இது என்னுடைய தனிப்பட்ட பதிவு மட்டுமே.. எனவே சுய தம்பட்டம் என்று நினைப்போர் தயவு செய்து வேறு பதிவு அல்லது இடுகையைத் தேடுக.
என்னைப் பற்றியும் என் உணர்வுகள் பற்றியும் என்னால் முடிந்தளவு... என்று நான் என் வலைத்தளத்தை அடையாளப்படுத்தி இருப்பதைப் பார்த்து மேலும் தெளிவு பெறுக.
நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகிறது. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எமக்கு ஒரு வயதினால் முதுமை நெருங்குகிறது என்று தெரிந்தும் அந்தக் குறித்த நாள் மனது அடையும் மகிழ்ச்சி எங்களை மறுபடியும் சிறுவர்களாக மாற்றிவிடக் கூடியது.
எனக்கு இந்தப் பிறந்தநாள் வழமையான பிறந்தநாட்களை விடக் கொஞ்சம் விசேடமானது.
இதற்கு ஒன்றல்ல பல காரணங்கள்.
என் செல்ல மகனுக்கு ஓரளவு நினைவு தெரிந்து வரும் என் முதலாவது பிறந்தநாள் என்பதால் அவனது உற்சாகமே எனக்கும் எதிர்பார்ப்பைப் பிறந்தநாளுக்கு முதலே தந்துகொண்டிருந்தது.
"எப்போ கேக் வெட்டுவீங்க? யார் யார் வருவாங்க?என்ன கிப்ட் வேணும்?" என்ற அவனது மழலைக் கேள்விகளுக்காகவே அது எனக்கு ஒரு திருவிழா நாள் ஆனது.
"அம்மா அப்பாவுக்கு இந்தமுறை பென் டென் (Ben 10)கேக் தான் செய்ய வேணும்" என்று தொடர்ந்து மனைவிக்குத் தொந்தரவு வேறு.
வழமையாகவே கொண்டாட்டங்களை எல்லாம் வீட்டில் தவிர்க்கும் நான் திருமணத்தின் பின்னர் தான் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் கேக் வெட்டிப் பிறந்தநாளே கொண்டாடி இருந்தேன்.
அம்மா, மனைவி, மகன் ஆகியோரின் பிறந்தநாட்களைக் கொண்டாடுவதில் நான் முனைப்பாக இருப்பதால் இம்முறையும் என் மனைவி சஸ்பென்ஸாகக் கேக் ஒன்றை ஒர்டர் செய்திருந்தார்.
ஹர்ஷுவும் என் மனைவி தந்த கேக்கும், மச்சான் அனுப்பிய கேக்கும்
அலுவலகத்துக்கு அவர் கேக் அனுப்பி வாழ்த்து சொல்லவும் மூன்று காரணங்கள் -
அவர் எனது வெற்றியின் விடியலின் ஒரு நேயர். மெல்பேர்னில் அவரது பகல் வேளைகளில் என் நிகழ்ச்சி தொடர்ந்து கேட்பவர்.
அலுவலகத்தில் எனக்குக் கிடைத்த முன்னேற்றம் *
இறுதியாக வந்த LMRB தரப்படுத்தலில் வெற்றி FM பெற்ற வெற்றி
நான் தனிப்பட்ட முறையில் இந்த மாதிரிகளை (samples) உருப்பெருக்கிக் காட்டும் தரப்படுத்தல்களை ஏற்றதே இல்லை. நான் பணியாற்றிய எல்லா வானொலிகளுமே நான் இருந்த ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த LMRB தரப்படுத்தலில் முதலிடம் பெற்றதும் அதை நானும் சேர்ந்தே பறை தட்டியதும் உண்மையே.
பின்னர் வெற்றி FM ஆரம்பித்த முதல் காலாண்டில் கொழும்பை மட்டும் மையமாகக் கொண்டு நாம் இயங்கிய வேளையில் முதலாம் இடத்தை வெற்றி FM பெற்றது.
அதற்குப் பிறகு புதிய நிறுவனமாக யூனிவேர்சல் நெட்வொர்க்ஸ் நிறுவனம் எம்மை நிர்வகிக்க ஆரம்பித்த பின்னர், இந்த வருடத்தின் முதலாவது தரப்படுத்தலில் எமது வெற்றி FM வானொலி கொழும்புப் பெருநகரப் பகுதியில் அதிகமானோரால் கேட்கப்படும் தமிழ் வானொலியாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.
LMRB தரப்படுத்தலில் வெற்றி FM தலைநகரில் முதலாமிடம்
சந்தைப்படுத்தலுக்கும், விளம்பர நிறுவனங்களை ஈர்க்கவும் இந்த வெற்றி மிக முக்கியமானது என்பதனால் என்னைப் பொறுத்தவரையும், நிறுவனத்துக்கும், எமது புதிய உரிமையாளர்களுக்கும் இது மகிழ்ச்சியே.
இந்த சாதனையுடன் எமது உரிமையாளர்கள் உடனடியாகவே புதிய பதவி உயர்வுகளையும், பதவி நிரப்பல்களையும் அறிவித்தார்கள்.
பிறந்தநாளுக்கு முதல் நாள் அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வில் என் சக ஊழியர்கள், அறிவிப்பாளர்களுக்கு உயர்வுகள், மகிழ்ச்சிகள் கிட்டின. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு இஷ்டப்பட்டு வழங்கப்பட்ட வெகுமதிகள் அவை.
எனக்கு உயர்வு என்று இல்லாவிடினும் (இதற்கு மேலே என்னதான் உயர்வு?) உத்தியோகபூர்வமாக தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்பும் மேலதிக பொறுப்புக்களும், அதிகாரமும் தரப்பட்டுள்ளன.
இன்னொரு மகிழ்ச்சி என்னுடைய நண்பர் ஒருவர் நம்பிப் பொறுப்பெடுத்துப் பங்காளராகியுள்ள நிறுவனத்தை வெற்றிகரமான நிறுவனமாகத் தொடர்ந்து முன்னெடுத்து அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பது.
யாரோ வேறு ஒருவருக்கு உழைத்து மாரடித்த காலம் போய் எனது நண்பர்கள் இருவரின் நிறுவனத்தில் பணியாற்றுவது எனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆத்மதிருப்தியையும் கொடுக்கிறது.
காலையில் வெற்றியின் பசுமைப் புரட்சித் திட்டத்தின் மூலம் மரநடுகையில் இணைந்துகொண்ட மனத்திருப்தி.
கொழும்பு, காக்கைதீவு கடற்கரையோரப் பூங்காவில் மரங்களை வெற்றிக் குழுவாக நேயர்களுடன் சேர்ந்து நட்டு மகிழ்ந்தோம்.
(பிறந்தநாள் அன்றும் வீட்டில் இல்லை என்று இம்முறை மனைவி குறைப்படவில்லை; நம்ம வீட்டுப் பெரியவர் ஹர்ஷு தான் கோல் பண்ணிக் குறைப்பட்டார்)
இது தவிர நாள் முழுவதும் ஹர்ஷு தமிழிலும் ஆங்கிலத்திலும் எனக்கு வாழ்த்துச் சொல்லி சொல்லியே சந்தோஷப்பட்டுக் கொண்டான். அவனது செல்ல மழலையில் Happy birthday பாடல் கேட்பதில் அப்படியொரு அலாதி இன்பம்.
தானும், ஹர்ஷுவும் தான் முதல் வாழ்த்து சொல்லவேண்டும் என்பதற்காக நள்ளிரவுக்கு முன்பாகவே என் இல்லத்தரசி வீட்டின் எல்லா போன்களையும் செயலிழக்கச் செய்திருந்தார்.
நள்ளிரவு முதல் வந்த அன்பான குறுஞ்செய்திகள், தொடர் அழைப்புக்களால் அடிக்கடி என் செல்பேசி தடைப்பட்டு, பட்டரி இறங்கி உயிரை விட்டுக் கொண்டிருந்தது.
அழைப்புக்கள் எல்லாவற்றையும் ஏற்க முடியாவிடினும், குறுஞ்செய்திகள் எல்லாவற்றுக்கும் நன்றிகளை அனுப்பி வைத்தேன் என்ற திருப்தி.
பேஸ் புக்கில் வந்த ஐந்நூற்றுக்கணக்கான வாழ்த்து மடல்களில் பாதிக்காவது பதில்களை அனுப்பிவிட்டேன்.
வயது கூடக் கூட வாழ்த்துக்களும் கூடுகின்றன. சந்தோஷம் :)
ஆதிரை, வந்தி மாம்ஸ், சதீஷ், ஜனகன் போன்ற அன்பு உறவுகள் வாழ்த்திப் பதிவிட்டதற்கும் நன்றிகள்.. சயந்தன் பேஸ்புக்கில் இட்டிருந்த குறிப்புக்கும் சேர்த்து ;)
பகல் முழுவதும் வீட்டில் பொழுதைக் கழிப்பதாக முடிவெடுத்தபடி அசையவில்லை.
கோவிலுக்குப் போக ஆசைப்பட்ட மனைவியை ஏதோ சாட்டு சொல்லிக் கடத்திவிட்டேன்.
எனினும் நண்பர்கள் சிலரின் சஸ்பென்ஸ் விஜயங்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
சிறந்த பதிவர் விருதை இவ்வருடம் வென்ற வைத்தியர் முருகானந்தன் அய்யாவுக்கும், ஊடகத்துறை விருதைப் பெற்றுக்கொண்ட சக்தியின் ராஜ்மோகனுக்கும் வாழ்த்துக்கள்.
வீட்டில் கேக்கை வெட்டிக் கொண்டாட எங்கள் குடும்பத்தவர் அறுவருடன், மிக நெருங்கிய நண்பர்+துணைவியை மட்டுமே அழைத்திருந்தேன்.
இம்முறை கிடைத்த பரிசுகளில் சிறப்பானது என்று நான் கருதுவது, மகனின் குட்டிக் கிறுக்கல் எழுத்துக்களால் அவனைக் கொண்டு மனைவி எழுதித்தந்த வாழ்த்து அட்டை.
இது தவிர தனது பரிசைக் கையில் நள்ளிரவு பிறந்தவுடனே காத்திருந்து தந்துவிட்டு "பிடிச்சிருக்கா?" என்று கேட்டுக் கேட்டு குஷிப்பட்டது குதூகலம்.
மனைவி தனியாளாக நின்று சமைத்த சுவையான உணவுகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுது கழிந்தது. நண்டு, இறால் என்று தனது ஸ்பெஷல்களில் அசத்தி இருந்தார்.
ஒரு வயது ஏறினாலும் சில வயது குறைந்த உற்சாகம்.
இன்னும் சில ஆண்டு உற்சாகமாக வாழ்வதற்கான, இன்னும் சில ஆண்டு வேகமாக ஓடி உழைப்பதற்கான உற்சாகத்தை அந்த ஞாயிறு எனக்கு மீண்டும் தந்துள்ளது.
அனைவரது அன்புக்கும் நன்றிகள்....