மறுபடியும் பாரதி - கவியரங்கக் கவிதை + ஒலிப்பதிவு - இது ஒரு வித்தியாசமான இடுகை

ARV Loshan
21

யாழ் மாவட்டத்தின், பருத்தித்துறை, புற்றளையில் உள்ள பிரசித்தி வாய்ந்த விநாயகர் ஆலயத்தில் அண்மையில் வருடாந்த உற்சவம் இடம்பெற்றது.
அங்கே ஒரு கவியரங்குக்காக எம்மை அந்த ஆலய நிர்வாக குழு சார்பாக பதிவர் பால்குடி(தனஞ்செயன்) அழைத்திருந்தார்.

ஏற்றிச் சென்று, பின் ஊர் சுற்றிக்காட்டி, பத்திரமாகக் கொண்டு இறக்கிவிட வாகன வசதியும் ஏற்பாடு செய்து தந்து,அன்பாக இருக்குமிட வசதி, உணவு வசதி, உபசரிப்பும் செய்த தனஞ்செயன் - பால்குடிக்கு நன்றிகள்..
(அதிலும் நானும் என் குடும்பமும் தங்கியிருக்கத் தன் அழகான வீட்டை அன்பான குடும்பச் சூழலுடன் தந்தமைக்கு விசேட நன்றிகள்)

யாழ்ப்பாணம், தேர்தல் காலம், ஆலய சூழல்.. கொழும்பில் இருந்து எட்டு மணிநேரப் பயணத் தூரம்.. மீண்டும் திரும்ப வேண்டும் என்று பல கோணங்களில் சிந்தித்து கவியரங்கிற்கு தலைமை வகித்த நானும், ஆதிரை(ஸ்ரீகரன்), நிரூசா(மாலவன்), சுபாங்கன், பவன் ஆகிய நான்கு கவிஞர்களும் தேர்வு செய்த கவியரங்கத் தலைப்பு - "மறுபடியும் பாரதி"

பாரதியாரின் நான்கு கவிதை அடிகளைத் தெரிவு செய்து அவற்றைத் தலைப்புக்களாக மாற்றிக் கொண்டார்கள் தோழர்கள்....


கடந்த பதினாறாம் திகதி சனிக்கிழமை இரவு, புற்றளை ஆலய முன்றலில் இடம்பெற்ற கவியரங்கை முழுமையாக இந்தத் தொடர் பதிவினூடாக ஒரு கவியரங்கு போலவே தரலாம் என்று எண்ணினோம்..


இந்த இடுகையை நீங்கள் ஒரு கவியரங்கை ரசிப்பது போலவே வாசிக்க வேண்டும்.....

கவியரங்கத்தைத் தலைமை தாங்கிய என் ஆரம்பம், அதன் பின் ஒவ்வொரு கவிஞர்களினதும் வலைத்தளங்களுக்கு சென்ற மீள்க...
ஒரு சுவாரஸ்யக் கவித் தொடர் இடுகை இது..

இந்தக் கவியரங்கக் கவிதைத் தொகுப்பை நான் இடுகையில் தந்திருக்கும் அதே வரிசைக் கிரமமாக சென்று , வந்து வாசித்தீர்களானால் முழுமையான கவியரங்கை வாசித்த திருப்தி கிடைக்கும்..
உங்கள் விமர்சனங்கள் எங்கள் குறைகளைத் திருத்தி மெருகேற்ற உதவும்....

கவியரங்கம் - மறுபடியும் பாரதி....




அறிமுகம் - ஒலிவடிவம் 






புலமை கொண்டோரின் ஒலி தவழும் புலோலியம் பதியில்
புல்லிலும் தமிழ் தழைக்கும்,
கல்லிலும் கலை மிளிரும் புற்றளையூரில்
காற்று வந்து கதை பேசும் இனிய இரவில்
திருவிழா முடித்த சந்தோஷக்களையில்
கவியரங்கு காண வந்துள்ள கலாரசிகர்களே..
பெரியோரே, பேரன்புத் தாய்மாரே,
சகோதர,சகோதரியரே
நண்பர்களே..


உங்கள் நேசமிகு அழைப்பால்
நீண்ட தொலைவு தாண்டி
பாச மிகு தமிழால்
பழகிப் பேச வந்துள்ளோம்..


பிறந்த இடம் தவழ்ந்த இடம், தமிழ் பழகிய இடம்
இந்த வட புல வளமான தமிழ் மண்ணாக இருந்தும்,
முப்பது வருடப் போரும்
முடிவில்லாமல் தொடர்ந்த இருண்ட யுகமும்
எம்மை இங்கே இருந்து விரட்டி
உறவுகளிலிருந்து விலக்கி
வெளியே வைத்திருந்தது..
தலைநகரில் இருந்தாலும் தாய் மடியை
நீங்கித் தவித்திருந்தோம்..
தமிழ் என்ற பாலம்
எப்போதும் எம்மை இணைப்பதால்
இப்போது சந்திக்கிறோம்..


காற்றில் கதை பேசி
கலை வீசி தொலை பேசும்
கலைஞன் நான் இன்று இந்தக் கவிஞரின் தலைவனாக
வந்திருக்கக் காரணம் தந்து
ஆசனமும் தந்து அழகு பார்த்துள்ள அன்பர்களுக்கு நன்றி.


மனதுக்கு அமைதி நாடி கண்ணால் காணாப்
பரம்பொருளிடம் வேண்டி, விழா எடுத்து
பா அரங்கு பார்க்க வந்துள்ள உங்களுக்காக
எது பற்றி கவிபாடலாம் என்று
பலவாறு யோசித்து, பலநாளும் யோசித்து
பாட்டுடைத் தலைவனாக
நாம் எல்லோரும் நேசிக்கும்
எம் தமிழால் தினம் பூசிக்கும்
இந்தியர் ஒருவரை அழைக்கலாம் என்று முடிவுகொண்டோம்...


இங்கிருந்து எட்டி நடந்தால்.. அல்ல அல்ல நீந்தினால்
ஒரு சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள அண்டை நாட்டவர் தானே?
அப்படியொன்றும் அன்னியரல்லவே..
எமக்கு நேர்ந்த எல்லாம் பார்த்தும்
தலைகள் தலையிடத் தயங்கிய வேளையில்
தவியாய்த் தவித்து
தங்கள் தசையாடிக் கவலை கொண்ட
தமிழக மக்கள் எப்போதும் எங்கள் நெருங்கியவரே..


அழகான தமிழால் ஆண்டாண்டு காலமாக எம்மை
அள்ளி அரவணைத்து
அணையாத தாகத்தையும் வேகத்தையும்
நெஞ்சில் உரத்தையும் நேர்மைத் திறத்தையும்
தந்து நிற்கும்
மறைந்தும் மறையாக் கவி
மகாகவி பாரதியே எங்கள் தலைவன்..
எங்கள் இன்றைய கவியரங்கத் தலைவன்..
இறந்தும் எம்முடன் வாழும் இனியவன் அவனை
இங்கே அழைத்து வருகிறோம்..


மறுபடியும் பாரதி....


மாண்டவர் சிலர் மீண்டு வந்தால்
மனது மகிழ்வு கொள்ளும்,,
மனதில் இடம்பிடித்த நல்லவர் சிலர்
மண்ணுலகில் மீண்டும் தோன்றிவந்தால்
மனம் நிம்மதி காணும்..
அப்படி ஒருவராக நம் பாரதியை
முறுக்கு மீசை, முண்டாசுக் கவிஞனை இங்கே மீண்டும் அழைக்கப் போகிறார்கள்
இந்த இளைய கவிகள்..


கல்வியில் கரைகாணக் கற்றுக் கொண்டே இருக்கும் கவிஞர்கள்..
பட்டங்கள் பெற்ற இருரும்
கற்றுக்கொண்டுள்ள இருவருமாக நால்வர்.


ஓடிவிளையாடும் பாப்பா முதல்
உலகை ஆளும் மகாசக்திவரை தன்
பாட்டு உலகத்தில் அள்ளி அடக்கிய பாரதியின்
தேடிஎடுத்த நாலு வரிகளைத் தத்தமது கவித்தலைப்பாக மாற்றியுள்ளார்கள்
இந்த நால்வர்.


பாரதி மீண்டும் வந்தால்...
நினைத்துப் பார்க்கவே நெஞ்சினிக்கவில்லை?


சிங்களத் தீவுக்குப் பாலம் அமைக்க சொன்னவன்
தான் சொன்னது நடப்பதைப் பார்த்து
சந்தோஷப்பட்டிருப்பனா?
பாலம் அமைப்பதை நான் சொல்லவில்லை..


புதுமைப் பெண்கள் புரட்சிகர மாந்தர்
புதுசு புதுசாக் கிளம்புவது பற்றி
புளகாங்கிதம் அடைவானா?


பாப்பா பாடல் பாடிய பாவலன்
பாட்டுக்கு பத்து லகரம் வாங்கும்
படப் பாடலாசிரியனாக மாறும் எண்ணம் கொள்வானோ?


sms, போன், மெயில், இன்டர்நெட் படுத்தும்
படாத பாடுகள் பார்த்து
செல்வீர் எட்டுத் திக்கும் எனும் தன் வாக்கை மாற்றி
செல்போன் மட்டும் எடுத்து வராதீர் என்று சொலக்கூடுமோ?


அன்பென்று கொட்டுமுரசே
மக்கள் அத்தனைபேரும் நிகராம்
என்று பாடிய அவன்..
இன்றெம் நிலை பார்த்து
அச்சமில்லை என்று பாடிய வரிகளையும் மாற்றி
அச்சப்படு எல்லாத்துக்கும் அச்சப்படு என்று மாற்றுவானோ?


அன்புக் கவிஞர்கள் அன்பன் பாரதியை
 மீண்டும் அழைத்து
எங்கே கொண்டுவருகிறார்கள்..
என்னென்ன கேட்கிறார்கள்..
ஆசையுடன் உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்...




முதலில் கவிபாட..
இவர்களில் இளையவர்..


ஆனால் குஞ்சாக இருந்தாலும் நெஞ்சு நிமிர்த்தி
விஞ்சு கவி தரக்கூடிய வித்தகன் இவன்..
திருமலை தந்த திருநிறை செல்வன்..
பட்டக் கல்வி படித்துக்கொண்டே பதிவுலகிலும்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவன்..
தமிழின் உணர்வும், சிரிப்பின் சுவையும்
கவியின் சிறப்பும் கலந்தே தருவான்..
நித்தியானந்தன் பவானந்தன்..


பாரதி என்ற பாவலனை அழைத்து
பவானந்தன் கேட்பது
வல்லமை தாராயோ...

பவனின் கவிதையைக் கேட்டு, வாசித்து ரசிக்க.....

"வல்லமை தாராயோ?"



பவனுக்கான தொகுப்பும், மாலவனுக்கான அறிமுகமும் - ஒலி வடிவம்






விக்கலையும் விக்கியையும் வெற்றியையும் சேர்த்து
முத்துக் கவி தந்த பவானந்தன்...


வாலிப வயதில் வனிதையருக்கு மடல் வரையும் பருவத்தில்
வாழும் வயதில் வானகம் சென்ற பாவலனிடம் வல்லமை தரவேண்டி
மடல் வரைந்த பவனின் கவிதை கேட்டோம்..


கிளாஸ் முடிந்து வீதியில் நின்று
காற்றில் காதல் வரைந்து
இரவு முழுதும் smsகளாலேயே காதலை முடித்து
கலவி வரை கணினியிலேயே முடித்து
காதல் என்பதைக் கடைச் சரக்கிலும்
கீழாக மாற்றிய எங்கள் வாலிபரின் காலத்தில்
இந்த இளைஞன் கேட்ட வல்லமை வலியது..
பெரியது.. 
எமக்கு காலத்தில் உரியது...


சுரண்டல்களின்றி பதுக்கல்களின்றி
தணிக்கைகளின்றி தாமதமின்றி
தயக்கங்களின்றி தடைகளுமின்றி
மடலொன்று வரைய - அது
மாற்றங்களின்றி உனை வந்தடைய
மரித்த மனத்தான் எனக்கு வல்லமை தாராயோ




ஆகா.. ரசித்தோம் உங்கள் ரசாயன வரிகளை..
ரசித்தோரே கரகோஷம் கொடுப்பீர் மறுபடி..


கடுகு சிறிதானாலும் காரம் பெரிது..
இவன் கவிதையின் சாரமும் பெரிது..
மெலியோர் வலிமை கேட்டுக் கேட்டு
மேலும் மேலும் மீளாத்துயரில்
ஆழ்ந்துபோகும் காலத்தில்,
மீசை முறுக்கி உரத்து
உண்மை பொழிந்த ஒருவனிடம் உண்மை கேட்பது நியாயம் தானே?




அடுத்து மேடைக்கு வரும்
அன்புக் கவிஞர்
அடுக்கு மொழியிலும் அழகான நடையிலும்
கவிதை மழை தரும் கணினிப் பொறியியல் கவிஞன்..
பாலநவநீதன் மாளவன்.


யாழ் மண்ணில் விளைந்து வன்னியில் வளர்ந்து
லண்டனில் பின் இப்போ கொழும்பிலும்
மூளையால் கணினியை முந்தி
வைக்கிறார் தகவல் பந்தி..
கணினியின் காவலனாக பூமிப் பந்தை
உருட்டிக் கையில் வைத்திருப்பதால்
இவர் ஒரு ஐ.டி (IT) அரிச்சுவடி..
அதனால் எழுதுகிறார் வலைப்பதிவு சுவடி.


பரந்த நெஞ்சும் விரிந்த வயிறுமாக வரும் எங்கள்
கவிதைக் காவலர் பாவலன் பாரதியை அழைக்கிறார்
தன் நெஞ்சு கொதிக்கும் நிகழ்கால நிஜங்களைக்
கொட்டி உரைக்க..
"நெஞ்சு பொறுக்குதில்லையே"

நிரூசா(மாலவன்)வின் கவிதையைக் கேட்டு, வாசித்து ரசிக்க....

"நெஞ்சு பொறுக்குதில்லையே"


மாலவனின் கவிதைக்கான தொகுப்பும், சுபாங்கனின் அறிமுகமும் - ஒலி வடிவம்





சைக்கிள் ஒட்டி ஒருவர் விமானம் ஒட்டி நடத்திய வினோத சாதனை பார்த்தோம்..
சொந்தக் கதை சொல்லிய கோலத்தில்
மீண்டும் உயிர்த்த பாரதி
அந்தோ அதோ தலை முண்டாசு அவிழ்ந்து விழுவதும் அறியாது
கறுப்புக் கோட் காற்றில் பறப்பதும் உணராது
கட்டுத் தெறித்து கடித்து வேகமாக
காடு மேடு தாண்டி ஓடுகிறான்...


லட்சம் லட்சமா சீதனம் இருக்காம்..
லட்சணமாப் பெண்ணும் இருக்காம்..
கொழும்பில் வீடும் இங்கே காணியும் இருக்காம்..
ம்ம்ம்.. மென்பொருளாளர் என்றால் மெத்த டிமாண்ட் தான்..
மற்றக் கவிஞர்கள் மேலும் கீழுமாய்ப் பெருமூச்சு விட்டெரிவதைப் பாருங்கள்..
இப்போ அவர்களல்லவா சொல்லவேண்டும்..
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட உலகத்தை நினைத்துவிட்டால்..


அதுசரி மாளவரே இந்த டிமாண்டும், இப்படிப்பட்ட சேதியும்
அவங்களும் அறிவார்களோ?


மென் பொருளாளரின் மெல்லிதயத்தை
ரணமாக்கி
மேனியைச் சூடாக்கிய விடயங்கள்
சிரிப்போடு தொடங்கினாலும் சீரியசானவை
பலவும் செறிந்தே இருந்தன..
சிந்திக்க வைத்திருக்கும்
சிக்கலான பல விஷயங்களும்
பட்டும் படாமலும் பகிர்ந்தவர்
எம்மைப் பாடாய்ப் படுத்தியவற்றைப்
பற்றியும் பலவுரைத்தார்..
ம்ம்ம்.. நெஞ்சு பொறுக்காது தான்.
நெஞ்சு முழுக்க மனிதம் இருக்கும்
மாந்தர் எவர்க்கும் நெஞ்சு பொறுக்காது..




நெஞ்சு கொள்ளாத நவீன உலக நடப்புக் கேட்ட எமக்கு
அடுத்து பாரதியை மீண்டும் உயிர்ப்பிக்க
நெடிதுயர்ந்து மெலிந்த மென்மைக் கவி
பாலசுப்ரமணியன் சுபாங்கன் கொண்டு வரும் 
கவி கேட்கும் வாய்ப்பு..
மனமுண்டு குணமுண்டு கவிதைத் தனமுண்டுஆனாலும்
கற்ற கல்விக் கனம் தலையில் ஏறாப்
பண்பாளன் இந்த சுபாங்கன்..


பொறியியல் கற்றுத் தேர்ந்து
பொறுமையாகப் பொருள் ஏராளம் குவிக்கும் வாய்ப்புக்குரிய
தொழில் தேடிக் கொண்டிருக்கும் இளைய கவி..
சிறுகதைகள் வரையும் சின்னமாமா
என்று சிறுவர் மட்டுமல்ல இளைஞரும்
ரசிக்கும் இன்முகத்தோன்..
பலதுறையும் அறிந்த பன்முகத்தோன்..


தொட்டதெல்லாம் துலங்கும் காலம் கிட்டிவர
மகாகவி சொன்ன ஜயமுண்டு பயமில்லை மனமே
இவரது பாடுபொருள்..


தயவுண்டு தாட்சண்யமுண்டு
ஆனாலும் பயமென்ற ஒன்று பாடாய்ப்படுத்தும்
இக்காலப் பொழுதில்
காலனைக் காலால் உதைக்கத் திடமாய் நின்ற
பாரதியை அழைக்கும் இக்கவிதை கேட்போம்..

சுபாங்கனின் கவிதையைக் கேட்டு, வாசித்து ரசிக்க...
ஜயமுண்டு பயமில்லை மனமே



சுபாங்கனின் கவிதைக்கான தொகுப்பும், ஆதிரைக்கான அறிமுகமும் - ஒலி வடிவம்







ஜயமுண்டு பயமில்லை சொன்னவன்
இன்று மீண்டும் வந்து
புது விதி உணர்த்திப் போயுள்ளான்..
சுபாங்கனின் சுள்ளென்ற வரிகளில் இருந்த சூக்குமம் ரசித்தோம்..
இந்த அமைதிக்குள் இத்தனை ஆங்காரமா?
இத்தனை ஆதங்கமா?


நீதான் கவிஞனாயிற்றே - எங்கள்
கசியும் மௌனங்களில் இருந்தே
கண்டுபிடித்துக் கொள்ளேன் என்றேன்.
நான்கும் தெரிந்தவனப்பா நான் என்றான்.
பொறு என்று சொல்லிப் பொங்கத் தொடங்கினான்.


பொங்கியது புதிய பாரதி மட்டுமா?
மங்கிய பொழுதுகளுக்கு முன்பு
எத்தனை பொங்கல் பொசுங்கியே போயின..


வாழ்விக்க வந்தவர்கள் வரலாறாய்ப் போகலாம்
தாழ்வுக்கு வித்திட்டோர் தறிகெட்டும் ஆடலாம்.
ஊருக்கு வெளியே பத்திரமாய் இருக்கும்
ஒற்றைப் பனையிலும் இடி வந்து வீழலாம்


அர்த்தமுள்ள புதிய பாரதியின் பொங்கும் வரிகளில்
நெருப்பின் பொறுமை நீறு பூக்கக் கண்டோம்..


நீராக மாறி இருக்குமிடத்தின் தன்மையை 
எடுத்துக்கொள்ள சொன்ன
இக்கால நியதி கேட்டோம்.. 
ம்ம் காலம் அப்படி
காத்திருத்தலே இப்போதைய கட்டாய ராஜதந்திரம்..


நீர் போல் மாறு
பாத்திரத்தின் வடிவம் படிக்கப் பழகு
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டுவிட்டு
அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு
வாய்க்கால் வழியே ஆற்றின் திசை மாற்று
சும்மா கிடக்கும் தரை கிடக்கட்டும்
தொடர்ந்து தட்டும் அலையாய் உழை
ஜயமுண்டு பயமில்லை மனமே




நான்காவது கவிஞன்
நாற்றாக முளைத்த தன் பூமியிலே
ஊற்றாகத் தன் கவிதையை ஊற்றி உருக்கி
காற்றெல்லாம் கவி மணக்க வந்துள்ளான்..
கல்யாண மேளம் கேட்கும் காலம் காண தொலைவில் இல்லை என்பதால்
தலை முதல் கால் வரை பளபளக்கும் புது மெருகு பாருங்கள்..
வடமராட்சி மைந்தன் இவன்
அரியகுமார் ஸ்ரீகரன்..


அற்புதமாய் அமைதியாய் ஆனால் அடக்கமாய்
கவிதை தரும் ஆதிரை என அறியப்படுபவன்..
சுருக் கருத்துக்கள்..
சுருளாத நேர்மை, பிறழாத பாதை
தவறாத வார்த்தை
மறவாமல் கற்ற பொறியியலால்
தொழிலில் உயர்ந்து நிற்கிறான் கொழும்பில்..


கட்டிளம் காளைக்குக் கல்யாணப் பருவம் என்பதால்
காதலே தன் கவிப் பொருளாகக் கொண்டான் பாருங்கள்..
கவிஞன் பாரதிக்கோ காதல் ஒரு கற்கண்டு..
கண்ணம்மாவைக் காற்றுவெளியிடையே காதலித்து உருகியவன் அவன்..
கண்ணனைக் காதலிக்கக் கன்னியாக உருமாறியவன்..
இந்தக் கவிஞனோ 
கடுகதிப் பயணத்திலேயே காதல் வளர்ப்பவன்..
பருவம் அப்படி..
அதனால் எடுக்கிறான்
"காதல் போயின் சாதல்"

ஆதிரை(ஸ்ரீகரன்)யின் கவிதை கேட்டு,வாசித்து ரசிக்க..
"காதல் போயின் சாதல்"



கவியரங்கின் முடிவுரை.....



தற்காலக் கோலம் பேசி, செத்திடலாம் போல இருக்கும்
தன் காதல் உள்ளம சொன்ன ஸ்ரீகரனின் கவிதை ரசித்தோம்..
ஏசிக்குள் வேர்க்கும் இனிப்புக் கூட கசக்கும்
பஸ் பயணங்கள் தனியே போனால்
பத்து நிமிடம் கூடப் பல நாள் போலவும்
எட்டு மணிநேரப் பயணங்கள் துணையும் வந்தால்
எட்டே செக்கன் போலவும் ஆகிப் போகும்..
என்ன இன்னும் ஏழே வாரம் தானே..
அதன் பின் எல்லாம் சுகமாகும்..


காதல் போயின் சாதல் சொன்ன பாரதி வாழ்க..
சாதலே எமது நாளாந்த வாழ்வாகிப் போனாலும் எங்கள் வாழ்வு
காதலும் காதலைக் காத்தலும்
மோதல் நடந்த போதே மூண்டெழுந்த காதல்களின்முற்றுப்பெறா
சரிதமான தேடலும் நிறைந்தவை தான்..


அன்னத் தூது காதல் முதல்
இன்று இணையத் தூது காதல் வரை
வடிவம் மாறினாலும்
காதல் காதல் தான்..
வரைமுறை மாறினாலும் வாசம் காதல் தான்..
அதுதான் இந்த
வடமராட்சி மைந்தன் வயப்பட்டு
காதல் வசப்பட்டு இங்கே
பாடிவைத்துப்போன கவிதை..
தோழரே நீங்கள் பேசாதீர்
இவர் போல
இவரதைப் போல உங்கள் செல்பேசட்டும்..
காதல் sms சொல் வீசட்டும்


அக்காலத்துக் கவி என்று எப்போதும்
பாரதியை யாரும்
சொல்லாத காரணத்தை
இக்கவியரங்கக் கவிஞர் எடுத்தியம்பிய பொருள் கேட்டு
உணர்ந்திருப்பீர் சபையோரே..
அவன் பாடாப் பொருள் எது?
இக்காலம் உணர்ந்தும் அவன் அன்றே பாடிய
எத்தனை எத்தனை பாடல்களை
நாம் இன்று எங்கள் மனதில் வைத்துள்ளோம்..
தூங்கிக் கொண்டிருந்த எம் தமிழினத்தை விழிக்க வைக்க
அவன் பாடியதால் தான்
தாலாட்டை மட்டும் பாடாமல் தவிர்த்தானாம்..


காளி பற்றி, கண்ணன் பற்றி
காணி நிலம் வேண்டிப் பாடியவன்
அன்று கண்டிராத ஆனந்த சுதந்திரம் பற்றியும்
கற்பனை செய்தே களிப்புற்றான்


கற்பனையில் எட்டாத உயரங்களை எட்டிநின்ற அக்கவிஞனை
இக்கவியரங்க மேடை மூலம்
மீண்டும் எம்மால் உயிர்ப்பாக்கும்
இனிய வாய்ப்புக் கிட்டியது


புதுக்கோட்டையிலும் எட்டயபுரத்திலும்
மீண்டும் உதிக்காத பாரதியைப்
புற்றளையில் கூட்டிவந்து காட்ட
வாய்ப்புத் தந்த
அன்பு நண்பர்களுக்கு எம் நன்றிகள்..


பாரதி சொன்ன பற்பல விடயங்கள் பற்றி
பத்தி பத்தியை சொன்ன போதினில்
பொறுமையாய்க் கேட்டு
அருமையாய் ரசித்த
உங்களுக்கும் நன்றிகள்..


மீண்டுஜ்ம் வந்த மீசைக் கவியை நாம் என்ன கேட்டோம்?


வல்லமை தாராயோ - எளியோராக, ஏமாந்துபோவோராக இருக்கும் நாம்
ஏற்றமடைய வழி அது


நெஞ்சு பொறுக்குதில்லையே - கண்ணால் கண்டு, காதால் கேட்டு
வெம்பி மனதில் வேதனையுடன் இருக்கும் விஷயங்களைக்
கொட்டித் தீர்க்க வழி அது


ஜயமுண்டு பயமில்லை மனமே - வளமான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை
வளர்கிற போதிலே
வசந்தங்கள் எம்மிடம் வருகிற போதிலே
வஞ்சகம் ஏதாவது அதனுள் இருக்குமோ
எனக் கேட்க ஒரு வழி அது


காதல் போயின் சாதல் - சாதல் பல கண்டவர் நாம் என்பதாலும்
காதலின் பல வடிவம் கண்டவர் நாம் என்பதாலும்
எம் காதலுக்குரிய கவிஞனிடம் பேசியது அது


பாரதி சொன்ன வார்த்தைகள்
எங்கும் பழங்கதை ஆனதில்லை
அவன் பாடல்கள் சொன்ன புதுவிதி எவையும்
பொய்யென ஆனதுமில்லை


பாரதி மூலம், மறுபடி பாரதி மூலம்
பலவிடயம் சொல்லப்
பத்திரமாய் ஒரு மேடை தந்தீர்
பகிர்ந்தோம்..
பத்திரமாய் நாம் பாதை திரும்ப
பக்குவமாய்ப் பகிர்ந்துள்ளோம்


பிழைகள் இருப்பின் பொறுப்பீர்..
இல்லை பொருள் பற்றி நாம் சொன்ன
பொருள் விளங்கி
எம் கவி மனதில் எடுப்பீர்..
மதிப்பீர்..
மனதில் ஒரு இடம் கொடுப்பீர்..


பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’


நன்றி



என் செல்பேசியில் ஒலிப்பதிவு செய்த முழுக் கவியரங்கை நேர்த்தியாக வலைப்பதிவுக்காக மாற்றித் தந்த அலுவலக IT நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
படங்களில் உதவி செய்த சகோதரன் வலைப்பதிவர் ஜனகனுக்கு நன்றிகள்...

Post a Comment

21Comments

Please Select Embedded Mode To show the Comment System.*