)

இன்றைய யாழ் பயணம் முடித்து, வந்து மீண்டும் முழுசாய் மங்காத்தா பார்த்த பின்னர் விமர்சனம் வரும்...
(ஓடிக்கொண்டிருக்கும் சொகுசு வண்டியில் பதிவை தட்டடிச்சு, பதிவேற்றுவதும் ஒரு சுகமான முதல் அனுபவம் தான்)

==============================
இன்னொன்று....

வேண்டாம் என்று 'விக்கிரமாதித்தன்' தடுத்தாலும் சொல்லித்தான் ஆகணும்..
காலியில் நடந்தது பார்த்தீங்களா?
இலங்கை அணியை அடிக்கடி மாற்றிக் குழப்புகிறார்கள் என்று தேர்வாளர்கள் மீது வரும் விமர்சனங்களுக்கு இடையிடையே நான் சொல்லும் பதில்.. இவ்வகையான தெரிவுகள்..
காலநிலை, கள நிலைக்கேற்ப செய்யப்படுபவை என்று....
(Selection of Horses for the causes)
இன்றைய அணித்தேரிவும் அத்தகையதே..

மந்திரவாதி எனப்பட்ட அஜந்த மென்டிஸ், ஒருநாள் தொடரில் பிரகாசித்து டெஸ்ட் அறிமுகம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷமிந்த எரங்க ஆகியோருக்கு மாற்றாக இன்று தெரிவு செய்யப்பட்ட சுரங்க லக்மால், ரண்டிவ் ஆகியோரின் பெறுபேறுகள் பாராட்டப்படக்கூடியவை.
273 என்ற ஒட்ட எண்ணிக்கைக்கு ஆஸ்திரேலியாவை மட்டுப்படுத்தியது பெரிய விஷயமே..


மைக் ஹசியை formக்குக் கொண்டு வந்தது மட்டுமே இலங்கைக்கு இனி சிக்கல்.
ஹசியின் இன்னிங்க்ஸ் திராவிட் பாணியிலான ஒரு பொறுப்பான ஆட்டம்.. பாவம் சதம் பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.. 
டில்ஷானின் சிறப்பான வழிநடத்தலுக்குக் கிடைத்த பரிசு ஹசியின் விக்கெட்.

டில்ஷான் ஒரு டெஸ்ட் அணித் தலைவராக இன்று தான் எனக்கு சில தீர்மானங்கள் மூலம் மகிழ்ச்சியளித்தார்.
ஆனாலும் இனி துடுப்பாடும் இலங்கை முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களையாவது பெற்று இரண்டாம் இன்னிங்க்சிலும் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும்.

இரண்டாவது இன்னின்க்சின் பத்து விக்கெட்டுக்களை எடுப்பது முரளிதரன் இல்லாத இந்த இலங்கை அணிக்கு சிக்கலாக அமையலாம்.
இன்றைய ஆஸ்திரேலியாவின் தடுமாற்றம் ஏழு ஆண்டுகளுக்கு முதல் இலங்கையில் இடம் பெற்ற இலங்கை - ஆஸ்திரேலிய தொடரை மீண்டும் ஞாபகப்படுத்தியது.
அந்தத் தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முதல் இன்னிங்சில் சுருண்டு பின்னர் மூன்று டெஸ்ட் போட்டிகளையுமே போராடி வென்றது அப்போதைய பொன்டிங்கின் ஆஸ்திரேலிய அணி.

ஆனால் இப்போதைய அணியில் எத்தனை மாற்றங்கள்..
அப்போது வென்று கொடுத்த ஷேன் வோர்னும் இல்லை. ஏனையோர் தடுமாறிய வேளையில் ஓட்டங்கள் குவித்த மார்ட்டின். லீமனும் இல்லை.

இலங்கைக்கு முரளியும் வாசும் மட்டுமே இல்லை.. காலி ஆடுகளம் இருக்கிறதே.. 
ஹெரத்தின் துல்லியமும், ரண்டீவின் சுழற்சியும் மிக்க நம்பிக்கை தருகிறது.
பார்க்கலாம்..
ஆஸ்திரேலியாவின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சை அனுபவம் வாய்ந்த நம்பகரமான துடுப்பாட்ட வீரர்கள் முறி யடித்தால் எல்லாம் சுபமே..


இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்...




Post a Comment

19Comments

Please Select Embedded Mode To show the Comment System.*