சங்காவும் கன்கோனும் பின்னே நானும் & இந்து vs இந்துவும்

ARV Loshan
13
சங்கக்கார - 

ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய பண்பினைத் துணிச்சலோடு காட்டிய அந்த லோர்ட்ஸ் மைதானப் பேச்சு. MCC Cowdrey lecture - Lords அது பற்றிப் பதிவு தனியாக இடவேண்டும் என்று நினைத்துக் கொண்ட இரு நாட்களும் பின் மண்டைக் குத்தினால் (Migrain) பாழாப் போச்சு.

முதலில் முழுமையான ஒரு தமிழாக்கம் செய்து பதிவாக இடலாம் என்று ஆசைப்பட்டேன் தான்.

எனினும் பின்னர் அன்புத்தம்பி கன்கோன் கோபி அந்த ஒரு மணித்தியால அற்புத+ஆவேச உரையை அரை நாளாக ரொம்ப சிரத்தையுடன் மொழிபெயர்த்து களைத்தபோது தான் நல்ல காலம் அந்த விபரீத முயற்சியில் நான் இறங்கவில்லையே என்று ஆறுதல் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

ஆங்கிலம் அறிந்த பல பேர் சங்காவின் உரை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்த வேளை ஆங்கிலம் அறியாதோர் அதில் அப்படி என்ன தான் இருக்கு என்று அங்கலாய்த்த நேரத்தில் தான் எங்களுக்கு வந்த ஐடியா - எங்களது வெள்ளி இரவு விளையாட்டு நிகழ்ச்சி வெற்றியின் V for வெற்றி V for விளையாட்டு

ஒவ்வொரு வாரமும் நடக்கும் முக்கிய விளையாட்டு விஷயங்களை அலசும் நிகழ்ச்சியில் கடந்த வெள்ளி சங்கக்கரவின் சரித்திரபூர்வ உரையை அப்படியே தமிழ்ப்படுத்தி முழுமையாக இடலாம் என்று எண்ணினோம்.

அந்த அர்ப்பணிப்பான மொழிபெயர்ப்புக்கு தன்னை ஈடுபடுத்தி எனக்கு உதவிய பெருந்தகை கோபி.
அவருக்கே தெரியாது இது இத்தனை மணிநேரத்தை எடுக்கும் என்று..

அத்தனையையும் மொழிபெயர்த்து முடிக்கையில் தம்பி முழி மட்டுமில்லை எல்லாம் பிதுங்கி விட்டது..

அன்றொரு நாள் சக பதிவர் 'நடுநிலையாளர் அல்லாத' மருதமூரான் (அவருக்குத் தான் நடுநிலையாளர் என்றால் பிடிக்காதாமே) "மொழிபெயர்ப்பு என்பதும் ஒரு கலை" என்று பேஸ்புக்கில் இட்ட கருத்துக்கு ஆமோதித்து நான் இட்ட கருத்து ஞாபகம் வருகிறது....
"ஆமாம் மிக சிரத்தையாக அதில் ஈடுபடாவிட்டால் ஜீவனே போய்விடும்"

கோபியின் மொழிபெயர்ப்பின் முக்கிய விடயமும் அதே..
ஆங்கிலத்தில் இருப்பதைத் தமிழில் கொண்டுவருவது பலராலும் முடிந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதே உயிர்ப்பைக் கொண்டுவர பலராலும் முடிவதில்லை.
இதுதான் இன்றைய விளம்பரத் துறையிலும் இருக்கும் பெரிய குறைபாடு..

நாங்கள் தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கையில் அதே பிரச்சினை எமக்கு நேரடி மொழிபெயர்ப்பு என்று உப்புச்சப்பு இல்லாமல் அறிக்கை இட்டும் விடுகிறோம்.

கன்கோன் கோபியின் மொழிபெயர்ப்பில் நான் உணர்ந்து ரசித்தது அந்த 'உயிர்ப்பு'.

சங்காவாக நான் மாறி அந்த உரையினை ஒலிப்பதிவு செய்தவேளையில் மிக ரசித்து, உணர்ச்சியுடன் ஒன்றரை மணிநேரம் எடுத்து, சிறு சிறு தவறுகளையும் களைந்து ஒன்றித்து அனுபவித்து 'உரையாற்றினேன்'.

அது ஒரு வித்தியாச அனுபவம்..
எத்தனை விளம்பரங்கள் செய்திருந்தாலும், நீண்ட ஒலிப்பதிவுகளில் பலவிதமான பிரதிகளை வாசித்திருந்தாலும், எத்தனையோ ஆங்கில, சிங்களக் கட்டுரைகள், நேரடி உரைகளை மொழி பெயர்த்திருந்தாலும் (Intepretation) இந்த சங்காவின் உரையின் தமிழாக்கம் ஒரு வித்தியாசமான சிலிர்க்கும் அனுபவம்.

அதே போல கடந்த வெள்ளி இரவு எங்கள் வெற்றி FM வானொலியில் ஒலிபரப்பாகி பலரின் பாராட்டுக்களைப் பெற்ற அந்த உரை மேலும் உயிர்ப்போடு அமைய தயாரிப்பாளர் ஷமீலின் பங்களிப்பும் மிக முக்கியமானது. சரியான இசைக் கலவையும் தோதான பின்னணி இசையும் இணைந்து வந்ததும் மிக முக்கியமானவை.

குரலுக்குக் கிடைத்த பாராட்டுக்கள் பின்னணியில் இயங்கிய அந்த திறமைசாலிகளுக்கும் கிடைக்கவேண்டும்.
கன்கோன் கோபி, ஷமீல் ஆகியோருக்கு நேரடியாகப் பாராட்டுக்களை நான் சொல்லி இருந்தாலும், இந்தப் பாராட்டுக்கள் இங்கே பதியப்படுவது அவசியம் என நினைக்கிறேன்.
வரலாறுகள் முக்கியம் இல்லையா?

இரவில் இடம்பெற்ற அந்த நிகழ்ச்சியைத் தவற விட்டவர்களுக்காக ஒலி மற்றும் உரை வடிவில் எங்கள் வானொலியின் தளத்தில் வழங்கி இருந்தோம்..

இன்னும் அதிகமானவர்களுக்கு போய்ச் சேரட்டுமே என்று இங்கேயும் அந்த சுட்டிகளைத் தருகிறேன்...

http://www.vettri.lk/index.php?mainmnu=FM&page=morenews&nid=cm9vdDIyOA==

===============

நான் கல்வி கற்ற கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அறுபதாவது ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது பற்றி முன்பே பதிந்திருந்தேன்.


இந்துக் கல்லூரியும் இலங்கை ஜனாதிபதியும்



அந்தக் கொண்டாட்டங்களின் இன்னொரு அங்கமாக நேற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான ஐம்பது ஓவர் கடின பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றது.

இரண்டு கல்லூரிகளுமே நான் கற்ற பழைய கல்லூரிகள் என்பது எனக்குக் கூடுதல் சந்தோசம்.

அனுசரணை வழங்கி கிண்ணங்களையும் வழங்கி இருந்தோம் வெற்றி FM/TV சார்பாக.

மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இறுதியில் கொழும்பு இந்துக் கல்லூரி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இரு தரப்பிலும் சிறப்பாக விளையாடிய பல வீரர்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.

ஆனால் நேற்றைய போட்டியில் இரு சுவாரஸ்யக் குழப்பங்கள்..

1 . நாணய சுழற்சி.. கொழும்பு இந்துக் கல்லூரி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. நான் Tweet செய்துவிட்டுப் பார்த்தால்.
யாழ் இந்து வீரர்கள் துடுப்பெடுத்தாட இறங்கி இருந்தார்கள்.
கொழும்பு இந்து பின்னர் மனம் மாறிக் கேட்டதால் யாழ் இந்து நட்புணர்வால் இந்த மாற்றம் இடம்பெற்றதாம்.

2 .  நடுவரின் தீர்ப்பு 
கொழும்பு இந்து வீரர் ஒருவருக்கு நடுவர் (இலங்கை கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சபை நடுவர்) LBW முறையில் ஆட்டமிழப்பு வழங்கி இருந்தாராம். துடுப்பாட்ட வீரர் தன கால் காப்புக்குள் பந்து என நடுவரிடம் காட்ட உடனேயே நடுவர் அந்தப் பந்தை Dead ball எனத் தீர்ப்பை மாற்றிவிட்டாராம்.

இது என்னடா கொடுமை? எந்த விதியிலும் இப்படி இல்லையே..
போட்டி முடிந்த பிறகு தான் நண்பர் அமரேஷ் இந்த விஷயத்தை எனக்கு சொன்னார்.
இனிப் பேசி என்ன பயன் என்று விட்டுவிட்டேன்..

யாழ் மாவட்டத்தில் வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் எவற்றிலும் தோற்காத அணியாம் இந்த யாழ் இந்துவின் அணி.. (யாழ் இந்து பிரதி அதிபர் சொன்னது)


கவனித்த இன்னும் சில விஷயங்கள்..
யாழ் இந்துக்கல்லூரி அணியின் சஜீகன், கல்கோகன் மற்றும் கொழும்பு இந்துவின் யசோதரன், முனீப் ஆகியோரின் துடுப்பாட்டங்களையும் ரசித்தேன்.. (பார்த்தவரை)
அதே போல கொழும்பு இந்துவின் ஆரம்ப வேகப்பந்துவீச்சாளர் விஜிஷனின் வேகப் பந்துவீச்சையும் பந்துகளைக் கலந்துகட்டி வீசியதையும் ரசித்தேன்.

கொழும்பு இந்துவின் அணித் தலைவர்/விக்கெட் காப்பாளர் பல சமயங்களில் தோனி+சங்கா கலந்த கலவையை ஞாபகப் படுத்தினார்.

இவ்வளவு உயிரைக் கொடுத்து விளையாடும் இத்தனை இளையவர்களும் பாடசாலைக் காலம் முடிந்ததும் எங்கே போய்விடுகிறார்கள்?
இந்தக் கேள்வி எங்கள் தலைமுறையிலிருந்து இருந்துகொண்டே இருக்கிறது...

=========================

சண்டிகார் பார்த்திருக்கீங்களா?
பார்த்தவங்களுக்கு புதுசா.. பார்க்காதவங்களுக்கு புத்தம் புதுசா..  

Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*